போர்ச்சுக்கீசு அரசாலும், டச்சு அரசாலும் பின்னர் இங்கிலாந்தினாலும் காலனியாக்கப்பட்ட இலங்கையில் தமிழர்களின் போராட்டம் கூர்மையானது. 1802இல் ஆங்கிலேயரின் கையில் வந்த தமிழீழமும், சிங்கள தேசமும் ஒன்றாக நிர்வகிக்கப்பட்டு இலங்கை என்றாக்கப் பட்டதிலிருந்து இன்று வரை தமிழர்கள் அரசுரிமையிழந்து, அதிகாரமிழந்து இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருகிறார்கள். இதை எதிர்த்த தொடர் போராட்டத்தின் ஒரு பெரும் அழிவாய் நம் கண்முன் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நடந்தது. இந்த காலனியச் சுரண்டலுக்கான நிர்வாகக் கட்டமைப்பு இன்றும் தொடர்கிறது இலங்கை எனும் நாட்டில், சுரண்டலை பாதுகாக்கும் கட்டமைப்புகள் அகற்றப்படாதவரை காலனியம் முடிந்ததாகச் சொல்லிவிட முடியாது.
தனது காலனிய வணிகத்திற்கும், நலத்திற்குமான நிலப் பரப்பை இன்றளவும் பாதுகாத்து வருகிறது ஆங்கிலேயப் பேரரசின் எச்சமான இங்கிலாந்தும், அமெரிக்காவும். இந்தப் பெருங்கடலில் தனது பாதுகாப்பையும், தனது ஆரிய இனவெறியை பாதுகாப்பதற்காகவும் வேலைச் செய்கிறது இந்தியப் பேரரசு.
இந்த சர்வதேச இராணுவ-வணிக போட்டிக்கான சூதாட்டத்தில் தமிழர்களுக்கான நலனை பாதுகாப்பதில் தவறியது மட்டுமல்லாமல், இந்தியப் பேரரசிற்கு தமிழீழத் தமிழர்களை காட்டிக் கொடுத்தும், தமிழகத் தமிழர்களை அடக்கி ஒடுக்கியும் சதிக்கு துணைப்போன தமிழக அரசியல் ஆளுமைகளான திமுகவின் இந்திய பார்ப்பனிய சரணாகதியை தமிழர்கள் என்றும் மறந்துவிடக் கூடாத அரசியல் பாடம். அரசியல் கட்சியிடம் தனது இறையாண்மையை அடகுவைக்கும் தற்கொலை அரசியலை தமிழர்கள் கைவிட வேண்டுமென்பதை அதிமுக-திமுகவின் இந்திய சார்பு நிலைப்பாடுகள் தொடர்ந்து நமக்கு அம்பலப்படுத்திய பொழுதிலும் தமிழர்கள் தொடர்ந்து சறுக்குகிறார்கள்.
அரசியல் கட்சிகளின் முதலமைச்சர் வேட்கை என்றுமே தமிழர்களை பலிகொடுத்தே நிகழ்ந்து வந்திருக்கிறது. இந்தியக் கட்டமைப்பிற்குள் தமிழர்களுக்கான அரசியல் உரிமையை பெற்றுக் கொடுப்பது பகல்கனவாகவே நீண்டிருக்கிறது. சகதொப்புள்கொடி உறவுகள் இனப் படுகொலைக்குள்ளாவதை தடுக்க இயலாத கட்டமைப்பிற்குள் வாழ்கிறத் தமிழகத் தமிழர்கள் தங்களை அரசியலாக வளர்த்தெடுத்துக் கொள்வதே அவர்களுக்கான எதிர்காலப் பாதுகாப்பு கவசமாகிறது.
காலனிய கட்டமைப்பினை உடைத்தெறியும் போராட்டம் தமிழீழத்தில் நீடித்துக் கொண்டிருக்கிறது. காலனிய ஆட்சி என்பது சனநாயகமற்றது, அது அனைத்து குடிமக்களுக்கான ஆட்சி அமைப்பு அல்ல. இப்படியான ஆட்சிமுறை அகற்றப்பட்டு மக்களுக்கான குடியாட்சி அவரவர் ஏற்படுத்திக்கொள்ள தேசிய இனங்களுக்கான உரிமை உண்டு என்பது சர்வதேச விதியாக காலனியத்திலிருந்து விடுபட உருவாக்கப்பட்டது.
