Narayanaswamy resignationபா.ஜ.க.வும் சங் பரிவாரங்களும் பேசும் இந்துத்துவா அரசியல் மக்கள் உரிமைகளுக்கும் சுயமரியாதைக்கும் நேர் எதிரானது. சுருக்கமாக இப்படி கூறலாம். பெரும்பான்மை உழைக்கும் மக்களை, பார்ப்பனிய வைதிக ஒடுக்குமுறை பண்பாட்டுக்கு சேவகம் செய்ய வைத்து மக்களின் சுயமரியாதையை அதற்கு விலையாகக் கேட்கும் கொள்கையே இந்துத்துவா.

சமூக அதிகாரம் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சக்திகளிடமே தொடர வேண்டும் என்ற பார்ப்பனிய கோட்பாட்டையே அரசியலிலும் அவர்கள் செயல்படுத்துகிறார்கள். அதற்காக இந்தியாவின் ஆட்சி அதிகாரம் முழுமையும் பா.ஜ.க.வின் அதிகாரத்துக்குள் கொண்டு வரத் துடிக்கிறார்கள்.

மதத் தாவல் சட்ட விரோதம் என்று சட்டம் போடுகிறார்கள். ஆனால், ‘கட்சித் தாவல்’ செய்வதை ஊக்குவிக்கிறார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத மாநிலங்களில் ஆட்சி அதிகாரங்களை முறைகேடுகளாக ஒளிவுமறைவின்றி பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற ஆட்சிகளைக் கவிழ்க்கிறார்கள்.

இப்போது புதுச்சேரியிலும் நாராயணசாமி அவர்களை முதல்வராகக் கொண்டு நடந்த காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்திருக்கிறார்கள். அடுத்த வாரத்தில் மாநில சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வரப்போகும் நேரத்தில் இந்தக் கவிழ்ப்பு நடந்திருக்கிறது.

மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒரு ஆட்சியை ஆளுநர் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கலைப்பது நியாயமல்ல என்ற நேர்மையோ, அறமோ இவர்களிடம் கிஞ்சித்தும் இல்லை.

சட்டப் புத்தகங்களையும் அதன் விதிகளையும் புரட்டிப் பார்ப்பது ஒன்று மட்டுமே நாடாளுமன்ற ஜனநாயகத்தை நீடிக்கச் செய்து விடாது. சட்டத்தின் உணர்வுகளை மதிப்பதும் அதன் வழியில் உருவாக்கப் படும் மரபுகளைப் பாதுகாப்பதுமே மக்கள் ஜனநாயகத்தின் அடிப்படை. மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டவுடன் தனது ‘மன்கி பாத்’ வானொலி உரையில் கூறியதை நினைவுபடுத்த வேண்டும்.

“சட்டங்களையும் விதிகளையும் கடந்து நமது பண்பாட்டு மரபில் ஜனநாயகம் பிரிக்க முடியாதபடி புதைந்து நிற்கிறது. ஜனநாயகம் நமது கலாச்சாரம்; ஜனநாயகம் நமது பாரம்பர்ய மரபு” என்று பேசினார். இந்த மரபும், பண்பும் தான் இப்போது நாட்டில் அவரது ஆட்சியில் பிற்பற்றப்படுகிறதா?

6 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களையும் ஒரு தி.மு.க. உறுப்பினரையும் பா.ஜ.க. தனது வலைக்குள் சிக்க வைத்தது; காங்கிரஸ் உறுப்பினர்கள் பா.ஜ.க.வுக்கு தாவி, சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினர். 30 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்தில் கட்சி மாறி பதவி விலகியவர்கள் 7 பேர்; மீதமுள்ள 23 இடங்களில் 12 பேர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாளர்கள். (காங்கிரஸ்-9; தி.மு.க. 2; இடதுசாரி ஆதரவு சுயேச்சை-1), எதிர் தரப்பில் ரங்கசாமி காங்கிரஸ் (7 பேர்), அ.தி.மு.க. (4 பேர்), மொத்தம் 11 பேர்.

