சிவக்குமார் நடிப்பு மட்டுமல்லாமல் பல ஆளுமைகளைக் கொண்டுள்ளவர். ஓவியம், இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர்.

உங்களுடைய புத்தக வாசிப்பு குறித்துக் கூறுங்கள்

sivakumar_400நான் படித்தவனில்லை, படிப்பவன். அதிகமாகப் படித்தவனும் கிடையாது. இப்பொழுதுதான் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். சென்னை வந்த பிறகு ஆங்கிலத்தில் புலமை பெறவேண்டும் என்பதற்காக கன்னிமரா நூலகம் சென்று ஆங்கில நூல்களை எடுத்துப்படிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தேன். அப்பொழுது உறுப்பினர் கட்டணம் 3 ரூபாய். மூன்று கார்டுகள் கொடுத்தார்கள். கன்னிமரா நூலகம் பழமை வாய்ந்த நூலகம். ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. செயின் ஜார்ஜ் கோட்டைக்கு இணையானது. அங்கு சார்லஸ் டிக்கன்ஸ்), டேவிட் காப்பர் பீல்டு ஆகியோரின் நூல்களைப் படித்தேன்.

டேவிட் காப்பர் பீல்டு தமது நூலில் மொழியைப் பற்றிச் சொல்கிறார். ‘மொழி, நான் சொல்லும் கருத்து கடைசி மனிதனுக்கும் போய்ச் சேர்வதற்காகத்தான். அப்பொழுதுதான் நான் வெற்றிபெற்றதாக அர்த்தம். மாறாக என் ஆளுமையை வெளிப்படுத்திக் கொள்வதற்காக அல்ல.’

எனக்கு எழுத வேண்டும் என்று ஆசை வந்ததற்குக் காரணம் சுந்தரராமசாமி. அவர் ஓரிடத்தில் சொல்கிறார்.

விஷயமுள்ளவனுக்கு மொழி தேவையில்லை. இதைப் படித்தவுடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பேனா பிடிக்கத் தகுதியில்லையென்று நினைத்த என்னிடம், சொல்வதற்கு நிறைய இருந்தது.

பலர், துறை சார்ந்த கருத்துக்களோடு நின்றுவிடுவர். அதைத்தாண்டிச் செல்லமாட்டார்கள். அவர்களுக்குப் பின்னால் உள்ள பாட்டன், முப்பாட்டன் வாழ்க்கையின் வரலாற்றை அறிந்திருக்க மாட்டார்கள். நான் பல தரப்பட்ட விஷயங்களிலும் கவனம் செலுத்துகிறேன். எனவே எனக்குச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது.

நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். மண் வாசனையை அறிந்தவன். எனது பள்ளிக் காலத்தில் மின்சாரம் கிடையாது; சிம்னி விளக்கில் படிப்பேன். அப்பொழுது வேகமாக வீசும் காற்று அதை அணைத்து விடும். வீடு முழுவதும் இருள் சூழ்ந்துவிடும். அச்சமயத்தில் பளிச் சென்று தாக்கும் மின்னல் ஒளிபட்டு எல்லாப் பொருட்களும் தெரியும். அது ஒரு ஓவியம் போல் இருக்கும். இவ்வாறுதான் எனது வாழ்க்கையைக் கடந்து வந்தேன். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் எனக்குச் சொல்வதற்கு நிறைய செய்திகள் கருத்துக்கள் உள்ளன என்பதற்காகத்தான்.

1950 களில் கிறித்துவர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியில் குடியிருந்தேன். அக்காலத்தில், கிறித்துவ மதம் பற்றியோ பாதிரியார்கள் பற்றியோ தவறாகப் பேசினால் சிக்கலாகி விடும். அக்காலத்தில் மதபோதகர்கள் கடவுளின் அவதார மாகவே கருதப்பட்டனர். ஏசுநாதரின் நேரடியான சீடர்களாகவே கருதப்பட்டனர். எமிலி ஜோலாவுடைய நாவல் ஒன்றில் கிறித்துவ பாதிரியார் 16 வயது பெண்ணைக் கற்பழித்தார் என்பதைப் படித்து அதிர்ந்து போனேன்.

