காஞ்சி சங்கரமடம் சர்ச்சைகளில் சிக்குவது இது முதல்முறை அல்ல. 1986 இல் காஞ்சி சங்கராச்சாரிகளில் ஒருவரான சுப்பிரமணியன் (எ) ஜெயேந்திரன் தண்டத்தையும் , மடத்தையும் விட்டுவிட்டுத் தலைக்காவிரிக்கு ஒருவருடன் ஓடியது, வேலைக்குச் செல்கிற பெண்கள் எல்லாம் விபச்சாரிகள் என்றது, விதவைப் பெண்கள் தரிசு நிலங்கள் என்றது, எழுத்தாளர் அனுராதா இரமணன் அவர்களிடம் 1992 இல் தவறாக நடக்க முயன்றது, சங்கரராமன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டது, தற்போது தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நில்லாதது உட்பட பல கூத்துகள் நம் கண்முன்னே நடைபெற்றவை தாம். இத்துணை கூத்துகளுக்குப் பிறகும், பார்ப்பனர்கள் காஞ்சி சங்கராச்சாரிகளை உயர்த்திப் பிடிப்பதும், அதனுள் இருக்கும் அரசியலும் உற்று நோக்கப்படவேண்டியவை. இவ்வரசியலை அறியாமல், பார்ப்பனர் அல்லாதோரும் கூட காஞ்சி சங்கரமடத்தின் பக்தர்களாக, அதன் புகழ் பரப்புபவர்களாக இருப்பது வேதனைப்படவேண்டிய நிகழ்வாகும்.
அண்மையில் நடந்த வடமொழி - தமிழ் அகராதி வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது , ஆணவத்துடன் அமர்ந்திருந்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதி சங்கரநாராயணன் (எ) விஜயேந்திரன். உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இச்செய்கையைக் கண்டித்துத் தங்களது வன்மையான எதிர்ப்பினைத் தெரிவிப்பார்கள் என்று எண்ணிய என்னைப் போன்ற சிலருக்கு ஏமாற்றம் தான் ஏற்பட்டது. பெரியாரியத் தோழர்களும், அம்பேத்கரிய தோழர்களும்தான் விஜயேந்திரனுக்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்தார்கள். எது ஒன்றையும் புனிதப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளாத பெரியாரியத் தோழர்கள் தமிழ்த் தாய்வாழ்த்தினை மட்டும் புனிதப்படுத்துவதாக எண்ணக்கூடாது. தேசியப் பண்ணிற்கு எழுந்து நிற்கும் விஜயேந்திரன் தமிழ்த் தாய்வாழ்த்திற்கு எழுந்து நில்லாததன் பின்னணியிலிருக்கும் வர்ணபேதத்தை வெளிக்கொணரவே பெரியாரியத் தோழர்கள் எதிர்வினை ஆற்றினார்கள். அமெரிக்காவிலிருக்கும் ஒன்றிரண்டுத் தமிழ்ச் சங்கங்கள், அமைப்புகள் தவிர மற்ற அனைத்துத் தமிழமைப்புகளும் வாய்மூடி இச்சம்பவத்தை எளிமையாகக் கடந்து சென்றனர். அவ்வமைப்புகளில் பொறுப்புகளிலிருக்கும் சிலரிடம் அவர்களின் செய்கை தவறு என்று சொன்ன போது, இந்துக்களின் தலைவரைப் பற்றி தமிழ்ச் சங்கங்கள் கருத்து சொல்வது சரியாக இருக்காது என்றும், தமிழ்ச் சங்கத்திற்குள் இந்துக்கள் - பிறர் என்ற பிளவுகளை ஏற்படுத்தும் என்றும், 2500 ஆண்டுகளுக்கு மேலான மடத்தினை கண்டிப்பது ஏற்புடையதல்ல என்றும் தங்கள் தவறானப் புரிதலுக்கு ஏற்றாற்போல் கருத்துகளைத் தெரிவித்தனர். காஞ்சி சங்கரமடத்தினைப் பற்றி பார்ப்பனர் அல்லாதோருக்கு இருக்கும் தவறான புரிதல்களையும், காஞ்சி சங்கரமடத்தின் வரலாற்றுப் புரட்டுகளையும் வெளிச்சமிட்டு காட்டுவதே இக்கட்டுரையின் முதன்மையான நோக்கம்.
