தமிழக வரலாற்றில் மூவேந்தர்களுக்குப் பின் மிக அதிக காலம் ஆண்ட புகழ் பெற்ற நான்காவது அரச வம்சம் பல்லவ அரச வம்சம். அவர்கள் கி.பி. 250 – 900 வரை கிட்டத்தட்ட 650 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளனர். கி.பி. 575 முதல் கி.பி. 850 வரை 275 ஆண்டுகள் அவர்கள் தமிழகத்தின் பெரும் பேரரசாக இருந்தனர். கி.மு. 230 முதல் கி.பி. 220 வரை 450 ஆண்டுகள் ஒரு பேரரசாக தக்காணத்தின் பல பகுதிகளை ஆண்டு வந்த சாதவாகனர்களின் கீழ் பணியாற்றி வந்தவர்கள்தான் பல்லவர்கள். அவர்கள் கி.பி. 220இல் சாதவாகனர்களின் வீழ்ச்சிக்குப் பின் தொண்டை மண்டலத்துக்கு வடக்கே உள்ள ஆந்திராவில் இருந்த ஒரு சிறு பகுதியின் குறுநில அரசாக ஆகினர். அதன் பின் அவர்கள் கி.பி. 250 வாக்கில் தமிழகத்தில் உள்ள தொண்டை மண்டலத்தின் வடபகுதியையும் ஆந்திராவில் உள்ள வேறு சில பகுதிகளையும் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். தொண்டை மண்டலத்தில் இருந்த காஞ்சிபுரம் அவர்களின் தலைநகராக இருந்தது.

முற்காலப் பல்லவர்கள் (கி.பி. 250-340):

பல்லவர்கள் ஆட்சிக் காலத்தை (கி.பி.250-900), பிராகிருத மொழியில் பட்டயங்களை வெளியிட்ட முற்காலப் பல்லவர்கள் (கி.பி. 250-340), எனவும், சமற்கிருத மொழியில் பட்டயங்களை வெளியிட்ட இடைக்காலப் பல்லவர்கள் (கி.பி. 340-575), எனவும், தமிழ், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளில் பட்டயங்களை வெளியிட்ட பிற்காலப் பல்லவர்கள் (கி.பி. 575-900) எனவும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம் (1). சாதவாகனப் பேரரசில் பல்லவர்கள், சாதவாகனர்களின் மாகாணத் தலைவர்களாக இருந்து வந்தனர். சாதவாகனர்கள் கி.பி. 220இல் வீழ்ச்சி அடைந்தவுடன் சாதவாகனப் பேரரசில் மாகாணத் தலைவர்களாக இருந்த சாலங்காயனர், விசுணுகுண்டர், இக்குவாகர், பிருகத்பாலாயனர், சூட்டுநாகர் போன்ற பலரும் தங்களுடைய மாகாணப் பகுதிகளை தங்கள் தங்கள் நாடுகளாக மாற்றி அமைத்துக் கொண்டனர். பல்லவர்களும் தாம் நிர்வகித்து வந்த நிலப்பரப்பை தங்களுடைய நாடாக மாற்றி அமைத்துக் கொண்டனர் (2).

பல்லவர்களின் முதல் அரசன் பப்புதேவன். இவனுக்குப் பின் வந்தவன் சிவசுகந்தவர்மன். இவனால்தான் தொண்டை மண்டலம் கைப்பற்றப்பட்டு காஞ்சி நகர் பல்லவர்களின் தலைநகராக ஆனது. வடக்கே இக்குவாகர், பிருகத்பாலாயனர் ஆகியவர்களின் ஆந்திரப்பகுதியில் இருந்த நாடுகளும் இவனால் கைப்பற்றப்பட்டு அப்பகுதிக்கு அமராவதி எனப்படும் தான்யகடகம் தலைநகராக ஆனது. முற்கால பல்லவர்கள் வெளியிட்ட மூன்று பிராக்கிருதப் பட்டயங்களில் இரண்டு பட்டயங்கள் இவனுடையது. இவனுடைய ஆட்சிக் காலம் கி.மு. 250-275 எனலாம். மயிதவோலு பட்டயத்தில் சிவசுகந்தவர்மன், தான் பல்லவ மரபினன் எனவும் பாரத்வாச கோத்திரத்தைச் சேர்ந்தவன் (பிராமணக் கோத்திரம்) எனவும் கூறி இரு பார்ப்பனர்களுக்கு ஒரு ஊரைத் தானம் வழங்கியுள்ளான். இவனது கிரகதகல்லிப் பட்டயத்தில் அக்நிசுடோமம், வாஜபேயம், அசுவமேதம் ஆகிய பெரிய யாகங்களைச் செய்தவன் என்பது சொல்லப்பட்டுள்ளது. இப்பட்டயத்தில் தனது தந்தை பப்புதேவன் வழங்கிய தானத்தை இவன் உறுதி செய்துள்ளான். மூன்றாவது பட்டயம் இவனுக்குப்பின் ஆட்சிக்கு வந்த விசய சுகந்தவர்மனுடைய ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இவன் காலத்திய இளவரசன் புத்தவர்மனின் மனைவி ஒரு பெருமாள் கோயிலுக்குத் தானம் வழங்கியுள்ளாள். முற்காலப் பல்லவர்கள் கி.பி. 340வரை ஆண்டனர் (3).

pallavar varalaruஇடைக்காலப் பல்லவர்கள்:

இடைக்காலப் பல்லவர்கள் ஆந்திரா கர்நாடகா பகுதியில் இருந்து 16 செப்பேடுகளை வெளியிட்டுள்ளனர். இவை அனைத்தும் சமற்கிருத செப்பேடுகள் (4). இவற்றில் பெரும்பாலான செப்பேடுகள் பார்ப்பனர்களுக்கு நிலதானம் வழங்குவதற்காக வெளியிடப்பட்டவை. முற்காலப் பல்லவர்களைப் போலவே இடைக்காலப் பல்லவர்களும் தமிழில் எதனையும் வெளியிடவில்லை. இடைக்காலப் பல்லவர்களின் முதல் அரசன் விசுணுகோபன் எனப்படும் குமார விசுணு ஆவான். கி.பி.350 வாக்கில் வட இந்தியாவிலிருந்து படையெடுத்து வந்த சமுத்திர குப்தன் காலத்தில் காஞ்சியை ஆண்டவன் இவன். சமுத்திர குப்தனின் அலகாபாத் கல்வெட்டு தான் வென்றவர்களில் ஒருவனாக காஞ்சியை ஆண்ட விசுணுகோபனை (முதலாம் குமார விசுணு) குறிப்பிட்டுள்ளது. (5). இவனது ஆட்சிக் காலம் கி.பி. 340-350. இவனுக்குப்பின் முதல் கந்தவர்மனும் (கி.பி.350-360) அதன்பின் வீரகூர்ச்சவர்மனும் (கி.பி.350-375) ஆண்டுள்ளனர். வீரகூர்ச்சவர்மன் காலத்தில் காஞ்சி நகரத்தை வாகாடர் கைப்பற்றிக் கொள்கின்றனர். இதன்பின் இரண்டாம் கந்தவர்மன் (400-436), சிம்மவர்மன் (436-460) ஆகியோர் ஆள்கின்றனர். அதன்பின் ஆட்சியேற்ற இரண்டாம் குமாரவிசுணுதான் காஞ்சியை மீண்டும் கைப்பற்றுகிறான். (6).

