மேற்காசியாவின் எண்ணெய் வளங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது அமெரிக்க அரசின் வரலாற்றுப் பாரம்பரியமாக தொடர்கிறது. ரூஸ்வெல்ட் தொடங்கி ட்ரம்ப் வரை அமெரிக்க அதிபர்கள் அனைவருமே அதில் குறியாய் இருந்து வருகின்றனர். 1940களிலே அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் சௌதி அரேபியாவைப் பாதுகாப்பது அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு முக்கியமானது எனத் தாம் கருதுவதாகக் கூறியுள்ளார். ரூஸ்வெல்ட் சௌதி அரேபியாவின் அரசாட்சியைப் பாதுகாப்பதாகவும் அதற்குப் பதிலாக அமெரிக்காவுக்கு எண்ணெய் வளங்கள் அங்கிருந்து கிடைக்கப் பெறுமாறும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க மேலாதிக்கத்திற்கு அடி பணியாத ஆட்சிகளைக் கவிழ்ப்பது அமெரிக்காவின் வழக்கம். 1953இல் அஜக்ஸ் செயல் திட்டத்தின் மூலம் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ பிரிட்டனுடன் கூட்டுச் சேர்ந்து ஈரானின் பிரதமர் மொஹமது மொஸாதக் அவர்களை ஆட்சியிலிருந்து நீக்கியது அமெரிக்கக் கைப்பாவையான ஷாவை ஆட்சியில் அமர்த்தியது, மொஹமது மொஸாதக் மதச் சார்பற்றவர், நிலச் சீர்திருத்தம் உட்பட சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்புகளைச் செய்தவர் ஈரானின் பொதுவுடைமைக் கட்சியான டியூடே கட்சியின் ஆதரவுடன் செயல்பட்டவர்.

அவர் ஈரானின் எண்ணெய் வளங்களை நாட்டுடைமை ஆக்கியதால், இறக்கும் வரை வீட்டில் சிறைப்படுத்தப்பட்டதுடன் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். அவரது விருப்பப்படி பொது மயானத்தில் அவரது உடலை அடக்கம் செய்யும் உரிமை கூட மறுக்கப்பட்டது. அது போலவே இராக்கின் பிரதமர் அப்தல் கரிம் காசிம் நாட்டின் எண்ணெய் வளங்களை நாட்டுடைமை ஆக்க்கினார் என்பதற்காக அமெரிக்க சி.ஐ.ஏ - பிரிட்டிஷ் கூட்டுப் படையால் 1963இல் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.

அமெரிக்கா இன்று இஸ்லாமிய வெறுப்பை விதைக்கிறது. மேற்காசியாவில் இஸ்லாமிய அரசுகளையும், இஸ்லாமியத் தீவிரவாதத்தையும் விதைத்ததிலும் அமெரிக்காவிற்குப் பெரும் பங்குண்டு. மேற்காசிய வரலாற்றில் விளைந்த மதச்சார்பற்ற முற்போக்கான ஆட்சிகளைக் கவிழ்த்து வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னால் திருப்பி, அம்மக்களுக்கான நல்ல எதிர்காலத்தை மறுத்ததும் அமெரிக்க அரசு தான். ஆப்கானிஸ்தான் போரின் போது இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளுக்குப் பெரும் நிதியளித்து அவர்களை வளர்த்து விட்டதும் அமெரிக்க அரசுதான்.

தன் நாட்டின் எண்ணெய் வளங்களை நாட்டுடைமையாக்கும் அரசுகளைத் தூக்கியெறிந்த அமெரிக்கா, 1970களிலிருந்து எண்ணெய் வர்த்தகத்தை டாலரில் மேற்கொள்ளாமல் தங்கத்திலோ, வேறு நாணயங்களிலோ மேற்கொண்டால் அந்நாடுகளின் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதையும், போர் தொடுப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்களில் அமெரிக்க ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், அங்கே அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கட்டுக்குள் வைக்கவும், அங்கே சோசலிச ஆதரவு பரவாமல் இருக்கவும், தன் புவிசார் நலன்களைப் பாதுகாக்கவும் இஸ்ரேலைத் தன் அடியாளாக வைத்திருக்கிறது அமெரிக்கா.

