புரட்சியாளர் அம்பேத்கரை ‘இந்துத்துவா’ ஆதரவாளராக சித்தரிக்கும் நூல் ஒன்று இந்துத்துவ அம்பேத்கர் என்ற பெயரில் வெளி வந்திருக்கிறது. நூலாசிரியர் ம.வெங்கடேசன். தமிழக பா.ஜ.க. தலைவர்கள் வெளியிட்ட இந்த நூலில் அடங்கியுள்ள வரலாற்றுப் புரட்டுகளுக்கு இது ஒரு மறுப்பு.

பவுத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் ஆகியோரை அம்பேத்கரே ‘இந்து’ மதத்துக்குள் உள்ளடக்கியிருக்கிறார். அனைவரையும் இந்துக்களாக அடையாளப்படுத்திய அம்பேத்கர், எப்படி ‘இந்து’ எதிர்ப்பாளராக இருப்பார்?

- இப்படி ஒரு வாதம்.

நமது பதில் : ‘இந்து’ என்ற பெயரைத் தந்து அவர்களுக்கான மத சட்டங்களை உருவாக்கியதே பிரிட்டிஷ்காரர்கள் தான். அம்பேத்கர் அல்ல.

சற்று வரலாற்றைப் பார்ப்போமா?

கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்குப் பிறகு இந்தியாவிலுள்ள மக்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் என்றே பிரிக்கப் பட்டனர்.

இந்தியாவில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பொதுவான சட்டங் களை இங்கிலாந்திலுள்ளதைப் போல் உருவாக்க பிரிட்டிஷார் நினைத்தனர். முஸ்லிம் அல்லாத அனைவரையும் ‘இந்து’க்கள் என்றாக்கி, அவர்களுக்கான சட்டங்களை உருவாக்க முயன்ற போது அதற்கான அடிப்படை சித்தாந்தமாக பார்ப்பனர்கள் பிரிட் டிஷாரிடம் ‘மனுதர்ம’ நூலை அளித்தனர். பார்ப்பனரும் பிரிட்டி ஷாரும் சேர்ந்து உருவாக்கியதே இந்து மதமும், அதற்கான மதக் கூறுகளும். அம்பேத்கர் உருவாக்கியது அல்ல. இதுவே வரலாறு.

இறந்து போன காஞ்சி மடத்தின் மூத்த சங்கராச்சாரியே இதற்கு சாட்சி. இதோ அவரே கூறுகிறார்:

“அவன் (வெள்ளைக்காரன்) மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்காவிட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைணவர், சாக்தர், முருக பக்தர், எல்லை அம்மனைக் கும்பிடுபவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம்.

சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஒரே சாமி இருக்கிறாரா? இல்லை. வைணவர்களுக்கு சிவன் சாமியே அல்ல; சைவர்களிலும் தீவிரவாதிகள், ‘விஷ்ணு சாமியே அல்ல; சிவன்தான் சாமி; விஷ்ணு சிவனுக்குப் பக்தன்’ என்று சொல்லுகிறார்கள். இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது? வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப்பெயர் வைத்தானோ, நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றி யது.” (நூல்: தெய்வத்தின் குரல் - பாகம் 1 - பக்.266)

பிரிட்டிஷ்காரன் கொடுத்த பெயர்தான் இந்து மதம். அம்பேத்கர் கொடுத்த பெயர் அல்ல.                     

(புரட்டுகள் உடைப்பு தொடரும்)

Pin It