இதன்பின் புத்தவர்மன், இரண்டாம் சிம்மவர்மன், முதலாம் நந்திவர்மன் ஆகியோர் ஆள்கின்றனர். இதன் இறுதி அரசன் மூன்றாம் சிம்மவர்மன். அவனது ஆட்சிக்காலம் கி.பி. 525-550. இவனது முன்னோன் குமாரவிசுணு காஞ்சியைக் கைப்பற்றிய போதிலும் அவன் மட்டுமே காஞ்சியிலிருந்து பட்டயம் விடுத்துள்ளான். அவனுக்கு பிற்பட்ட அனைவரும் மூன்றாம் சிம்மவர்மன் வரை ஆந்திரப்பகுதியில் இருந்துதான் பட்டயம் வெளியிட்டுள்ளனர். ஆகவே இரண்டாம் குமாரவிசுணுக்குப்பிறகு காஞ்சியைப் பகைவர்கள் மீண்டும் கைப்பற்றிக் கொண்டனர் எனவும். பிற்காலப் பல்லவர்கள் காலத்திய முதல் அரசன் சிம்மவிசுணு தான் காஞ்சியை மீட்டெடுத்தான் எனவும் கருதலாம் (7).

இடைக்காலப் பல்லவர்கள் குப்தர், வாகாடகர், கதம்பர், சாளுக்கியர், களப்பிரர், சோழர் ஆகியவர்களுடன் ஓய்வின்றி போர் செய்து வந்தனர். அதன் காரணமாகவும், அரசின் பல பகுதிகள் பகைவர்களால் கைப்பற்றப்பட்டதாலும், தம் தலைநகரமே கைமாறியதாலும் தம் செப்பேடுகளையும் கல்வெட்டுகளையும் காஞ்சியிலிருந்து வெளியிட முடியவில்லை (8).ஆகவே ஆந்திரப் பகுதியில் இருந்துதான் இடைக்காலப் பல்லவர்களின் அனைத்துச் செப்பேடுகளும் வெளியிடப்பட்டன. மூன்றாம் சிம்மவர்மன் வெளியிட்ட பள்ளன் கோயில் செப்பேட்டில் துரோணருடைய தந்தை பாரத்துவாச முனிவர் எனவும் பல்லவர் மரபு துரோணரிடமிருந்து தோன்றியது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது (9). பாரத்துவாச முனிவரிடமிருந்து பல்லவர் வம்சம் தோன்றியதால் பல்லவர் தமது கோத்திரத்தைப் பாரத்துவாச கோத்திரம் எனக் கூறிக் கொள்கின்றனர்.

இந்த மூன்றாம் சிம்மவர்மன் வெளியிட்ட 7 செப்பேடுகளில் 6 செப்பேடுகள் பார்ப்பனர்களுக்கு நிலதானம் வழங்குவதற்காக வெளியிடப்பட்ட செப்பேடுகள் (10). பல்லவர்கள் வெளியிட்ட 32 செப்பேடுகள் மட்டும் கிடைத்துள்ளன. அவற்றில் 26 செப்பேடுகள் பார்ப்பனர்களுக்கு நிலதானம் வழங்குவதற்கான செப்பேடுகள் (11). பிற்காலப் பல்லவர்களின் முதல் அரசன் இந்த மூன்றாம் சிம்மவர்மனின் மகன் சிம்மவிசுணு. இவன்தான் சோழநாட்டைக் கைப்பற்றி பல்லவ அரசைப் பெரும் பேரரசாக உருவாக்கியவன் (12). தொண்டை மண்டலம் தவிர பிற தமிழ்நாட்டுப் பகுதிகள் அனைத்தும் அப்பொழுது களப்பிரர்களால் ஆளப்பட்டு வந்தது. கி.பி. 550 வாக்கில் வடக்கே பல்லவன் சிம்மவிசுணுவும், தெற்கே பாண்டியன் கடுங்கோனும் ஒன்றிணைந்து போரிட்டு களப்பிரர்களைத் தோற்கடித்து வடபகுதியைப் பல்லவர்களும், தென்பகுதியைப் பாண்டியர்களும் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு முன் கி.பி. 250 வாக்கில் பழந்தமிழகத்தில் நடைபெற்ற களப்பிரர் படையெடுப்பால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் அதே காலகட்டத்தில் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றிய பல்லவர்கள் குறித்தும் காஞ்சி நகர் குறித்தும் தமிழ்மொழி கீழ்மக்களின் மொழியாக மாற்றப்பட்டு, சமற்கிருதம் அறிவியல் தொழில்நுட்ப மொழியாக மாற்றப்பட்டது குறித்தும் சுருக்கமாகக் காண்போம்..

பழந்தமிழகம்:

பழந்தமிழகம் கி.மு. 1000க்கு முன்பிருந்து கி.மு. 50 வரை 1000 வருடங்களுக்கும் மேலாக நகர அரசுகளால் ஆளப்பட்டு வந்தது. இக்காலகட்டத்தில் தமிழ்ச் சமூகம் பலதுறைகளிலும் உன்னதமான உயர்தரமான வளர்ச்சியைக் கொண்ட உலகின் ஒரு முன்னணிச்சமூகமாக இருந்து வந்தது. கி.மு. 50 வாக்கில் இந்த நகர அரசுகள் மூவேந்தர்களின் பேரரசுகளாக ஆகின. கி.மு. 50 முதல் கி.பி. 250 வரை 300 ஆண்டுகள் இருந்த இப்பேரரசுகள், தங்களது இறுதிக்காலத்தில் பல்வேறு காரணங்களால் சீரழிவுக்கு உள்ளாகியிருந்தன. இச்சூழ்நிலையில் கி.பி. 250 வாக்கில் ஏற்பட்ட களப்பிரர் என்ற அநாகரிகர்களின் படையெடுப்பால் தமிழ்ச் சமூகம் பெரும் பேரழிவுக்கு உள்ளானது. பழந்தமிழக நகரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டன. அச்சமயம் பல்லவர் கட்டுப்பாட்டில் இருந்த காஞ்சி நகர் மட்டுமே இப்பேரழிவில் இருந்து தப்பியது. தொண்டை மண்டலத்தின் வடபகுதி தவிர பிற அனைத்துத் தமிழ்ப் பகுதிகளும் களப்பிரர் ஆட்சியின் கீழ் வந்தன. களப்பிரர் படையெடுப்புக்குப் பிந்தைய தமிழ்ச் சமூகத்தில் சங்ககாலத்தில் இருந்த கல்வியும் அறிவியலும் தொழில்நுட்பமும் இல்லாது போயின. நகர நாகரிகம் குறித்த சுவடே இல்லாது போனது. கைத்தொழிலும் கைவினைஞர்களும் கம்மியர்களும் இல்லாது போயினர். மக்களின் வாழ்நிலை மிகவும் கீழ்நிலையை வந்தடைந்தது. தமிழ்ச் சமூகம் இவற்றிலிருந்து மீண்டெழ ஓரு சில நூற்றாண்டுகள் ஆகியது. மீண்ட தமிழ்ச்சமூகம் முற்றிலும் வேறுபட்ட, சமய ஆதிக்கமிக்க, கல்வியறிவற்ற, மூட நம்பிக்கைகளும், சடங்குகளும் நிறைந்த, ஒரு பின்தங்கிய, பிற்போக்கான, கிராமச் சமூகமாக மாறிப் போயிருந்தது. (13).

