சிறுகதை

 

வேதக்கோவில் மைக்செட் சரியாக அஞ்சு மணிக்கு பாடத்துவங்கும். அந்நேரம் சரியாக ராசையாவுக்கும் முழிப்புதட்டிவிடும். எழுந்து பார்ப்பான். ராசாத்தி அடுப்புக்குள் விறகைத் தள்ளிக் கொண்டிருப்பாள். அடுப்புத் தீயின் செந்தணலான சந்தன வெளிச்சம்.

“மூஞ்சியைக் கழுவிட்டு டீத்தண்ணியைக் குடிங்க”

வாய் நிறைய எச்சிலோடு கேட்டான், வார்த்தைக் குதறலாக:

“அல்துக்குள்ளே போல்ட்டுல்ட்டீயா?”

“சோறும் ஆக்கியாச்சு. கொழம்புதான் கொதிக்குது”

எழுந்தான். செம்புநிறைய தண்ணீரோடு வாசல் படிக்குவந்து முகத்தைக் கழுவி, வாயை அலசி,,, கொப்பளித்துவிட்டு, வயிறுமுட்ட பச்சைத் தண்ணீரை மண்டி விட்டு ,,, டீக்கிளாஸை எடுத்தான்.

இனி எல்லாமே துரித கதிதான். ஆறே கால் பஸ்ஸைப் பிடிக்கணும். ஓடைக்கு ஓட்டம். அவசரக்குளிப்பு. மின்னல் பல்தேய்ப்பு. ராசாத்தி வைத்துத் தருகிற சோற்றையும் குழம்பையும் கொதிக்க கொதிக்க உள்ளே தள்ளுவது...

பேசக்கூட நேரமிருக்காது.

பஸ்ஸைப் பிடிச்சாத்தான் சிவகாசி போய்ச் சேர முடியும். கட்டிட வேலைக்கு ஆள் எடுக்கிற கூலி மந்தையில் போய் நிற்க முடியும். “நா வரட்டா... நா வரட்டா” என்று கேட்கணும்.

“கொத்தனாரா... சித்தாளா?”

“கொத்தனாரு”

“அப்ப...எங்கூட வாங்க...”

ஏதாவது கட்டிடத்துச் சுவரின் உச்சியில் உட்கார்ந்து கரண்டி பிடிக்கணும்.

ஓடி ஓடி வேலை பார்க்கணும். செங்கல் வைத்து, சைஸ் பார்த்து, நூல் பிடித்து சுவரை உசுப்பணும். மூலை முக்கு மடக்கில் பெரிய கொத்தனார் யோசனையைத் தெளிவுக்குக் கேட்டுக் கணும். எட்டரைக் கெல்லாம் வேலையில் ஏறணும்.

நாலரைக்குத்தான் வேலை விடுவார்கள். டீ, கீ குடித்துவிட்டு, வடை கிடையை தின்றுவிட்டு பஸ்ஸ்டாண்டுக்கு ஓட்டமும் நடையுமாக பாய்ந்து வரணும். ஆறரைப் பஸ்ஸைப் பிடித்தால் தான், எட்டுமணிக்காச்சும் வீட்டில் போய்ச் சாயலாம். உயிர் அறுந்ததுபோல அயற்சியில் துவளும் திரேகம், அடித்துப் போட்ட மாதிரி உடம் பெல்லாம் முறுக்கிப் பிழிகிற வலி இருக்கும்.

உண்டு முடித்த வேகத்தில் சட்டையை எடுத்துமாட்டினான். கட்டுமானத் தொழிலாளர் சங்கம் கொடுத்த சிவப்புக் கவர் போட்ட வாரியக் கார்டை தேடினான். சட்டையின் பைக்குள் இருந்தது.

“இந்தாங்க... தூக்குச்சட்டி. மட்டப்பலகை, தீத்துப்பலகை, கரண்டி எல்லாம் வைச்சிட்டேன்”

பிளாஸ்டிக் வயர்க் கூடையில் எல்லாம் இருந்தன. அவன் விரலிடுக்குகள், மணிக்கட்டு வரைக்கும் சாந்துச் சுண்ணாம்பு அடையாளம். கழுவினாலும் போகாத தோல் மாதிரி. காலிலும் அப்படித்தான். செருப்பை மாட்டினான்.

“அப்ப... நா வரட்டா?”

“பஸ்ஸைப் பிடிச்சிறலாமா?”

