நமது பிரதமர் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்தபோது “மக்கள் தங்கள் துன்பங்களை ஒரு 5 ஆண்டுகள் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டால் அதன் பின் வளமான எதிர்காலம் இருக் கிறது” என்று கூறினார். பாவம்! அவருக்குத் தெரியாது; மக்கள் பற்களை மட்டுமல்ல உடலுறுப்புகள் அனைத் தையும் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டிருக் கிறார்கள் என்பதும், அதுவும் 5 ஆண்டுகள் அல்ல; குறிப்பிட்டுக் கூற முடியாத அளவு ஆண்டுகளாக அப்படித்தான் இருக்கிறார்கள் என்பதும்.
உண்மை என்ன வென்றால் முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சிப் போக்கில் நெருக்கடி என்பது தவிர்க்க முடியாத ஒரு அம்சம். அப்படி நெருக்கடி ஏற்படும் பொழுது நேரும் கூடுதல் சிரமங்கள் அனைத் தையும் உழைக்கும் மக்களே ஏற்க வேண்டும் என்பதும் முதலாளிகள் அதனால் தப்பித் தவறிக் கூட பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதும் தான் முதலாளித் துவ அறிஞர்களின் கொள்கை. அதைத்தான் மன்மோகன் சிங் வெளிப்படுத்தி இருந்தார்.
2008ஆம் ஆண்டில் வெடித்த, இன்னும் தீராமல் மக்களை வதைத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டும் என்று அறிஞர்கள் தங்கள் தீர்வுகளைக் கூறினர். அவர்களுள் ஜெர்மானிய நிபுணர்கள், முதலாளிகள் தங்கள் முதலீடுகளுக்குக் கிடைக்க வேண்டிய இலாப விகிதத்தைக் குறைத்துக் கொண்டால் நெருக்கடியில் இருந்து ஓரளவு மீளலாம் என்று ஒரு கருத்தை முன் வைத்தனர். இதைக் கேட்ட மன்மோகன்சிங் பொங்கி எழுந்து விட்டார். கனடாவில் 27.06.2010 அன்று நடந்த 20 நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில், ஜெர்மானிய நிபுணர்களின் கருத்தை வன்மையாகக் கண்டித்தார். முதலாளிகளுக்கு இலாபம் குறைவது என்பது, தொழில் முனைவோரின் ஆர்வத்தைக் குறைத்து விடும் என்றும், அதன் தொடர்விளைவாகச் சமூக அமைப்பே சிதைந்து போகும் அபாயம் ஏற்பட்டு விடும் என்றும் கூறினார். அதாவது யாருக்கு என்ன துன்பம் வந்தாலும், முதலாளிகள் மட்டும் ஆத்திர அவசரத்திற்குக் கூட சிறு துன்பமும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது தான் அரசின் கடமை என்றும் இடித்துரைத்தார்.
“அரசு என்பது ஒரு வர்க்கத்தின் சார்பான வன் முறை உறுப்பு” என்றும் “தான் சார்ந்திருக்கும் வர்க்கத்தின் நலனைக் காப்பாற்ற எத்தகைய நட வடிக்கைகளை எடுக்கவும் தயங்காது” என்றும் மார்க்சியம் கூறும் விளக்கம் சரியானது என்பதை மெய்ப்பித்தார்.
இப்பொழுது ஜப்பானிய முதலாளிகளும், முதலா ளித்துவ அறிஞர்களும் மன்மோகன் சிங் கையாண்ட விதத்தைவிடக் கேவலமான முறையில், முதலாளித்துவ முறையின் கொடூரமான முதகத்தைக் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
கடந்த மார்ச் மாதத்தில் (மார்ச் 2011), சுனாமி அலை ஜப்பானிய மக்களைத் தாக்கியதில் உலக மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அத்து டன் நில்லாமல், உலகின் பல பகுதி மக்களும் சுனாமி யால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்காகப் பல வழிகளிலும் உதவிகளை நல்கியுள்ளனர். மற்ற நாட்டு மக்களே உதவிக் கரங்களை நீட்டும் போது சுனாமி யால் பாதிக்கப்பட்ட தங்கள் சகோதரர்களுக்கு மற்ற ஜப்பானியர்கள் உதவாமல் இருப்பார்களா? அவர்கள் எல்லோரும் தங்களுடைய தேவைகளைக் குறைத்துக் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களின் நிராரணத்திற்காக வருமானத்தின் கணிசமான பகுதியை நல்கியுள்ளனர்.
ஜப்பானிய மக்களின் இந்த நல்லெண்ண நடவடிக் கையினால் ஜப்பானிய முதலாளிகளும், ஜப்பானிய அரசினரும் எரிச்சல் அடைந்துள்ளனர்.