தமிழ் மொழி தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்பத்திலும், கலை இலக்கியம் கல்வி போன்றவற்றிலும் ஒரு உன்னதமான உயர்தரமான வளர்ச்சியைப் பெற்றதற்கு, பழந்தமிழகத்தில் 1000 வருடங்களுக்கு மேலாக இருந்த, வளர்ச்சி பெற்ற நகர, நகர்மைய அரசுகள்தான் காரணம். நகர அரசுகள் என்பன பேரரசுகளை விட கல்வி, அறிவியல் தொழில்நுட்பம் போன்றவற்றில் பேரளவான வளர்ச்சி பெற்றனவாக இருந்தன என்பதை வரலாறு பல வகையிலும் மெய்ப்பித்துள்ளது. வட இந்தியாவில் இருந்த மகதப் பேரரசை விட பழந்தமிழகம் பல்வேறு துறைகளிலும் ஒரு உன்னதமான உயர்தரமான வளர்ச்சியைப் பெற்றிருந்தது (14)

காஞ்சி நகர்:

களப்பிரர் படையெடுப்பின் காரணமாக தமிழில் இருந்த நூற்றுக்கணக்கான தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் அனைத்தும் முழுமையாக அழிந்து போயின. கலை இலக்கிய நூல்களிலும் பெரும்பகுதி அழிந்து போயின. இலக்கிய நூல்களில் ஒருசிறு பகுதி மட்டுமே தப்பியது. அதுதான் பதினெண் மேல்கணக்கு நூல்களாகவும் (சங்ககால நூல்கள்), பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாகவும் (சங்கம் மருவிய கால நூல்கள்) நமக்கு இன்று கிடைத்துள்ளன. பேரழிவு நடந்த போது தமிழகத்தில் இருந்த அறிஞர்கள் பலரும் காஞ்சி நகர் சென்று குடியேறினர். தங்களுடன் பண்டைய தமிழ்நூல்கள் பலவற்றைக் கொண்டு போயினர். அதன் பின்னர் இந்நூல்களில் பல வடமொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. பரதநாட்டிய சாத்திரம், சரகசம்கிதை (மருத்துவ நூல்), கட்டடக்கலை, சிற்பக்கலை சார்ந்த மானசாரம், மயமதம் போன்ற ஒருசில நூல்கள் இக்காலகட்டத்திற்குப் பிறகுதான் தமிழில் இருந்து வடமொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டன. பல பண்டைய தமிழ் நூல்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு வடமொழியில் கிரந்த எழுத்தில் ஆகமங்களில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. ஆரியபட்டரின் ஆரியபட்டியம் கூட தமிழில் இருந்த வானவியல், கணிதம் போன்றவற்றின் மூல நூல்களைக் கொண்டு உருவானதுதான்.

ஆகவே தமிழில் இருந்த பல அறிவியல் தொழில்நுட்ப நூல்களை மொழிபெயர்த்துக் கொண்டதன் காரணமாகவும், தமிழின் மூல நூல்களைக் கொண்டு உருவான ஆரியபட்டியம் போன்ற தமிழ்வழி நூல்களாலும்தான் வடமொழி ஒரு தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப மொழியாக மாறியது. அதே சமயம் ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழின் மூல நூல்கள் அனைத்தும் நாளடைவில் கவனிப்பார் இன்றி அழிய விடப்பட்டன (15). இவை அனைத்தும் பல்லவரின் காஞ்சி நகரில்தான் நடைபெற்றன. இவற்றின் காரணமாக கி.பி. 250க்குப்பின் காஞ்சி நகர் தமிழகத்தின் வடமொழிக்கான அறிவியல் கலை இலக்கிய நகராக மாறியது. அங்கு வடமொழிக்கான கடிகைகள் அல்லது சாலைகள் எனப்படும் கல்லூரிகள் பல உருவாகியிருந்தன. நாளடைவில் தென்னகத்தின் புகழ்பெற்ற நகராகவும், பல்வேறு சமயங்களின் மையமாகவும், தத்துவப் பிரதிவாதங்கள் நடக்கும் இடமாகவும் காஞ்சிநகர் உருவானது.

தமிழ்மொழியும் சமற்கிருதமும்:

தமிழகத்தின் பண்டைய புகழ்பெற்ற வஞ்சி, கரூர், மதுரை, புகார், உறையூர், கொற்கை போன்ற நகரங்கள் மீண்டெழ ஒரு சில நூற்றாண்டுகள் ஆகியது. அதே சமயம் 1500 வருடங்களுக்கும் மேலாக ஆட்சி மொழியாக, அறிவியல்மொழியாக, கல்வி மொழியாக, வணிகமொழியாக, வழிபாட்டு மொழியாக என எல்லாவுமாக இருந்த தமிழ்மொழி களப்பிரர் காலத்தில் ஒரு கீழ்மக்களின் மொழியாக, அறிவியல் தத்துவம் தொழில்நுட்பம் போன்றவைகளுக்குத் தகுதியற்ற மொழியாகக் கருதப்படும் சூழ்நிலை உருவானது. தொடக்கத்தில் பிராகிருதமும் பின்னர் சமற்கிருதமும் களப்பிரர் காலத்தில் ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, அறிவியல் மொழியாக மாறிப் போயின. இந்த மாற்றங்கள் அனைத்தும் தொடக்க காலப் பல்லவர் ஆட்சியிலும் நடந்தேறின. இருந்த போதிலும் இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்குள் தமிழ் மக்களின் பேராதரவால் தமிழ்மொழி மீண்டும் மக்களுக்கும் அரசுக்குமான ஒரு தொடர்பு மொழியாக, இலக்கிய மொழியாக பக்தி மொழியாக உருவாகத் தொடங்கியது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றி தமிழில் பக்தி இலக்கியம் உருவாக வழிவகுத்தனர்.

அதே சமயம் ஆட்சியாளர்களின் ஆதரவாலும் வைதீக பார்ப்பனியத்தாலும் தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப மொழியாக, கல்வி மொழியாக சமற்கிருதம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. தமிழில் இருந்த தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப மூல நூல்கள் அனைத்தும் அழிந்து போனதாலும், தமிழ்மொழி ஒரு கீழ்மக்களின் மொழியாக, அறிவியல் தத்துவம் தொழில்நுட்பம் போன்றவைகளுக்குத் தகுதியற்ற மொழியாகக் கருதப்பட்டதாலும் தமிழ் அத்தகுதிகளை நிரந்தரமாக இழந்து போனது. வடக்கே குப்தர் ஆட்சியும், தமிழகத்தில் பல்லவர், களப்பிரர் ஆட்சியும் வைதீக பார்ப்பனியமும் இவற்றைச் சாத்தியமாக்கின. கி.பி. முதல் நூற்றாண்டு வரை எழுத்தில்லாத, செவ்விலக்கியங்கள் உருவாகாத, மக்கள் மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ இல்லாத, தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் எதுவும் உருவாகாமல் இருந்த சமற்கிருதம் கி.பி. 5ஆம் 6ஆம் நூற்றாண்டுக்குள் இந்தியாவின் பெரும்பாலான அரசுகளின் ஆட்சிமொழியாகவும், தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப மொழியாகவும், கல்வி மொழியாகவும் உருவாகியிருந்தது. இந்திய அரசியல் சூழ்நிலையும், பார்ப்பனக் குழுக்களின் திட்டமிட்ட உழைப்பும், வடக்கே குப்தர் ஆட்சியும் தெற்கே பல்லவர் ஆட்சியும் இதற்குக் காரணம் எனலாம்.