இன்றைக்குக் காஞ்சி சங்கரமடத்திற்கு இரண்டு மடாதிபதிகள் - பெரிய சங்கராச்சாரி மற்றும் சின்ன சங்கராச்சாரி இருக்கிறார்கள். ஆனால், 1994 இல் சுவாமிநாதன் (எ) சந்திரசேகரேந்திரன் மறையும் வரை மூன்று சங்கராச்சாரிகள் இருந்தனர். 1986 இல் இன்றைய பெரிய சங்கராச்சாரி ஜெயேந்திரன் தனது தண்டத்தை விட்டுவிட்டு தலைக்காவிரிக்கு ஒருவருடன் ஓடினார் என்று இக்கட்டுரையின் முன்னுரையில் தெரிவித்திருந்தேன்; அன்றைய இளைய சங்கராச்சாரியான ஜெயேந்திரன் மடத்தினை விட்டு ஓடியதால் அன்று சிறுவனாக இருந்த விஜயேந்திரன் இளைய சங்கராச்சாரி ஆக்கப்பட்டார். ஒடிப்போன ஜெயேந்திரன் மீண்டும் அழைத்து வரப்பட்டதால் இரண்டுக்குப் பதில் மூன்று சங்கராச்சாரிகள் 1994 வரை மடத்தில் இருந்தனர். இதுதான் தமிழ்த்தாய் வாழ்த்தினை அவமதித்த இன்றைய இளைய சங்கராச்சாரி, சங்கராச்சாரியான வரலாறு.
காஞ்சி சங்கரமடத்தினைப் பற்றி பரப்பப்படும் ஒரு வரலாற்றுப் புரட்டு, இம்மடம் ஆதிசங்கராரால் துவங்கப்பட்டது என்றும், இம்மடம் 2500 ஆண்டுகளுக்கு மேலாக பழமைவாய்ந்ததென்றும் சொல்வதா கும். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பிறந்த திருஞானசம்பந்தரை “திராவிட சிசு” என்று குறிப்பிடும் ஆதிசங்கரரின் காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டே என்று டி.டி.கோசாம்பி, அம்பேத்கர் போன்றோர் திட்டவட்டமாகச் சொல்கிறார்கள் ; கி.பி.எட்டாம் நூற்றாண்டில் பிறந்த ஒருவர் தோற்றுவித்த மடமாகவே இருந்தாலும் அது 2500 ஆண்டுகள் பழமையானதாக இருக்க முடியாது. அப்படியிருக்க, இன்றைய காஞ்சி சங்கரமடமோ, ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட மடமும் கிடையாது. பத்திரிநாத், துவாரகை, பூரி, சிருங்கேரி ஆகிய நான்கு மடங்கள் மட்டுமே ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்டவை என்று குறிப்புகள் உள்ளன. இன்றைய கர்நாடக மாநிலத்திருக்கும் சிருங்கேரி நகரிலிருக்கும் சங்கர மடத்தின் கிளை மடமாக 1821 இல் கும்பகோணம் மடம் தொடங்கப்பட்டது. 1842 இல் காஞ்சி காமாட்சி கோயில் குடமுழுக்கு நடத்த ஆங்கிலேயர்களிடம் அனுமதி பெற்று காஞ்சிக்கு இடம் பெயர்ந்து கும்பகோணத்திலிருந்த கிளை மடம். அதுவே பின்னர் காஞ்சி சங்கரமடம் என்று பெயர் மாற்றம் பெறுகிறது.