சினிமா ஒரு கருத்தைச் சொல்லி மிக வேகமாக முடிந்துபோகிறது. ஆனால் புத்தகம் அவ்வாறு இல்லை. நாவல் படிக்கும் பொழுது அவை மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. புத்தகம் மிக அடர்த்தியாக, செறிவாக இருக்கிறது.

நடிக்கத் தொடங்கிய காலத்தில் நடிகனுக்குப் படிப்பு எதற்கு என்று நினைத்தேன். நடிகன் ஒரு கிளி. அதைப் பயிற்றுவிப்பவன் இயக்குநர். மனப்பாடம் செய்து திருப்பிச் சொல்லும் நினைவாற்றலும், குரல் வளமும், உடல் மொழியும் இருந்தால் போதும் என்று நினைத்தேன்.

படிக்க வேண்டும் என்று ஆர்வம் வந்தது, 1980களில் தான். அப்பொழுது வீட்டில் ஒரு நூலகத்தைத் தொடங்கினேன். எனது நண்பர் ஒருவர் பெங்களூரில் இருந்தார். அவரை வரவழைத்து, சிறந்த படைப்பாளர் களின் படைப்புகளில் 400 புத்தகங்கள் வாங்கினேன்.

படிக்கத் தொடங்கியபொழுதுதான் எனக்கு அவமானமாக, அசிங்கமாக இருந்தது. இத்தனை ஆண்டு காலம் செடி, கொடிகளைப் போல் வாழ்ந்துவிட்டோமே என்று. பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, நா. பார்த்தசாரதி, தி. ஜானகிராமன், படைப்புக்களை வாங்க ஆரம்பித்து இன்று ஐயாயிரம் நூல்கள் எனது நூலகத்தில் உள்ளன. 2005-க்குப் பிறகு நடித்தது போதும் என முடிவு செய்து தீவிரமாகப் படிக்கத் தொடங்கியுள்ளேன்.

எத்தகைய புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பதை விவேகானந்தர் ஓரிடத்தில் கூறுகிறார். “கண்டதைப் படித்து மனதைக் குப்பைத் தொட்டி யாக்காதே” என்கிறார். படிப்பு, சிந்தனையை, வாழ்க் கையை, சமூகத்தை மேம்படுத்த வேண்டும். அத்தகைய நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.

கம்பராமாயணத்தைப் படிக்கத் தொடங்கி இப் பொழுது அதிலேயே மூழ்கிவிட்டேன். பு. ஜெயராமன் என்பவர் செஞ்சி பகுதியைத் சேர்ந்தவர். சூர்யாவின் ஆசிரியர். அவர் கம்பராமாயணத்தை 1991இல் பதம் பிரித்து எழுதிக் கொடுத்தார். கம்பராமாயணம் பண்டிதர்களுக் கானது. நமக்கானதில்லை என்று நினைத்து அவர் எழுதிக் கொடுத்ததை அப்படியே வைத்துவிட்டேன். சில காலம் கழித்து அதை எடுத்தபோது பூர்ணம் பூத்திருந்தது. அதைச் சுத்தப்படுத்திப் படித்த பின் இன்று கம்பனின் கவிதையில் ஆழ்ந்து விட்டேன்.

நிறைய படித்தபிறகு வாழ்க்கையை வேறுவிதமாகப் பார்க்கிறேன். மனிதன் தோல்வியுறும் பொழுதும், சோர்ந்து போகும் பொழுது மட்டுமே கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டும். மேன்மேலும் முன்னேறிச் செல்ல வேண்டுமானால் பழையவற்றைத் தூக்கியெறிந்துவிட வேண்டும். அவை பழம் குப்பைகள். சிவக்குமார் இந்தியா முழுவதும் படம் வரைந்தான் என்பது பழம் குப்பை. அதைத் தூக்கியெறிந்துவிட்டு அடுத்ததைத் தேடிப் போகவேண்டும். பழையதைத் தூக்கி எறிந்தால்தான் புதியதைத் தேடிச் செல்லமுடியும். பழம் பெருமையிலேயே நின்று போனால் புதியது வராது.

இப்போது என்னுடைய வயது ஏழுதான். ஏழுவயது சிறுவன் எவ்வளவு வேகமாக இருப்பானோ அதுபோல் இருக்கவேண்டும் என எண்ணுகின்றேன். பாராட்டோ, புகழ்ச்சியோ, பொன்னாடைகளோ எதுவும் எனக்கு வேண்டாம். படித்துக் கொண்டே இருக்க விரும்புகிறேன்.