பிற்காலப் பல்லவர்கள் – சிம்மவிசுணு (கி.பி. 575-615):

கி.பி. 575 முதல் கி.பி. 900 வரை சுமார் 325 ஆண்டுகள் பிற்காலப் பல்லவர்கள் ஆட்சி செய்தனர். இதன் முதல் அரசன் சிம்மவிசுணு. இவனது ஆட்சிக்காலம் என்பது கி.பி. 575 முதல் கி.பி. 615 வரை சுமார் 40 ஆண்டுகள். இவன்தான் காஞ்சி நகரத்தையும், காவிரி பாயும் செழிப்பான சோழ நாட்டையும் கைப்பற்றியவன். புதுக்கோட்டை வரையுள்ள சோழ நாடு முழுவதையும் இவன் படையெடுத்து வென்றான். மகேந்திரவர்மன் தனது தந்தை குறித்துத் தான் எழுதிய வடமொழி நூலான மத்தவிலாசத்தில், ‘பல நாடுகளை வென்றவன; வீரத்தில் இந்திரனைப் போன்றவன்; செல்வத்தில் குபேரனை ஒத்தவன், அவன் அரசர்களில் ஏறு.’ எனக் குறிப்பிட்டுள்ளான். இவன் வைணவனாக இருந்தான். மகாபலிபுரத்தில் உள்ள ஆதிவராகர் குகைக் கோவிலை இவன்தான் கட்டினான். அதில் இவனுடைய சிலையும் இளவரசனாக இருந்த மகேந்திரவர்மன் சிலையும் உள்ளது

இவன் ஆந்திராவில் வாகாடகர் கட்டிய அசந்தா குகைக்கோவிலையும், விசுணுகுண்டர் கிருசுணையாற்றங்கரையில் கட்டிய பல குகைக்கோயிலையும் கண்டு தமிழகத்தில் முதல்முறையாக ஆதிவராகர் குகைக்கோயிலை அமைத்தவன். இவன் வடமொழியில் புலமை பெற்றவனாக இருந்தான். ஆதலால் தாமோதரன் எனப்படும் பாரவி என்ற வடமொழிப் புலவரை வரவழைத்து அவரை ஆதரித்தான். இவனது காலத்தில் சாளுக்கிய நாட்டை இரண்டாம் புலிகேசியும் (கி.பி. 609-642), பாண்டிய நாட்டை மாறவர்மன் அவனி சூளாமணியும் (கி.பி. 600-625), கங்கநாட்டை துர்விநீதனும் (கி.பி. 605-650) ஆண்டுவந்தனர் (16).

மகேந்திரவர்மன் (கி.பி. 515-630):

மகேந்திரவர்மன் முதலில் சமணனாக இருந்து பின் சைவனாக மாறியவன். இவன் சைவனாக மாறியதால் இவனது ஆட்சிக்காலத்தில் சைவம் நல்ல வளர்ச்சியைப் பெற்றது. இவனது காலத்தில் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி கங்க அரசன் துர்விநீதனை சேர்த்துக்கொண்டு பல்லவர்களைத் தாக்கினான். இப்போரின் தொடக்கத்தில் மகேந்திரவர்மன் தோற்கடிக்கப்பட்ட போதிலும் இறுதியாக அவர்களைத் தோற்கடித்துத் தனது ஆட்சிப் பகுதிகளில் இருந்து அவர்களை விரட்டியடித்தான். இவன் முதல்முறையாக தமிழகத்தில் பல மலைக்கோயில்களை அமைத்தான். மாமண்டூர், மகேந்திரவாடி, சிங்கவரம், நாமக்கல் போன்ற இடங்களில் இவன் பெருமாள் கோவில்களைக் கட்டினான். சீயமங்கலம், பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம், திருச்சி ஆகிய இடங்களில் இவன் சிவன் கோயில்களைக் கட்டினான். மண்டபப்பட்டில் மும்மூர்த்தி கோவிலும், சித்தன்னவாசலில் சமணர் கோவிலும் கட்டினான். இவனது மலைக்கோயில்கள் அனைத்தும் மலைச்சரிவுகளில் குடைந்து அமைக்கப்பட்டவை. இக்கோவில்களில் மகேந்திரன் காலத்துக் கல்வெட்டுகள் வடமொழியிலும் தமிழிலும் உள்ளன. அப்பர் திருநாவுக்கரசர் இவனது காலத்தவர். அவர்தான் இவனை சமணத்திலிருந்து சைவத்துக்கு மாற்றியவர். இவனுக்குப் பல பட்டப் பெயர்கள் இருந்தன. அதில் பல வடமொழிப்பட்டங்கள், சில தெலுங்குமொழிப்பட்டங்கள்.

குண்டூர்கோட்டத்தில் இவனது கல்வெட்டு இருக்கிறது. இவனது அரசு ஆந்திராவில் கிருசுணை ஆறுவரை பரவியிருந்தது. இவன் வடமொழியில் மத்தவிலாசப் பிரகசனம் என்ற நூலை எழுதியிருந்தான். அந்நூல் அவனது காலகட்டங்களில் இருந்த பல்வேறு சமயங்கள் குறித்து விளக்குகிறது. இவன் சிற்பம், ஓவியம், நடனம், இசை, நாடகம் போன்ற கலைகளை வளர்த்தவன். இவன் வடமொழியில் பெரும்புலமை பெற்றிருந்தான் என்பதோடு இசையிலும் வல்லவனாக இருந்தான். சிற்பம், ஓவியம் நடனம் போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருந்தான். இவனது மலைக்கோயில்கள் சிற்பக்கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன (17). எனினும் ‘இவன் செய்தவையெல்லாம் தெய்வங்களுக்கும், பார்ப்பனர்களுக்கும், சமற்கிருதத்துக்கும் தானே ஒழிய பொதுமக்களுக்கும் தமிழ் மொழிக்கும் அல்ல எனவும் அரசின் நிதியாதாரங்களை தனது கனவுகளுக்குத்தான் அவன் செலவிட்டான் எனவும் கூறுகிறார் பேராசிரியர் கே. இராசய்யன் (18).