இந்த உரிமை அடிப்படை மனித உரிமையாகவும் பார்க்கப்படுகிறது. இப்படியானச் சுதந்திர உணர்ச்சியின் அடிப்படையிலான கோரிக்கை சனநாயகமானதே. தன்னாட்சி, சுயாட்சி என்பது முழுவதுமாக பொருளாதார இறையாண்மையோ, அரசியலான கட்டமைப்போ ஏற்படுத்த இயலாத சமயங்களில், அல்லது மக்களுக்கு வழங்கப்படும் ஆட்சி முறையாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.
பழங்குடிகள், பூர்வகுடிகள், சிறுபான்மையினர் என பலவிதமான மக்கள் சமூகங்களுக்கு இந்தத் தீர்வுகள் முன் வைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்கக் கண்டங்களில் இத்தகைய தீர்வு பூர்வகுடிகளுக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால் முழுவளர்ச்சியடைந்த தேசிய இனங்கள் நிறைந்த ஆசியக் கண்டத்தில் சுயநிர்ணய உரிமை என்பது தமக்கான குடியாட்சியை ஏற்படுத்திக் கொள்ளும் அடிப்படை உரிமையாக உறுதி செய்யப்படுவதே காலனிய நீக்கத்தினை நிறைவு செய்யும் போக்காகும். ஏகாதிபத்திய நலனுக்காக பாதுகாக்கப்படும் எந்த ஒரு அரசியல் கட்டமைப்பும் உடைத் தெறியப்பட வேண்டியது என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க இயலாது.
ஆனால் இந்த அரசியல் சுயநிர்ணய உரிமையை தனது பிராந்திய நலனுக்காகவே ஏகாதிபத்தியம் இதுவரை பயன்படுத்தி வந்திருக்கிறது. தனது நலன்களுக்கு முரணான தேசிய இன உரிமைகளை முற்றிலுமாக மறுத்து வந்திருக்கின்றன ஏகாதிபத்திய நாடுகள். தமிழீழ இனப் படுகொலை நடந்த அதே காலகட்டத்தில் சூடானிலும் போர் நடந்து தெற்கு சூடான் மக்கள் பலியிடப்பட்டார்கள். தெற்கு சூடானின் விடுதலைக்குப் போராடிய மக்கள் மீது இனப் படுகொலை நிகழ்த்தப்பட்டதாக மேற்குலகமும், ஐ.நாவும், மனித உரிமை அமைப்புகளும் குரல் கொடுத்த அதே சமயத்தில் தான் தமிழினப் படுகொலை குறித்து மெளனம் காத்தன.
தெற்கு சூடானின் அரசியல் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டு விடுதலையை அறிவித்தவர்கள், அதே 2009ஆம் வருடத்தில் நடந்த தமிழீழப் படுகொலைக்கு வேறுவிதமான தீர்வினை முன்வைத்தார்கள். சூடானின் வளங்களை கொள்ளையடிக்கும் தனது திட்டத்திற்கு ஏதுவாக அரசியல் சுயநிர்ணய உரிமை என்பதை உறுதி செய்யும் பொது வாக்கெடுப்பினை ஏகாதிபத்தியமும், அதன் தொங்குச் சதையாக விளங்கும் ஐ.நா மன்றமும் அறிவித்தன. இதனால் தெற்கு சூடான் தனி நாடானது.
ஆனால் இலங்கை நிகழ்த்திய இனப் படுகொலையை முற்றிலும் வெள்ளையடித்து மறைத்த இந்த நாடுகள், ஒன்றுபட்ட இலங்கையின் இறையாண்மையை பாதுகாக்க உறுதி பூண்டிருப்பதாக வெளிப்படையாக அறிவித்தன. இனப் படுகொலைக்குள்ளான தமிழீழ மக்களுக்கான அரசியல் சுயநிர்ணய உரிமையை முற்றிலுமாக மறுத்தன. இன்று வரை மறுத்தும் வருகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விசாரணை நடத்த வேண்டுமென்று முன்மொழிந்த இந்நாடுகள், இசுரேல் பாலஸ்தீனத்தின் மீது 2009இல் நடத்திய தாக்குதலைக் கண்டித்து இருதரப்பின் மீதும் (அதாவது பாலஸ்தீன போராளிகள், இசுரேல் இராணுவம்) சர்வதேச விசாரணை வேண்டுமென்று முடிவெடுத்தன.