சமீப காலத்தில் நான் படித்த புத்தகம் வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் கம்பராமாயணம். அடுத்த நூல் அபிதான சிந்தாமணி. இந்நூலைக் கடந்தவாரம்தான் வாங்கினேன். இந்நூலை உருவாக்கவும், அதைப் பதிப் பிக்கவும் எவ்வளவு துன்பப்பட்டிருப்பார் அதன் ஆசிரியர் என்பதை எண்ணிப் பார்க்கின்றேன். இந்நூல் பிரிட் டாணிக்காவின் தகவல் களஞ்சியத்தைப் போல், தமிழின் தகவல் களஞ்சியமாகத் திகழ்கிறது.

தமிழ்நாட்டு வரலாறு எழுதப்படாமல் விடுபட்டு உள்ளது. அது பெரும் குறை. நமது வரலாற்றை இலக் கியத்தின் வழியேதான் அறிந்துகொள்ள முடிகின்றது. மாணிக்கவாசகர் ஒரு திருத்தலத்திற்குச் சென்று பாடியதை வைத்து அத்திருத்தலத்தின் வரலாற்றையும் அவரைப் பற்றிய செய்திகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பைப் போல் எழுதப்பட்டிருந்தாலும் பயனுடையதாக இருந்திருக்கும்.

sivakumar_401ஸ்டாலின் குணசேகரன் உருவாக்கியுள்ள “விடுதலை வேள்வியில் தமிழகம்” சிறந்ததொரு நூலாகும். டில்லியில் உள்ளவர்கள், தமிழ்நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களில் வ.உ.சி யைப் பற்றிமட்டுமே அறிந்துள்ளனர். பல தியாகிகளின் போராட்ட வரலாறு தெரியவில்லை என்பதை அறிந்த பிறகு அக்குறையைப் போக்க வேண்டும் என்பதற்காகவே அப்புத்தகத்தை எழுதியதாகத் தெரி வித்தார். இது சிறந்த முயற்சியாகும். உலகத்தைப் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் புத்தகங்கள் நமக்கு உதவுகின்றன.

உங்களுடைய ஓவியங்களைப் பற்றிக் கூறுங்கள்.

நான் ஓவியர்களில் தலை சிறந்தவராகக் கருதுவது நீதிபதியான கோகுலைத்தான். அவர் அளவுக்கு வேறு யாரையும் குறிப்பிடமுடியாது. அவர் வெளியிலே போய் வரைந்தவர் கிடையாது.

எனக்குப் போட்டியாக இருந்தவர் சிற்பி. அவர் கோயில், கோயிலாகப் போய் வரைவார். தொடர்ந்து 8 முதல் 10 மணி நேரம் வரை வரைவார். வாழ்நாள் முழுவதும் வரைந்தார். கோயில பார்த்தார்னா, கோபுரம், மண்டபம், நூறுகால் மண்டபம், வாசல்னு, ஐந்து, ஆறுநாள் அங்கேயே இருந்து வரைவார். என்னுடைய ஓவிய வாழ்க்கை ஆறு, ஏழு ஆண்டுகள்தான்.

திருப்பதி கோயிலில் நடைபெறும் கருட உற்சவ சேவையன்று இரண்டு, மூன்று லட்சம் மக்கள் கூடுவார்கள். தேன் கூட்டில் இருக்கும் அடர்த்தியான, தேனீக்களைப் போல் மக்கள் கூட்டம் இருக்கும். அக்கூட்டத்திலும் ஒருவனாக இருந்து வரைந்திருக்கிறேன்.

தஞ்சாவூரில் பல இடங்களில் சென்று ஓவியம் வரைந்திருக்கிறேன். மணியம் செல்வன்தான் நான் கொண்டாடக் கூடிய ஓவியர். எல்லா பேட்டன்லையும் ஒர்க் பண்ணக்கூடியவர். மானசரோவர் போய் வரைந்து விட்டு வந்திருக்கிறார். நான் 23 வயதில் அங்கு போய் வரைந்தேன்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஈரோடு புத்தகத் திரு விழாவிற்குச் சென்று வருகிறீர்கள் அதைப் பற்றிய உங்கள் அனுபவங்களைக் கூறுங்கள்.

