ambedkar_337நாம் மேற்கொண்டு முன்சென்று, சாத்தியக்கூறு என்ற சோதனையைப் பயன்படுத்திப் பார்ப்போம். இத்தகைய ஒரு கேள்வியை ஆனந்தா ஏன் கேட்டிருக்க வேண்டும் என்பதற்கு, ஏதாவது காரணமிருக்கிறதா? பெண்களுடன் புத்தர் எத்தகைய உறவைப் பேணினார் என்று தெரிந்து கொள்வதற்கு, இது இசைவானதுதானா? இத்தகைய ஒரு கேள்வியை ஆனந்தா கேட்டிருக்க முடியாது என்று சொல்வதற்கு சான்று இருக்கிறது. ஆனால், இத்தகைய ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்குமேயானால், புத்தர் அத்தகைய பதிலை அளித்திருக்க மாட்டார். பிடகாக்களில் கூறப்பட்டிருப்பது போன்று, பெண்கள் மீதான ஆனந்தா மற்றும் புத்தரின் நடத்தையானது, அத்தகையதொரு கேள்வி கேட்கப்பட்டிருக்கும் சாத்தியப்பாட்டுக்கும், அத்தகைய பதில் அளிக்கப்பட்டிருப்பதற்கும் மிகவும் முரணாக இருக்கிறது.

ஆனந்தா அத்தகைய ஒரு கேள்வி கேட்பதற்கான அவசியம் ஏதாவது இருந்ததா என்பது தொடர்பாக, "மகா பரிநிப்பாண சுத்தா'வின் அதே அத்தியாயத்தில், மேலே மேற்கோள் காட்டப்பட்டதிலிருந்து ஒரு சில "கதாஸ்'கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன என்பதை கவனிப்பது பொருத்தமாக இருக்கும். ஆனந்தா எவ்வளவு இனிமையானவராக இருந்தார் என்றும், அவர் எவ்வாறு அனைவராலும் நேசிக்கப்பட்டார் என்றும் புத்தர் வர்ணிக்கிறார். அவற்றிலிருந்து கீழ்வரும் இரண்டு "கதாஸ்'களை நான் மேற்கோள் காட்டுகிறேன் :

“16. சகோதரர்களே! இந்த நான்கு உன்னதமான மற்றும் வியக்கத்தக்க பண்புகள் ஆனந்தாவிடம் இருக்கின்றன. சகோதரர்களே! நமது சமயத்தைச் சேர்ந்த ஏராளமான சகோதரர்கள் ஆனந்தாவை சந்திப்பதற்கு வருவார்களேயானால், அவரைக் கண்டதும் அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறார்கள். பின்னர் ஆனந்தா அவர்களுக்கு உண்மையை அறிவுறுத்துவாரானால், அந்த சொற்பொழிவைக் கேட்டு அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்கள். ஆனந்தா மவுனமாயிருக்கும்போது, சகோதரர்கள் வருத்தமடைகிறார்கள்.

சகோதரர்களே! சமயத்தைச் சேர்ந்த சகோதரிகளில் பலர் அல்லது விசுவாசமுள்ள ஆண்கள் அல்லது விசுவாசமுள்ள பெண்கள் அவருக்கு ஆதரவளித்தால்; பின்னர் ஆனந்தா அவர்களுக்கு உண்மையை அறிவுறுத்தினால், அந்த அறிவுரையைக் கேட்டு அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். ஆனால், அதே பொழுதில் ஆனந்தா மவுனமாக இருக்கும்போது, சகோதரிகள் வருத்தமடைகிறார்கள்.

