‘ரா’ உளவு நிறுவனம் பற்றி வெளிவந்துள்ள மற்றொரு அதிர்ச்சியான செய்தி:

பிரதமர் அலுவலகத்தில் பல்வேறு உளவு மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது ‘ரா’ என்று அழைக்கப்படும், ‘ரிசர்ச் அண்ட் அனலிசஸ் விங்க்’. இதில், துணை இயக்குனராக இருந்து வந்தவர் தேவன்சந்த் மாலிக். அவர் பற்றிய சந்தேகத்துக்கு இடமான தகவல்கள் வரவே, அவரைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தபோது, 2005 ஆம் ஆண்டு மே மாதம் தலை மறைவானார்.

கேபினட் செயலகத்திலுள்ள, ‘ஏவியேஷன் ரிசர்ச் சென்டர்’ இயக்குனர் அனுஜ் வரத்வாஜ், புது டில்லி லோதி காலனி போலீஸ் நிலையத்தில், மாலிக் தொடர்பாக அப்போது புகார் பதிவு செய்தார். போலீசாரும் தேடி வந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில், ‘24 பர்கானா’ மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாலிக் என்று, அவர் பற்றிய அரசு பதிவேட்டில் விவரம் இருந்தது. அங்கு போய், அவர் முகவரியில் விசாரித்தபோது தான், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதே போலீசுக்கு தெரிந்தது.

இந்த விஷயத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ரகசியம் காத்து வந்தனர். ஆனால், போலீஸ் நிலையத்துக்கு விஷயம் சென்றதை அடுத்து, திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத் துவங்கி விட்டன. பிரதமர் அலுவலகத்தில் ‘டிசி’ என்று செல்லமாக அழைக் கப்பட்டு வந்தவர் தேவன்சந்த் மாலிக்.

1999 ஆம் ஆண்டில் இருந்து 2005 ஆம் ஆண்டு மே மாதம் வரை பணியாற்றி இருக்கிறார். அப்போது, அவர் பற்றி விசாரணை நடக்கிறது என்று தெரிந்ததும், திடீரென காணாமல் போய் விட்டார். இப்போது அவர், ‘தலை மறைவானவர் என்று பிரகடனப் படுத்தப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சகம் இது தொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் முக்கிய அலுவலகங்களில், உளவு பிரிவுகளில் உளவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது புதிதல்ல. கடந்த 2004 ஆம் ஆண்டில் ‘ரா உளவுப் பிரிவின் இணைச் செயலர் ரவீந்தர் சிங் என்பவர் அமெரிக் காவுக்கு முக்கிய ஆவணங்களுடன் தப்பியோடிவிட்டார். கடந்த 2002 ஆம் ஆண்டில், பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் மாளிகையில் உளவு வேலை பார்த்ததாக 12 ஊழியர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. கடந்த 1985 ஆம் ஆண்டு, “கூமர் நாராயணன் உளவு சதி வழக்கு” பரபரப்பானது. இவர்கள் இப்போது, கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

செய்தி: ‘தினமலர்’ ஜுன் 14, 2007.

 பல்லடம் ஒன்றியத்தில் தலைவிரித்தாடும் தீண்டாமை வெறி

பல்லடம் ஒன்றியம் சாமளாபுரம் எனும் கிராமத்தில் கடந்த 23.5.2007 அன்று இரவு நடந்த தீண்டாமைக் கொடுமை இது. சுமை தூக்கும் வேலைக்காக ஆட்டோவில் - சோமனூர் என்ற ஊருக்குச் சென்ற நான்கு அருந்ததிய சமூகத்தைச் சார்ந்த தோழர்கள் - வழியில் சாமளாபுரம் என்ற ஊரில் உள்ள உணவுக் கடையில் இரவு சாப்பாடு சாப்பிடச் சென்றார்கள். சப்பாத்தி வரச் சொல்லி, சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, தோழர்கள் தெலுங்கு மொழியில் பேசியதைக் கொண்டு, அவர்கள் அருந்ததியினர் என்று, கடை முதலாளி அடையாளம் கண்டு, ஆத்திரத்துடன், சாப்பாட்டுடன் இலையைப் பிடுங்கி வீசி எறிந்தார்.