தனக்குக் கட்டுப்படாத நாடுகளை இஸ்ரேலைக் கொண்டு அச்சுறுத்துவதையே அது வழக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காகத்தான் இஸ்ரேலுக்குப் பெருமளவில் ஆயுதங்களும் நிதியும் வழங்கித் தன் நெருங்கிய நட்பு நாடாகக் காட்டிக் கொள்கிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேலின் போர்க் குற்றங்களுக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானங்களை நிறைவேற்றுவதைத் தடை செய்து சர்வதேச அரங்கில் அமெரிக்கா இஸ்ரேலைப் பாதுகாத்து வருகிறது.

பஹ்ரைன், இராக், குவைத், ஒமன், கத்தார், சௌதி அரேபியா, எகிப்து, இஸ்ரேல், ஜோர்டான், ஏமன், சிரியா, எனப் பல்வேறு நாடுகளில் 800 இராணுவத் தளங்களை அமெரிக்கா அமைத்தது எதற்காக? அமெரிக்க மேலாதிக்கத்தையும், பெட்ரோ-டாலரையும் எதிர்க்கும் நாடுகளைத் தாக்குவதற்கான போர்முனைகளாக அவற்றைப் பயன்படுத்துவதற்காகவே!

இராக், ஈரான், வெனிசுலா, லிபியா ஆகிய நாடுகளில் அமெரிக்கா தொடுத்த பொருளாதார / இராணுவப் போர்களுக்குக் காரணம் அந்நாடுகள் தீவிரவாதத்தை ஆதரித்ததோ, பேரழிவுக் கருவிகளை உற்பத்தி செய்ததோ, அந்நாடுகளில் மனித உரிமைகள் மீறப்பட்டதோ அல்ல என்பதும், அமெரிக்கா ஜனநாயகக் காவலன் அல்ல என்பதும் உலகறிந்த செய்தி. இந்நாடுகள் அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களுக்கு இலக்காவதற்கு காரணம் அந்நாடுகள் பொருளாதாரத் தற்சார்பைக் கடைப்பிடிக்க முயற்சி செய்வதும் டாலருக்கு பதில் மற்ற நாணயங்களை சர்வதேச வர்த்தகத்திற்குப் பயன்படுத்தி பெட்ரோ-டாலர் அமைப்புக்கு சவால் விடுவதுமே ஆகும்.

இராக்:

பெட்ரோ-டாலர் அமைப்பிற்கு முதன்முதலில் சவால் விட்டவர் சதாம் உசைன். அதுவே அவரது முடிவுக்கும் காரணமானது. 1991 முதல் வளைகுடாப் போரின் போது. புஷ் தலைமையிலான அமெரிக்க அரசு இராக் மீது பொருளாதாரத் தடைகள் விதித்தது. இதனால் இராக் அத்தியாவசியப் பொருட்களைக் கூடப் பெற முடியாத நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 5 லட்சம் இராக்கியக் குழந்தைகள் உணவின்றி இறந்தனர். அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு மட்டும் இராக் எண்ணெய் விற்பனையை அனுமதிக்கும் வகையில் உணவுக்காக எண்ணெய் திட்டம் ஐநாவால் 1995இல் கொண்டுவரப்பட்டது. இராக்கின் எண்ணெய் வளங்களில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வது தடுக்கப்பட்டது.

1990களில் ஃபிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் சதாம் உசைனுடன் எண்ணெய் துரப்பணப் பணிகளுக்கான ஒப்பந்தங்களில் ஈடுபட முன்வந்தன. இராக்கின் மீதான ஐநா பொருளாதாரத் தடைகளை விலக்குவதற்கும், உணவுக்கான எண்ணெய் திட்டத்தை நிறுத்தவும் சர்வதேச அளவில் ஒருமித்த கருத்து இருந்து வந்தது, அப்படி விலக்கப்பட்டிருந்தால் இராக் மேற்குறிப்பிட்ட நாடுகளின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு துரப்பணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும். ஆனால் அதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து அமெரிக்கா தடுத்து வந்தது.

