மே 8 - உலக அன்னையர் நாள். 1908ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வெர்ஜினியாவில் உள்ள கிராம்டன் நகரில்தான் இது முதன்முதலாகக் கொண்டாடப்பட்டது. இப்போது இந்தியா உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட நாடுகளில் மே 2ஆவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
சமூக வரலாற்றில் பெண்களே சமூகத்துக்குத் தலைமை தாங்கினார்கள். தனிமனித சொத்துடைமை உருவான பிறகு தாய்வழிச் சமூகம், தந்தை வழிச் சமூகமாகியது. தனது வாரிசுகளுக்கே சொத்துகள் போய்ச் சேர வேண்டும் என்ற சமூக வேட்கை, பெண்களை ஆண்களுக்கு அடிமைப்படுத்தியது.
இந்து பார்ப்பனிய மதம், அன்னையர்களை கொடுமைப் படுத்தியே வந்திருக்கிறது. வர்ணக் கலப்பைத் தடுப்பதற்கு கணவன் இறந்தவுடன் அவனை எரியூட்டும் நெருப்பில் அவனது மனைவியையும் உயிருடன் எரிக்கும் சமூகக் கொடுமைகளை பார்ப்பனர்கள் திணித்தார்கள்.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இராஜாராம் மோகன்ராய் போன்ற சீர்திருத்தவாதிகள், இந்தக் கொடுமைக்கு எதிராகப் போராடியதால், பிரிட்டிஷ் ஆட்சி உடன்கட்டை ஏறும் கொடுமைக்கு சட்டப்படி முற்றுப்புள்ளி வைத்தது. தடைச் சட்டத்தையும் மீறி பார்ப்பனர்கள் அன்னையர்களை ‘உடன்கட்டை’ ஏற்றி வந்திருக்கிறார்கள்.
இது குறித்து தஞ்சையில் நடந்த ஒரு கொடூர சம்பவம் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.
“18ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் மராட்டிய பார்ப்பன இளைஞன் அரசுப் பதவியில் இருந்தான். அவன் மனைவி கோகிலா. பார்ப்பன இளைஞன் திடீரென மரண மடைந்தான். பார்ப்பனர்கள் கோகிலாவை அலங்கரித்து, சவத்துக்குப் பின்னால் சுடுகாட்டுக்கு உடன்கட்டை ஏற்ற ஊர்வலமாக அழைத்துப் போனார்கள். இதை வேடிக்கைப் பார்த்த ஆங்கிலேய இராணுவத்தினர், எப்படியாவது காப்பாற்ற நினைத்து கூட்டத்திடையே புகுந்து பெண்ணை மீட்டனர்.
பார்ப்பனர்கள் ஆத்திரமடைந்தனர். கணவர் உடலை மட்டும் சுடுகாட்டில் எரித்தவுடன், தப்பிச் சென்ற அந்தப் பெண்ணை வீடு திரும்ப விடாமல் பார்ப்பனர்கள் தடுத்தார்கள். “வீட்டுக்கு அழைத்து வந்தால் ‘ஜாதிப் பிரஷ்டம்’ செய்து விடுவோம்” என்று மிரட்டினர். அனாதையான அந்தப் பெண்ணை இராணுவத்தினரே வளர்த்து வரலாயினர்.
அந்தப் பெண்ணை தனது சொந்தப் பொறுப்பில் வளர்த்தவர் இராணுவத் தலைவர் கர்னல் லிட்டன். அவரது பங்களாவில் தங்கி ஆங்கிலம் கற்று தேர்ச்சிப் பெற்றாள். இவரே பிறகு, ‘ஸ்வாட்ஸ்’ பாதிரியாரால் ஞானஸ்நானம் அளிக்கப்பட்டு, ‘இராயல் குளோரித்தாள்’ எனும் பெயரையேற்றார். நெல்லை மாவட்டத்தில் சுவிசேஷ ஊழியத்தை முதலில் துவக்கி வைத்தப் பெண் இவர்தான்.” இது வரலாறு.
முன்னாள் பிரதமர் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட் தூதுவராக பணியாற்றிய காலத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் தங்கள் நாட்டை பிரிட்டிஷார் அடிமைப் படுத்தி ஆட்சி செய்ததைக் கண்டித்து குறிப்பிட்டபோது அந்த அதிகாரி அளித்த பதில் மிகவும் முக்கியமானது. ‘நாங்கள் உங்கள் நாட்டில் ஆட்சி செலுத்தியதால்தான் இப்போது நீங்களே என்னுடன் உயிருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் இல்லாவிட்டால் உங்கள் கணவன் இறந்தபோதே உங்களையும் சேர்த்து நெருப்பில் போட்டு கொளுத்தியிருப்பார்கள்.
