கான்ஷிராம் உருவாக்கிய பகுஜன் சமாஜ் கட்சிக்கு அவரது வாரிசாக தலைவராகியிருக்கும் மாயாவதி, வாக்கு வங்கி அரசியலுக்காக கான்ஷிராம் கொள்கைகளையே குழி தோண்டி புதைத்து வருகிறார்.

சங் பரிவாரங்கள் இராமன் கோயில் கட்டும் இயக்கத்தைத் தொடங்கியபோது கான்ஷிராம் அதற்கு எதிர்நிலைப்பாடு ஒன்றை எடுத்தார். சம்பூகன், ஏகலைவன் போன்ற விளிம்பு நிலை புராண நாயகர்களை வெகுமக்களின் அடையாளமாக்கி இயக்கம் நடத்தினார்.

இப்போது மாயாவதி, இராமன் கோயில் கட்டும் கட்சிகளுக்கு மாற்றாக, பார்ப்பன அவதாரமாகப் பேசப்படும் ‘பரசுராமனை’ தலையில் தூக்கி சுமக்கிறார். ஷத்திரியர்களை ஒழிப்பதற்காகவே பார்ப்பன பரசுராமன் அவதாரம் எடுத்ததாகவும் தனது கோடரியால் சத்திரியர்களை ‘பூண்டோடு’ ஒழித்ததாகவும் புராணங்கள் கதை விடுகின்றன. மாயாவதி 70 அடி உயரத்தில் அந்த பரசுராமனுக்கு சிலை வைக்கப் போவதாக அறிவித்துள்ளார். முலாயம் சிங்கின் சமாஜ் வாடி கட்சியும் தன் பங்கிற்கு மாவட்டந்தோறும் பரசுராமன் சிலைகளை வைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அதற்குப் போட்டியாக மாயாவதி வெளியிட்ட அறிவிப்பு இது?

கான்ஷிராம் - பகுஜன் சமாஜ் கட்சிக்கு தந்த அடையாளங்களை தலைகீழாகப் புரட்டிப் போடுகிறார், மாயாவதி.

                                                    *******

கழகக் களப் பணியாளர் தமிழரசு முடிவெய்தினார் - நெகிழ்ச்சியுடன் நடந்த படத்திறப்பு

photoதிராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட செயல்வீரர், பெரியார் தொண்டர், கழகக் களப் பணியாளர் கோ. தமிழரசு (44)  11.06.2020  அன்று  நள்ளிரவு உடல்நலக் குறைவால் முடிவெய்தினார்.

தோழர் தமிழரசு படத்திறப்பு நிகழ்வு சென்னை தலைமை அலுவலகத்தில் 17.09.2020 காலை 10 மணியளவில் நடை பெற்றது. நிகழ்விற்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை வகித்தார். தோழர்கள் சி. இலட் சுமணன், தா. சூர்யா, கோ. வீரமுத்து, தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் க.சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தோழர் தமிழரசுவின் இயக்க உணர்வையும், தோழர்களுக்கு தாமாக முன் வந்து உதவிடும் பண்பையும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தனர்.

கருப்பு பிரதிகள் நீலகண்டன், ‘விரட்டு’ ஆனந்த், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார் ஆகியோர் தமிழரசு அவர்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் படத்தைத் திறந்து வைத்து  உரையாற்றினார். மாவட்டத் தலைவர் ம.வேழவேந்தன் நன்றி கூறினார்.

தோழர் தமிழரசு குடும்பத்துக்கு கழகத் தோழர்கள் திரட்டிய சிறு நிதி, அவரது துணைவியாரிடம் வழங்கப் பட்டது. கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு தமிழரசு மூத்த மகள் யாழினி ரூ.2000/- நன்கொடையாக கழகப் பொதுச் செயலாளரிடம் வழங்கினார். நெகிழ்வுடனும் இயக்க உணர்வுடனும் நடந்த நிகழ்வுக்கு தோழர்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். 

விடுதலை இராசேந்திரன்

Pin It