நரசிம்மவர்மன் (கி.பி. 630-668):

இவனது காலத்தில் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி பல்லவர் மீது படையெடுத்து வந்தான். இப்போரில் இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்த பின், அவனைத் தொடர்ந்து சென்ற இவனது படை, சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபியைத் தாக்கி அதனைக் கைப்பற்றியது. அதன் காரணமாக ‘வாதாபி கொண்டான்’ என்ற பட்டத்தை நரசிம்மவர்ம பல்லவன் பெற்றான். வாதாபி இவனது கட்டுப்பாட்டில் 13 ஆண்டுகள் இருந்தது. நரசிம்ம பல்லவனின் சேனைத்தலைவராக இருந்த பரஞ்சோதியார்தான் நரசிம்ம பல்லவனின் உத்தரவுப்படி வாதாபியைக் கைப்பற்றியவர். இவர் 63 நாயன்மார்களில் ஒருவர். இதனைச் சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். இவன் சாளுக்கியர்களோடு போரிட்ட போது பாண்டியன் இவன் மீது படையெடுத்தான். தொடக்கத்தில் பல்லவனது படை தோல்வியுற்றபோதிலும் இறுதியாக நரசிம்ம பல்லவன் பாண்டியர் படையை தோற்கடித்து விரட்டியடித்தான். இலங்கை அரசன் மானவன்மன் இவனிடம் உதவிகேட்டு வந்த போது அவனுக்கு உதவியாகத் தனது கடற்படைகளை அனுப்பி அவன் இலங்கை அரசனாக ஆவதற்கு உதவினான் (19).

இவனது காலத்தில் சீனப்பயணி யுவான் சுவாங் கி.பி. 642 வாக்கில் காஞ்சி நகர் வந்தார். ‘நிலம் செழிப்புள்ளது; நல்ல விளைச்சல் தருவது; மக்கள் அஞ்சா நெஞ்சினர்; இலங்கையோடு கடல் வணிகம் சிறப்பாக நடைபெறுகிறது’ என அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கு 16000 பௌத்தத் துறவிகள் இருக்கின்றனர், பல பௌத்தத் தூபிகள் பழுதுற்ற நிலையில் உள்ளன எனவும் நாலந்தா பல்கலைக்கழக பேராசிரியர் தர்மபாலர் காஞ்சியைச்சேர்ந்தவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாண்டிய நாட்டில் பௌத்தம் அழிநிலையில் உள்ளது எனவும் பலர் பொருள் ஈட்டுவதிலேயே ஈடுபட்டுள்ளனர் எனவும் சொல்லியுள்ளார் (20).

நரசிம்ம பல்லவன் தனது தந்தையைப் போலவே நிறையக் கோவில்களை அமைத்தான். நாமக்கல் மலையடியில் உள்ள நரசிங்கப்பெருமாள் கோவில், புதுக்கோட்டை குடுமியா மலையியில் உள்ள குகைக்கோவில், புதுக்கோட்டை திருமய்யத்தில் உள்ள நரசிம்மன் குகைக்கோவில் ஆகியன இவனது காலத்தியவை. மாகாபலிபுரத்தில் இவனால் உருவாக்கப்பட்ட சிற்ப ஓவிய வேலைப்பாடுகள் மிகவும் புகழ்பெற்றவை. நரசிம்மவர்மன் இங்கு குகைக்கோவில்கள், ஒற்றைக்கல் தேர்கள், கற்சிற்பங்கள் ஆகிய மூன்றையும் அமைத்தான். மகிடாசுர மண்டபம், வராக மண்டபம், திரிமூர்த்தி மண்டபம் ஆகிய மூன்றும் இவன் இங்கு அமைத்த குகைக் கோவில்கள். வாதாபி குகைக் கோவில்களில் இருந்த கண்ணையும் கருத்தையும் கவரத்தக்க வேலைப்பாடுகளை அவன் மாமல்லபுரத்திலும் அமைத்தான். நரசிம்ம பல்லவன் இங்கு ஐந்து ஒற்றைக்கல் கோவில்களை அமைத்தான். அவை பாண்டவர் தேர்கள் என மக்களால் அழைக்கப்படுகின்றன. இங்குள்ள தருமராசன் தேர் என்பது சிவன் கோவில். இக்கோவிலின் விமான வளர்ச்சியே காஞ்சி கைலாசநாதர் விமானம். அதன் வளர்ச்சிதான் தஞ்சைப் பெரியகோவில் விமானம். பீமசேனனின் .தேர் கோவில் அமைப்பை சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தின் அமைப்பில் காணலாம். அர்ச்சுனன் தேரும் சிவன் கோவில்தான். திரௌபதி தேர் கோவில் ஊர்தேவதைக்கான சிறுகோவில் போல் உள்ளது. சகாதேவன் தேர் என்பது பண்டைய பௌத்தர் சைத்தியத்தை ஒத்துள்ளது.

பெரிய பாறைகள் மீது அவன் செதுக்கியுள்ள கோவர்த்தன் மலையைக் கண்ணன் ஏந்தி நிற்கும் காட்சி, கங்கைக்கரைக்காட்சி ஆகிய இரண்டும் நரசிம்மவர்மன் அமைத்த கற்சிற்பங்கள். இவை இரண்டும் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன (21). நரசிம்மன், போர் நடத்துவது, பார்ப்பனர்களுக்கு உதவுவது, ஆலயத்தை நிறுவுவது போன்றவைகளுக்கு அரசின் நிதியைச் செலவிட்டது, குடியானவர்களைப் பாழடித்து, பஞ்சத்தைத் தோற்றுவித்தது என்கிறார் கே. இராசய்யன் (22). நரசிம்மன் நாட்டின் பாதுகாப்புக்காக ஓரிரு கோட்டைகளையும் அமைத்தான். இவன் காலத்தில் சாளுக்கிய நாட்டை ஆண்டவர்கள் இரண்டாம் புலிகேசியும் அவன் மகன் முதலாம் விக்கிரமாத்தனும் (கி.பி. 655-680) ஆவர். கங்கர் நாட்டை பூவிக்கிரமன் (கி.பி. 608-670) ஆண்டு வந்தான். பாண்டிய நாட்டை சேந்தன்-சயந்தவர்மன் (கி.பி. 625-640), அரிகேசரி மாறவர்மன் (கி.பி. 640-680) ஆகியோர் ஆண்டனர். இவர்கள் போக சேரர், சோழர், களப்பிரர் ஆகியோர் சிற்றரசர்களாக ஆண்டு வந்தனர். சோழர்கள் பாண்டியர்களோடு பெண் கொடுத்தும் பெண் எடுத்தும் உறவு கொண்டிருந்தனர் (23).

பரமேசுவரவர்மன் (கி.பி. 670-685);

நரசிம்மவர்மனுக்குப் பிறகு அவனது மகன் இரண்டாம் மகேந்திரவர்மன் பதவியேற்றான். அவன் இரு வருட காலமே ஆண்டான். அதன்பின் வந்தவன்தான் பரமேசுவரவர்மன். அவன் காலத்தில் சாளுக்கியன் முதலாம் விக்கிரமாதித்தன் பல்லவர்கள் மீது படையெடுத்தான். அவன் காஞ்சியைக் கைப்பற்றியபின் உறையூர் சென்று தங்கினான். அங்கிருந்து பாண்டியன் மீது படையெடுத்தான். அப்பொழுது பாண்டிய நாட்டு அரசனாக இருந்த நெடுமாறனும் அவனது மகன் கோச்சடையனும் சாளுக்கியனை நெல்வேலியில் தோற்கடித்தனர். பாண்டியன் நெடுமாறனோடு போரிட்டுத் தோற்ற சாளுக்கியனை பல்லவன் பரமேசுவரவர்மன் பெருவள நல்லூரில் தோற்கடித்தான். பரமேசுவர வர்மன் சிறந்த சிவ பக்தன். இவன் தன் நாட்டின் பல பாகங்களில் சிவன் கோவில்களைக் கட்டினான். இவன் கூரம் என்ற சிற்றூரில் சிவன் கோவில் ஒன்றைக்கட்டினான். இவன் கோவிலில் பாரதம் பாடச்செய்தான். இவன் மாமல்லபுரத்தில் கணேசர் கோவில் ஒன்றை ஒரு கல்லால் அமைத்தான். தர்மராசர் தேரின் மூன்றாம் அடுக்கை செய்து முடித்தான். இவன் வடமொழியில் சிறந்த புலமை உடையவன். சாளுக்கிய மன்னன் முதலாம் விக்கிரமாதித்தன் (கி.பி. 655-680), பாண்டிய மன்னன் நெடுமாறன் (கி.பி. 640-680), கங்க அரசன் பூவிக்கிரமன், முதலாம் சிவமாறன் ஆகியோர் இவன்காலத்து அரசர்கள் (24).

