"கையில வாங்கினேன்

பையில போடலே

காசு போன இடம் தெரியலே.."

"விதவிதமா பொருளும் இருக்கு வெலயப் பார்த்தா நடுக்கம் வருது.."

-மக்களுக்காகவே கவிதை எழுதிய மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரத்தின் இந்தப் பாடல் வரிகளை மக்களுக்கு அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருப்பது விலைவாசி தான்!

மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி சொல்லி விட்டார், "விலைவாசி உயர்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான். இருக்கும், கட்டுப்படுத்த இயலாது" என்று இவர்கள் கட்டுப்படுத்தி விடுவார்கள் என்று மக்களுக்கும் எதிர்ப்பும் இல்லை; நம்பிக்கையும் இல்லை. நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதல் இன்று வரை இவர்களைப் பற்றி மக்கள் அனுபவித்துத் தெளிவாய் அறிந்து வைத்திருக்கிறார்கள். "விலைவாசியைக் குறைப்போம்" என்று இந்த ஆளவந்தார்கள் பேசியிருப்பார்களடனறால் அது தேர்தல் காலமாக இருந்திருக்கும். இவர்கள் வாக்குறுதி வள்ளல்கள் அல்லவா!

5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வரை எப்படித் தான் பொறுமை காத்தார்களோ... பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என மக்கள் மீது மீண்டும் ஒரு பலத்த அடி போட்டுவிட்டார்கள். பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய்க்கு மேல் உயர்ந்துவிட்டது. இவர்களின் அடுத்த அடி சமையல் எரிவாயு விலை உயர்வு. சிலிண்டருக்கு 50 ரூபாய் வரை உயர்வு உண்டாம். அதையும் சொல்லி வயிற்றில் பயம் வார்த்து விட்டார்கள். இன்னும் டீசல், மண்ணெண்ணெய்க்கும் விலை உயர்வு உண்டாம்.

'பெட்ரோல் விலை உயர்வு' என்ற ஒரு பட்டனை அழுத்தினாலே போதும், ஜவ் மிட்டாய் முதல் அத்தனை வகைப் பொருட்களும் 'ஜிவ்' வென்று உயர்ந்து விடும்; மக்களுக்கு வாங்கும் சக்தி 'புஸ்ஸ்ஸ்...' ஸெனக் குறைந்து விடும். வாங்கும் பொருட்களின் விலை மட்டுமல்ல; பயணம் செய்யும் வாகனங்களின் கட்டணமும் உயர்ந்து விடும். ரொம்பவும் பாதிக்கப்படுகிறவர்கள் ஏழைகளும் நடுத்தரமும் தான்.

தருகிற கூலி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இந்த விலைவாசி உயர்வோடு போட்டியிட முடியாமல் தோற்றுப் போகும்.

சர்வதேச சந்தைகளில் நிலையற்ற தன்மை

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

பணவீக்கம்

உணவு தானிய உற்பத்தியில் வீழ்ச்சி

'விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த இயலாது' என்று கூறும் இவர்களின் கைவசம் எப்போதும் ரெடிமேடாய் இருக்கும் காரணங்களே இவை. திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான காரணங்களையே சொல்லி மக்களைத் திருப்திப்படுத்த முடியாது. இது அரசின் பொறுப்பை. கடமையைத் தட்டிக் கழிக்கும் போக்கேயன்றி வேறென்ன?

விலைவாசி உயர்வின் கஷ்டங்களை அனுபவித்து உணர்ந்திருக்க வேண்டும்; அல்லது மக்களின் நலன் காக்கும் உயர்ந்த நோக்கம், லட்சியம் இருக்கவேண்டும். இந்த இரண்டும் இல்லாத ஆட்சியாளர்களிடம் நல்லதை எதிர்பார்க்க முடியாது தான்.

விரும்புகிற போதெல்லாம் பெட்ரோல் விலையை உயர்த்திக் கொள்ளும் அதிகாரத்தை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பெட்ரோல் கம்பெனிகளுக்குத் தாராளமாய்த் தாரை வார்த்து விட்டதால் இனி பெட்ரோல் விலை உயர்வு என்பது மாதம் மும்மாரி போலத்தான்! எல்லாப் பொருட்களின் விலைகளும் அதனோடு சேர்ந்தே எகிறும்தான். இவர்களின் ஆட்சியில் இந்த வகையில் நாடு ஏறுமுகம் தான்!

இடதுசாரிகளின் ஆதரவுத் தயவில் மத்திய அரசு நடந்து கொண்டிருந்த காலத்தில் தறிகெட்டு ஓடும் அரசுக்குதிரைக்கு ஒரு கடிவாளம் இருந்தது. இப்போது அது கடிவாளம் கழன்ற குதிரையாக தறிகெட்டு-மக்கள் நலனுக்கான நெறிகெட்டு - ஓடுகிறது.

ஏழை, நடுத்தர மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வுக்குக் காரணங்களைப் போதிக்கிற மத்திய காங்கிரஸ் கூட்டணியாரின் ஆட்சியில் தான் தொழில் முதலாளிகளின், வணிக முதலாளிகளின், வங்கி முதலாளிகளின் பல கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை லாபங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணமாய் உள்ளன.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மக்கள் நலன் சார்ந்த நோக்கமோ, லட்சியமோ இல்லாதவர்களிடமிருந்து, பொறுப்பையும் கடமையையும் தட்டிக் கழிக்கும் விதமாகக் காரண வார்த்தைகள் தான் வருமேயன்றி, நல்ல காரியம் ஏதும் செய்யார். அப்படி நம்புவதும் கூட ஓர் அறியாமையாகி விடும்!

Pin It