உலகம் முழுவதும் இப்போது 7 ஆயிரம் மொழிகள் வழக்கில் உள்ளன. ஆனால் மாதம் ஒரு மொழி அழிந்து வருகிறது. இது இப்படியே நீடிக்குமானால் அடுத்த 100 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 500 மொழிகள் மட்டுமே இருக்கும். பிரதேச மொழிகள் மீது விதிக்கப்படும் தடை, தொற்றுநோய், யுத்தம், இடம் பெயர்தல், கலாசார அழிவு ஆகியவை காரணமாக மொழிகள் அழிவதாக ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பு கூறி உள்ளது. சில நேரங்களில் ஒரு மொழியைப் பேசுபவர்களே தங்கள் மொழியைக் கைவிடுவதால் அந்த மொழி மறைந்து போய்விடுகிறது என்று அந்த அமைப்பு கூறி உள்ளது.
550 மொழிகள் 100 பேருக்கும் குறைவானவர்களால் பேசப்படுகிறது. இந்த மொழிகள் தான் விரைவில் அழியப் போகின்றன. 516 மொழிகள் கிட்டத்தட்ட அழிந்து விட்டதாக கருதப்படுகின்றன. இந்த மொழிகளை 50க்கும் குறைவானவர்கள் பேசுவதாலேயே இவை அழிந்துவிட்டதாக கருதப்படுகின்றன.
உலகின் 10 பெரிய மொழிகளில் இந்தி, வங்காளி ஆகியவை இடம் பெற்று உள்ளன. மற்ற 8 மொழிகள், மண்டரின் (சீனம்), ஆங்கிலம், ஸ்பானிஷ், ரஷியன், அரபி, போர்த்துக்கீசியம், மலாய், இந்தோனேஷியன், பிரஞ்சு ஆகியவை ஆகும். சீன மொழி 100 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படுகிறது. இந்தி 49 கோடியே 60 லட்சம் மக்களால் பேசப்படுகிறது. வங்காளி 21 கோடியே 50 லட்சம் மக்களால் பேசப்படுகிறது. ஆங்கிலம 51 கோடியே 40 லட்சம் மக்களால் பேசப்படுகிறது.
ஆசியாவில் தான் அதிகமான மொழிகள் வழக்கில் உள்ளன. இந்தியாவில் 427 மொழிகள் பேசப்படுகின்றன. அமெரிக்காவில் 311 மொழிகள் பேசப்படுகின்றன. உலக மொழிகளில் பாதி 8 நாடுகளில் மட்டும் பேசப்படுகின்றன.
உலகக் கால்பந்து போட்டியும் பன்னாட்டு நிறுவனங்களும்
உலகக் கால்பந்து போட்டிகளைக் கூட - பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் வர்த்தக நலன்களாக மாற்றி விட்டன. ‘பிபா’ என்று அழைக்கப்படும் சர்வதேச கால்பந்து சங்கங்களின் நிறுவனம் ‘உலகக் கோப்பைக் கால்பந்து’க்கு காப்புரிமை பதிவு செய்து, இந்த சொற்றொடரைப் பயன்படுத்திய 420 நிறுவனங்கள் மீது உலகம் முழுதும் வழக்குகளைத் தொடுத்திருக்கிறதாம்.
ஏழை நாடுகளில் “சேரி”களிலிருந்துதான் சர்வதேச கால்பந்து விளையாட்டு வீரர்கள் வருகிறார்கள். இவர்களின் திறமைகளை வர்த்தக மாக்குகின்றன பன்னாட்டு நிறுவனங்கள். ‘அடிடாஸ்’ என்ற ‘ஷு’ தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனத்தின் சுரண்டல் கதை இது. ‘புதிய கலாச்சாரம்’ இதழ் இந்த உண்மைகளை இவ்வாறு அம்பலப் படுத்தியிருக்கிறது.
சர்வதேச கால்பந்து சங்கங்களின் சம்மேளனத்தைத் தனது விளம்பரக் கம்பெனியாகவே மாற்றி விட்டது அடிடாஸ் என்கிறார்கள். ஷூ மற்றும் விளையாட்டு உடை உபகரணங்களைத் தயாரிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனம்தான் அடிடாஸ். இந்நிறுவனம் இந்தப் போட்டிக்கென்றே ஜோஸ்+10 என்ற விளம்பரத்தைத் தயாரித்தது.
