‘லவ் ஜிகாத்’, ‘கட்டாய மதமாற்றம்’ என்ற சொல்லாடல்கள் வழியாக இந்துத்துவா செயல் திட்டத்தை முன்னெடுக்கிறது பா.ஜ.க. ஆட்சி! உ.பி. பா.ஜ.க. ஆட்சி ‘கட்டாய மதமாற்றத் தடுப்பு; அவசரச் சட்டம் 2020’ என்ற சட்டத்தை ஆளுநர் வழியாக பிறப்பித்து, அந்த சட்டத்தின் கீழ் முதல் வழக்கையும் இஸ்லாமியருக்கு எதிராக ஒரே வாரத்தில் பதிவு செய்துள்ளது.
ம.பி., அரியானா, கருநாடகம், பீகார் மாநிலங்களிலும் இத்தகைய சட்டங்கள் கொண்டு வரப்பட இருப்பதாக செய்திகள் வருகின்றன. “நேர்மையற்ற முறையில் மதமாற்றம் செய்வோருக்கு 10 ஆண்டு சிறை; திருமணத்தின் பெயரால் மதமாற்றம் செய்வதும் இதில் அடங்கும்” என்று உ.பி. அரசின் அவசர சட்டம் கூறுகிறது.
உண்மையில், ‘லவ் ஜிகாத்’ என்று பா.ஜ.க. பரிவாரங்கள் பயன்படுத்தும் சொல் சட்டத்தில் கிடையாது. இந்திய அரசியல் சட்டத்தின் 21ஆவது பிரிவு, ஒருவர் பொது ஒழுங்கு அறநெறிக்கு உட்பட்டு ஒருவர் விரும்புகிற மதத்தைப் பின்பற்றும் உரிமையை வழங்குகிறது. கேரள உயர்நீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்கள் தீர்ப்புகள் வழியாக இதை உறுதி செய்திருக்கின்றன.
இவ்வாண்டு துவக்கத்தில் ‘லவ் ஜிகாத்’ என்ற திருமணத்துக்காக மதம் மாறும் வழக்கம் இந்தியாவில் இல்லை என்றும் மத்திய புலன் விசாரணை அமைப்புகள் விசாரணைக்குப் பிறகு இதைத் தெரிவித்திருப்பதாகவும், மத்திய உள்துறை அமைச்சகமே நாடாளுமன்றத்தில் அறிவித்ததை சுட்டிக்காட்ட வேண்டும்.
இல்லாத ஒன்றுக்கு அவசரச் சட்டம் இயற்றும் அளவுக்கு பா.ஜ.க. ஆட்சியினர் மதவெறி கொண்டு நிற்கிறார்கள். அண்மையில் அலகாபாத் உயர்நீதிமன்றம், ‘திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு மதம் மாறுவது ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று ஒரு தீர்ப்பில் கூறியுள்ளதை தனக்கு சாதகமாக எடுத்துக் கூறுகிறார் உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத்.
இது நீதிபதியின் கருத்தாக இருக்கலாமே தவிர, சட்டத்தின் முன் நிற்காது என்று உ.பி. மாநில சட்ட ஆணையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான ஆதித்யநாத் மிட்டர் கூறியிருக்கிறார். மதங்களைக் கடந்து திருமணம் செய்வோர் எண்ணிக்கை இந்தியாவில் 2 சதவீதத்துக்கும் குறைவு என்றே புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
சொல்லப்போனால், இந்தியாவில் ‘இந்துக்கள்’ என்ற பட்டியலுக்குள் திணிக்கப் பட்டவர்களே கட்டாய மதமாற்றத்துக்கு உள்ளானவர்கள்தான். சைவம், சமணம், பவுத்தம் என்று பல்வேறு மதக் குழுக்களைச் சார்ந்தவர்களை கட்டாயப்படுத்தி ‘இந்து’க்கள் ஆக்கியதோடு ஒவ்வொரு ‘இந்து’வின் மீதும் கட்டாயப்படுத்தி ஜாதியையும் திணித்து வைத்திருக்கிறது ஆரியர்களின் வைதீக மதமான வேதமதம்!
மதம், கடவுள் மறுப்பாளர்களையுமேகூட விட்டு வைக்காமல் கட்டாய ‘இந்து’க் களாக்கப்பட்டு விட்டார்கள்.
ஒரு ஜாதியிலிருந்து வேறு ஒரு ஜாதிக்கு ஒரு இந்து மாறவே முடியாது. இப்படி ஒரு சமூக அமைப்பை ஏன் உருவாக்கினார்கள்? ‘பிராமணர்கள்’ என்ற சமூக மேலாதிக்கப் பிரிவு மாறாத் தன்மையுடன் காலங்காலமாக நிலைத்து நிற்க வேண்டும் என்ற உள் நோக்கத்துடனேயே இப்படி ஒரு ஏற்பாட்டை பார்ப்பனியம் கட்டமைத்துள்ளது.
ஜாதியையும் பார்ப்பன மேலாதிக்கத்தையும் இந்து மதத்தோடு கட்டாயப்படுத்தி கட்டிப் போட்டு வைத்திருப்போர் கட்டாய மதமாற்றம் என்று கூக்குரலிடுவதில் அர்த்தமில்லை.
கட்டாய மதமாற்றத் தடை பேசுவோர் கட்டாய வேலை வாய்ப்பு பற்றி பேசுவதில்லை; கட்டாய மனித உரிமைப் பற்றி கவலைப்படுவதில்லை; ஜாதி வெறித் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த முன் வருவதில்லை; குடியுரிமை திருத்தச் சட்டத்தில் கட்டாயமாக இஸ்லாமியர்களை மட்டும் தனிமைப்படுத்தியவர்கள் இவர்கள்தான்.
மதச்சார்பற்ற ஒரு நாட்டை கட்டாயப்படுத்தி மதவாத நாடாக மாற்றும் இவர்களின் முயற்சிகளை கட்டாயம் மக்கள் முறியடிப்பார்கள்!
-விடுதலை இராசேந்திரன்