2000 அக்டோபர் 30 அன்று எண்ணெய் வர்த்தகத்தை இனிமேல் யூரோவில் செய்வதாகவும், டாலரில் வர்த்தகம் செய்வதில்லையெனவும் சதாம் அறிவித்தார். இந்த முடிவுக்கு இறுதியில் ஐ.நா.வும் ஒப்புதல் வழங்கியது. 2002இல் சதாம் முற்றிலுமாக டாலரைக் கைவிட்டு யூரோவில் வர்த்தகம் செய்யலானார்.. ஆனால் இது குறித்த எந்தச் செய்தியும் கார்ப்பரேட் ஊடகங்கள் வெளியிடவில்லை. யூரோவுக்கு மாறியதால் இராக் அரசு பி.என்.பி பேரிபஸ் வங்கியில் தொடங்கிய யூரோ வங்கிக் கணக்கின் மூலம் அதிக வட்டியும், வருவாயும் பெற முடிந்தது. யூரோவுக்கு மாறியதால் இராக்கின் நிகர வருவாய் அதிகரித்தது.

அமெரிக்கா இதைத் தன் பெட்ரோ-டாலர் அமைப்பின் மீதான தாக்குதலாகவே பார்த்தது. இதனால் டாலரின் மேலாதிக்கமும், அது உலகப் பணமாக இருக்கும் தகுநிலையும் அச்சுறுத்தப்படும் எனக் கருதியது. தன் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும், பெட்ரோ-டாலரைப் பாதுகாக்கவும் யூரோவிலான இராக்கின் வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்தது புஷ் தலைமையிலான அமெரிக்க அரசு. இராக் பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாகவும், 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு சதாம் உசைன்தான் காரணம் என்றும் தான் தொடுக்கும் போருக்கு நியாயம் கற்பிக்கப் பொய்களை அடுக்கியது. செப்டம்பர் தாக்குதலுக்கும் சதாம் உசைனுக்கும் தொடர்புள்ளதாகத் தரவுகளைச் சித்திரிக்குமாறு சி.ஐ.ஏ.வை வற்புறுத்தியது. தன் கருத்துக்கு இணங்காதவர்களை சி.ஐ.ஏ.விலிருந்து நீக்கியது.

சர்வதேச அரங்கில் ஒப்புதல் இல்லாமல், எந்த நாடுகளின் ஆதரவும் இல்லாமல் அமெரிக்கா 2003 மார்ச் 19இல் இராக் மீது போர் தொடுத்தது. இராக்கிடம் அமெரிக்கா குறிப்பிடும் பேரழிவு ஆயுதங்கள் ஏதும் இல்லை என்பது ஐ.நா தரப்புப் புலனாய்வாளர்களின் சோதனைகளால் மீண்டும் மீண்டும் உறுதிசெய்யப்பட்ட போதிலும், அமெரிக்கா பொய்களின் அடிப்படையில் போரைக் கட்டமைத்தது. இராக் மீது அமெரிக்கா படையெடுக்கும் வரை (2003) இராக்கின் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் தொடர்ந்து நீடித்தன.

அதன் பிறகு டாலர் வீழ்ச்சியுற்ற போதும் எண்ணெய் விற்பனை இராக்கில் டாலரிலே மேற்கொள்ளப்பட்டது. இது அமெரிக்காவுக்கு இணங்க மறுத்த இராக்கிற்கான தண்டனை மட்டுமல்ல. ஓபெக் அமைப்பில் உள்ள எந்த நாடாவது எண்ணெய் வர்த்தகத்தை டாலரை விட்டு யூரோவிலோ வேறு நாணயத்திலோ மேற்கொண்டால் இதே கதிதான் ஏற்படும் என்று எச்சரிக்கும் அமெரிக்காவின் போர்த்தந்திர முறையும் கூட. இவ்வாறு சுதந்திரம், தீவிரவாத எதிர்ப்பு என்ற போர்வையில் பெட்ரோ-டாலரைப் பாதுகாக்க லட்சக்கணக்கான இராக்கியர்களைக் கொன்று குவித்தது.