‘போங்கடா, சக்கிலி நாய்களா, உங்களை எல்லாம் கடைக்குள் விடமாட்டோம்’ என்று கூறி அடித்தார். ஆத்திரமடைந்த தோழர்கள் திருப்பி அடித்தவுடன், கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆதிக்க சாதியினரான கவுண்டர்கள் ஒன்றாகத் திரண்டு, தோழர்களை மோசமாகத் தாக்கி, வேட்டி, சட்டைகளைக் கிழித்தனர். அவமானத்துடன் உள்ளாடையுடன் தோழர்கள், தாங்கள் வந்த ஆட்டோவில் ஏறி புறப்பட்டனர்.

மறு நாள் - பெரியார் திராவிடர் கழக ஒன்றிய அமைப்பாளர் விஜயனிடம் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டனர். உடனே பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் - கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் தரச் சென்றபோது ஆய்வாளர் புகாரைப் பதிவு செய்ய மறுத்து, மாவட்டக் காவல்துறை அதிகாரியை சந்திக்குமாறு கூறவே, மாவட்டக் காவல்துறை ஆய்வாளர் சுப்பிரமணியம் என்பவரை தோழர்கள் சந்தித்தனர்.

அந்த அதிகாரி சமாதானமாகப் போய் விடுங்கள்; இல்லாவிட்டால், உங்கள் மீது பொய் வழக்குப் போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டினார். ஏற்க மறுத்த தோழர்களை கேவலமாக இழிந்த வார்த்தைகளில் திட்டினார். மிரட்டலுக்கு பணிய மறுத்து, மறுநாள் 60 தோழர்களுடன் சென்று அதிகாரியை சந்தித்து, வழக்குப் போடுமாறு வலியுறுத்தினர். அதன் பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனாலும் - ம.தி.மு.க., தி.மு.க., அ.தி.மு.க. கட்சியைச் சார்ந்தவர்கள், கட்சி வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கி விட்டு, வழக்கைத் திரும்பப் பெறுமாறு கழகத் தோழர்களைக் கட்டாயப்படுத்தினர். இதற்கிடையே கருமத்தம்பட்டி காவல் துறையைக் கண்டித்து 7.6.2007 அன்று சேமனூரில் கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

‘கெம்ப்ளாஸ்ட்’ கக்கும் நச்சுக் கழிவு: மறியல் செய்த 300 தோழர்கள் கைது

மேட்டூர் கெம்ப்ளாஸ்ட் ஆலை நச்சுக் கழிவு பாதிப்புகளைக் கண்டித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் காவல்துறை தடையை மீறி மறியல் செய்த 120 பெண்கள் உட்பட 300 பேர் கைது.

18.4.07 காலை 8 மணிக்கு மேட்டூர் கெம்ப் ளாஸ்ட் ஆலை நச்சுக் கழிவு பாதிப்புகளை கண்டித்து காவல்துறையின் தடையை மீறி மறியல் போராட்டம் நடை பெற்றது. மறியல் போராட்டத்துக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். பாட்டாளி மக்கள் கட்சி பி.என். பட்டி பேரூராட்சித் தலைவர் மயில்சாமி, கோனூர் ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.என்.பட்டி பேரூராட்சி, கோனூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 120 பெண்கள் உட்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரியார் தி.க. மாவட்டத் தலைவர் முல்லைவேந்தன், மாவட்ட செயலாளர் டைகர் பாலன் உட்பட 40க்கும் மேற்பட்ட கழகத் தோழர்களும் மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதாயினர். புதைக்கப்பட்ட இராசயன கழிவுகளை உடனே அகற்ற வேண்டும். பாதிக்கப்பட்டப் பகுதி மக்களுக்கு அரசு வழியாக நல்ல குடிநீர் வழங்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட நிலம், கிணறு ஆகியவைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் சேலம் மேட்டூர் சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. கைது செய்யப்பட்டவர்கள் மாலை 6 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.

Pin It