இராசசிம்மன் (கி.பி. 685-705):

இராசசிம்மன் பதவியேற்றவுடன் சாளுக்கிய அரசன் விநயாதித்தன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான். ஆனால் அவன் இராசசிம்மனால் தோற்கடிக்கப்பட்டான். இராசசிம்மன் கங்கர் நாட்டு அரசனாக இருந்த பூவிக்ரமன் மீது படையெடுத்து அவனை அடக்கினான். அதன்பின் இவன் காஞ்சியில் உலகப் புகழ்பெற்ற கைலாசநாதர் என்ற கோவிலைக் கட்டினான். இந்தக் கோவிலின் விமானத்தின் வளர்ச்சியே தஞ்சை பெரிய கோவில். இக்கோவிலின் இறையிடத்து உட்சுவர்களிலும், புறச்சுவர்களிலும் நிறையச் சிற்பங்கள் இருக்கின்றன. திருச்சுற்றுப் பாதையை அடுத்த மதிற்சுவர் உட்பக்கம் முழுவதும் 58 சிறுகோவில்கள் உள்ளன. உள்ளறை மண்டபப் புறச்சுவரில் சிவனின் பலவேறு நடனக்காட்சிகள் இருக்கின்றன. கைலாசநாதர் கோவில் முழுவதும் நிறையக் கல்வெட்டுகள் உள்ளன. இக்கோவில் போக அவன் மாமல்லபுரத்தில் கடற்கரை ஓரமாக உள்ள உள்கோவிலை அமைத்தான். பனைமலைக்கோவிலையும் அமைத்தான்.

இராசசிம்மன் சைவசிந்தாத்தத்தில் பேரறிவு உடையவனாக இருந்தான். அவன் வடமொழிப்புலமை நிறைந்தவன். தண்டி எனும் வடமொழிப் புலவர் இவனது அவையில் இருந்தார். சிம்மவிசுணு அவையில் இருந்த பாரவியின் கொள்ளுப் பெயரன்தான் தண்டி. அவர் வடமொழியில் காவியா தர்சம், அவந்தி சுந்தரி கதா போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவன் இசை, நடனம், ஓவியம், சிற்பம் போன்றவற்றிலும் சிறந்தவனாக இருந்தான். நாடகக் கலையில் புகழ்பெற்ற வடமொழி அறிஞர் பாசா என்பவர் பல்லவ அரசவையில் நடித்துக்காட்ட நாடகங்களைத் தயாரித்துள்ளார். இராசசிம்மன் காலத்திலும் அவனுக்கு முன்னரும் நடந்த போர்களால் இவனது ஆட்சியின் தொடக்கத்திலேயே கி.பி. 686-689 வரை மூன்று வருடங்களுக்கு மிகக்கொடிய பஞ்சம் தோன்றியது. பல்லவர்களின் செல்வம் வற்றியது. அரசனே காஞ்சியைத் துறக்க வேண்டிய நிலை தோன்றியது. அவனுடைய அவைப்புலவர் தண்டி போன்ற கற்றவர்களே நாடெங்கும் அலைந்து திரிந்தனர். குடிகள் பெருந்துன்பத்துக்கு ஆளாயினர். சாலைகள் சீர்கெட்டுக் கிடந்தன. குடும்பங்கள் நிலை கெட்டன. அரசியல் நிலை தடுமாறிற்று. இவற்றைத் தண்டி தனது ‘அவந்தி சுந்தரி சுதா’ என்னும் நூலில் கூறியுள்ளார். இவனது காலத்திய சாளுக்கிய அரசன் விநயாதித்தன் (கி.பி. 680-696), இரண்டாம் விசயாதித்தன் (கி.பி. 696-733) ஆகியோர். பாண்டிய அரசன் கோச்சடையன் இரணதீரன் (கி.பி. 680-710); கங்க அரசன் முதலாம் சிவமாறன் (கி.பி. 670-715) (25).

இரண்டாம் நந்திவர்மன் (கி.பி. 710-775):

இராசசிம்மனுக்குப் பின் இரண்டாம் பரமேசுவரவர்மன் (கி.பி. 705-710 என்பவன் ஐந்து ஆண்டுகாலம் ஆண்டான். அதன்பின் நான்கைந்து தலைமுறைக்கு முந்தைய பிற்காலப் பல்லவ வம்சத்தின் முதல் வேந்தனான சிம்மவிசுணுவின் தம்பி பீமவர்மனின் வாரிசான இரண்டாம் நந்திவர்மன் தனது 12ஆம் வயதில் ஆட்சியேற்றான். இவனது ஆட்சிக்காலத்தில் இவனுக்கும் பாண்டியர்களுக்கும் போர் நடைபெற்றது. நந்திவர்மன் கொங்குநாட்டைக் கைப்பற்ற முயன்றதும் பரமேசுவரவர்மனின் மகன் சித்திரமாயன் பாண்டியனைச் சரணடைந்து பல்லவ ஆட்சியுரிமையைக் கோரியதும் போருக்குக் காரணம். இப்போரில் சில சமயம் பாண்டியர்களும் சில சமயம் பல்லவர்களும் வெற்றி பெற்றனர். எனினும் இறுதியில் பல்லவனின் படைத்தலைவன் உதயசந்திரன் பெரும்படையோடு சென்று பாண்டியர்களை வென்று சித்திரமாயனை வெட்டிக் கொன்றான்.

இரண்டாம் நந்திவர்மன் பரிவேள்வி (அசுவமேத யாகம்) செய்த போது கீழைச்சாளுக்கியர்கள் இரண்டாம் நந்திவர்மனின் மேலாட்சியை ஏற்றுக் கொண்டனர். ஆனால் அவனுக்குக் கீழ் ஆட்சி செய்து வந்த பிருதிவி வியாக்கிரன் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் உதயசந்திரன் பெரும்படையோடு சென்று அவனை வென்றான். அச்சமயம் உதயனன் என்ற சபர அரசனையும் போரிட்டு வென்றான். பல்லவன் பாண்டியர்களோடு போரிட்டுக் கொண்டிருக்கும்பொழுது சாளுக்கியர்கள் காஞ்சியைத் தாக்கி கைப்பற்றிக் கொண்டனர். அச்சமயம் உதயசந்திரன் பெரும்படையோடு வந்து சாளுக்கியர்களை காஞ்சியிலிருந்து விரட்டியடித்தான். பின்னர் பல்லவன் தனது முதுமைப்பருவத்தில் கங்கர்களோடு போரிட்டு ‘உக்ரோதயம்’ எனும் வைர அணியைக் கைப்பற்றினான். ஆகவே இரண்டாம் நந்திவர்மனின் காலம் எல்லாம் போர்களிலேயே கழிந்தது எனலாம். எனினும் இவனது நிலத்தில் எதனையும் இவன் இழக்கவில்லை (26).

