தமிழ்நாட்டில் ‘புலிகள் ஊடுருவல்’, ‘தீவிரவாதிகள் ஊடுருவல்’ என்றெல்லாம் பார்ப்பனர்களும் காங்கிரஸ் ‘தேசியங்களும்’ பூச்சாண்டி காட்டுகின்றன. அகதிகளாக வரும் ஈழத் தமிழர்களை எல்லாம் தீவிரவாதிகளாக்கி காவல்துறை கைது செய்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் சிங்களர்கள் தங்கு தடையின்றி இலங்கை உளவு நிறுவனங்களின் தூதர்களாக செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு முழுதும் புத்தர் சிலைகளை நிறுவுதல்; போதி மரம் என்ற அரச மரத்துக்கு அடிக்கல் நாட்டுதல் என்ற நிகழ்ச்சிகளை இலங்கையின் சிங்களப் பகுதிகளிலிருந்து புத்த பிக்குகள் தமிழ்நாட்டுக்குள் வந்து பரவலாக இந்த விழாக்களை நடத்தத் தொடங்கியுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் ராணுவத் தாக்குதலுக்கு உள்ளாகிவரும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பேரெழுச்சி உருவாகி வருவதை குலைப்பதற்கு இலங்கை தூதரகத்தின் வழியாக பார்ப்பன ஏடுகளின் முழு ஆதரவோடு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல ஊடகவியலாளர்கள் சிங்கள தூதரகத்தோடு தொடர்ந்து நெருக்கமாக இருந்து வருகிறார்கள். அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் மக்கள் மன்றத்தில் சிங்களர்களின் புத்த மதமும், இந்து மதமும் பண்பாட்டால் ஒன்றே; இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே கலாச்சார உறவுகளை மேம்படுத்துகிறோம்” என்ற பெயரில் சிங்கள புத்தத் துறவிகள் தமிழகம் முழுதும் வலம் வருகிறார்கள்.
திருச்சியில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் நல்லுசாமி - வழியாக தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய புள்ளிகளை வலை வீசி, அவர்கள் வழியாக இந்த விழாவுக்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. திருச்சி அருகே 6 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பேரூரில் நல்லுசாமிக்கு சொந்தமான இடத்தில் இலங்கை கதிர்காமர் கோயிலைப் போல் கோயில் கட்டவும், புத்தர் கோயில் கட்டவும், அரச மரம் கால்கோள் விழாவும், கடந்த திங்கள் கிழமையன்று (மார்ச் 3) நடந்துள்ளது.
இதில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிங்கள ஜெயலத் ஜெயவர்த்தனே மற்றும் கொழும்பிலிருந்து வந்த 3 புத்த சிங்கள சாமியார்கள் கலந்து கொண்டுள்ளனர். காலை 7 மணியளவில் இந்த செய்தி கிடைத்தவுடன், அடுத்த இரண்டு மணி நேரத்தில் பெரியார் திராவிடர் கழக திருச்சி மாவட்டத் தலைவர் செ.த. இராசேந்திரன், திண்டுக்கல் தாமரைக்கண்ணன் கருப்புக் கொடியுடன் விரைந்தனர். தமிழகத்தில் சிங்கள உளவுத் துறையின் சதிச் செயலை எதிர்த்து முழக்கமிட்டனர். காவல்துறை கழகத்தினரை கைது செய்தது.
சிங்கள புத்த துறவிகள் இதேபோல் ஏற்கனவே, பொன்னேரி, காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் நுழைந்தபோது அங்கே வாழும் தமிழர்களால் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். நெல்லை ஆலங்குளத்தில், இதே போல் புத்தர் சிலை நிறுவும் நிகழ்ச்சியும் நடந்துள்ளது. தமிழகம் முழுதும் 50 ஊர்களில் இது போன்ற விழாக்களை நடத்தி - இறுதியாக தமிழகம் தழுவிய அளவில் பெரும் விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஈழத் தமிழர்கள் மீது ஒவ்வொரு நாளும் ராணுவத் தாக்குதலை நடத்திக் கொண்டு, சிங்கள அரசின் உளவாளிகள் தமிழ்நாட்டு மக்களிடையே சிங்களர்களுக்கு ஆதரவான கருத்துகளை விதைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றனர். ‘தீவிரவாதத் தடுப்பு’ என்ற பெயரில் தமிழ்நாட்டில், ஈழத் தமிழர் ஆதரவு பிரச்சாரத்தை ஒடுக்கி வரும் தமிழக அரசு, சிங்கள ஊடுருவலை தாராளமாக அனுமதிக்கப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.