ஆனந்தா பெண்களை சந்திப்பதும், சகோதரிகள் மட்டுமின்றி, சமயக் குழுவின் உறுப்பினர்கள் அல்லாத, ஆனால் விசுவாசமான பெண்களை சந்திப்பதும் வழக்கமானதுதான் என்று இதிலிருந்து தெளிவாகிறது. அவர் அவர்களைப் பார்ப்பதும், சந்திப்பதும், அவர்களுடன் பேசுவதும் வழக்கம். அப்படியெனில், ஆனந்தா ஏன் அத்தகைய ஒரு கேள்வியைக் கேட்டிருக்க வேண்டும்? பெண்கள் ஆனந்தாவை சந்திப்பது வழக்கம் என்பதை புத்தர் அறிவார். முன்பு இது குறித்து அவர் எந்த ஆட்சேபனையையும் எழுப்பியதில்லை. எனவே, அவர் ஏன் பெண்களுடன் எவ்விதத் தொடர்பும் கூடாதென்று கூறவும், தடை விதிக்கவும் சிந்திக்க வேண்டும்? இந்த வாசகம் முழுவதும் இயற்கைக்கு முற்றிலும் மாறானதாக இருக்கிறது, எனவே, பிற்காலத்தில் துறவிகளால் செய்யப்பட்ட இடைச்செருகல் என்றுதான் இதைக் கருத வேண்டும்.

ஆனந்தாவின் வாழ்க்கையில் மற்றொரு எடுத்துக்காட்டு - மகாபரிநிப்பான சுத்தாவிலுள்ள வாசகத்துடன் முற்றிலும் வேறுபடுகிறது. முதலாவது சங்கதியால் ஆனந்தாவுக்கு எதிராக அய்ந்து புகார்கள் கூறப்பட்டன என்பது நன்கு தெரிந்ததே. அவை : 1. வினயாவின் எந்தப் பகுதிகள் குறையுள்ள பகுதிகள் என புத்தர் கருதினார் என்று கேட்பதற்கு அவர் தவறிவிட்டார். அந்தப் பகுதிகளை மாற்றவும், திருத்தவும் சங்கத்திற்கு புத்தர் அதிகாரம் வழங்கியிருந்தார் 2. பின்வாங்கிச் செல்லும்போது, புத்தரின் மேலங்கியைத் தைக்கும்போது அவர் அதன் மீது காலை வைத்தார் 3. அரராகிவிட்ட புத்தரின் உடலுக்குப் பெண்களை முதலில் அகவணக்கம் செலுத்துவதற்கு அனுமதித்தார். இதனால், அவர்களின் கண்ணீரால் (புத்தரின்) சடலம் தூய்மை கெட்டது 4. அவர் புத்தரை ஒரு முழுவாழ்வு வாழ கேட்டுக் கொள்ளவில்லை 5. சங்கத்தில் பெண்களை அனுமதிப்பதற்கு அவர் முதன்மைக் காரணமாக இருந்தார்.

இந்தக் குற்றங்களையெல்லாம் தான் புரிந்ததாக ஆனந்தா ஒப்புக் கொண்டார். அவர் குற்றவாளி என்று ஒப்புக் கொண்டிருக்க வேண்டுமா அல்லவா என்பது வேறு செய்தி. மூன்றாவது குற்றச்சாட்டுதான் ஆர்வமூட்டுவதாகும். ஏனெனில், விவாதத்திலுள்ள பிரச்சினைக்கு அது மிகுந்த தொடர்புடையதாகும். மகா பரிநிப்பான சுத்தாவில் குறிப்பிட்டுள்ள படி, புத்தர் வழங்கியுள்ள அறிவுரை உண்மையெனில், அவருடைய உடலைத் தொடுவதற்குப் பெண்களை ஆனந்தா ஏன் அனுமதித்தார்? ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர்தான் புத்தர் அருளிய அறிவுரையை அவர் (ஆனந்தா) ஏன் இவ்வளவு வெளிப்படையாக தெரிந்துள்ள நிலையிலும் மீறினார்?

இதற்குப் பதில் எதிர்மறையானதே. இந்த எதிர்மறை பதிலிலிருந்து என்ன தொடர்கிறது? இதிலிருந்து தொடர்வது என்னவெனில், ஆனந்தாவுக்கு எதிராகக் கூறப்பட்டதுபோல், புத்தர் அவருக்கு அத்தகைய அறிவுரை எதுவும் கூறவில்லை. ஏனெனில், அவர் அத்தகைய ஓர் அறிவுரையைக் கூறியிருந்தாரேயானால், ஆனந்தா அதற்கு முரணாகச் செயல்பட்டிருக்க முடியாது. எனவே, அத்தகைய அறிவுரை எதுவும் புத்தரால் வழங்கப்படவில்லை என்பது, பகுத்தறிவுக்கு இசைவானதாகும்.