வாக்கெடுப்பு நடத்தினால் நாராயணசாமி ஆட்சியே வெற்றி பெறும் நிலை இருந்தது. இதையும் குறுக்கு வழியில் தடுத்து விட்டார்கள். 2016இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு இடம் கூட பெறாத பா.ஜ.க., ஆளுநர் வழியாக நியமன உறுப்பினர்களாக 3 பா.ஜ.க.வினரை நியமித்தது. இதற்கு முதலமைச்சர் பரிந்துரை வேண்டும் என்ற விதியையும் புறந்தள்ளினார்கள். நியமனமான பா.ஜ.க.வினரில் தேர்தலில் போட்டியிட்டு ‘டெபாசிட்’ தொகையைக்கூட வாங்க முடியாமல் மக்களால் புறக்கணிக்கப்பட்ட வர்களும் உண்டு.

மூன்று பேரில் ஒரு நியமன உறுப்பினர் இந்த ஆண்டு ஜனவரியில் இறந்தார். உடனே அவசர அவசரமாக அந்த இடத்தில் மற்றொரு பா.ஜ.க.வைச் சார்ந்தவரை ஆளும் கட்சி உறுப்பினராக நியமித்தது. ஜூன் 8ஆம் தேதி சட்டசபையின் ஆயுட்காலம் முடிவடையும் நிலையில் இவ்வளவு குறுகிய காலத்தில் உறுப்பினர் நியமனம் செய்த போதே ஆட்சிக் கவிழ்ப்புக்கு தயாராகி விட்டார்கள் என்பதை உணர முடிகிறது.

நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது என்றும், இதுவரை புதுச்சேரி சட்டசபையில் அவர்கள் வாக்களித்தது இல்லை என்றும் குடியரசுத் தலைவர் தேர்தலில்கூட வாக்களிக்கவில்லை என்றும் சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் சட்டப் பேரவைத் தலைவரையும் ‘சரிகட்டி’ பா.ஜ.க.வினர் அவர் வழியாக நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு என்று அறிவிக்கச் செய்து கடைசி நேரம் வரை ‘குதிரை பேரம்’ நடத்தி ஆட்சியைக் கவிழ்த்திருக்கிறார்கள்.

தேர்தலில் ‘டெபாசிட்’ தொகைகூட பெற முடியாது மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி மீது நம்பிக்கை இல்லை என்று கூறி ஆட்சியைக் கவிழ்த்திருக்கிற அவலம் நடந்து முடிந்திருக்கிறது.

அதனால் தான் ‘இந்துத்துவா பார்ப்பனியம்’ வெகு மக்களுக்கு எதிரானது ‘வேத புரோகித மனுசாஸ்திர மேலாதிக்கத்தைத் திணிப்பதே அதன் பண்பு என்று நாம் அழுத்தமாகக் கூறுகிறோம். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களை முடக்குவதற்காகவே கிரேன்பேடி என்ற ஆளுநரை டெல்லியிலிருந்து அனுப்பினார்கள்.

ஆட்சிக் காலம் முடியும் வரை அவர் தடைக் கற்களைப் போட்டு ஆட்சியின் செயல்பாடுகளை முடக்கினார். மக்களின் கடும் கோபத்துக்கும் ஆத்திரத்துக்கும் உள்ளான அவரை கடைசி நேரத்தில் திரும்ப அழைத்து ஒரு நாடகம் நடத்தினார்கள். வேறு ஒரு புதிய ஆளுநரை பொறுப்பாக்கி அவர் வழியாக ஆட்சிக் கவிழ்ப்பு வேலை முடிந்திருக்கிறது.

அருணாசலபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், மத்திய பிரதேசம், கருநாடகம் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில ஆட்சிகளை ஆளுநரையும் தங்களிடமுள்ள வருமான வரித்துறை, சி.பி.அய்., அமுலாக்கத் துறைகளின் அதிகாரங்களையும் முறைகேடாகப் பயன்படுத்தி மிரட்டி கட்சி மாறச் செய்து ஆட்சியைக் கவிழ்த்தவர்கள், இப்போது புதுவையிலும் அரங்கேற்றியிருக்கிறார்கள். இந்துத்துவா அகராதியில் ஜனநாயகத்துக்கான இலக்கணம் இப்படித்தான் இருக்கும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It