இவன் பார்ப்பனர்களுக்கு நிலம் வழங்கினான். இதனைப் பல்லவ மன்னர்கள் தொடர்ந்து செய்து வந்தனர். இவன் கோவிலில் பாரதம் படித்தவருக்கு நிலம் கொடுத்தான். பல்லவர்கள் தொடர்ந்து பாரதம் படிப்பதையும் நடத்தி வந்தனர். இவனது நாட்டில் தோன்றிய வறுமையையும் இவன் ஒழித்தான். இவன் ஒரு சிறந்த வைணவன். இவன் ஆட்சிக்காலத்திலும் கோவில்கள் பல கட்டப்பட்டன. இவற்றில் கூரத்தில் உள்ள கேசவப்பெருமாள் கோவிலும், திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலும், புதுக்கோட்டையில் உள்ள குண்றாண்டார் கோவிலும் சிறந்தன. இவன் பல்வேறு கோவில்களுக்குத் தானங்கள் வழங்கினான். இவன் காலத்தில் சமணருக்கு பஞ்சபாண்டவர் மலையில் ஒரு குகை அமைக்கப்பட்டது. இவன் நிலம் வழங்கிய மறையவர் அனைவரும் நான்கு வேதங்கள் ஆறு அங்கங்கள் ஆகியவற்றில் வல்லுநர்கள். பல்லவ மன்னனும் சிறந்த புலமையாளன். செய்யுள்கள் செய்வதில் வால்மீகி போன்றவன் என புகழப்படுகிறான். இவனது காலத்தில் தமிழ்நாட்டில் வடவேங்கடம் முதல் புதுக்கோட்டைவரை இவனது ஆட்சி பரவியிருந்தது (27).

தந்திவர்மன் (கி.பி. 775-825):

இவன் இராட்டிரகூடத் தந்திதுர்க்கன் மகள் வயிற்றுப்பேரன். அதனால் தந்திவர்மன் எனப் பெயர்பெற்றான். இராட்டிரகூட அரசியலில் தந்திவர்மன் துருவனுக்கு (கி.பி. 780-794) எதிராக அவனது தமையனுக்கு ஆதரவாக இருந்ததால், அவன் இராட்டிரகூட அரசனான பிறகு பல்லவர் மீது படையெடுத்துக் காஞ்சியைக் கைப்பற்றினான். தோல்வியுற்ற தந்திவர்மன் துருவனுக்குக் கப்பம் கட்டிவர ஒத்துக் கொண்டான். அதன்பின் துருவன் இறந்த பிறகு துருவனின் இளைய மகன் மூன்றாம் கோவிந்தன் (கி.பி. 794-814) என்ற இராட்டிர கூட அரசனுக்கு எதிராக அவனது தமையனுக்கு உதவியதால் கோபமடைந்த கோவிந்தன் பெரும்படையோடு வந்து காஞ்சியைக் கைப்பற்றிக் கொண்டான். தோற்ற தந்திவர்மன் அடங்கி இருப்பதாக வாக்களித்தான். ஆனால் கோவிந்தன் வடநாடுகளை வெல்லச் சென்ற போது சேர சோழ பாண்டியர்களின் துணையோடு இராட்டிரகூட மன்னன் கோவிந்தனுக்கு எதிராகச் சதி செய்தான். அதனால் மீண்டும் கோபமடைந்த கோவிந்தன் மீண்டும் பல்லவரின் காஞ்சி நகர்மீது படையெடுத்து அதைக் கைப்பற்றிக் கொண்டான். மீண்டும் தந்திவர்மன் தான் அடங்கி நடப்பதாக வாக்களித்தான். வரகுண பாண்டியன் (கி.பி. 800-830) தகடூர் அதிகனை எதிர்த்தபொழுது அவனுக்குத் தந்திவர்மன் உதவியதால் கோபமடைந்த பாண்டியன், பல்லவனின் காஞ்சி நகர் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றிக் கொண்டான். அதன் பின் பல்லவர்களின் சோழ நாடு முழுவதையும் பாண்டியன் கைப்பற்றிக் கொண்டான். இதுபோன்று நடந்த தொடர்ந்த போர்களால் நாட்டில் பஞ்சம் தோன்றியது. பஞ்சத்தைக் கட்டுப்படுத்தத் தந்திவர்மன் தனது காலத்தில் பல நீர்ப்பாசனப் பணிகளைச் செய்தான். ஏரிகளும் கால்வாய்களும் வெட்டப்பட்டன. இவை அனைத்தும் உரிமை பெற்ற பார்ப்பனர் போன்றவர்களின் நலனுக்காகவே செய்யப்பட்டன. இவன் ஒருசில கோவில்களையும் கட்டினான் (28).

மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850):

இவன் தந்திவர்மனின் மகன். இவன் ஆட்சியேற்றவுடன் இராட்டிரகூடருடன் போரிட்டு அவர்களை வென்று அவர்களுக்குக் கப்பம் கட்டுவதை நிறுத்தினான். இதற்கிடையே பெண்ணையாற்றங்கரை வரையான பல்லவர் பகுதி பாண்டியர் கட்டுப்பாட்டில் இருந்ததால் அவர்களுக்குக் கப்பம் கட்டுவதையும் நிறுத்தினான். அதன் காரணமாகவும், இவனது தம்பி பாண்டியனோடு சேர்ந்து கொண்டு ஆட்சியுரிமை கோரியதாலும் இவன் இராட்டிரகூட அரசன் அமோகவர்ச நிருபதுங்கன் மீது போர் தொடுத்தபோது பாண்டிய அரசன் சீமாறன் சீவல்லபன் தனக்கு அடங்கியிருந்த சேர, சோழர்களின் துணையோடு பல்லவர் மீது படையெடுத்தான். இராட்டிரகூடப்போரை வெற்றியுடன் முடித்துப் பெரும்படையுடன் திரும்பிய நந்திவர்மன் பாண்டியனைப் பல இடங்களில் தோற்கடித்து இறுதியில் தெள்ளாறு என்ற இடத்தில் பெறுவெற்றி பெற்றான். இப்படியாக அடிமைப்பட்டு கப்பங்கட்டிக் கொண்டிருந்த நாட்டை மீட்டு வடக்கேயும் தெற்கேயும் இருந்த பெரு மன்னர்களைத் தோற்கடித்து பெருவீரனாக தன் வாழ்வின் இறுதிவரை இவன் வாழ்ந்தான்.

