வழக்கறிஞர்கள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டம் குறித்து கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் விடுத்துள்ள அறிக்கை.

பத்து நாட்களாக நடைபெறும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் பொது மக்களை பெரிதும் பாதித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். நீதிமன்ற உத்தரவு பெற்றால்கூட அதை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கும் அரசு அதிகாரிகள் இருக்கின்றபோது, நீதிமன்றத்தையே அணுக முடியாமல் கடந்த பத்து நாட்களாக வழக்கறிஞர்கள் போராட்டம் செய்வதால் பொது மக்கள் பெரிதும் அவலத்துக்குள்ளாகியுள்ளனர். பொய் வழக்கில் சிறை சென்றவர்கள் ஜாமீனில் வர முடியாது.

முன் ஜாமீன் பெற முடியாது. கல்லூரிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்படாத மாணவர்கள் நீதிமன்ற உத்தரவு பெற முடியாது. இப்படி எத்தனையோ அவசர வழக்குகள் பத்து நாட்களாக பொது மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. போராட்டத்துக்கான காரணம் மிகவும் அற்பத்தனமானது. ஒரு மருத்துவமனையில் இரு வழக்கறிஞர்களை ஒரு போலீஸ்காரர் தாக்கியதாக தெரிகிறது. அந்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டுமென்பதுதான் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் கோரிக்கை.

எத்தனையோ நல்ல நாட்டுப் பிரச்சினைகளுக்காக போராட வேண்டிய வழக்கறிஞர்கள் சமுதாயம் சல்லிக்காசு பெறாத போலீஸ்காரரை கைது செய்ய வேண்டும் என்பதற்காக பத்து நாட்களாக நீதிமன்றத்தை புறக்கணித்துப் போராடுவது மிகவும் வருந்தத்தக்கதாகும். வழக்கறிஞர்கள் பக்கம் நியாயமிருப்பின் இதற்கு சட்டப்படி என்ன பரிகாரம் காண வேண்டுமோ அதைத் தானே கற்றறிந்த வழக்கறிஞர்கள் செய்ய வேண்டும்?

நாம் அறிந்த வரையில் சில இளைய வழக்கறிஞர்கள் ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு மற்ற வழக்கறிஞர்களை தடுப்பதை தலைமை நீதிபதியோ, தமிழக அரசோ கண்டு கொண்டதாகவோ, கவலைப்பட்டதாகவோ தெரியவில்லை. இது வருந்தத்தக்கதாகும். பத்து நாட்களாக ஜனநாயகத்தின் ஒரு தூண் செயல்படாமல் உள்ளது மக்கள் மீது அக்கறைக் கொண்டுள்ள அரசு என்ன செய்ய வேண்டும்? அடுத்த நாளே சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேசி ஒரு சுமுகமான நிலையை உண்டாக்க வேண்டாமா, மிகுந்த அனுபவமும் அறிவுத்திறனும் கொண்ட முதல்வர் கலைஞர் இதனைப் பார்த்துக் கொண்டு ‘சும்மா’ இருப்பது அரசு அவர்தம் கட்டுப்பாட்டில் இல்லையா?

ஆகவே தமிழக முதல்வர் அவர்கள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு உடனடியாக ஒரு முடிவு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். அப்படி உடனடியாக பிரச்சனைக்கு தீர்வு காணவில்லையெனில் பெரியார் திராவிடர் கழகம், மக்களுக்காக போராட்டத்தில் இறங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக நேரிடும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பக்தர்களைக் காப்பாற்றாத கடவுள்கள்

குஜராத் மாநிலம் பஞ்ச் மகால் மாவட்டத்தில் பவகாத் என்ற - கடல் மட்டத்திலிருந்து 850 மீட்டர் உயரத்திலுள்ள மலையின் மீது மகாகாளி கோயில் உள்ளது. நவராத்திரியன்று, பக்தர்கள் மலை ஏறி தரிசிப்பது வழக்கமாம். கடந்த 14 ஆம் தேதி மலை மீது 2 லட்சம் பக்தர்கள் திரண்டனராம். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் பலியாகிவிட்டனர். 25 பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள பொட்டல் கிராமத்திலுள்ள பத்ரகாளியம்மன் கோயிலுக்கு புதிதாக முன் மண்டபம் ஒன்றை கட்டும்போது, மண்டபம் இடிந்து ஊர் பஞ்சாயத்து தலைவர் உட்பட நான்கு பேர் பலியாகி விட்டனர். இது கடந்த 15 ஆம் தேதி மட்டும் வந்த செய்தி. ஒவ்வொரு நாளும் இத்தகைய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

கடவுளுக்காக கூடிய பக்தர்களை மரணத்திலிருந்து காப்பாற்ற கடவுளே வரவில்லை. இவர்கள் பகுத்தறிவாளர்களாக இருந்தால், இத்தகைய மரணங்களை சந்திக்கத் தேவையில்லை. நாம் நடத்தும் பகுத்தறிவுப் பிரச்சாரம், இவர்களைக் காப்பாற்ற முயலுகிறது. ஆனால் பார்ப்பன இராமகோபாலன்களோ உயிர்வாழும் ‘இந்து’க்களைக் காப்பாற்றாமல் இல்லாத ‘ராமனை’க் காப்பாற்றக் கிளம்பி விட்டார்கள்! இன்னமும் தங்களை ‘இந்து’ என்று நம்பிக் கொண்டிருப்போர் சிந்திப்பார்களா?

Pin It