ஈரான்:

இராக்கை தொடர்ந்து ஈரானும் சர்வதேச அளவில் யூரோவில் எண்ணெய் விற்பனை செய்ய முன்வந்தது. நவம்பர் 2007இன் முற்பகுதியில், ஒபெக்கின் மூன்றாவது உச்சி மாநாட்டின் போது எண்ணெய் வர்த்தகத்தை மேற்கொள்ள டாலருக்கு மாற்றீடாக நம்பகமான நல்ல நாணயம் தேவை" என்று ஈரானிய அதிபர் அஹ்மதி நெஜாட் அழைப்பு விடுத்தார். 2007 டிசம்பருக்குள்ளே ஈரான் தனது எண்ணெயை அமெரிக்க டாலர்களில் விற்பதை நிறுத்தியது.

பிப்ரவரி 2008 இல், கிஷ் தீவில் ஈரானிய எண்ணெய் சந்தையை (ஐஓபி) நிறுவியது. இதன் மூலம் எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எரிவாயு ஆகியவற்றை தங்கம், யூரோ, யுவான், யென், டாலர் ஆகிய நாணயங்களில் வாங்க அனுமதித்தது. 2012 மார்ச்சில் ஈரான் தனது சந்தையில் அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்யாது என அறிவித்தது. அமெரிக்காவுடன் சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானிய எண்ணெய் விற்பனையைத் தடுத்தது.

ஈரானின் மத்திய வங்கி மீதும் புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. உலகச் சந்தையில் வர்த்தகம் செய்ய இயலாதபடி ஈரானின் மத்திய வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. உலகளவில் பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்துள்ளதால் அந்த நாட்டின் பொருளாதாரமும், நிதி ஆதாரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான் எனப் பல நாடுகள் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்ற போதும், அமெரிக்க அரசு ஈரானை மட்டும் குறிவைத்து, ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்கிறது, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை (என்.பி.டி) மீறியுள்ளது என்று பொருளாதாரத் தடைகள் விதிப்பதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

ஈரான் ரஷ்யாவுடன் வர்த்தகத்தை டாலருக்குப் பதிலாக சரக்குப் பரிமாற்றங்களில் மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. வெனிசுலாவும் ஈரானும் பெட்ரோ-டாலர்களுக்குப் பதிலாக தங்கள் நாணயங்களில் எண்ணெய் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. பொருளாதாரத் தடைகளால், தங்களுக்கு தேவையான அடிப்படையான பொருட்களைக் கூட பெற முடியாத நிலையில் ஈரான் தங்கத்தின் மதிப்பில் பேமன் என்ற கிரிப்டோ நாணயத்தை வெளியிட்டது.

பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் ஈரானுக்குக் குறைந்தபட்சம் அடிப்படை உணவு, மருந்துப் பொருட்களைக் கிடைக்கச் செய்ய ஐரோப்பிய நாடுகள் இன்ஸ்டெக்ஸ் என்ற பரிமாற்ற முறையை (INSTEX) 2019 ஜனவரியில் அறிமுகப்படுத்தியுள்ளன. தொழில்நுட்பப் பிரச்சனைகளால் ஈரானிய எண்ணெய் சந்தையை தொடர்ந்து இயக்க முடியாத நிலையில் ஈரானிய நாடாளுமன்றம் 2020 ஜனவரி, 7ல் அதை கைவிட்டது.

அமெரிக்கா ஈரானின் பொருளாதாரத்தை முடக்கியதால் ஈரானில் பணவீக்கம் 2019ல் 39.91%ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்க ஆளும் வர்க்கம் ஈரானிய மக்கள் படும் வேதனைகளை ரசிக்கிறது. டிரம்பின் வழக்கறிஞர் ருடி கிலியனி சொல்கிறார், ஈரானியர்கள் தங்களது உடலுறுப்புகளை விற்கின்றனராம்! உணவிற்காக பிச்சையெடுக்கின்றனராம்! இவ்வாறு வன்மத்துடன் பொருளாதாரத் தடைகளின் வெற்றியைக் கொண்டாடுகிறார்.

