தமிழ்நாட்டுக்கான கல்விக் கொள்கையை தமிழ்நாடே உருவாக்கும் என்று தமிழக நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் வாசகம், வரலாற்றுப் பதிவு. தமிழ்நாட்டின் திசை வழிப் பயணத்தை வெளிச்சப்படுத்தும் ஒளி விளக்கு; இந்தப் பின்னணியில் தமிழ்நாட்டின் மீது இளங்கலைப் பட்டப்படிப்புக்காக ஒன்றிய ஆட்சி பல்கலைக்கழக மானியக் குழு வழியாக உருவாக்கியுள்ள பாடத் திட்டங்கள் வரலாற்றுத் திரிபுகளைக் கொண்டவையாகவும் தமிழ் நாட்டின் வரலாறுகளை இருட்டடிப்பு செய்வதாக இருப்பதையும் தமிழக அரசின் பார்வைக்குக் கொண்டு வர விரும்புகிறோம்.

பல்கலைக்கழக மானியக் குழு என்பதே ஒரு நிர்வாக அமைப்பு தான். பாடத் திட்டங்களை உருவாக்குவது இந்த அமைப்பின் பணி அல்ல; அது கல்வியாளர்களால் துறைவாரியாக தேர்வு செய்யப்பட்டக் குழுவினரால் உருவாக்கப்பட வேண்டும். மாறாக பல்கலைக் கழக மானியக் குழுவே சில ‘வைதிக சிந்தனை’யாளர்களைக் கொண்டு பாடத் திட்டங்களை உருவாக்கி மாநில அரசுகள் மீது திணிக்கிறது. தமிழ்நாட்டில் 1967இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் பாடத் திட்டங்களில் தமிழ்நாடு வரலாறே இணைக்கப்பட்டது. ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களும் அதற்குப் பிறகு தான் பாடத் திட்டங்களில் தங்கள் மாநில வரலாறுகளை இடம் பெறச் செய்தன. இதற்கும் வழிகாட்டியது ‘திராவிட’ ஆட்சி தான்.

இப்போது ஒன்றிய ஆட்சி, பல்கலைக்கழக மானியக் குழு வழியாக தயாரித்துள்ள இளங்கலை வரலாற்றுப் பாடத் திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள 14 பாடங்களில் மாநிலங்களின் வரலாறுகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப் பட்டுள்ளன. பத்து பாடத் திட்டங்கள் இந்திய நாகரிகம், இந்து நாகரிகப் பெருமைகளையே பேசுகின்றன.

‘இந்தியா’ என்ற செற்றொடரை ‘இந்துத்துவா’வும், ‘வேத புரியினரும்’ ஏற்பது இல்லை. மாறாக, ‘பாரத்’ என்பதையே அவர்கள் முன்மொழிகிறார்கள். இந்த பாடத் திட்டத்தின் முதன்மைப் பிரிவு ‘பாரத்’தையே முன்னிறுத்துகிறது. புராணம் - தொன்மம் - வைதிகம் சார்ந்தது ‘பாரத்’. மாறாக நதி - நிலம் சார்ந்தது இந்தியா. முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் உள்ளடக்கிய சொல் ‘இந்தியா’ என்பதால் அதை ஏற்கக் கூடாது என்றும், ‘பாரத்’ என்பதே நமக்கான அடையாளம் என்றும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு தத்துவத்தை வழங்கிய கோல்வாக்கர் எழுத்துபூர்வமாக பதிவு செய்துள்ளார். ‘துவக்கக்கால வரலாறு’ பாடப் பிரிவில் இந்திய நாகரிக மரபு - வேதத்திலிருந்து தொடங்குகிறது. அதுவே இந்தியாவின் தொன்மை நாகரிகம் என்றும், அனைத்து மொழிகளிலும் முதன்மையானது ‘சமஸ்கிருதம்’ என்றும் பாடத் திட்டம் நிலைநாட்ட முற்படுகிறது.

ஜோதிராவ் புலே, சாகு மகாராஜா, நீதிக் கட்சி, பெரியார் குறித்த வரலாற்றுப் பதிவுகள் இருட்டடிக்கப்பட்டுள்ளதோடு, காந்தியார் வரலாற்றுக்கும் அழுத்தம் தராமல், ‘அவரது மதச்சார்பற்ற இந்தியா’வின் கருத்து இருட்டடிக்கப்பட்டிருக்கிறது. வ.உ.சி.யும் நேருவும் இடம் பெறாத இந்த வரலாற்றுப் பாடங்களில், இந்து மகாசபையின் தலைவர் மதன் மோகன் மாளவியா, விவசாயிகளின் தலைவராகப் போற்றிப் புகழப்படுகிறார். கடல் தாண்டிப் போவது ‘பிராமண தர்மத்துக்கு’ எதிரானது என்பதால், வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்க இலண்டன் சென்ற மாளவியா, அந்தப் ‘பாவத்துக்கு பரிகாரத் தேட’ இந்தியாவிலிருந்து மண்ணையும் கங்கை நீரையும் இலண்டனுக்கு எடுத்துப் போய் ‘தோஷம்’ கழித்தவர்.

மாநிலங்களின் வட்டார வரலாறுகளைத் திட்டமிட்டு இருட்டடிக்கும் இந்தப் பாடத் திட்டங்கள், டெல்லியின் வரலாற்றை மட்டும் மிக விரிவாகப் பதிவு செய்து, புராணங்களில் கூறப்படும் ‘இந்திரப் பிரஸ்தம்’ டெல்லியிலிருந்தே தொடங்குவதாக எழுதி, புராணங்களை வரலாறுகளாக திரித்துக் காட்டுகிறது. டெல்லியின் வரலாறு முகம்மது கோரியின் படை எடுப்பிலிருந்துதான் தொடங்குகிறது. சுல்தான் - மொகலாய ஆட்சிகளுடன் இணைந்தே நிற்கும் டெல்லி வரலாற்றை ‘புராணக் கதை’களுடன் இணைத்து திரிக்க முயல்வது வரலாற்றியல் குற்றம். பல்கலைக்கழக மானியக் குழு உருவாக்கிய இந்தப் பாடத் திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்து கருத்துகளை முன் வைத்துள்ளார் வரலாற்றுப் பேராசிரியரும் திராவிடர் இயக்கச் சிந்தனையாளருமான பேராசிரியர் கருணானந்தம்.

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கான தனிக் கல்விக் கொள்கையை உருவாக்க விரும்பும் முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தப் பாடத் திட்டங்களை தமிழ்நாடு அரசு ஏற்காது என்று அறிவிக்க முன்வர வேண்டும். சட்டமன்றத்தில் கல்வி மான்யக் கோரிக்கை வரும்போது, இது குறித்து விவாதமும் தமிழக முதல்வரின் அறிவிப்பும் வரும் என்றால், அது தமிழ்நாட்டு அரசுக்கு மேலும் பெருமை சேர்க்கும்.

பாடங்கள், பாடத் திட்டங்களை மாநிலங்களில் திணிக்கும் உரிமை ஒன்றிய ஆட்சிக்கு இல்லை. அதை மாநிலங்களே தீர்மானிக்கும் என்ற உரிமைக் குரலை நாம் எழுப்ப வேண்டும்.

தமிழ்நாடு தான் இதற்கும் வழிகாட்ட வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It