இன்றைய காஞ்சி சங்கரமடத்தினை, ஆதிசங்கரர் நிறுவிய ஒரு மடமாக மற்ற நான்கு சங்கரமடத்தினரும் ஒத்துக்கொள்ளாமல் பிரச்சனை வந்த போது, காஞ்சி சங்கரமடம், தங்கள் மடத்துக்கென ஒரு வரலாற்றினை உருவாக்கி அதனை மீண்டும் மீண்டும் சொல்லி உண்மையென நம்ப வைத்தது. காஞ்சி சங்கரமடம் 2500 ஆண்டுகள் என்று நிறுவவேண்டுமென்றால், ஆதிசங்கரரின் காலத்தினையும் முன்னகர்த்தி செல்லவேண்டுமல்லவா, அதனையும் செய்தார்கள் இந்த காஞ்சி சங்காராச்சாரிகள். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் பிறந்த ஆதிசங்கரர், புத்தரின் காலத்துக்கு முன் தோன்றினார் என்று வராற்றுத்திரிபு செய்தனர். மற்ற நான்கு மடங்களுக்கும் மடாம்நாய ஸேது என்று பொதுவாக ஒரு வரலாற்று நூல் மட்டுமே இருக்கிறது. அவ்வரலாற்றில், ஆதிசங்கரர் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இன்றைய கேரளாவின் காலடியில் பிறந்து, வடக்கே கேதார்நாத்தில் மறைந்தார் என்றிருக்கிறது. ஆனால், தங்களை முன்னிலைப் படுத்த, காஞ்சி சங்கராச்சாரிகள் தங்களுக்கென்று எழுதிக்கொண்ட மடத்தின் வரலாற்றில், ஆதிசங்கரர் காலத்தை கி.மு. 508 கி.மு. 476 என்று முன் தள்ளி வைத்தனர். தொடக்கத்தில் ஆதிசங்கரர் சிதம்பரத்தில் பிறந்தார் என்று சொல்லி வந்த காஞ்சி சங்கரமடம், பிறகு காலடி என்று மாற்றிக் கொண்டது. ஆனால் அவர் முக்திநிலை அடைந்து இறந்தது காஞ்சி காமாட்சி கோயிலில் என்று இன்றும் பொய் சொல்லி வருகிறது. கிருஷ்ணசாமி ஐயர் என்ற பார்ப்பனர் இந்தக் காஞ்சி மடத்தின் புரட்டுகள் அனைத்தையும் ஆராய்ச்சி நூலாகவே வெளியிட்டிருக்கிறார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் பௌத்த மற்றும் சமண சமயங்களையே பின்பற்றி வந்தனர். அந்த நிலையை மாற்ற, சமண, பௌத்த மதங்களை அழிப்பதற்காக முயற்சித்தவர் தான் இந்த ஆதிசங்கரர். உபநிடதங்களில் உள்ளவற்றை சுருக்கமாக்கி, அவற்றினை ஒழுங்குபடுத்தி விளங்கவைக்கும் நூல் தான் பிரம்ம சூத்திரம். இந்த பிரம்ம சூத்திரத்திற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அந்த உரையாசிரியர்களின் ஒருவர் தான் இந்த ஆதிசங்கரர். ஒரே நூலுக்கு ஆதிசங்கரர் எழுதிய உரை அத்வைதம் என்ற மதப் பிரிவானது , மத்துவர் எழுதிய உரை த்வைதம் என்றும், இராமானுஜர் எழுதிய உரை வசிஷ்டாத்வைதம் என்றும் ஆனது. ஒரு குழப்பத்தை நீக்க வந்த மூன்று உரைகள் மூன்று தனிக் குழப்பங்களானது என்று கொள்ளலாம். இந்த ஆதிசங்கரர் தான் சைவம் (சிவ வழிபாடு) , வைணவம் (விஷ்ணு வழிபாடு), கௌமாரம் (முருக வழிபாடு), சாக்தம் (சக்தி வழிபாடு), காணபத்யம் (கணபதி வழிபாடு) , சௌரம் (சூரிய வழிபாடு) என்ற ஆறு பிரிவுகளை ஒன்றிணைத்து ஏறக்குறைய இன்றிருக்கக் கூடிய இந்து மதமாக மாற்றினார். ஆதிசங்கரரின் வாதங்கள் பௌத்த தத்துவத்திலிருந்து திருடப்பட்டவை எனினும் வர்ணாசிரமத் தர்மத்தைக் காப்பதே அவரின் தலையாய நோக்கமாகும். பிரம்ம சூத்திரத்தின் உரை ஆசிரியான ஆதிசங்கரரை அவதாரமாக்கி அரசியல் ஆதாயம் தேடியது காஞ்சி சங்கர மடம் தான்.