“பிடிச்சிறலாம்னுதா நெனைக்கேன். சீனி தான் டிரைவர். மனுச மக்களை அனுசரிச்சுப் போவாரு”

“பார்வதியக்கா சீட்டுக்கு ரூவா கட்டணும்”

“நாளைக்குக் குடுத்துறலாம்...”

பேச்சு பேச்சாக இருக்கும் போதே... புறப்படுகிறது ரிதம். கூடை எடுக்கிற வேகம். செருப்பை மாட்டுகிற வேகம். ஓட்டமாய் தெருவுக்குப் பாய்கிற வேகம்.

தெருவிளக்குக்குப் பயந்து பம்முகிற வைகறை இருட்டு. அவன் காலடியில் மிதிபடுகிற தெருவிளக்கின் வெளிச்சம். விடிந்தும் விடியாத கிழட்டு இரவு.

அஞ்சு ஐம்பதுக்கெல்லாம் அந்த மைதானத் துக்கு வந்துவிட்டான் ராசையா. அதே பஸ்ஸில் வர இருக்கிற பயணிகளின் பரபரப்பு. இவனோடு கொத்தனார் சித்தாள் வேலைகளுக்கு வருகிறவர் களின் சாவதானம்.

“இன்னும் டயமிருக்கு. பதற்றப்பட வேண்டியதில்லே”

“டீ சாப்புடலாமா?”

“போடச் சொல்லு. கொதி சோறு தள்ளுனதுலே வவுறெல்லாம் எப்புடியோ உப்பின மாதிரியிருக்கு”

“தெனப்பாடு இதானே?”

“விடிஞ்சும் விடியாத இருட்டுலே சாப்புடறது, சாப்புட்ட மாதிரியே யிருக்க மாட்டேங்குது”

“என்ன செய்றது? அகதிப் பொழைப்பு. இங்கயிருந்து முப்பது கிலோ மீட்டர் சிவகாசி. தெனம் தெனம் அலைஞ்சி சீரழிஞ்சு.. ஓடியாடி.. ஒழைச்சு, வம்பாடு பட்டு வவுறு நனைக்க வைக்க வேண்டியிருக்கு”

“நல்லாச் சொன்னே...” எல்லோரும் வாய் விட்டுச் சிரித்தனர். வாழ்வின் சோகத்தையும், அகதிப் பிழைப்பின் அவலத்தையும் “பேசி, சிரித்து”  தான் ஆற்ற வேண்டியதிருக்கிறது.

டீயை உறிகிற ராசையா, டீக்கடையின் நெற்றியில் ஒரு டிஜிடல் போர்டு “ அருஞ்சுனை காத்த அய்யனார் துணை” என்று துவங்குகிற டீக்கடை விளம்பரம்.

மைதானத்தின் தென்கோடியில் “பெருந் தலைவர் காமராஜர் பேருந்து நிலையம்” என்ற தகர போர்டில் காமராஜர் படம், நின்ற வாக்கில். அதற்கும் தெற்கில் இச்சிமரம். ராசையா வாழ் வோடும் ரத்தத்தோடும் பின்னிப்பிணைந்த இச்சி மரம்.

ஆறு ஐந்துக்கெல்லாம் பஸ் வந்துவிட்டது. டிரைவர் சீனிதான். எல்லோருக்கும் விஷ் பண்ணுவதும், சிரித்தமுகமாக பேசிக் குதூகலிப் பதுவும்..

ராசையா வட்டமடித்து திரும்பி நின்ற பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். டிரைவருடன் பேசிக் கொண்டே போவதற்கேற்ப முன் சீட்டில் உட்கார்ந்தான்.

இப்போதும் இச்சிமரத்தைப் பார்த்தான். ஊசி நுனி கொண்ட அகல இலைகளின் பசிய அடர்த்தி. ஓங்கு தாங்கான உயரத்துடன் ஆலமரம் போல அகலித்தும் இருக்கிற மரம். குயில்களும் மைனாக்களும் கூச்சலிடுகின்றன.

இச்சிமரத்துக்கு அடியில்தான் அவனது ஐயா குத்துக் கால் வைத்து உட்கார்ந்து, வருகிறவருக் கெல்லாம் முடிவெட்டுவார். அவரது கத்தரியின் ‘‘கர்ர்ருச், கர்ர்ர்ருச்” என்ற இசைலயமான

சத்தத் தொடர்ச்சி மைனாவின் ‘கிச்சடிக்கிச்சடி’ போலவே ஒலிக்கும்.

