தமிழ்நாட்டில் முன்பு கற்கோவில்களே இல்லை, செங்கற்களினாலும் சுண்ணாம்பினாலும் கட்டப்பட்ட கோவில்களே இருந்தன. பல்லவ மன்னர்களே முதன் முதலாகக் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் கற்கோயில் அமைத்தனர். பல்லவர்களைப் பின்பற்றி, ஊர் தோறும் கற்கோவில்களை உருவாக்கிய பெருமை சோழ மன்னர்களுக்கு உரியது. பல்லவர், சோழர்களைத் தொடர்ந்து, பாண்டியர்களும் கற்கோவில்களை எழுப்பத் தொடங்கினர்.

முதற் கோவில்

கடைச் சங்க காலத்திற்குப் பின்பே கோவில் வழிபாடு தோன்றியது. செங்கற்களாலும், சுண்ணாம்பினாலுமே கட்டப்பட்ட அன்றைய கோவில்கள், பின்பு கற்கோவில்களாக மாறத் தொடங்கின. கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தான் பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் (கி.பி.600-630) முதன் முதலாகக் கற்கோவில் எழுப்பினான். குன்றுகளைக் குடைந்து கோவில் அமைக்கும் முறையைத் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியவன் முதலாம் நரசிம்ம வர்மன் (கி.பி. 630-668). மகேந்திர வர்மனின் மகனாகிய இவன் எழுப்பிய கோவில்களில் சிங்கத் தூண்கள் முதன் முதலாக இடம் பெற்றன. கருங்கற்களை ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கிக் கோவில் கட்டத் தொடங்கியவன் இரண்டாம் நரசிம்ம வர்மன். முதலாம் நரசிம்ம வர்மனின் பெயரன் இவன்.

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் - இவை இரண்டும் தமிழ்நாட்டின் தொடக்கக்காலக் கோவில்கள்.

பல்லவர் தொடங்கி வைத்த கற்கோவில் முயற்சியை, சோழரும், பாண்டியரும் தொடர்ந்து நிறைவேற்றிப் பரவலாக்கினர்.

திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் என்னும் சமயக்குரவர் மூவரும் வழிபட்ட சிவத்தலங்கள்யாவும் - செங்கற்களால் கட்டப்பட்ட கோவில்களே என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

Pin It