சரி, எந்தக் காஞ்சி காமாட்சி யம்மன் கோயில் குடமுழுக்கு நடத்த இடம் பெயர்ந்தார்களோ, அந்தக் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலின் வரலாற்றினைப் பாராத்தால், அதுவும் புரட்டாகவே இருக்கிறது. இன்றைய காமாட்சியம்மன் சன்னிதிக்குப் பின் ஐயனார் சன்னதி உள்ளது, காஞ்சி காமாட்சி கோயில் தாய்த்தெய்வ வழிபாடு நடந்த இடம், அதன் பெயர் காமக் கோட்டம் என்கிறார் பேராசிரியர் தொ.ப. ஐயனார் வழிபாடு பார்ப்பனர் அல்லாதார் வழிபாடு. காமக்கோட்டம் என்ற தாய்த்தெய்வக் கோயில்களுக்குரிய பெயரினை தங்களுடையதாக்கிக் கொண்டு காமகோடி என்று தங்களை அழைத்துக்கொள்ளத் தொடங்கினர் காஞ்சி சங்கராசாரிகள். அந்தக் கோவிலைச் சுற்றியிருந்த சமணப் பள்ளிகள், புத்த விகாரைகள் அனைத்தையும் அப்புறப்படுத்தி காஞ்சி சங்கர மடத்தையம் உருவாக்கிக்கொண்டார்கள் .
உள்ளபடியே சொல்லப்போனால் காஞ்சி சங்கராச்சாரிகள் ஸ்மார்த்த பார்ப்பனர்கள். ஸ்மார்த்த பார்ப்பனர்கள் தத்துவப்படி அத்வைதத்தை ஏற்றுக்கொண்டவர்கள். அத்வைதம் என்றால் கடவுள் வேறு நாம் வேறு கிடையாது இரண்டும் ஒன்றே,நானே கடவுள் (அஹம் பிரம்மாஸ்மி) என்ற கோட்பாடுடயவர்கள். இவர்களுக்கும் கோயில்களுக்கும் உறவே கிடையாது. காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் கூட சாதாரண மனிதர்களைப் போல இருகைகளைக் கூப்பி வணங்கும் வழக்கம் காஞ்சி சங்காராச்சாரிகளுக்குக் கிடையாது. நெஞ்சின் மேல் கைவைத்து , நீ, நான், நான், நீ, நீயும் நானும் ஒன்று என்று மட்டுமே கூறுவார்கள். ஆனால் , கோயில்களைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், இந்துத்வ அரசியலைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்ற அரசியல் கணக்கில் காஞ்சி சங்கராச்சாரிகள் கோயில்களுடன் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வெகுமக்கள் எழுத்து ஊடகங்கள் பார்ப்பனர் கைகளில் இருந்து வந்ததால், இந்தப் புரட்டினை அவர்களும் பரப்பி மக்களை நம்ப வைத்தனர். அன்றைய பார்ப்பன ஊடகங்களான ஆனந்த விகடன், கலைமகள், தினமணி, இந்து, கல்கி போன்றவை காஞ்சி சங்கராச்சாரியார் “மகா பெரியவர்” , “நடமாடும் தெய்வம்”, “எளிமையே உருவானவர்” என்ற கருத்தியலை மக்கள் மனதில் பதிய வைத்தனர். பார்ப்பனர் அல்லாதார் பார்ப்பன பயங்கரவாத கூடாரமான சங்கரமடத்தின் சூழ்ச்சிக்குப் பலியாக்கியத்தில் முக்கியப் பங்கு தமிழில் முதலில் தோன்றிய தனியார் தொலைக்காட்சிக்கும் உண்டு. இக்கட்டுரையின் முதல் பத்தியில் கூறிய பெரும்பாலான கூத்துகள் எல்லாம் நடந்த பிறகும் கூட, சற்றும் வெட்கமில்லாமல் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என எல்லாப் பண்டிகை நாட்களிலும் அதிகாலையிலேயே தனது தொலைக்காட்சியில் ஜெயேந்திரனைத் தோன்ற வைத்து, ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் பார்ப்பனக் கருத்துகளை எடுத்துச் சென்றது அந்தத் தொலைக்காட்சி.