ஈரோடு புத்தகக் கண்காட்சி சரித்திர சாதனை. பல ஊர்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்துகிறார்கள். இப்புத்தகக் கண்காட்சியில் வரும் மக்களில் 25ரூ பேர்தான் புத்தகம் வாங்குபவர்கள்.

ஈரோடு புத்தகத் திருவிழாவைப் போல் இந்திய அளவில் நான் வேறு எங்கும் பார்த்ததில்லை. ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழா நடந்துகொண்டிருக்கும் நாளிலேயே அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழாவிற்கான தேதியை முடிவு செய்து, அடுத்த ஆண்டுக்கான அனைத்து வேலைகளையும் தொடங்கிவிடுகின்றனர்.

ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு பேசுவதற்காக மூன்று வருடமாக நான் தொடர்ந்து சென்று வந்துள்ளேன். அங்கு பார்த்தால் லுங்கி கட்டியவர் வந்திருப்பார், ஹோட்டலில் பரோட்டா போடுகிறவர் வந்திருப்பார், வண்டி இழுக்கிற ஆள் வந்திருப்பார், காய்கறி விற்கிற பெண்மணி வந் திருப்பார், ஜவுளிக் கடையில் வேலை பார்க்கிறவர்கள் வந்திருப்பார்கள், கல்விமான் வந்திருப்பார், பெரிய பெரிய ஆபீசர்கள் வந்திருப்பார்கள், பேதமே இல்லாமல் அத்தனை பேர் கண்களும் பேசுகின்றவர் கண்களையே பார்த்திருக்கும் என்பதற்கு நான் சாட்சி.

இம்மக்கள் பண்பட்டவர்களாக உள்ளனர். வேடிக் கை பார்ப்பவர்களாக அல்லாமல் ஆழ்ந்து கேட்பவர்களாக உள்ளனர். சில சமயங்களில் பேச்சாளர்கள் ஈர்க்கும் வகையில் பேசாத பொழுதும் மக்கள் சலிப்படை வதில்லை, கூச்சலிடுவதில்லை அமைதியாக இருக்கின்றனர். இம்மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வருகின்றனர். இத்தகைய பண்பட்ட மக்களைக் காண்பது அரிது. சென்ற ஆண்டு அப்துல் கலாமை நிறைவு நாள் விழாவுக்கு வரவழைத்து நிகழ்ச்சி நடத்தினார்கள். அது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி.

முன்பெல்லாம் தலைவர்களின் பேச்சைக் கேட்பதற்கு மக்கள் திரண்டார்கள். இன்றைக்குத் திரட்டுகிறார்கள். ஆனால், ஈரோடு புத்தகத் திருவிழாவில் அப்படி அல்ல. அப்துல் கலாம் நிகழ்ச்சிக்கு மக்கள் ஒரு லட்சம் பேர் தானாகத் திரண்டு வந்தார்கள்.

எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் நூல்கள் படிக்க வேண்டும்; வாழ்நாள் முழுவதும் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்கி, வீடு தோறும் நூலகம் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி, கிட்டத்தட்ட 50 மைல் சுற்றளவுக்கு ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக் கிறார்கள். புத்தகம் படிப்பதன் மூலம் மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் புத்தகக் கண்காட்சியின் எதிர்காலப் பயன் என்னவாக இருக்கும்?

உலகம் இன்றைக்கு என்னை விட என் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறது. ஆகவே, இந்த தலைமுறையை விட அடுத்த தலைமுறை நிச்சயம் நன்றாக இருக்கும். காலம் காலமாக மக்கள் தொகை கூடும்போது தவறுகள் கூடிக்கொண்டேதான் போகும். ஆனால், இலக்கியங்கள் நல்லவற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும். புத்தகங்கள்தான் மனிதனைச் செம்மைப்படுத்தும். 25 ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் கொங்கு மண்டலத்தின் குழந்தைகள் நல்ல மணிகளாக இருப்பார்கள்.

ஈரோடு புத்தகத் திருவிழாவின் மூலம் கொங்கு மண்டலத்தில் மேதைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கும் முயற்சி சிறப்பாக நடந்துகொண்டு இருக்கிறது. அப்புத்தகத் திருவிழாவை முன்னின்று நடத்துகிற ஸ்டாலின் குணசேகரன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

சந்திப்பு : சி. கமலக்கண்ணன், ந. அன்பரசு

Pin It