நாங்கள்தான் தடை சட்டம் போட்டு காப்பாற்றினோம்” என்று பதிலளித்தார். உடன்கட்டை ஏறல் முறையை ஒழித்தவுடன் பெண்களை, ‘விதவை’களாக்கியது பார்ப்பனியம். உயிருடன் அவர்களை மெல்ல மெல்ல சாகடித்தது. பார்த்தாலே ‘கெட்ட சகுனம்’ என்றார்கள். மொட்டை அடித்து, காவி புடவையும், வெள்ளை புடவையும் கட்ட வைத்து, மேலாடை அணிய தடை விதித்து, வீட்டின் மூலையில் ஒதுக்கித் தள்ளினார்கள். இன்று பார்ப்பன வீட்டு ‘விதவை’களே மொட்டை அடித்துக் கொள்வதில்லை.
இளமையில் கணவனை இழந்தவர்கள், ‘மறுமணம்’ செய்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள். காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலுக்குள் வெட்டி கொலை செய்யப்பட்ட ஆச்சாரமிக்க பார்ப்பனர் சங்கர் இராமனின் மனைவியே மொட்டை அடித்துக் கொள்ள வில்லை. காவிப் புடைவை கட்டவில்லை.
பார்ப்பனியம் திணித்த சமூகக் கொடுமைகளை ஒவ்வொன்றாக ஒழித்ததால்தான் ‘அன்னையர்கள்’ சமூகத்தில் கவுரவம் மற்றும் சமத்துவத்துக்கான அடையாளங்களை வென்றெடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் அன்னையர் நாள் கொண்டாடப்படுகிறது என்றால், அதற்குள் பார்ப்பன மத ஆச்சாரங்கள், சம்பிரதாயங்களின் ஒழிப்பும் உள்ளடங்கியிருக்கிறது என்பதே வரலாற்று உண்மை.
கமலஹாசனின் “சபாஷ் நாயுடு”
நடிகர் கமலஹாசன் தன்னை பெரியாரிஸ்ட், கடவுள் மறுப்பாளராக அடையாளப்படுத்தி வருகிறார். மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் திரைப்பட உலகில் புகழ் பெற்ற நடிகர்கள் இப்படி பெரியார் கொள்கையோடு தங்களை இணைத்துக் கொள்ள முன் வருவது வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியதுதான். ஆனால், சமூக நீதிக் கொள்கையில் அவர்கள் வேறுபடுகிறார்கள். குறிப்பாக இடஒதுக்கீட்டுக்கு எதிராக கமலஹாசன் கருத்துகளைத் தெரிவிக்கிறார்.
பெரியாரின் கடவுள் மறுப்பு கோட்பாடு, சமூக நீதியையும், பார்ப்பனிய சமூக ஒடுக்குமுறை எதிர்ப்புகளையும் உள்ளடக்கமாகக் கொண்டதாகும். மக்கள் விடுதலைக்கான சமூகநீதியைக் கொண்டதே பெரியார் பேசிய நாத்திகம். இது கமலஹாசன் பேசும் நாத்திகத்திலிருந்து மாறுபட்டது.
இப்போது கமலஹாசன் தான் தயாரிக்கப் போகும் படத்துக்கு ‘சபாஷ் நாயுடு’ என்ற பெயரை சூட்டியிருப்பது விவாதங்களை கிளம்பியிருக்கிறது. படத்தின் பெயரோடு ஏன் ஜாதியை இணைக்க வேண்டும்? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகின்றன.
‘படத்தின் கருத்தைப் பாருங்கள். தலைப்பை பார்க்காதீர்கள்’ என்று பதில் கூறுகிறார் கமலஹாசன். இப்படிப்பட்ட விவாதங்களை உருவாக்குவதேகூட படத்துக்கான ஒரு விளம்பர தந்திரம் தான் என்றும் விமர்சனங்கள் வருகின்றன. பல திரைப் படங்களின் பெயரை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் வருகின்றன. இதன் மூலம் படம் மக்களிடையே எந்த செலவும் இன்றி விளம்பரமாகி, ஏடுகளில் செய்திகளாக மாறுகிறது.