வெனிசுலா:

வெனிசுலா உலகளவில் மிக அதிகமான எண்ணெய் வளங்களை கொண்டிருந்த போதும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இல்லை. அதற்கான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியாதவாறு அமெரிக்கா தடைகளை இட்டு வருகிறது. 1999இல் ஹியூகோ சாவேஸ் அதிபரான பிறகு வெனிசுலாவின் மீதான அமெரிக்காவின் வன்மமும் அதிகரித்தது. 2001இல் புஷ் நிர்வாகத்தில் வெனிசுலாவுடனான உறவுகள் மேலும் தாழ்வடைந்தன.

ஐநா பொது அவையில், சாவேஸ் தன் உரையில் புஷ் ஒரு பொய்யான ஜனநாயகத்தை, மேன்மக்களின் ஜனநாயகத்தை, வெடிகுண்டுகளின் ஜனநாயகத்தை ஊக்குவிப்பதாகக் கூறினார். கியூபாவைத் தனிமைப்படுத்தும் அமெரிக்கக் கொள்கைக்கு மாறாக, கியூபாவுடனும், ஃபிடல் காஸ்ட்ரோவுடனும் சாவேஸ் நட்புறவு கொண்டதால், அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையிலான இராணுவ உறவு அறுந்தது. ஆயுத ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் மூலமாக, தீவிரவாத எதிர்ப்பிற்கு வெனிசுலா ஒத்துழைக்கவில்லை என்று கூறி வெனிசுலாவுடனான ஆயுத விற்பனையை 2006இல் நிறுத்தியது.

ஓபெக் கூட்டமைப்புக்கு வெனிசுலா தலைமை வகிக்கும் போது சாவேஸ் ஓபெக் நாடுகளில் பத்து நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் சதாம் உசைனைச் சந்தித்தார். அமெரிக்காவில் அது சர்ச்சைக்குரியதாகப் பார்க்கப்பட்டது. புஷ் சாவேஸின் கொள்கைகளைத் தொடர்ந்து எதிர்த்து வந்தார். 2002இல் அமெரிக்கா சாவேஸ் ஆட்சியைக் கவிழ்த்து பெட்ரொ கார்மோனாவை அதிபராக்கியது. ஆனால் இரண்டு நாட்களில் தன் ஆதரவாளர்களால் சாவேஸ் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றார். அமெரிக்கா உலக அரங்கிலும் லத்தின் அமெரிக்காவிலும் வெனிசுலாவையும், சாவேஸின் தலைமையையும் தனிமைப்படுத்த தொடர் முயற்சிகளில் ஈடுபட்டது. அது இன்றும் தொடர்கிறது.

2015இல் ஒபாமா தலைமையிலான அரசு வெனிசுலாவின் முக்கியப் பிரதிநிதிகளின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. சாவேஸுக்குப் பின் நிக்கோலஸ் மதுரோ அவர்களது ஆட்சியின் போதும் அமெரிக்கா அவரை சர்வாதிகாரி என முத்திரை குத்தி ஆட்சிக் கவிழ்ப்பு செய்து, ஜுவான் கைடோ என்ற அமெரிக்கக் கைப்பாவையை அதிபராக அங்கீகரித்தது அதனால் 2019 ஜனவரியில் அமெரிக்காவுடனான உறவுகளை வெனிசுலா நிறுத்தியது.

அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாக வெனிசுலாவில் இயங்கிய வெளி நாட்டு நிறுவனங்கள் வெளியேறின. டொனால்ட் டிரம்ப் 2017இல் பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்தினார், வெனிசுலாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான பி.டி.வி.எஸ்.ஏ.விடம் இருந்து பெட்ரோலியம் வாங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அமெரிக்க அரசாங்கம் சர்வதேச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வெனிசுலாவின் கணக்குகளில் உள்ள 5.5 பில்லியன் டாலர் நிதியை முடக்கியுள்ளது.

