உ.பி. முதல்வராக தலித் சமுதாயத்தைச் சார்ந்த மாயாவதி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சிக்குரிய வரவேற்கப்பட வேண்டிய செய்தியாகும். ஆனால், மனுவாதிகளை எதிர்த்துப் போர்ப் பிரகடனம் செய்து வந்த பகுஜன் சமாஜ் கட்சி, இப்போது மனுவாதிகளுக்கு வலிமையான அதிகாரத்தை வழங்கியிருக்கிறது என்பது வேதனைக்குரியதாகும். ‘தலித் - பார்ப்பனர்’ கூட்டணியை உருவாக்கிடும் நோக்கத்தில் உ.பி. முழுதும் பார்ப்பனர்களுக்கான மாநாட்டை மாயாவதியே நடத்தி பார்ப்பனர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.

403 உறுப்பினர்களைக் கொண்ட உ.பி. சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சியின் சார்பாக 86 பார்ப்பனர்கள் உட்பட, 139 உயர்சாதியினரைப் போட்டியிட வைத்தார். 86 பார்ப்பனர்களில் 56 பேர் இப்போது வெற்றி பெற்றுள்ளனர். 38 தாக்கூர்களும், 14 வைசியர்களும் ஒரு காயஸ்தாவும் நிறுத்தப்பட்டனர்.

403 இடங்களில் - 206 இடங்களில் வென்று தனி பெரும்பான்மையுடன் மாயாவதி ஆட்சி அமைத்துள்ளார். அவர் அமைத்துள்ள அமைச்சரவையில், 7 பார்ப்பனர்கள் இடம் பெற்றுள்ளனர். 6 தாக்கூர்களுக்கும், 5 முஸ்லீம்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற தலித் வேட்பாளர்களை விட பார்ப்பன வேட்பாளர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற மாயாவதி உயர்சாதியில் உள்ள ஏழைகளுக்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார். பார்ப்பனரோடு கைகோர்த்து நிற்கும் மாயாவதி மனு எதிர்ப்பு ஆட்சி நடத்தப் போகிறாரா? அல்லது மனுவாதிகளுக்கான ஆட்சி நடத்தப் போகிறாரா? இதுவே இப்போது எழுந்துள்ள கேள்வி.

Pin It