அண்மையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில்(Logo) இருந்த அசோகா சின்னம் நீக்கப்பட்டு இந்து கடவுள்களில் ஒருவராகக் கருதப்படும் ‘தன்வந்திரி’யின் படமும், இந்தியா என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என்றும் மாற்றப்பட்டு உள்ளதாகவும், இது இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிராக பாஜக மேற்கொண்டு வரும் நடவடிக்கை என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சொல்லியிருந்தார்.

உண்மைதான்! இந்த காவி வேலையை அது தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறது.

தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான குழு (NCERT), இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றைப் பள்ளி மாணவர்களின் பாடத்திட்டங்களில் சேர்க்கலாம் என்று ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது. பின்னர், அப்பரிந்துரை என்.சி.இ.ஆர்.டி. அமைத்த குழுவின் தலைவர் ஐசாக்கின் தனிப்பட்ட கருத்து என்றும் செய்தி வெளியாகியுள்ளது.national medical commissionஇராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள் கதைகள் மட்டுமே. அவை வரலாற்றுடன் எந்தவிதத் தொடர்பும் கொண்டவை இல்லை. நல்லொழுக்கத்தைப் போதிப்பதற்காக இவை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன என்று காரணம் சொல்லப்படுகிறது. ஆனால், வருணாசிரம தர்மம், ஆணாதிக்கம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையிலும், ஒழுக்கக் கேடுகளின் மொத்த உருவமாகவும் உள்ளவை இக்கதைகள் என்பது இவற்றைப் படித்தவர்களுக்கு விளங்கும். இராமன் சீதையின் கற்பைச் சந்தேகித்ததையும், சம்புகன் கொல்லப்பட்ட காரணத்தையும், மகாபாரதப் போரில் வஞ்சகத்தால் வெற்றி பெறும் கதையையும் இவர்கள் கொண்டுவரும் பாடத்திட்டத்தில் சேர்ப்பார்களா? இவற்றைப் படிக்கும் மாணவர்கள் எப்படி அறம் சார்ந்து, ஒழுக்கம் சார்ந்து வளர முடியும்?

இராமாயணம் குறித்த விரிவான விமர்சனத்தைத் திராவிட இயக்கம் எப்போதும் முன்வைத்து வந்துள்ளது. தந்தை பெரியாரின் ‘இராமாயணப் பாத்திரங்கள்’, அறிஞர் அண்ணாவின் ‘நீதிதேவன் மயக்கம்’, ‘கம்பரசம்’ ஆகியவை இராமாயணத்தில் உள்ள அறமற்ற, ஒழுக்கமற்ற செய்திகளை அப்போதே மக்களிடம் எடுத்துச் சென்றன. திராவிடரை இழிவுபடுத்தி, ஆரியரை உயர்வானவர்களாகக் காட்டும் கம்பராமாயணம் கொளுத்தப்பட வேண்டும் என்ற இயக்கம் நடந்த மாநிலம், தமிழ்நாடு. அண்ணல் அம்பேத்கர் இராமன், கிருஷ்ணன் குறித்து எழுதியவை இன்றும் இருக்கின்றன. ஒருவேளை ஒன்றிய அரசு இராமாயணம் அல்லது மகாபாரதம் குறித்து பாடத்திட்டத்தில் பாடங்கள் சேர்க்க வேண்டும் என்றால், வாக்குகளுக்காக மட்டும் அம்பேத்கரைக் கொண்டாடுபவர்கள் அவர் எழுதியவற்றை நேர்மையாகப் பாடத்திட்டத்தில் சேர்க்கட்டுமே!

பா.ஜ.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வரலாற்றைத் திரிப்பதும், மாற்றி எழுதுவதுமான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதை நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், தனது “The Argumentative Indian” புத்தகத்தில் குறிப்பிடுகிறார். பா.ஜ.க.ஆட்சிக்கு வந்ததும் என்.சி.இ.ஆர்.டி. குழு மாற்றி அமைக்கப்படுவதும், இந்துத்துவத்தைப் பரப்பும் நோக்குடன் புத்தகங்கள் மாற்றி எழுதப்படுவதாகவும் அவர் தனது நூலில் குற்றம் சுமத்தியுள்ளார். சான்றாக, காந்தியைக் கோட்சே கொன்றார் என்ற தகவல் பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டது. சிந்து சமவெளி நாகரிகம், சிந்து- சரஸ்வதி நாகரிகம் என்றழைக்கப்பட்டது. எனவே இதுபோன்ற வரலாற்றைத் திரிக்கும் வேலைகள் பா.ஜ.க.வுக்குப் புதிதன்று.

அதுமட்டுமின்றி, இந்தியா போன்ற ஒரு மதச்சார்பற்ற நாட்டில், ஒரு மதத்தின் புராணங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவது, மதச்சார்பின்மைக்கும், அரசியலமைப்பிற்கும் எதிரானது. தொடர்ந்து தனது இந்துத்துவக் கொள்கைகளை மக்களிடம் திணிக்கும் வேலையில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க.வை வருகின்ற தேர்தலில் வீட்டுக்கு அனுப்புவது, நாட்டுக்கு நல்லது.

- வெற்றிச்செல்வன்

Pin It