வெனிசுலா வெளிநாடுகளின் மூலம் பணம் பெற முடியுமென்றாலும், அந்நாட்டுடன் வர்த்தகம் செய்வதற்கு முன்வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அச்சுறுத்துவதன் மூலம் அமெரிக்கா நீண்ட காலமாக சர்வதேச வர்த்தகத்தைத் தடுத்துள்ளது. இங்கிலாந்து வங்கியிலுள்ள வெனிசுலாவினுடைய 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தைப் பெறும் முயற்சி தடுக்கப்பட்டது.

அமெரிக்கா நிதியளிக்கும் லிமா என்ற லத்தின் அமெரிக்கக் கூட்டமைப்பு, வெனிசுலா சர்வதேச வர்த்தகத்தை தங்கத்திலோ, எண்ணெயின் மூலமோ செய்வது தடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. வெனிசுலாவில் உள்ள தங்கச் சுரங்கத் தொழில்துறைக்கும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது, வெனிசுலாவின் தங்கத்தை வாங்கக் கூடாதென்று அமெரிக்க நிறுவனங்களுக்குத் தடை விதித்துள்ளது. வெனிசுலா 2018ஆம் ஆண்டில் யுவான், யூரோ மற்றும் பிற நாணயங்களில் தனது எண்ணெயை விற்பனை செய்யத் தொடங்குவதாகத் தெரிவித்தது.

பொருளாதாரத் தடைகளின் கீழ் தங்களால் வாங்க முடியாத பொருட்களை வெனிசுலாவுக்கு பிற நாடுகளிடமிருந்து வாங்குவதற்காக பெட்ரோ என்ற கிரிப்டோ நாணயம் உருவாக்கப்பட்டது. பெட்ரோவின் மதிப்பு எண்ணெய் மற்றும் தங்கத்தின் மதிப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

கிரிப்டோ நாணயங்களை பயன்படுத்தத் தொடங்கியதும், அமெரிக்க ஆதரவு அமைப்புகள் பெட்ரோவில் வர்த்தகத்தை தடுக்கும் விதமான இணையவழிப் பிரச்சாரங்களையும் மேற்கொண்டுள்ளன. அமெரிக்காவின் தொடர் பொருளாதாரத் தடைகளால் 2016இலிருந்து வெனிசுலாவில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்குப் பணவீக்கம் உருவானது, 2019இல் வெனிசுலாவின் பணவீக்கம் 9,586%.

லிபியா:

மொம்மர் கடாஃபி தலைமையிலான லிபிய அரசு அதன் எண்ணெய் வளத்தை நாட்டுடைமையாக்கி அதன் மீது முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது, அனைத்து வணிகப் பரிவர்த்தனைகளும் லிபிய மத்திய வங்கி (சிபிஎல்) மூலமே செய்யப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, சிபிஎல் 144 டன் தங்க இருப்பை வைத்திருந்தது. மொம்மர் கடாஃபி ஒன்றுபட்ட ஆப்பிரிக்காவுக்கான தங்க மதிப்பு கொண்ட ஆஃப்ரோ நாணயத்தை (தங்க தினார்) உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

தங்கத்தில் எண்ணெய் விற்பனை செய்வதாக அறிவித்தார். இது அமெரிக்காவின் பெட்ரோ-டாலர் அமைப்புக்கு விடுக்கப்பட்ட சவாலாக இருந்ததோடு லிபியாவை காலனியாக்கம் செய்த பிரான்சின் நலன்களையும் பாதிப்பதாகக் கருதப்பட்டது, ஆப்பிரிக்க நாடுகள் தங்க தினாரை எண்ணெய்ப் பரிவர்த்தனைக்கான நாணயமாகப் பயன்படுத்த முடிவு செய்திருந்தால், பிரான்ஸ் அதன் முன்னாள் ஆப்பிரிக்கக் காலனிகளின் மீது பொருளாதாரச் செல்வாக்கை இழக்க நேரிடும். கடாஃபி ஆப்பிரிக்கக் கூட்டமைப்புத் திட்டத்திற்கு லிபியாவின் பங்களிப்பாக 30 பில்லியன் டாலரை ஒதுக்கினார். ஒபாமா அரசு அதை முடக்கியது.

லிபியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாகக் குற்றம் சாட்டியது. அமெரிக்கத் தலைமையில் ஃபிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் ஆதரவுடன் நேட்டோ படைகள் லிபியாவின் மீது போர் தொடுத்தன. கடாஃபி அரசுக்கு ஆதரவாகப் பல லட்சக் கணக்கான மக்கள் போராடிய போதும், அது குறித்து கார்ப்பரேட் ஊடகங்களில் செய்தி வெளிவரவில்லை. திரிபோலியில் மொம்மர் கடாஃபி நேட்டோ படைகளால் அவமானகரமான முறையில் கொல்லப்பட்டார்.

சிரியா:

2004ஆம் ஆண்டில் அமெரிக்க அரசால் சிரியாவின் அமெரிக்கச் சொத்துக்கள் முடக்கப்பட்டன. சிரிய வங்கி, சர்வதேசத் தனியார் வர்த்தகத்தை டாலரில் செய்வதையும் நிறுத்தியது, 2004ஆம் ஆண்டில், அமெரிக்க அரசு சிரியாவிற்கான ஏற்றுமதிகளைத் தடை செய்தது, சிரியாவின் வர்த்தக வங்கியுடனான நிதி உறவுகளைத் துண்டித்தது, பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாகக் கூறி சிரியர்களின் சொத்துக்களை முடக்கியது. அமெரிக்காவுடனான மோதல்களுக்கு மத்தியில் சிரியாவும் யூரோவுக்கு மாறியுள்ளது. சிரிய அரசின் அனைத்து வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகளையும் டாலரிலிருந்து யூரோவுக்கு மாற்றியுள்ளது. 2006இலிருந்தே சிரியா கச்சா எண்ணெய் விற்பனையை யூரோவில் செய்கிறது.

கத்தார்:

கத்தார் ஏற்கெனவே சீன யுவானில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள பரிவர்த்தனைகளைச் செய்து வருகிறது. மத்தியக் கிழக்குப் பகுதியில் யுவானில் பரிவர்த்தனைகளைச் செய்வதை ஊக்குவிக்கும் முதல் மையமாக கத்தார் திகழ்கிறது.

கத்தார் நாட்டில் யுவான் ஒப்பந்தங்களுக்கான தீர்வு வங்கியாக சீனாவின் தொழில்துறை மற்றும் வர்த்தக வங்கியின் தோகா கிளை நியமிக்கப்பட்டுள்ளது

ஈரானும், கத்தாரும் உலகிலே மிகப் பெரிய எரிவாயு வளத்தைப் பகிர்ந்து வருகின்றன. சௌதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் கத்தார் தீவிரவாதத்திற்கு நிதியளிப்பதாகவும், ஈரானுடன் நெருங்கிய உறவு கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டி கத்தாருடனான உறவுகளை முறித்தன என்ற போதிலும் ஈரானுடன் தொடர்ந்து நட்பு நாடாக கத்தார் இருந்து வருகிறது.

ரஷ்யா:

ரஷ்யாவும், பெட்ரோ-டாலர் அமைப்பைக் கைவிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கிரிமியாவில் ரஷ்யாவின் நடவடிக்கைகளைக் கண்டிப்பதாகக் கூறி அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்த போது ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ரஷ்யா கூடிய விரைவில் டாலர் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவரும் என்று தெரிவித்தார். ரஷ்யா அமெரிக்கக் கடன் முதலீடுகளிலிருந்து தன் 84% பங்குகளை விலக்கித் தங்க இருப்புகளை அதிகரித்தது.