ஆனால் இதைவிட மோசமான இனப் படுகொலை, போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம் புரிந்த இலங்கை இராணுவத்தின் மீது எவ்விதமான சர்வதேச விசாரணையையும் இந்நாடுகள் அறிவிக்கவில்லை. அமெரிக்க அரசு இலங்கையில் ஆட்சி மாற்றம் கொண்டு வர ஒரு தீர்மானத்தை ஐநா மனித உரிமை அவையில் கொண்டுவந்தது. அன்றிலிருந்து தொடர்ந்து தமிழீழ புகைப்படங்கள், காணொளிகள், தகவல்கள், சமூகவளைதள பக்கங்கள் என பலவற்றை இணைய நிறுவனங்கள் தேடித்தேடி முடக்கின. இன்றும் கூட சமூக வளைதளத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் படத்தினை பதிவு செய்துவிட முடியாத நிலை உண்டு.
ஹிட்லர், முசோலினி, பிற இனவெறியர் படங்களைக்கூட தடை செய்யாத சமூக வலைதளங்கள் தேசியத்தலைவர் படத்தை தடை செய்வதென்பது இந்தியா-இலங்கைக்குள்ளாக மட்டுமல்ல என்பது நாம் கவனிக்க வேண்டிய நடவடிக்கை. இவ்வாறு இனப் படுகொலை நீக்கம், அல்லது இனப் படுகொலை மறுப்பு அரசியலைச் சர்வதேசம் மிகக் கவனமாக திட்டமிட்டு செய்து வருகிறது. இந்நிலையிலேயே தமிழ்நாட்டில் தமிழீழ அரசியல் விடுதலை என்பதை அரசியல் - பொருளியல் கண்ணோட்டத்திலும், இந்திய பார்ப்பனிய அடக்குமுறை அரசியலைப் பொறுத்திப் பார்த்தும் விவாதிக்க வேண்டி உள்ளது.
ஒரு இனப் படுகொலைக்கு எதிரான மக்கள் திரள் அரசியல் என்பது அப்பிராந்தியத்தில் இனிமேலும் ஒரு அநீதி நிகழாமல் தடுக்கும் முற்போக்கு அரசியல் ஆகும். இதை இந்திய அரசு இன்றளவும் குற்றமாக முத்திரைக் குத்தி வருகிறது. ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலையை தள்ளிப்போடலாமே ஒழிய, அதைத் தவிர்த்துவிட இயலாது.
தமிழீழ விடுதலை அரசியலே தெற்காசியப் பிராந்தியத்தில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வரலாற்று நிகழ்வாக அமைய முடியும். இந்தப் பெருங்கடல் பிரதேசமே காலனியத்தின் நுழை வாயிலாக இருந்திருக்கிறது. 280 வருடங்களுக்கு முன் குளச்சலில் டச்சு கப்பற்படைகளை எதிர்த்து நடைப்பெற்ற வீரமிக்க போர் இப்பெருங்கடல் பகுதியின் ஆபத்தினை நமக்கு விளக்கும்.
இந்த போரில் தமிழர்களின் வீரம் வெற்றியை ஈட்டியது. தமிழர்களின் இந்த சமர், டச்சு ஆதிக்கம், காலனியமாக்கல் தென்னிந்தியப் பிராந்தியத்தில் நுழைவதை தவிர்த்தது அல்லது தள்ளிப்போட்டது. இந்தப் போரினால் நாம் அறியமுடிவதையே தமிழீழப் போரில் கடல் எதிர்ப்பு என்பது எத்தகைய பாதுகாப்பை 35 ஆண்டுகளாக தமிழர்களுக்கு வழங்கியது என்பது புலப்படும்.
பனிப்போர் காலமெனும் சோவியத்-அமெரிக்காவின் பனிப்போர் காலக்கட்டத்திலிருந்து, அதன் பின்பான அமெரிக்காவின் ஒற்றைத்துருவ ஆதிக்கம் நிறைந்த 2009வரை விடுதலைப்புலிகளின் கடல்படை என்பது இக்கடலை பாதுகாத்தது. தமிழர்கள் தங்களுடைய பாதுகாப்பினை உறுதிச் செய்யும் அரசியல் என்பது தேர்தல் கட்சி சார்ந்துக் கிடைப்பதல்ல என்பதை உணர்ந்து கொள்வது மிக அவசியம் என்பதை தமிழீழம், தமிழகம் எனும் இரண்டு நிலப்பரப்புகளில் நடக்கும் தேர்தல் அரசியல் களம் நமக்கு உணர்த்துகிறது.
