450 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பழங்கால நினைவுச் சின்னமான பாபர் மசூதியை இடித்தக் கூட்டம் தான் இப்போது இல்லாத இராமன் பேரால், தமிழ்நாட்டின் வணிக வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும், துறைமுக வளர்ச்சிக்கும் ஏதுவான புதிய கடல் வழிப்பாதை அமைவதை தடுக்கும் விதத்தில், இடிக்காதே என்று போராடுகிறார்கள்.

போராடுகிற, தடை கேட்டு வழக்குப் போட்டிருக்கிற ஆட்களில் பெரும்பாலோர் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்பதோடு - கொழும்புத் துறைமுகத்தின் முக்கியத்துவம் போய்விடுமே என இலங்கையின் நலனுக்காக இலங்கைக்கு ஆதரவாக எப்போதும் பேசுபவர்களாகவே இருக்கிறார்கள்.

அவர்கள் தான் இப்போது அறிவியல் அடிப்படையில் நிறுவ முடியாத ஒன்றை நம்பிக்கை அடிப்படையில் என்று பேசுகிறார்கள்.

வழக்கம் போல உச்சநீதிமன்றமும், பல்லாயிரம் பழங்குடியினரின் வாழ்வையே குலைக்கும் வண்ணம் கட்டப்படுகிற நர்மதா அணைத் திட்டத்தை வழங்க வேண்டிய நட்ட ஈடுகளையும், உறுதியளித்த மாற்றுக் குடியிருப்புகளையும் ஏற்படுத்தாமல் தொடரக்கூடாது என வழக்காடிய போது பெரும் செலவில், பாதிக்குமேல் நிறைவேற்றிவிட்ட ஒரு வளர்ச்சித் திட்டத்தை நிறுத்துமாறு ஆணையிட மறுத்த உச்சநீதிமன்றம்தான், வெறும் நம்பிக்கை என்பதைத் தவிர எதையும் முன் வைக்க முடியாதவர்களின் கோரிக்கையை ஏற்று பெரும் பொருட் செலவில் பாதியளவு நடந்தேறி விட்ட வளர்ச்சித் திட்டத்தை நிறுத்தச் சொல்லி தடையாணை பிறப்பிக்கிறார்கள்.

எப்படி வந்தது இந்த துணிவு?

பகுத்தறிவு வினா எழுப்பிய முதல்வர் கலைஞரின் தலையை, நாக்கை வடக்கே ஒரு வேதாந்தி, இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவர், வெட்ட வேண்டும் என்கிறார். பரிசுகளை அறிவிக்கிறார். பெங்களூரில் ஒருவர் தென்னிந்திய விசுவ இந்து பரிஷத்தின் தலைவர் விஜய்குமார் ரெட்டி என்பவர் கலைஞர் தலையை வெட்டினால், 1 கோடி பரிசு என்ற தொலைக்காட்சி வழியாக அறிவிக்கிறார்.

தமிழ்நாட்டு பேருந்து எரிக்கப்படுகிறது. இருவர் சாகிறார்கள். கலைஞரின் மகள் வீடு தாக்கப்படுகிறது.

ஏன் இவையெல்லாம் நடக்கின்றன? தங்கள் சுயலாபத்துக்காக இவர்களை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி, ‘ஜென்டில்மென்’ என்றெல்லாம் சான்றிதழ் கொடுத்து வளர்த்துவிட்டதன் பலன் தானே இவை?

அட, அப்போதுதான் கூட்டு இருந்தது, மந்திரி வேலை போய்விடும்! ஆரியர்கள் தான் இந்த நாட்டு பூர்வக்குடிகள் என்று வரலாறு திருத்தப்பட்ட போதும் மவுனமாக அமைதி காத்து வாய் மூடிக் கிடந்தார்கள், சரி! இப்போதுகூட கிராமக் கோவில் பூசாரி நல வாரியத்துக்கு அரசு முறை அல்லாத உறுப்பினர்களாக வி.எச்.பி.யின் வேதாந்தத்தையும், ஆர்.எஸ்.எஸ்.சின் ஆர்.பி.வி.எஸ். மணியனையும் நியமிக்க வேண்டிய அவசியம் என்ன?

1996 ஆட்சியிலும் இவர்கள்தான் உறுப்பினர்கள். அப்போதாவது பி.ஜே.பி. கூட்டு! 2006 ஆம் ஆண்டிலும் ஏன் அதே ஆட்களை நியமிக்க வேண்டும்?

பெரிய ராஜதந்திரம் என்று செய்யும் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தானே தலையைக் கேட்கும் துணிச்சலை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது?

இனிமேலாவது கொஞ்சம் கொள்கை உணர்வோடு இருங்கள். கலைஞர் பகுத்தறிவு பாசறையை பகுத்தறிவு பிரச்சாரம், புராணப் புரட்டுகளை விளக்கும் பிரச்சாரம் செய்ய முடுக்கி விடுங்கள். அது உங்கள் தலையை மட்டுமல்ல, எதிர்கால உங்கள் வாரிசுகளின் தலைகளையும் காப்பாற்றும்!

Pin It