“சேது கால்வாய் திட்டம்’’ தமிழக மக்களின் 160 ஆண்டுகால கனவு.இத்திட்டம் இந்தியாவின் கப்பல் போக்குவரத்து வளர்ச்சி மூலம் தொழில்வளர்ச்சி, வேலைவாய்ப்பு, முன்னேற்றம் ஆகியவற்றை கொண்டுவரும் என்பதற்காக கமாண்டர் டெய்லர் எனும் ஆங்கிலேயர் 1860இல் முதல் முதலாக இத்திட்டத்தை உருவாக்கினார்.

டவுன்ஸ்டன்திட்டம் 1861, நாடாளுமன்ற குழுதிட்டம் 1862, சர்வில்லியம் டென்னிசன் திட்டம் 1863, ஸ்டார்டர்ட் திட்டம் 1871, ராபர்ட்சன் திட்டம் 1872, சர்ஜான்கோடேதிட்டம் 1884, இரயில்வே பொறியாளர் திட்டம் 1903, சர் ராபர்ட் பிரிஸ்டோ திட்டம் 1922 என 9 குழுக்கள் அமைக்கப்பட்டு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு பிரிட்டிஷ் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் பிரிட்டிஷ் அரசிற்கு இத்திட்டத்தை நிறைவேற்ற எவ்வித அக்கறையும் காட்டவில்லை.

சுதந்திர இந்தியாவில் மக்களுக்கான இத்திட்டம் ர.இராமசாமி முதலிய ார் தலைமையில் சேது சமுத்திர திட்டக்குழு 1956 உருவாக்கப்பட்டது. அத்தோடு மட்டுமல்லாமல் மாகாண அரசின் துறைமுக அதிகாரி 1961, வி.சி.வெங்கடேஸ்வரன் குழு 1965, நாகேந்திரசிங் குழு 1968, ஜேம்ஸ் ஐசக்கோயில்பிள்ளை அறிக்கை 1980, இலட்சுமி நாராயணன் சேவை திட்டக்குழுவின் 1986, விரிவானஅறிக்கை, நிரி நிறுவனத் திட்டம் 1998 என 8 வகையான குழுக்கள் ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள், திட்ட மதிப்பீடு என அனைத்தும் அரசின் வசம் முன் வைக்கப்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் மறுக்கப்பட்ட திட்டம் சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களாலும் தொடர்ந்து மறுக்கப்பட்டே வந்தது. 1860 டெய்லர் திட்டத்தில் 2 கோடியில் நிறைவேற்ற வாய்ப்பிருந்த இத்திட்டம் 1956 ஆம் ஆண்டு ராமசாமி முதலியார்கமிட்டி பரிந்துரைத்த போது 8 கோடியாக உயர்ந்தது. பின்னர் 21, 37, 53, 72, 282, 760 என தொடர்ந்து திட்ட மதிப்பீடுகள் கோடிக்கணக்கில் உயர்ந்து வந்தது.

தமிழக மக்களுக்கான இத்திட்டத்தை நிறைவேற்றக் கோரி டி.ஒய்.எப்.ஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தின. 1998இல் மதுரையில் தென்மாவட்ட இளைஞர்கள் பங்கேற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம், 2000 ஆம் ஆண்டு நவ 28 அன்று டில்லியில் நாடாளுமன்றம் முன்பு தமிழக இளைஞர்கள் சார்பில் டி.ஒய்.எப்.ஐ நடத்திய ஆர்ப்பாட்டமும் குறிப்பிடத்தக்கது.

இச்சூழலில் 2004 நடைபெற்ற தேர்தலில் இடதுசாரிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் இத்திட்டத்தை ரூ. 2470. 40 கோடியில் நிறைவேற்றுவதாக அறிவித்தது, இது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

திட்டம் துவக்கப்படுகிறது: மற்றொரு புறம் ராமர் பெயரை வைத்து மீண்டும் ஆட்சிக்கு வரத்துடித்த பிஜேபி இந்துத்துவக் கும்பல் பெரும் கலவரத்தை நடத்துகிறது. அரசியலில் தான் பிழைத்துக் கொள்ள, தமிழக மக்களின் கனவு திட்டத்தை குழி தோண்டி புதைக்கும் முயற்சியை பிஜேபி மேற்கொண்டது. இதுதொடர்பாக ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இதுதொடர்பாக விளக்கம் கேட்கிறது நீதிமன்றம், இங்கிருந்துதான் அரசின் செயல்பாட்டில் மாற்றம் தொடங்குகிறது.

மத நம்பிக்கை என்ற பெயரால் சேது சமுத்திர திட்டத்தை முடக்கும் பிஜேபியின் முயற்சியை அரசியல் உறுதியுடன் எதிர்த்து போராடாமல் அரசு பின்வாங்கியது. அதாவது வேறு ஒரு வழித்தடத்தில் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஆராய்வதாக நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. மதவெறி சக்திகளுக்கு அடிபணியாமல் உறுதியுடன் இத்திட்டத்தை நிறைவேற்றக் கோரி டி.ஒய்.எப்.ஐ மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி என நான்கு மையங்களில் சைக்கிள் பேரணி ராமேஸ்வரம் வரை நடந்தது. சைக்கிள் பயணம் இம்மாவட்ட மக்களின் கவனத்தை ஈர்த்தது.

அரசின் தவறான நடவடிக்கையை இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வந்தன. மத்திய அரசு சரியான பதில் மனுவை தாக்கல் செய்யாததால் உச்சநீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்தது. திட்டத்தின் அகழ்வுப் பணியை நிறுத்தியது. இதனால் 2000 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட்ட நிலையில் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தமிழக மக்களுக்கு மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது.

2009 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்றது. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றும் துறையான சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துதுறை காங்கிரஸ் வசமே வைத்துக் கொண்டது. இத்துறைக்கு தமிழகத்தை சேர்ந்த ஜி.கே,வாசனை அமைச்சராக்கி திட்டத்தை நிறைவேற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் உள்ளது. ஒரு மோசமான முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளது. இத்துறை கேட்டு போராட்டம் நடத்திய திமுக தலைவர் கருணாநிதி சேது சமுத்திர திட்டம் கோரி மத்திய அரசிடம் போராட தயங்குவது பதவி சுகம் அல்லவா?  

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். எனவே, நீதி மறுக்கப்பட்ட தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தென்மாவட்ட மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் சேது சமுத்திர திட்டம் நிறைவேற தொடர் போராட்டம் நடத்துவது நமது கடமையாகிறது.

சேது சமுத்திர திட்டம் நிறைவேற ஒவ்வொரு கட்டத்திலும் தன்னுடைய எழுச்சிமிகு பங்களிப்பை செலுத்தி வரும் டி.ஒய்.எப்.ஐ வருகிற 2010 பிப்ரவரி 12 அன்றுடெல்லியில் நாடாளுமன்றம் முன்பு 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிட உள்ளது.

அரசின் பணத்தை வீணாக்காமல் திட்டத்தை உறுதியுடன் நிறைவேற்ற வேண்டும். மதவெறி சக்திகளுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடும் சக்திகளுக்கும் அடிபணியாமல் திமுக அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு எதிராய் இளைஞர்கள் ஒன்றிணைவோம். தமிழக மக்களின் குமுறலை டெல்லியில் முழங்கிட புறப்படுவோம்.

வருமா? வராதா? எனும் கேள்விக்குறியாக உள்ள திட்டத்தை உறுதியுடன் நிறைவேற்றும் வரை குரல் கொடுப்போம்.

- எஸ்.பாலா

Pin It