இந்திய விடுதலைக்கு முன்னரே தன்னுடைய அரசியலை பலப்படுத்திக் கொள்ளத் தொடங்கியது காஞ்சி சங்கரமடம். காங்கிரஸ் எனும் தேசிய இயக்கம் வளர்கிற போதே, அவ்வியக்கத்தில் வர்ணாசிரமத் தருமத்தை உயர்த்திப் பிடிக்கும் போக்கும் வளர்ந்து வந்தது. தந்தை பெரியார் காங்கிரஸ் இயக்கத்திலிருந்து வெளியேறியதற்கும் அதுவே காரணமாக அமைந்தது. காங்கிரஸ் தலைவர்கள் பலரும் உயர்சாதி மனப்பான்மையுடன் இருந்ததால், காஞ்சி சங்கரமடத்துடன் இணக்கமாகவே செயல்பட்டார்கள். 1928 - இல் காந்தியார் இந்த மடத்திற்கு வந்து போன பிறகே தன்னுடைய வருணாசிரம தர்மத்தின் மீதான நம்பிக்கையை அரசியலாக வெளியிடுகிறார். இவ்வாறு வளர்ந்த காஞ்சி சங்கர மடத்தின் அரசியல் செல்வாக்கு, வலிமை, இந்திய அரசியல் சட்டம் வரை நீண்டது. இந்திய அரசியல் சட்டம் எழுதப்படும் போதே, 26-வது விதியில் மதச்சுதந்திரம் என்று மட்டும் இருந்ததை ஒவ்வொரு மதப்பிரிவு அல்லது எந்த ஒரு வகைப்பிரிவைச் சேர்ந்ததாயினும் அவற்றுக்கு உரிமை - சுதந்திரம் உண்டு என்று மாற்றியவர்கள் காஞ்சி சங்கராச்சாரிகள். அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தமிழக அரசு சட்டம் கொண்டு வர மத்திய அரசிடம் அங்கீகாரம் கோரிய போது, மத்திய அரசு இந்த 26வது விதியைச் சுட்டிக்காட்டியே அங்கீகாரம் தர மறுத்தது. இப்படி அரசியல் ரீதியாக தங்களை இந்து மக்களின் தலைவராக காஞ்சி சங்கராச்சாரிகள் பிரகடனப் படுத்திக் கொண்ட பிறகு, பார்ப்பனர்கள் அவர்களுக் குள்ளிருந்த கருத்து மாறுபாடுகளை மறந்து ஒரு அரசியல் ஆதாயத்திற்காகச் சங்கர மடத்தின் பின்னர் திரண்டனர். இன்றும் திரண்டு நிற்கிறார்கள்.
இந்திய அரசில் உச்சக்கட்ட அதிகாரம் செலுத்தி, இந்தியாவின் இரும்புப் பெண்மணி என்று போற்றப்பட்ட அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி காஞ்சி சங்கரமடத்திற்கு வந்த போது , ஒரு விதவைவின் முகத்தில் விழித்தால் தீட்டு என்று கருதிய காஞ்சி சங்கரமடத்தினர், இருவருக்கும் நடுவிலே நீர் இருந்தால் தீட்டு போய்விடும் என்ற தங்களது நம்பிக்கையின் படி, ஒரு புறமாக சங்கராச்சாரியை யும் மறுபுறமாக இந்திரா காந்தியையும் உட்கார வைத்தார்கள். அதே போல் இவர்கள் அமரும் இடங்களில், இவர்களை விட உயரமான இடங்களில் யாரும் அமரக்கூடாது என்றும் கட்டாயமாகச் சொல்வார்கள். கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்லும் போது கூட, தன்னுடன் வாகனத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே வரவேண்டும் என்று கூறியதாகச் செய்திகள் வெளியாகின. நீதிமன்றத்தில் தன்னுடைய இயற்பெயரான சுப்பிரமணி என்று அழைத்தபோது அதனை எதிர்த்ததுடன், இயற்பெயரில் கையொப்பமிட மாட்டேன் , கைரேகை மட்டுமே இடுவேன் என்று பிறப்புவழிப்பட்ட மேலாண்மை அதிகாரத்தைச் செலுத்தினார் ஜெயேந்திரர். ஜெயேந்திரன் கைதான போது, சகல மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்பதில் அன்றைய பிரதமர் அலுவலகம் தனிக்கவனம் செலுத்தியது. வாழை இலையில் காலைக்கடன் கழிக்கும் வழக்கத்தையு டைய சங்காராச்சாரிக்கு சிறைச்சாலைக்கே வாழையிலை அனுப்பிய வெட்ககேடுகளும் கூட நடந்தேறின. ஆகவே, தமிழ் மொழியினை நீச மொழி என்று கருதும் காஞ்சி சங்கரமடமும் சங்கராச்சாரிகளும் தமிழ்த் தாய்வாழ்த்திற்கு எழுந்து நில்லாதது வியப்பில்லை.
