அண்ணா பிறந்தநாளையொட்டி முன் விடுதலை செய்யப்பட உள்ள சிறைவாசிகளின் பட்டியலில் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுவதாக முஸ்லிம் அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன. இந்தக் குற்றச்சாட்டில் உள்ள நியாயங்களை மறுத்துவிட முடியாது.

அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளில் 700 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க உள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையடுத்து, `முன் விடுதலை' என்ற சலுகையைப் பெறுவதற்குத் தகுதியுள்ள சிறைவாசிகள் குறித்த அரசாணையும் வெளியிடப்பட்டது.

அந்த ஆணையில், பயங்கரவாதம், மதமோதல், வகுப்பு மோதல், பாலியல் வன்கொடுமை, சாதி மோதல், அரசுக்கு எதிராக செயல்பட்டவர்கள், சிறைவாசத்தில் இருந்து தப்பிக்க முயன்றவர்கள், ஊழல் வழக்கு, குண்டுவெடிப்பு என 17 குற்றங்களை வகைப்படுத்தி, இந்தக் குற்றங்கள் தொடர்பாக தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் தலைவர்களின் பிறந்தநாளில் முன்விடுதலை தொடர்பான பேச்சுக்கள் எழும்போதெல்லாம் கோவை சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகள், ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறைப்பட்டுள்ள ஏழு பேர், வீரப்பன் அண்ணன் மாதையன் ஆகியோரது விடுதலை குறித்தும் மனித உரிமை ஆர்வலர்களால் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

இந்தமுறையும் இவர்கள் முன் விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் தென்படாததால், இஸ்லாமிய அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

20 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு அவர்களை விடுதலை செய்யும் போது செய்த குற்றங்களைப் பட்டியலிடக் கூடாது. அதற்கான தண்டனையை அனுபவித்து விட்டார்கள். சிறைவாசிக்கான மனித உரிமை என்ற ஒன்றை அளவுகோல் கொண்டே இதை அணுக வேண்டும்.

அரசாணை குறித்து முதல்வரை நேரடியாக சந்தித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக, த.மு.மு.க பொதுச் செயலாளர் முனைவர் ஹாஜா கனியிடம் பிபிசி தமிழுக்காக, “நாங்கள் சிறப்பு சலுகைகள் எதையும் கேட்கவில்லை. இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கு பாகுபாடு இல்லாத நிலை வர வேண்டும் என நினைக்கிறோம். அதைத்தான் முதல்வரிடம் தெரிவித்துள்ளோம்'' என்கிறார். இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தை எப்படி மறுக்க முடியும்?

கடந்த, அ.தி.மு.க அரசு பா.ஜ.க.வின் ஆணைகளை ஏற்று செயல்பட்டதால் மத அடிப்படையில் பாகுபாடு காட்டினார்கள். தற்போது பொறுப்பேற்றுள்ள தி.மு.க அரசு, 90 சதவீத சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது. எனவே, முன்விடுதலையின்போது கோவை சிறையில் உள்ள 38 இஸ்லாமிய சிறைவாசிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்று மிகவும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அரசாணை மிகுந்த ஏமாற்றத்தையே தருகிறது.

“தருமபுரியில் வேளாண் கல்லூரி மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளனர். அதேபோல், மதுரையில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த லீலாவதி படுகொலை வழக்கிலும் தண்டனை பெற்றவர்கள் முன்விடுதலை பெற்றுள்ளனர். தஞ்சை கீழவெண்மணி வழக்கில் சேர்க்கப்பட்ட பத்து பேரும், பத்து ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டனர்.

கோவையில் உள்ள 38 முஸ்லிம் சிறைவாசிகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்து விட்டனர்.

இவர்களில் பலர் 60 வயதைக் கடந்தவர்களாகவும் நோயாளிகளாகவும் உள்ளனர். சிறையில் இருந்து வந்தாலும் நல்ல உடல்நலனோடு அவர்கள் வாழ முடியாது. அவர்களது எஞ்சிய வாழ்நாளையாவது குடும்பத்துடன் செலவிட விரும்புகிறார்கள். இவர்கள் விஷயத்தில் மனிதாபிமானத்துடன் அரசு செயல்பட வேண்டும் என்பதே நமது உறுதியான கருத்து.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் 30 ஆண்டுகளாக சிறையில் கழித்த நிலையில் மாநில அரசுக்குரிய தண்டனைக் குறைப்பு அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்ய அரசு முன் வந்ததில் உள்ள நியாயம், இஸ்லாமிய சிறைவாசிகளுக்கும் அப்படியே பொருந்தும்.

இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளில் சுமார் 45 சதவிகிதம் பேர் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்கள் என்ற புள்ளி விவரம், தேசியகுற்ற ஆவணக் காப்பக அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்ல, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம் சிறைவாசிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொதுப்பிரிவினர், உயர் சாதியினரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது என்றும் தேசியகுற்ற ஆவணக் காப்பகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு தகவலின்படி, நாட்டிலுள்ள தண்டனை சிறைவாசிகளில் தலித்துக்களின் எண்ணிக்கை மட்டும் 21.7 சதவிகிதமாக உள்ளது. விசாரணை சிறைவாசிகளின் எண்ணிக்கையிலும் 21 சதவிகிதம் பேர் தலித்துக்களாக உள்ளனர்.

பார்ப்பனர், உயர்ஜாதியினர் - சிறைவாசிகளாகத் தண்டிக்கப்படுவது மிகவும் குறைவு. நாட்டின் பொருளாதாரக் குற்றங்கள், நிதி மோசடிகளின் இந்த ‘மேல்மட்டஉயர்குலப் பெருமை’ பேசும் கூட்டத்தார் தான் பெருமளவில் ஈடுபடுகின்றனர். அவர்களின் அதிகாரச் செல்வாக்கினாலும் சட்டங்களின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பி வருகிறார்கள்.

இஸ்லாமியர்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்ற முடிவுக்கு அதிகாரவர்க்கம் வந்து விடுகிறது. ஏனைய சிறைவாசிகளுக்கு உள்ள விடுதலை உரிமையை இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மட்டும் மறுப்பது மதத்தின் பார்வையே தவிர மனித உரிமைப் பார்வையல்ல.

தமிழக முதல்வர் கடந்தகால ஆட்சியின் பல தவறான முடிவுகளைக் கைவிட்டு, புதிய மக்களாட்சி நிர்வாகத்தை கட்டமைத்து வரும் நிலையில் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு விடுதலையை பெறும் உரிமையை தயங்காது வழங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It