தமிழினப் படுகொலை முடிந்த பதினோறாவது வருடம் வரையில் சர்வதேச அரசுகளின் துரோக அரசியலை புரிந்துக் கொள்ள முடிந்த தமிழ்ச் சமூகத்தினால் தமிழரல்லாத பிற மக்களிடத்தின் ஆதரவை ஈட்டும் அரசியலை வலுப்படுத்த முடியாமல் போனதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். புலம் பெயர் நாடுகளில் உருவான 2009க்கு பின்பான அரசியல் கட்டமைப்புகள் என்பவற்றில் பெரும்பாலானவை பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழ்ப்பேரவை (க்ளோபல் தமிழ் அமைப்பு) ஆகியவை அரசுகளுடனான உறவின் மூலம் விடுதலை அரசியலை வென்றெடுத்துவிட முடியுமெனும் கானல் நீர் அரசியலை முன்னெடுத்தன.
இந்த நகர்வுகள் இங்கிலாந்து, அமெரிக்க அரசுகளுக்கு நலன் பயப்பவையாகவே அமைந்தனவேயன்றி தமிழர்களுக்கு எவ்வித நலனையோ, முன்னேற்றத்தையோ கொடுத்து விடவில்லை. இராசதந்திர நகர்வுகள் எனும் இவர்களது முயற்சிகள் மேற்குலகின் பிராந்திய நலத் திட்டங்களுக்கு துணைப் போயின. இதே போல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அம்னெஸ்ட்டி இண்டர்நேசனல் (AMENSTY INTERNATIONAL ), மனித உரிமை கண்காணிப்பகம் (HUMAN RIGHTS WATCH) போன்றவை தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப் படுகொலையை மனித உரிமை மீறலாக மட்டுமே சித்தரித்து இலங்கையில் அமெரிக்க சார் அரசியல் மாற்றத்தை கொண்டு வரும் நிகழ்விற்கு துணை போயின.
இதே பணியையே இலங்கையின் நிமால்கா பெர்னாண்டோ, அகிலன் கதிர்காமர் போன்ற நபர்களும் செய்தார்கள். இவர்களையெல்லாம் எதிர்த்து அம்பலப்படுத்திய அரசியல் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் 2010இலிருந்து தொடர்ந்து நடத்தியது. இவர்களது அமெரிக்க-இந்திய சார்பு அரசியலைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி இவர்களது அரசியல் தமிழகத்தில் வேர் ஊன்றாமல் தொடர்ந்து போராடி வெற்றியீட்டியது.
தமிழீழ விடுதலை அரசியல் ஆதரவு நிலை என்பதை தமிழகத்தின் தேர்தல் கட்சி அரசியலோடு பின்னிப் பிணைத்து தீர்வு கண்டுவிடும் கனவு அரசியலைக் கடந்து தமிழர்கள் கண்ணுக்கு முன்னர் எழுந்து நிற்கும் ஏகாதிபத்தியத்தின் தடைக் கல்லை உணராமல் தமிழீழம் என்பது சாத்தியமில்லை.
தமிழீழத்தில் இனப் படுகொலை குற்றவாளியான கோத்தபய ராஜபக்சேவின் ஆட்சி அமைவது அமெரிக்காவின் ஆசியுடன் நடைபெற்றது என்பது வெட்ட வெளிச்சமான உண்மை. மகிந்த ராஜபக்சேவின் ஆட்சியை உதறிய அமெரிக்கா, தற்போது அவரது சகோதரர் கோத்தபயாவின் ஆட்சியை கொண்டு வந்திருப்பதை வரவேற்றிருக்கிறது. இந்த கோத்தபயா ராஜபக்சே அமெரிக்காவின் குடிமகன் என்பதும் கவனிக்கவேண்டிய உண்மை.
இந்தப் பெருங்கடல் பகுதியில் தொடர்ந்துத் தீவிரமடைந்து வரும் மேற்குலகம்-ஜப்பான் – இந்தியாவின் இராணுவ கூட்டமைப்பு மற்றும் இதற்கு எதிரான சீனாவின் நகர்வுகள் ஆகியவற்றிற்கு இடையில் பலியிடப்படும் மக்களாகத் தமிழ்த் தேசிய இனம் அமைந்துவிடக் கூடாது. அப்படியான வரலாற்று சூழலில் தமிழர்கள் தங்களுக்கான அரசியலாக முற்போக்கு, பார்ப்பனிய எதிர்ப்பு மக்கள் நலன் சார்ந்த இயக்க அரசியலே தமிழினத்தின் அரணாக அமைய முடியும் என மே பதினேழு இயக்கம் உறுதியாக கருதுகிறது.
- மே 17 இயக்கக் குரல்