உயர்வு தாழ்வு வித்தியாசம் முதலியவை கொண்ட மடாதிபதிகளை எல்லாம் கைது செய்து சிறையில் அடைத்து விடவேண்டும், பொது ஜனங்கள் கிளர்ச்சி செய்து மடாதிபதிகளை தீவாந்திரத்திற்கு அனுப்பிவிட வேண்டும் என்று 1928 இல் தந்தை பெரியார் பேசியிருக்கிறார். குறிப்பாக சங்கராச்சாரியினை எதிர்த்து 1932 இல் குடியரசில் எழுதியுமிருக்கிறார். பூணூல், குடுமி, பஞ்சகச்சம், மடிசார், புலால் உண்ணாமை போன்ற பழக்கங்கள் பார்ப்பன முகம் மட்டுமே. பார்ப்பனியத்தின் உயிர் என்பது வெகுமக்களை “ஏற்றத்தாழ்வுகள்” நியமானது என்ற எண்ணத்தினை ஏற்றுக்கொள்ள வைத்தல் தான். அதனால் தான் இந்து மதம் எத்துணைத் தீண்டாமையைக் கடைபிடித்தாலும் அதனைப் பலர் இறுகப்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். “மகா பெரியவா” என்று அறியாமல் சிலர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் பெயரால் நடக்கும் பல்கலைக்கழகங்களில் கூட ரதயாத்திரை நடக்கின்றன.
இந்து மதம் என்பதே பார்ப்பன மதம். பல தமிழர்கள் நம்பிக்கொண்டிருப்பது போல், தன்னை “ஜகத்குரு” என்று அழைத்துக்கொள்ளும் சங்கராச்சாரிகள் அனைத்து இந்துக்களுக்குமான தலைவர்கள் கிடையாது. அவர்கள் வர்ணாசிரமத் தர்மத்தை நிலைநிறுத்தி, பார்ப்பன அரசியல் செல்வாக்கை அதிகரித்து, இந்துத்துவ அரசியலை வெளிப்படுத்தும் ஒரு பாசிசக் கும்பல். அதனால் தான் தந்தை பெரியார் “ இந்து மதம் என்பது பார்ப்பனச் சக்திக்கேற்ப, பார்ப்பனரல்லாதாரின் முட்டாள்தனத்திற்கும், மானமற்றத் தன்மைக்கும் ஏற்ப அவ்வப்போது உண்டாகும் - உண்டாக்கிக்கொள்ளும் திட்டங்களும் கருத்துகளும் ஆகும்” என்று தெரிவித்தார்.
கோவில்களில் நமக்கு நம்பிக்கை இல்லாவிடிலும் இந்துக்களின் கோவில்களில் மதச்சார்பற்ற அரசுக்கு என்ன வேலை என்று தற்போது தமிழகக் கோவில்களைத் தங்கள் கைக்குள் கொண்டுவர நடக்கும் முயற்சிகளைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். கோவில்களுக்குத் தொடர்பே இல்லாத காஞ்சி சங்கரமடத்தினர் கோவில்களைக் கொண்டு எவ்வாறு அரசியல் அதிகாரம் பெற்றனர் என்பதை நாமறிவோம். இந்து மதத்தின் முகமாக இருக்கிற காஞ்சி சங்கராச்சாரியின் முகத்திரை கிழித்து அவர்களின் பாசிசத்தை அடக்க வேண்டும். பார்ப்பனர் இல்லாத அமைச்சரவையை 50 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் நிறுவிய தமிழர்களால் மட்டுமே அது முடியும்.