இதில் மாநகரச் சேரியின் தெரு வொன்றில் ஜோஸும் அவனது நண்பர்களும் கால்பந்து விளையாடுகிறார்கள்.
தத்தமது அணிக்கு உலகின் பிரபலமான கால்பந்து வீரர்களை அழைக்கிறார்கள். வீரர்களும் வந்து ஆடுகிறார்கள்.
ஜோஸின் தாயார் “விளையாடியது போதும் வீட்டுக்கு வா” என்று அவனை சத்தம் போடுகிறாள். “முடியாதது ஒன்றுமில்லை” என்ற தத்துவ விளக்கத்துடன் முடியும் இந்த விளம்பரம் இந்தி உட்பட பல பத்து உலக மொழிகளில் ஒளிபரப்பப்பட்டது.
அர்ஜென்டினா, ஜெர்மனி உட்பட முக்கியமான ஆறு அணிகளின் உடை, உபகரணங்களையும் அடிடாஸ் ஸ்பான்சர் செய்திருக்கிறது. இதே போன்று நைக் நிறுவனம் 8 அணிகளுக்கும், பூமா நிறுவனம் 12 அணிகளுக்கும் உபயம் அளித்திருக்கின்றன. இதில் கேலிக் கூத்து என்னவென்றால் போட்டி நடுவர்களின் உடையைக்கூட அடிடாஸ்தான் அளித்திருக்கிறது.
ஆக உலகப் போட்டி ஓடுவது இந்தச் செருப்புக் கம்பெனிகளின் கைங்கர்யம் என்றாகிவிட்டது. மேலும் அடிடாஸ் நிறுவனம் இந்தப் போட்டியை வைத்து ஒரு கோடி கால்பந்துகள், 10 இலட்சம் ஜோடி பிரிடேட்டர் ஷுக்கள், 5 இலட்சம் ஜெர்மன் அணிச் சட்டைகள் விற்பதற்கு இலக்கு தீர்மானித்திருக்கிறது. அவ்வகையில் சென்ற ஆண்டை விட 37 சதவீதம் நிகர லாபம் அதிகரிக்குமாம்.
மொத்தத்தில் அடிடாஸின் கால்பந்து தொடர்பான விற்பனை இவ்வாண்டு மட்டும் 6600 கோடியைத் தொடும். இதே தொகையில் ஏழை நாடுகளின் பள்ளிக் கூடங்களுக்கு தலா 10000 ரூபாய் மதிப்பிலான குறைந்தபட்ச விளையாட்டு உபகரணங்கள் அளிப்பதாக வைத்துக் கொண்டால் சுமார் 66 இலட்சம் பள்ளிக்கூடங்களுக்கு வழங்கலாம்.
அத்வானியின் மோசடிகள்
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், டெல்லியில் முதல்வராக இருந்தவருமான மதன்லால் குரானா. பா.ஜ.க.விலிருந்து நீக்கப்பட்டவர். கடந்த சில நாட்களாக அவர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார். சர்வதேச நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமோடு, அத்வானிக்கு நெருக்கமாகத் தொடர்பு உள்ளது என்றும், தன்னை தோற்கடிக்கவும், சுஷ்மா சுவராஜை டெல்லியின் முதல்வராக்கவும் தாவூத் இப்ராகி மின் பணம் தண்ணீராக செலவழிக்கப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே நடந்த பம்பாய் குண்டு வெடிப்புக்குக் காரணமானவர் என்ற குற்றச்சாட்டு உள்ளாகியிருப்பவர் தாவூத் இப்ராகிம். அத்துடன் பாபர் மசூதி இடிப்பதற்கு சதித் திட்டம் தீட்டியவரே அத்வானிதான் என்று அண்மையில் மதானா டெல்லியில் பேட்டி அளித்திருந்தார். அப்போது பா.ஜ.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட உமாபாரதியும் அருகில் இருந்தார்.
தனது உறவினர் தொடர்புள்ள ஒரு போதை மருந்து வழக்கை உள்துறை அமைச்சராக இருந்தபோது அத்வானி குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் மதானி குற்றம் சாட்டியுள்ளார்; உண்மைகள் வெளி வருகின்றன.