கமலஹாசன் அத்தகைய விளம்பர யுக்திக்காக இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தாரா என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனாலும், ‘தேவர் மகன்’, ‘சண்டியர்’, ‘மண்வாசனை’ போன்ற திரைப்படங்கள் வழியாக ஜாதியப் பெருமைகள் உணர்ச்சிகளாக கட்டமைத்து ஜாதியத்துக்கு உயிரூட்டும் வேலைகளை சில தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் செய்தார்கள் என்பதை மறுத்துவிட முடியாது.
பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயரை போடும் ‘ஜாதிய ஆச்சாரம்’ அநேகமாக தமிழ்நாட்டில் மறைந்தே போய் விட்டது. கொங்கு வேளாளர்களுக்காக, வன்னியர் களுக்காக, பார்ப்பனர்களுக்காக சங்கங்கள் நடத்தும் ஜாதி சங்கத் தலைவர்கள்கூட தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதி ‘வாலை’ ஒட்ட வைத்துக் கொள்வதில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
‘தேவர்’, ‘நாயுடு’, ‘பிள்ளை’, ‘அய்யர்’, ‘அய்யங்கார்’ என்று ஜாதிப் பெயரைப் போட்டுக் கொள்வதுபோல் பறையரும், பள்ளரும், வன்னியரும், வண்ணாரும் அம்பட்டரும், அருந்ததியினரும் பெயருக்குப் பின்னால் ஜாதி அடையாளத்தைப் போட்டுக் கொண்டு சமூகத்தில் ‘கவுரவத்துடன்’ உலா வர முடியுமா? என்ற கேள்வியை கமலஹாசனை நோக்கி எழுப்பினால், அவரிடம் என்ன பதில் இருக்கிறது?
தூக்குத் தண்டனைக்கு உள்ளாவது யார்?
இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற இயக்கம் தீவிரமடைந்து வருகிறது. இராஜீவ் கொலை வழக்கில் 23 ஆண்டு காலத்துக்கும் மேலாக சிறையில் வாழும் 7 தமிழர்கள் தூக்குத் தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் சிறைவாசிகள். ஆனாலும், ஏனைய சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் இவர்களுக்கு மட்டும் மறுக்கப்படுகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் தூக்குத் தண்டனைக்கு உள்ளாகிறவர்கள், சமூகப் பொருளாதார நிலைகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களாக இருக்கின்றனர் என்ற ஆய்வை கடந்த வெள்ளிக் கிழமை (மே 6, 2016) டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. இதுவரை தூக்கிலிடப்பட்டவர்களில் பெரும்பான்மையினர், எழுதப் படிக்கத் தெரியாத தற்குறிகள். மதச் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மற்றும் ஏழைகளாகவே இருப்பதை ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.
தற்போது தூக்குத் தண்டனைக்காக காத்திருக்கும் 385 பேரில் 241 பேர் முதன்முறையாக குற்றம் செய்தவர்கள். இதில் பல இளஞ்சிறார்களும் உண்டு. இளம் சிறார்களையும் முதியவர்களையும் தூக்கிலிடக் கூடாது என்பது கொள்கை நடைமுறையாக இருந்தாலும் இளஞ்சிறார்கள் என்பதற்கான சான்றுகளைக் காட்டி இவர்களால் நிரூபிக்க முடியவில்லை.
குற்றம் செய்தபோது 18 வயதுக்கும் 21 வயதுக்கும் இடையே இருந்த 54 பேர் இப்போது தூக்குத் தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். 7 பேர் 60 வயதைக் கடந்தவர்கள். 12ஆம் வகுப்பு படிப்பைக்கூட முடிக்காதவர்களும், தலித், இஸ்லாமியர், பிற்படுத்தப்பட் டோர் மற்றும் ஏழ்மைக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்களும் தான் இந்தத் தண்டணைக்கு உள்ளாகிறார்கள். தங்களுக்கான சிறந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடும் வாய்ப்புகளும் இவர்களுக்கு இல்லை. இது குறித்து ‘இந்து’ ஆங்கில நாளேடு (மே 9) தலையங்கம் ஒன்றை எழுதியுள்ளது.
வசதியும் செல்வாக்கும் மிக்கவர்களுக்கே சாதகமான ஒரு நீதித் துறை அமைப்புதான் இங்கே இருக்கிறது. சமூக பொருளாதார நிலையில் கடைகோடியில் கிடக்கும் மனிதர்களே தூக்குத் தண்டனைகளுக்கு உள்ளாகிறார்கள். எனவேதான் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்கிற கொள்கை சமூகக் கண்ணோட்டத்தில் முன் வைக்கப்படுகிறது என்று, ‘இந்து’ ஏடு, அத்தலையங்கததில் சுட்டிக் காட்டியுள்ளது.