‘அண்டை நாடுகளுடன் இந்தியா போர் தொடுக்குமானால் இந்தியாவால் 10 நாள்கள்கூட தாக்குப் பிடிக்க முடியாது’ - இப்படி ஒரு கருத்தை ஏதேனும் ஒரு இயக்கத்தின் தலைவர் கூறியிருந்தால், ‘தேச விரோதி’ என்ற கூச்சல் காதைத் துளைத்திருக்கும். “தேச விரோதிகளைக் கைது செய்”, “குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளு” என்று பார்ப்பன பா.ஜ.க. “ராஜாக்கள்” பாய்ந்து குதறியிருப்பார்கள். இந்து முன்னணிகள் முற்றுகைப் போராட்டம் என்று கிளம்பியிருக்கும். தொலைக்காட்சிகளில் விவாதங்கள் அனல் பறந்திருக்கும். ஆனால் இப்படி ஒரு கருத்தை கூறியிருப்பது - மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கைக் குழு. அதன் பரிந்துரையில்தான் இந்த அபாயச் சங்கு ஊதப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல;

இராணுவ தொழிற்சாலை வாரியத்தின் செயல்திறனில் குறைகள் மலிந்திருப்பதை சுட்டிக்காட்டியும் அரசின் நடவடிக்கை ஏதும் இல்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கையை மோடி ஆட்சி நாடாளுமன்றத்திலும் கடந்த வாரம் சமர்ப்பித்திருக்கிறது. எந்த நேரத்திலும் சீனாவோடு போர் வெடிக்கலாம் என்ற செய்திகள் வலம் வரும் சூழலில் இப்படி ஒரு அறிக்கை!

அதுமட்டுமல்ல; இந்திய இராணுவத் தயாரிப்பான ‘போபோர்ஸ்’ பீரங்கியில் உதிரி பாகங்களாக ஜெர்மன் தயாரிப்பு என்று கூறி சீனாவில் தயாரிக்கப்பட்ட போலி உதிரி பாகங்களை ‘சித்சேல்ஸ் சின்டிகேட்’ என்ற டெல்லி நிறுவனம், இராணுவத்திற்கு விற்றிருக்கிறது. அந்த நிறுவனத்தின் மீது சி.பி.அய். வழக்கு தொடர்ந்திருக்கிறதாம்.

“இந்து தேசியவாதிகள்” தேவையின்றி சீனாவோடு போர் நடத்த துடிக்கிறார்கள் என்று சீனாவிலிருந்து வெளி வரும் ‘குளோபல் டிரஸ்ட்’ பத்திரிகை கட்டுரை தீட்டுகிறது. “சீனா-இந்திய எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கிறது. எனவே சீனாவிடமிருந்து எல்லைப் பகுதிகளை மீட்க போரைத் தொடங்க வேண்டும்” என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், ‘தினமணி’யில் கட்டுரை எழுதுகிறார்.

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே. நாராயணன், ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஜூலை 18) இப்பிரச்சினைக் குறித்து விரிவாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் “பூட்டான் நாட்டின் ஒரு பகுதியை (டோக்லாம் பீடபூமி) சீனா உரிமை கோருவதுதான் பிரச்னை” என்று குறிப்பிடுகிறார்.

 சீனா உரிமை கோரும் தனது நாட்டிற்குட்பட்ட பகுதியை மீட்பதில் பூட்டான் பெரிய ஆர்வமும் காட்டவில்லை. பூட்டான் எல்லைக்குட்பட்ட அந்த ‘டோக்லாம்’ பகுதியில் சீன மேய்ச்சல்காரர்கள் பல ஆண்டுகாலமாக தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு வருவதாகவும் பூட்டான் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் எம்.கே.நாராயணன் எழுதுகிறார்.