எண்ணெய் விற்பனையை ரூபிளிலும் யூரோவிலும், யுவானிலும் செய்ய முயன்று வருகிறது. சீனாவுக்கான எண்ணெய் ஏற்றுமதியை யுவானில் ஏற்றுக் கொள்கிறது. ரஷ்ய அரசின் எண்ணெய் நிறுவனமான ரோஸ்னெஃப்ட் மற்றும் பிற நிறுவனங்களுக்கு டாலரில் நிதியுதவி கிடைக்காத வண்ணம் அவற்றின் மீது அமெரிக்க அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

ரஷ்யாவின் எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம் அதன் வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளில் இனிமேல் அமெரிக்க டாலரைப் பயன்படுத்துவதில்லை என அறிவித்தது. ஈரானும் ரஷ்யாவும் 20 பில்லியன் டாலர் மதிப்பில் ஒருவருக்கொருவர் தங்கள் நாட்டு நாணயங்களில் வர்த்தகம் செய்யும் விதத்தில் ஐந்தாண்டு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

2015 ஜனவரியில் ரஷ்யா, கஜகஸ்தான் மற்றும் சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளை உள்ளடக்கும் விதமாக பொருளாதார ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. எரிவாயு, எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட வர்த்தகத்திற்கான ஒருங்கிணைந்த சந்தையாக இது செயல்படும்.

டாலர், யூரோ சார்பைக் குறைக்கும் விதமாக ரஷ்யாவும் சீனாவும் ரூபிள்-யுவான் நாணய மாற்று ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளன. ரஷ்யா 2024க்குள் சீனாவுடனான வர்த்தகத்தை 200 பில்லியன் டாலர்களாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

சீனா:

சீனாவைப் பொறுத்த வரை, அதன் எண்ணெய்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், யுவானை வலுப்படுத்தி பொருளாதார மேலாதிக்கத்தை நிலை நாட்டும் முயற்சியில் உள்ளது. ஷாங்காய் மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தைகளில் பெட்ரோ-யுவானைத் தங்கமாக முழுமையாகப் பரிமாறிக் கொள்ளும் வகையில், தங்கத்தின் மதிப்பில் அமைந்த பெட்ரோ-யுவானை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு பெட்ரோ-டாலருக்கு மாற்றாக பெட்ரோ-யுவானைப் பயன்படுத்த முடியும். ஈரான், ரஷ்யா, வெனிசுலா, அங்கோலா ஆகிய நாடுகள் இதைப் பயன்படுத்தி வருகின்றன.

அமெரிக்காவின். பொருளாதாரத் தடைகளால் ரஷ்யா மற்றும் ஈரானிலிருந்து ஐரோப்பிய நாடுகள் எண்ணெய் கொள்முதல் செய்வதும் பாதிக்கப்படுகிறது. தங்கள் யூரோ நாணயத்தில் எண்ணெய் வாங்குவதே ஐரோப்பிய நாடுகளுக்குச் சாதகமாகும் என்பதால் எண்ணெய் வர்த்தகத்தில் யூரோவின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகள் தொடர்கிறது. மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளும் யூரோவுக்கு மாறுவதற்கு ஆலோசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று கோவிட்-19 அச்சுறுத்தலால் உலகே முடங்கிய நிலையிலும் கூட ஈரானும், வெனிசுலாவும், பிற நாடுகளிலிருந்து அத்தியாவாசிய மருந்துகள், உணவுப் பொருட்கள் பெறுவதை அமெரிக்க அரசு தொடர்ந்து தடை செய்து பட்டினியாலும், நோயாலும் அங்குள்ள மக்களை இனக் கொலை செய்கிறது.

1999இல் ஐரோப்பிய ஒன்றியத்தால் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே அமெரிக்கா தன் டாலர் மேலாதிக்கத்தை நிலை நிறுத்த பல்வேறு விதங்களில் போர்களை ஏவி வருகிறது. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அமெரிக்கா ஆயுதபலத்தின் மூலம் சரியும் டாலரைப் பாதுகாக்க முடியும் என்பது பெரும் கேள்விக்குறியாயுள்ளது.

(தொடரும்)

- சமந்தா