ஐயா காலத்துக்குப்பிறகு இவன் உட்கார வேண்டியது. ஊர்க்குடிமகன் வேலை. வருகிற வருக்கெல்லாம் முடிவெட்டி முகச்சவரம் செய்ய வேண்டும். “வாங்க மோலாளி... இருங்க மொதலாளி, வந்துட்டேன் மோலாளி, போதுமா மோலாளி... சரியாயிருக்கா மோலாளி” என்று மூச்சுக்கு முன்னூறு “முதலாளி” போட வேண்டும. டவுஷர் போட்ட சின்னப்பயலையும் முதலாளி பட்டம் போட்டுத் தான் கூப்பிடணும். சின்னஞ்சிறு பயல்கூட வயசாளியான ஐயாவை ‘போ..வா’ என்று ஒருமையில்தான் சொல்வான். ராசையா வுக்கு ரத்தம் கிடந்து கொதிக்கும்.

“நீயும் வேலை பழகிக்கடா. எனக்குப் பெறகு நீயும் கத்தரி  பிடிக்கணும்லே?”

“இந்தச் சனியன் புடிச்ச அடிமைத் தொழில் ஒன்னோட முடியட்டும்”

“ஏன் ... நீரு ... சீமைக் கலெக்டரா போறீ களோ?” கோபமாக சத்தம் உயர்த்தி காட்டம் காட்டுகிற ஐயா.

“வெறகு வெட்டப் போனாலும் போ வேனேயொழிய ... இந்த முடிவெட்டுற அடிமைச் சேவகத்துக்கு வரமாட்டேன்”

“ஏலேய்... கொழுப்பெடுத்துப்போய் பேசா தீடா... இது அடிமைத் தொழில் இல்லேடா. குடிமகன்டா.. இந்த ஊருக்கே நாம புள்ளே மாதிரிடா... ஊரு ஊத்துற கஞ்சியிலே தான்டா உசுர் வளர்க்குறோம்டா”

ஐயா ஆங்காரமாய்ச் சீறுவார். “அடங்காத பயலா வந்து பொறந்துருக்கானே” என்று அங்கலாய்ப்பார். ‘எந்தலைமுறையோட ‘ஊரு குடி வேலை நின்னுபோகுமோ’ என்று கவலைப் படுவார்.

சூடு சுரணையற்ற ஐயா. “ஏலேய் சோலை” என்று திமிராகக் கூப்பிடுகிறவருக்கும் “என்ன மோலாளி” என்று பணிவு காட்டுகிற ஐயா.

இவனுக்குள் கிடந்து உயிர் வேகும். நெஞ்சு துடிக்கும். மனிதனை மனிதனாக சமமாக நினைக் காத அந்த அநீதி கண்டு இவனது ரத்தம் கொதிக் கும். ஆனாலும் ஊர்ச் சோறுதான் தின்பான்.

காலையும் மாலையும் வீடு வீடாக அம்மா போய் நிற்பாள். “யம்மோ...வ், சோ....று போடுங்கம்மா” என்று கெஞ்சலாய்க் கத்துவான். பழைய சோறு போடும் அம்மாக்கள், சோளச் சோறு, கம்மஞ்சோறு போடுகிற அம்மாக்க மார்கள். அதில்தான் இவன் சாப்பிடுவான். குடும்பம் சாப்பிடும். ஆடு குட்டிகளுக்கும் அதுதான் கஞ்சி.

ராசையாவுக்குக் கோபம் கோபமாய் வரும். கூப்பாடு போடுவான். “யம்மா... எனக்கு இந்தச் சோறு வேண்டாம்மா”

“பெறவு?”

“ஆக்குன சோறு குடும்மா”

“அதுக்கு நா எங்க போவேன்?” என்று அதிசயமாகக் கேட்பாள்.

ஓர் அநியாயத்தைப் பார்த்தது போல வியப்புடன் கொதிப்பாள்.

“அப்பவும்... என் வவுத்துலே இப்புடி ஒரு புள்ளையா வந்து பொறக்கணும்? ஊர்ச்சோறு வேண்டாம்னு சொல்லுதுக்கும் ஒனக்கு மனசு வருதா?”

அம்மாவும் அப்படித்தான். பாவாடை கட்டத் தெரியாத சிறுமியைக்கூட ‘வாங்கம்மா’ என்று சொல்லணும். அந்தப் பொடி நாயோ அம்மாவை ‘போ, வா’ என்று ஒருமையில் தான் பேசும்.

இவனுக்குள் தாங்க முடியாத கோபத் தகிப்பு வரும். “இது என்னடா ஊரு? மனுசமதிப்பு தெரியாத ஊரு” என்று ஆத்திரமும் ஆங்காரமுமாய் முணுமுணுப்பான்.