இந்தியா - பூட்டான் - சீனா மூன்றும் அருகருகே இருக்கும் நாடுகள் என்பதால், இந்த மூன்று நாடுகளின் ‘சந்திப்பு முனை’ எது என்பதில்தான் இப்போது பிரச்சினை. இந்த சந்திப்பு முனை பட்டாங்லா எனும் இடம் என்பது இந்தியாவின் நிலை. இல்லை; இல்லை; இந்த சந்திப்பு முனை ‘கிப்மோச்சி’ மலைக்கு அருகில் உள்ளது என்பது சீனாவின் நிலை. பூடான் - இரு தரப்பையும் உறுதியாக எதிர்க்கவில்லை. ஆனால் மூன்று நாடுகளின் சந்திப்பு முனை - தனது நாட்டுக்குள் இருக்கும் ‘டோக்லாம்’ பகுதி தான் என்ற நிலை எடுத்திருக்கிறது பூடான்.

பூடானும் இந்தியாவும் 2007இல் நட்புறவு ஒப்பந்தம் போட்டுக் கொண்டன. அதே நேரத்தில் சீனாவுடனும் பூடான் சமரச பேச்சுகளை நடத்திக் கொண்டிருக்கிறது. பூட்டானின் டோக்லாம் பகுதியில் சீனா 2007ஆம் ஆண்டே சாலைகள் போடத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் இப்போது, இந்திய இராணுவம் பூட்டானுக்கு சொந்தமான டோக்லாம் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது. இந்த விவரங்களை வெளியிட்டுள்ள எம்.கே.நாராயணன், தனது கட்டுரையில் மற்றொரு முக்கிய கருத்தை சுட்டிக்காட்டுகிறார்:

“பேச்சு வார்த்தைகள் நடக்க வேண்டுமானால் இந்தியா தனது படைகளை இந்திய எல்லைப் பகுதியை நோக்கி பின்னோக்கி நகர்த்த வேண்டும். இந்திய எல்லைக்கு இந்தியப் படை திரும்பாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் - என்று சீனா எச்சரிக்கிறது” என்று குறிப்பிடுகிறார், எம்.கே. நாராயணன்.

இந்திய இராணுவம் தனது எல்லையைத் தாண்டி பூட்டானுக்கு உரிய டோக்லாம் பகுதியில் ஆக்கிரமித்து நிற்கிறது என்று இந்தக் கட்டுரை உறுதி செய்கிறது.

‘பூட்டான்’ பிரதேசத்தில் அடங்கியுள்ள ஒரு பகுதிக்கு இந்தியாவும் சீனாவும் சொந்தம் கொண்டாடுவதே இப்போது பிரச்சினை!

முறையாக பேச்சுவார்த்தை நடத்தி சமூகமாக தீர்த்துக் கொள்ளுங்கள். போர் தீர்வு அல்ல என்று எச்சரிக்கிறார் எம்.கே.நாராயணன். இதே கருத்தை வேறு அமைப்புகள், இயக்கங்கள் கூறியிருந்தால், “பார் பார் தேச விரோதிகள்” என்று பாய்ந்திருப்பார்கள்.

எழுதியவர் எம்.கே. நாராயணன் என்ற பார்ப்பனர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்; ஆளுநர் என்ற உயர் பதவிகளை வகித்தவர். அதேபோல் இந்திய இராணுவத்துக்கு ஆயுத பலம் இல்லை என்று பகிரங்கமாக அறிக்கை சமர்ப்பித்திருக்கும் கணக்கு மற்றும் தணிக்கைக் குழு அதிகாரிகளும் பார்ப்பனர்கள்தான்.

இந்தியாவின் ‘தேச பக்தி’யை கேள்வி கேட்கவும் ‘அவாள்’களால்தான் முடியும். ‘தேச பக்தி’ பெருமை பேசவும் ‘அவாள்களுக்கு’ மட்டுமே உரிமை உண்டு. ‘யார் தேச விரோதி’ என்பதை முடிவு செய்வதும் ‘அவாள்’ தான்.

பார்ப்பனரல்லாத எவரும் இந்தப் பிரச்சினைகளிடம் நெருங்கவே முடியாது.

இதுதான் ‘பார்ப்பன பாரதத்தின்’ நிலை! ‘பாரத மாதா’வை தனது பூணூல் வளையத்துக்குள் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள் தேச பக்த கொழுந்துகள்.

அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பது இப்போது புரிகிறதா?

Pin It