சாதாரணமாக 5 பெண்கள் கூடிப் பேசியதால், ஒரு மாபெரும் புரட்சி உருவானது. அதன் தொடர்ச்சியே சர்வதேச மகளிர் தினமாக மாறியது. இன்றைக்கும் பெண்கள் எந்த கோரிக்கைகளுக்காக அனுதினமும் போராடிக்கொண்டிருக்கிறார்களோ அந்த கோரிக்கைகளே மகளிர் தினம் உருவாக காரணமாக அமைந்தது.
பிரெஞ்ச் புரட்சி நடந்த 1789 ஆம் ஆண்டு லூயி மன்னனின் அரசவை ஆலோசனைக்குழுவில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் இடம்பெற வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம், 8 மணிநேர வேலை, வாக்குரிமை, பெண்விடுதலை என கோரிக்கைகளை பெண்கள் முழங்கினர். இந்த போராட்டமானது, ஐரோப்பா முழுவதும் தீயாக பரவியது. தெருக்களில் பெண்கள் கிளர்ச்சியுற்று அனலாக களமிறங்கினர். ஆணாதிக்க சிந்தனை கொண்ட சமூகத்தில் பெண்களின் போராட்டம் ஏளனம் செய்யப்பட்டது. ஆனால், போராட்டத்தின் உக்கிரம் ஆட்சியாளர்களை நிலைகுலைய வைத்தது. விளைவு பிரான்சில் இரண்டாம் குடியரசை நிறுவிய லூயிஸ் ப்ளாங்க் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள் அரசவை ஆலோசனைக்குழுவில் பெண்களுக்கு இடம் அளித்ததோடு வாக்குரிமையும் அளித்தார்.
பிரான்ஸ் நாட்டில் பெண்கள் பெற்ற இந்த மகத்தான வெற்றியானது உலக நாடுகள் முழுவதும் பரவியது. 1910இல் ஜெர்மனியை சேர்ந்த பெண்ணுரிமை போராளி கிளாரா ஜெட்கின் தலைமையில் சர்வதேச மகளிர் மாநாடு கூடியது. அதில் பல்வேறு நாடுகளை சார்ந்த பெண்கள் பங்கேற்றனர். அம்மாநாட்டில் சர்வதேச மகளிர் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த மாநாடு பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்ட மார்ச் 8ஆம் நாளை நினைவு கூறும் வகையில் சர்வதேச மகளிர் தினமாக கொண்டாட முடிவெடுத்தது. இந்தமுடிவு அடுத்தாண்டு முதலே உலகம் முழுவதும் பேரெழிச்சியோடு கொண்டாடப்பட்டது. இதனை ஐ.நா சபையும் 1975 ஆம் ஆண்டு அங்கீகரித்தது.
இந்தியாவில் உள்ள பெண்களும் தங்கள் உரிமைக்காக போராடும் அதே வேளையில் நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் சம உரிமை கோரி போராடினர். 1990ஆம் ஆண்டுகளில் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்தது. இதனால் 1996 ஆம் ஆண்டு பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முடிவு எடுத்தது. அதற்காக அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த சில நாட்களில் அந்த அரசு கலைக்கப்பட்டது. இதனால் சட்ட முன்வடிவு சட்டமாகாமல் போனது. இதனையடுத்து மீண்டும் பெண்கள் போராட்டம் வெடித்தது. 1998 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசால் மீண்டும் அரசமைப்பு சட்டம் திருத்தம் செய்யப்பட்டு சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. அந்த அரசும் கலைக்கப்பட்டது. சட்ட முன்வடிவு மீண்டும் நிறைவேறாமல் போனது. 1999ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க ஆட்சியில் மீண்டும் அரசமைப்பு சட்டத்தை திருத்தி சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டமுன் வடிவை எதிர்த்து சில கட்சிகளின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் சட்ட முன்வடிவை கிடப்பில் போட்டது.
இதன் பின்னர் 2004ஆம் ஆண்டு இடதுசாரிகளின் ஆதரவோடு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு (காங்கிரஸ்) ஆட்சிக்கு வந்தது. இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தால் வேறு வழியின்றி புது சட்டமுன்வடிவை தாக்கல் செய்தது. பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தும் காங்கிரஸ் தலைமையிலான ஐ..மு கூட்டணி அரசு சட்டத்தை நிறைவேற்றாமல்‘ஒருமித்த கருத்து’ என்று கூறி ஆய்வுக்குழு ஒன்றை அமைத்தது. அக்குழுவும் தற்போது உள்ள நாடாளுமன்றத்தில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது. ஆனாலும், ஐ.மு.கூ அரசு வேண்டுமென்றே இச்சட்டத்தை நிறைவேற்றாமல் காலம் கடத்தி வருகிறது. தற்போது மக்களவை, மாநிலங்களவையில் 3இல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்ததும் சட்டத்தை நிறைவேற்றாமல் காங்கிரஸ் அரசு (ஐ.மு.கூ _ 2) மௌனம் காக்கிறது. இச்சட்டம் சந்தித்ததுபோல் வேறு எந்த சட்டமுன் வடிவும் இத்தனை தடைகளை சந்தித்தது இல்லை. அதே நேரத்தில் வரலாற்று ரீதியான எந்தக் கோரிக்கையும் வெற்றி பெறாமல் வரலாறு தேங்கி விட்டதுமில்லை. காலம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. வரலாறு முன்னேறிக் கொண்டே இருக்கிறது. போராட்டங்களே காலத்தை வழி நடத்திக்கொண்டிருக்கிறது.