ஐயாவும் இவனை எம்புட்டோ வசக்கிப் பார்த்தார். “வேலை பழகிக்கடா... தொழில் கத்துக்கடா” என்று கத்தரிப்பானை இவனுக்குள் திணிப்பார். சவரக்கத்தியை நீட்டுவார்.

இவன் உதறித் தள்ளிவிடுவான். ஐயாவின் வசவுகளையும் சாபங்களையும் வாங்கிக் கட்டிக் கொள்வான்.

ஏற்றத் தாழ்வை இயல்பானதாக ஏற்றுக் கொள்கிற ஐயா தலைமுறை வேறு. ஏற்றத் தாழ்வை அநீதியானதாக நினைத்து, கொதித்து, மனித சமத்துவத்தை எதிர்பார்க்கிற இவனது தலைமுறை வேறு.

பஞ்சாயத்துத் தேர்தலில் ஊர் நிறுத்திய வேட்பாளருக்கு இவன் ஓட்டு போடவில்லை என்ற சந்தேகத்தில் ‘குடிமகன்’ சிம்மாசனத்திலிருந்து ஐயாவை இறக்கி விட்டார்கள். ஊர்ச் சோறு தின்கிற உரிமையில்லாமல் போயிற்றே என்ற ஏக்கத்தில் தான் ஐயாவின் உயிர் போயிற்று.

‘ஊரு என்னை ஒதுக்கி வைச்சிருச்சே’ என்கிற அவமதிப்பு தந்த வேதனை அவரது உடலை உருக்கி கரைத்து விட்டது. புலம்பிப் புலம்பிச் செத்தார் ஐயா.

ராசாத்தி ஆக்கி வைத்த சோறு தூக்கு வாளிக்குள் இருக்கிறது. வயர் கூடையை பத்திர மாக காலுக்கு அருகில் வைத்துக் கொண்டான்.

இச்சிமரத்து நினைப்பில் டிரைவர் சீனியுடன் கூட சரியாக பேச முடியவில்லை.

ஏழு ஐம்பதுக்கு சிவகாசி போய்ச் சேர்ந்தது பஸ். எட்டரைக்கு கட்டிடத்தின் சாரத்தில் ஏறினான். சாந்தும், செங்கலுமாக வேலையின் விறுவிறுப்பு. வியர்வையைத் துடைக்கக் கூட முடியாத பரபரப்பு.

மூட்டுக்கு மூட்டு வலிக்கிறது. தோள்

பட்டையில் பின்னியெடுக்கிற வலி. வியர்த்துக் கொட்டுகிறது. உடம்பெல்லாம் அலுப்பில் முறுக்கிப் பிழிகிறது.

நேற்று ராத்திரி... ஏதோ ஒரு நேரம்... புரண்டு இவனுடன் ஒட்டிப் படுத்திருந்த ராசாத்தி. இவன்மேல் மோதுகிற அவள் உடம்பின் மிருது. தொட்டால்... இணங்குவாள் என்று தோன்றுகிற மனநிலை. தொடமனமில்லை. உழைப்பின் அயற்சியில்.. உடம்பின் அசதியில் அப்படியே உறங்கிப் போனதை நினைத்துப் பார்க்கிற ராசையா. அவனுக்குள் கவிகிற ஏக்கமும் சோகமும் என்ன செய்ய...? ஓடியலைஞ்சு சீரழிகிற அகதிப் பிழைப்பு. உயிர் அறுத்து உலரப் போடுகிற உழைப்பு மும்முரம். புறவாழ்வின்  நெரிபரியில் அகவாழ்வின் மூச்சுத் திணறல்.

... ஆறரைப் பஸ்ஸைப் பிடித்து ஏறி உட்கார்ந்த போது, உயிர் முழுவதும் கழன்று போன மாதிரியோர் அயற்சி.

ஒரு நாயக்கமார் இளவட்டம் இவனிடம் நெருங்கி வந்து உட்கார்கிறான். “அண்ணே, நாளைக்கு ஒங்ககூட வேலைக்கு வரட்டா?”

“அண்ணே ... அவன் நம்மகூட வர வேண்டாம்” என்று குறுக்கே நிற்கிற தேவமார் பையன்.

“அண்ணே .. அண்ணே... “ என்ற தேனான அழைப்பு, அவனுக்குள் இறங்கி, பரவசப்படுத்தி.. உயிர் வளர்க்கிறது.

Pin It