கீற்றில் தேட...

மலேசியாவில் பெரியாரியலைப் பரப்பிய இரு நாள் எழுச்சி மாநாடு

இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன் என்ற முழக்கத்தை முன் வைத்து, உலகத் தமிழ் உணர்வாளர்கள் ஒருங்கிணைப்பு மாநாடு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் 2017 ஜுன் 24, 25 நாட்களில், மகா மாரியம்மன் மண்டபத்தில் ஆழமான கருத்துரைகள் - விரிவான விவாதங்களுடன் சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்திலிருந்து சுமார் 10 கருத்துரையாளர்கள் பங்கேற்றனர்.

மலேசிய தமிழர் தன்மான இயக்கத் தலைவர் ‘எழுத்தாண்மை ஏந்தல்’ பெரியாரியலாளர் பெரு அ. தமிழ்மணி, இம்மாநாட்டுக்கான முழுமையான ஏற்பாடுகளை செய்திருந்தார். 2012ம் ஆண்டு பகுத்தறிவாளர் மாநாட்டையும் இதே போல் அவர் நடத்தினார். அதற்குப்பிறகு திருக்குறள் மாநாட்டையும் நடத்தினார். உலக பகுத்தறிவாளர் மாநாட்டின்போது பினாங்கு துறைமுக நகரில் பெரியாரின் சிலை நிறுவப் பட்டது குறிப்பிடத்தக்கது.

malayasia 600ஜுன் 24ம் தேதி காலை 10 மணியளவில் மாநாட்டின் நிகழ்ச்சிகள் தொடங்கின. பெரு.அ.தமிழ் மணி தலைமையேற்று மாநாட்டின் நோக்கங்களை விளக்கினார். தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கும் ஜாதிவெறி அமைப்புகள் மலேசியாவிலும் நுழைந்து ஜாதி மாநாடுகள் நடத்தியதையும் தமிழர்களை தமிழ் அடிப்படையில் நிர்ணயிப்பதாகக் கூறிக் கொண்டு சில தமிழ்த் தேசிய அமைப்புகள் மொழியின் பெயரால் தமிழர்க்கு ஜாதியை அடையாளமாக்கும் ஆபத்தான போக்குகள் மலேசியாவிலும் வேர் விடத் தொடங்கி விட்டதையும் சுட்டிக்காட்டி இதற்கு மாற்றாக ‘திராவிடர்’ அடையாளம் ஒன்றே தமிழர் களுக்கான பாதுகாப்பு என்ற கருத்தை வலியுறுத்தவே இம்மாநாடு கூட்டப்பட்டதாக விளக்கிப் பேசினார்

மலேசியாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் மலேசிய இந்தியன் காங்கிரஸ் தலைவருமான டத்தோ  டாக்டர் சுப்ரமணியன் மாநாட்டைத் தொடங்கி வைத்து ஆழமான கருத்துகளை முன்வைத்தார்.

மலேசியத் தமிழர்கள் ஜாதிகளைத் துறந்து தமிழர் என்ற அடையாளத் தோடு தங்களை ஒருமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அவர் அரசியல் கட்சிகள் கொள்கைகளை சமரசம் செய்து கொள்ள வேண்டியவைகளாக இருக்கின்றன. சமுதாய இயக்கங்களைப் போல் கொள்கை உறுதியோடு செயல்பட முடியாது என்ற உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று வேண்டு கோள் வைத்தார்.