பிற பல்லவர் அரசரைப்போல் அல்லாமல் இவன் தமிழில் பெரும்புலவனாக இருந்தான். இவன் மேல் நந்திக்கலம்பகம் என்ற தமிழ் நூல் எழுதப்பட்டது. அதன் ஆசிரியரை அறிய இயலவில்லை. அதில் இவன் மூவேந்தர்களிடமும் வடபுல அரசரிடமும் திரை பெற்றவன் எனச் சொல்லப்பட்டுள்ளது. இவன் காலத்தில் கடல்வாணிகம் மிகச்சிறந்த முறையில் நடைபெற்றது. இவன் மிகச்சிறந்த கடற்படையும் வைத்திருந்தான். நந்திக்கலம்பகம் இவனை காவிரி வளநாடன், பொன்னி நன்னாட்டு மன்னன் எனக் குறிப்பிடுகிறது. இவன் கல்வி கேள்விகளில் வல்லவன் எனவும் சிறந்த வள்ளல் எனவும் போற்றப் படுகிறான். இவனை அறம் வளர அரசாண்ட பெருமகன் என நந்திக்கலம்பகம் புகழ்கிறது. சேக்கிழார் இவனை ‘நாடு அறநெறியில் செல்ல அறநெறி வளர்த்தான்’ எனப் பாராட்டுகிறார். இவன் பார்ப்பனர்களுக்கும், கோவில்களுக்கும் நிறைய நிலங்களைத் தானமாக வழங்கினான். கோவில்களுக்கு நிறையத் திருப்பணிகளைச் செய்தான். இவனுக்கு இரண்டு முக்கிய மனைவிகள் இருந்தனர். ஒருத்தி இவனது காலத்திய இராட்டிரகூட அரசன் அமோகவர்சன் நிருபதுங்கனின் (கி.பி.814-880) மகள். இவள் சிறந்த மதிநுட்பம் உடையவள். இவள் ஈன்ற தாயைப்போல் குடிகளைப் பாதுகாத்தாள். இன்னொருத்தி இவனது காலத்திய பாண்டிய அரசன் சீமாறன் சீவல்லபனின் (கி.பி.830-862) மகள் எனக் கருதப்படுகிறாள். இவள் சிறந்த சிவபக்தி கொண்டவளாக இருந்தாள். நந்திவர்மனும் சிறந்த சிவபக்தி உடையவன் (29).

இறுதிக்காலப் பல்லவர்கள் – நிருபதுங்கவர்மன் (கி.பி. 850-882):

இவன் மூன்றாம் நந்திவர்மனின் மகன். இராட்டிரகூட மன்னனின் மகளுக்குப் பிறந்தவன் என்பதால் இப்பெயரைப் பெற்றான். குடமூக்கில் நடந்த போரில் பாண்டியனிடம் பல்லவனும் கங்க அரசனும் தோற்றனர். ஆதலால் நிருபதுங்கவர்மன் பாண்டியன் மீது படையெடுத்து வெற்றி பெற்றான். பின் பாண்டியன் இவனுடன் நட்பு கொண்டு இவனது கடற்படையைப் பயன்படுத்தி ஈழத்தின் மீது படையெடுத்து வெற்றி பெற்றான். இதன்பின் இரண்டாம் வரகுண பாண்டியன் ஆட்சியேற்றவுடன் பல்லவன் மீது படையெடுத்தான். இப்போரில் பாண்டியன் தோற்றான். ஆனால் பல்லவனுக்கு உதவிய ஆதித்த சோழன் சோழநாடு முழுவதையும் தனதாக்கிக் கொண்டான். கி.பி. 882வரை நிருபதுங்கவர்மன் பல்லவ அரசனாக இருந்தான். அதன்பின் அவனது மகன் அபராசிதவர்மன் கி.பி. 882இல் ஆட்சிக்கு வந்தான். ஆனால் கி.பி. 890இல் ஆதித்த சோழன் பல்லவ அரசனின் தொண்டை மண்டலத்தையும் கைப்பற்றிக் கொண்டான். ஆகவே கி.பி. 890 வாக்கில் பல்லவர் ஆட்சி முடிந்து விட்டது. காஞ்சியில் பல்லவர் ஆட்சி முடிந்தவுடன் பல்லவர்கள் தங்கள் பழைய ஆந்திரப் பகுதிக்குச் சென்று ஒரு சிறிய பகுதியை ஆண்டு வந்தனர். காஞ்சி பல்லவ மரபினர் எனக் கூறிக் கொண்ட நுளம்ப பல்லவர்கள் ஆந்திராவின் நுளம்பபாடியை கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை ஆண்டு வந்தனர். வேறுசில பல்லவ மரபினர் சோழப் பேரரசின் சிற்றரசர்களாகவும், தானைத் தலைவர்களாகவும், வளநாட்டுத் தலைவர்களாகவும், கூடலூர், சேந்த மங்கலம் போன்ற பகுதிகளில் ஆண்டு வந்தனர் (30).

பார்வை:

1.மா. இராசமாணிக்கனார், பல்லவர் வரலாறு, பாரதி பதிப்பகம், சனவரி-2022, பக்: 59.

2. பக்: 45, 46.

3 பக்: 59-65.

4. ச. கிருசுணமூர்த்தி, தமிழ்நாட்டுச் செப்பேடுகள் தொகுதி-1, மெய்யப்பன் பதிப்பகம், டிசம்பர்-2002, பக்; 161

5.மா. இராசமாணிக்கனார், பல்லவர் வரலாறு, பாரதி பதிப்பகம், சனவரி-2022, பக்: 74

6. பக்: 77-79, 83.

7. பக்: 102

8. பக்: 92

9. ச. கிருசுணமூர்த்தி, தமிழ்நாட்டுச் செப்பேடுகள் தொகுதி-1, மெய்யப்பன் பதிப்பகம், டிசம்பர்-2002, பக்: 184.

10. பக்: 235

11. பக்: 172

12. பக்: 174, 175.

13. பழந்தமிழ்ச்சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், NCBH, சனவரி - 2023, புத்தகம் – 2, பக்: 496-499.

14. புத்தகம் -2, பக்: 539-543.

15, 45. புத்தகம் – 2, பக்: 496-499, 526-531 & க. நெடுஞ்செழியன், ஆசிவகமும் ஐயனார் வரலாறும், பாலம், 2014, பக்:188-192.

16. மா. இராசமாணிக்கனார், பல்லவர் வரலாறு, பாரதி பதிப்பகம், சனவரி-2022, பக்: 100-107.

17. பக்: 110-130.

18. பேராசிரியர் கே. இராசய்யன், தமிழ்நாட்டு வரலாறு, தமிழில் தேவதாசு, எதிர் வெளியீடு, ஆகசுடு 2015, பக்: 114.

19, 20. மா. இராசமாணிக்கனார், பல்லவர் வரலாறு, பாரதி பதிப்பகம், சனவரி-2022, பக்: 133-142, 142-143.

21. பக்: 143-151.

22. பேராசிரியர் கே. இராசய்யன், தமிழ்நாட்டு வரலாறு, தமிழில் தேவதாசு, எதிர் வெளியீடு, ஆகசுடு 2015, பக்: 116.

23. மா. இராசமாணிக்கனார், பல்லவர் வரலாறு, பாரதி பதிப்பகம், சனவரி-2022, பக்: 151-154.

24. பக்: 156-167.

25. பக்: 170-191.

26, 27. பக்: 200-211, 211-213

28. பக்: 216-222.

29. பக்: 224-237.

30. பக்: 239-247.

- கணியன் பாலன், ஈரோடு

Pin It