செஞ்சோலை குழந்தைகள் காப்பகத்தில், குண்டு வீசி, 55 மாணவிகளைப் படுகொலை செய்த சிறீலங்கா அரசின் கொடூரம் உலகத்தின் மனசாட்சியையே உலுக்கியது. புத்த மதத்தை அரசு மதமாகக் கொண்டுள்ள ஒரு அரசின் இந்த ரத்த வெறியை அய்.நா. மன்றமே கண்டித்தது.
ஆனாலும், சிறீலங்கா அரசோ - சர்வதேச கண்டனத்தைக் காலில் போட்டு மிதித்து, தனது அழித்தொழிப்பு “புனிதப் பணியை” - ‘புத்தர் மகான்’ பெயரில் சமாதான முகமூடியோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சான்றாக மற்றொரு நெஞ்சு பதறும் செய்தி வந்துள்ளது.
செஞ்சோலைக் குண்டுவீச்சில் உயிர்ப்பலியான மாணவிகளோடு பலர் குண்டுவீச்சில் படுகாயத்துக்கு உள்ளானார்கள். இதில் மூன்று மாணவிகளுக்கு கடுமையான சிகிச்சை தேவைப்பட்டது. எனவே மேல் சிகிச்சைக்காக, செஞ்சிலுவை சங்கத்தினர், உயிருக்குப் போராடிய அந்த மாணவியரை கண்டியிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில், சிறீலங்கா உளவுப்படை மருத்துவப் படுக்கையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மாணவிகளை அச்சுறுத்தி, கட்டாயமான வாக்குமூலங்களைப் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டது.
இதற்காக, அந்த இளம் தளிர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அரசு கிஞ்சித்தும் மனிதாபிமானமின்றி அறிவித்தது. குண்டு வீச்சு நடந்த செஞ்சோலைக் காப்பகம் ராணுவப் பயிற்சிப் பாசறை தான் என்று வாக்குமூலம் தருமாறும், அந்த இளம் தளிர்களை சிங்கள உளவுத்துறை அதிகாரிகள் மிரட்டி, உளவியலடிப்படையில் கடுமையாக பாதிப்படையச் செய்தனர். எந்த வாக்குமூலமும் பெற முடியாத நிலையில், உயிருக்குப் போராடிய இளந்தளிர்களுக்கான முறையான சிகிச்சையையும் நிறுத்திவிட்டார்கள் பாதகர்கள். இதில் கடந்த வாரம் மருத்துவமனைப் படுக்கையிலேயே ஒரு மாணவி மரணத்தைத் தழுவிவிட்டார்.
உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மற்றொரு மாணவியை சிங்கள உளவுப்படை விசாரணைக்காகக் கொழும்பு கொண்டு போனது. அந்த மாணவியின் கதி என்னவாயிற்று என்றே தெரியவில்லை. இறந்த போன மாணவியின் சாவுக்கு காரணம் உரிய சிகிச்சை தரப்படாததுதான் என்று மருத்துவர்களின் அறிக்கைகளே கூறுகின்றன. விடுதலைப்புலிகள், மனித உரிமை அமைப்பிடம் புகார் கூறியுள்ளனர்.
55 மாணவிகளைக் கொன்றொழித்த கொலைப் பாதகர்கள், காயமடைந்தவர்களையும், இப்படி சித்திரவதை செய்து சாகடிப்பதற்கு, சர்வதேச சமூகம் என்ன பதிலை கூறப்போகிறது? இணைய தளங்களில் இடம் பெற்றுள்ள இத்தகவல்களை இந்தியப் பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டு இருட்டடிப்பது நியாயமா? சரியா? இதுதான் பத்திரிகை தர்மமா?
சர்வதேச சமூகமே! மனித உரிமை அமைப்புகளே! நெஞ்சைத் தொட்டு பதில் சொல்லுங்கள்!