ஆச்சரியப்பட வேண்டாம். உண்மையிலேயே ஜப்பானிய மக்கள், சுனாமியால் பாதிக்கப்பட்ட தங்கள் சகோதரர்களுக்கு உதவும் நல்லெண்ண நடவடிக்கை யில் ஜப்பானிய முதலாளிகளும் ஜப்பானிய அரசி னரும் எரிச்சல் அடையவே செய்துள்ளனர். மக்கள் தங்கள் தேவைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டதன் விளைவாக உற்பத்தியான நுகர்பொருட்கள் விற்பனை யாவதில் சுணக்கம் ஏற்பட்டு விட்டதாம்; இது பொருளா தார நெருக்கடியைத் தீவிரப்படுத்தி விடுமாம். சுனாமி யால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மியாகிப் பகுதியின் ஆளுநர் புலம்பித்தள்ளியிருக்கிறார். பிரதமர் நயாட்டோ கேன்-இடம் 9.4.2011 அன்று ஜப்பானிய மக்களின் இத்தகைய சுய கட்டுப்பாட்டி னால் ஜப்பானியப் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும், அவர்கள் மீண்டும் செலவாளி களாக மாறுவதற்குத் தேவையான பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் எதிரொலியாகப் பிரதம அமைச் சரும் ஜப்பானிய மக்கள் பாதிக்கப்பட்ட தங்கள் சகோதரர் களின் நல் வாழ்விற்காகத் தங்கள் செலவினங்களைக் குறைத்துக் கொண்டு நன்கொடைகளை அளிப்பதை விட, சுனாமியினாலும் அணு உலை விபத்தின் கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்குவதன் மூலம் அதிகமான அளவில் உதவி செய்ய முடியும் என்று கூறினார்.
ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டக்கீகி மாட்சுமோட்டோ, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடைகளை நிவாரண உதவியாக அளிப்பதை விட, ஜப்பானின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது ஜப்பான் அரசுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் என்று வெளிநாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டார். மொத்தத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவுவது தேசத் துரோகம் என்பது போலக் குமுறியுள்ளனர்.
மனச் சாட்சி உள்ள மனிதர்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டும். ஒரு விபத்து நேர்ந்தால் அதில் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு உதவுவது முதலாளித் துவப் பொருளாதார முறைக்கு உறுத்துகிறது. மனித நேயத்துடன் அளிக்கப்படும் நன்கொடைகள் பாதிக்கப் பட்டவர்களுக்கு முழுமையாகச் சேருவதை விட, அவற்றில் பெரும் பகுதி முதலாளிகளுக்குச் சேரும் விதமாக முறைப்படுத்துவதைத் தான் முதலாளித்துவ அரசு விரும்புகிறது; முனைகிறது. அதனால் பாதிக் கப்பட்ட மக்களின் துயரமும் மீட்புப் பணியின் காலமும் நீளுவதைப் பற்றி அக்கறை கொள்வதில்லை.
1934ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பீகாரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்கத்தினால் ஏற்பட்ட அழிவுகளைக் கணக்கிட்ட முதலாளித்துவ அறிஞர்கள் பீகார் பழைய நிலைமைக்குத் திரும்ப 30 ஆண்டுகள் ஆகும் எனக் கூறினார்கள். ஆனால் அப்போது முகிழ்த்திருந்த பொதுவுடைமைத் தத்துவத்தை உள்வாங்கிக் கொண்ட அறிஞர்கள் முதலாளித்துவ உற்பத்தி முறையை மறந்துவிட்டு மனித நேயத்தை மட்டும் கணக்கில் கொண்டு செயல்பட்டால் ஒரு வருடத்திற்குள் பழைய நிலைமைக்குத் திரும்ப முடியும் எனத் தெரிவித்தார்கள். ஆனால் முதலாளித்துவ முறைப் படி பல ஆண்டுகளுக்கு நிவாரணப் பணிகள் நீடித்தன.
இப்பொழுது ஜப்பானிலும் அதே கூத்து தான் நடைபெறுகிறது. நிலநடுக்கத்தினாலும், சுனாமியி னாலும், அணுஉலை விபத்தினாலும் பாதிக்கப்பட் டுள்ள மக்கள், துயரத்திலிருந்து மீள்வதற்கு மனித நேய அடிப்படையில் செயல்பட முடியாமல் ஜப்பான் அரசு தத்தளிக்கிறது. ஏனெனில் அரசு மனித நேய அடிப்படையில் செயல்பட்டால், பொருளாதாரம் சரிந்து விடும்.
அப்படிப்பட்ட, அதாவது மனித நேயத்திற்கு எதிரான, முதலாளித்துவப் பொருளாதார முறை தேவையா என்பதைப்பற்றி மனச் சாட்சி உள்ள மனிதர்கள் சிந்திக்க வேண்டும்.