மலேசியாவுக்கு பெரியார் இரண்டு முறை வந்து சீர்திருத்த கருத்துகளைப் பேசியதையும், அப்போது எழுந்த எதிர்ப்புகளையும் நினைவு கூர்ந்தார். தமிழ்நாட்டில் ஆட்சியில் தொடர்ந்து திராவிட கட்சிகள் இருந்தாலும் அரசியல் கட்சிகளுக்கே உள்ள குறைகள் பலவீனங்கள் அந்த கட்சிகளையும் விட்டு வைக்கவில்லை. அதனால் தான் இளைஞர்கள் மாபெரும் சக்தியாக மெரினா கடற்கரையில் திரண்டார்கள், ஜல்லிக்கட்டு என்பது மட்டும் அந்த போராட்டத்தின் மய்யமாக இருக்கவில்லை, தமிழர்களின் உரிமை களுக்கான போராட்டமாக கட்டுப்பாட்டுடனும் ஒழுக்கத்துடனும் அது நடந்தது என்று பெருமையுடன் குறிப்பிட்டார். திராவிடர் என்பது தமிழருக்கான இன அடையாளம் என்ற இந்த மாநாட்டின் நோக்கத்தை தாம் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து மாநாட்டின் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் 1.00 மணியளவில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முதல் உரை நிகழ்த்தினார். திராவிடர், தமிழர், மனிதர் என்ற மூன்று அடையாளங்களின் தேவை குறித்தும் இந்த அடையாளங்களுங்கிடையே உள்ள உறவு குறித்தும் திராவிடர் கருத்தாக்கத்தின் வரலாறு, பெரியார் முன்வைத்த திராவிட கருத்தாக்கத்தின் உள்ளடக்கம், பெரியாருக்கு எதிராக முன் வைக்கப்படும் குழப்பான வாதங்களை  விளக்கியதோடு ஆரியர்கள் சிந்து சமவெளி நாகரீகமாக வாழ்ந்த திராவிடர்கள் மீது புலம் பெயர்ந்து வந்து சமஸ்கிருதப் பண்பாட்டை திணித்தார்கள் என்று அண்மையில் வெளி வந்துள்ள ஒய் குரோமோசோம் அடிப்படை யிலான மரபணு ஆய்வுகளை விளக்கி உரை யாற்றினார். மாநாட்டின் முழக்கத்தில் ‘திராவிடன்-தமிழன்-மனிதன்’ என்ற சொற் றொடர்களில் ‘ஆண்’ கண்ணோட்டமிருப்பதை மாற்றி இருபாலருக்கும் பொருந்தும் ‘திராவிடர்-தமிழர்-மனிதர்’ என்ற சொற்களை பயன்படுத்தலாம் என்ற யோசனையை முன் வைத்தார்.

முதல் நாள் நிகழ்வில் திமுகவைச் சார்ந்த இள.புகழேந்தி மற்றும் வே.மதிமாறன், திராவிடர் கழக பேச்சாளர் அன்பழகன் ஆகியோர் மிக ஆழமான கருத்துகளை முன்வைத்து உரையாற்றினர்.

முதல் நாள் மாநாட்டில் மலேசிய நாட்டின் தமிழ் அமைச்சர்கள் டத்தோ வி தேவமணி (பிரதமர்துறை துணை அமைச்சர்), சரவணன் (விளையாட்டுத்துறை துணை அமைச்சர்), கமலநாதன் (கல்வித்துறை துணை அமைச்சர்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றினர்.

இரண்டாம் நாள் மாநாடு ஜூன் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன், மஞ்சை வசந்தன், திராவிடர் கழக செயல் தலைவர் சு.அறிவுக்கரசு, பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோர் உரை யாற்றினர். தமிழ் நாட்டைச் சார்ந்த கவிஞர் வா.மு.சே. திருவள்ளுவன் தமிழ்நாட்டிலிருந்து கருத்துரையாளர்களை ஒருங்கிணைத்தார்.

திராவிடர் என்ற இன அடையாளத்தின் கீழ் திராவிட தொல்பழங்குடி வழிவந்த அனைத்து உலகச்சமுதாயத்தினரையும் ஒருங்கிணைத்து திராவிடர் என்ற அடையாளத்தை அய்.நா. மன்றம் ஏற்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநாட்டை ஒருங்கிணைத்த பெரு.அ.தமிழ்மணி அறிவித்தார். அதற்கான அமைப்பு ஒன்றை பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்த அமைப்பின் தலைவராக பெரு.அ.தமிழ்மணி, செயலாளராக வே.மதி மாறன், துணைத்தலைவராக இயக்குனர் வேலு. பிரபாகரன் ஆகியோர் கலந்தாலோசனைக்குப் பிறகு நியமிக்கப்பட்டனர்

மாநாட்டைத் தொடர்ந்து மலேசியா முழுதும் தமிழகத்திலிருந்து வந்த கருத்துரையாளர்களைக் கொண்டு ஒவ்வொரு நாளும் தனித்தனித் பகுதிகளில் சிறப்புக் கூட்டங்கள் ஒரு வார காலத்திற்கு நடத்தப்பட்டன. மலேசிய திராவிடர் கழகம், மலேசிய இந்தியன் காங்கிரஸ் மற்றும் தமிழ் அமைப்புகள் இக்கூட்டங்களுக்கு ஒழுங்கு செய்திருந்தன.