ramanayam 450இந்தியத் துணைக் கண்டத்தில் அதிகார வர்க்கமாக இருக்கக் கூடிய பார்ப்பனர்கள் தங்கள் சுரண்டலுக்கு மட்டு மல்லாமல், தங்களைச் சமூகத்தில் உயர்ந்தவர் களாகவும் மற்றவர்களைத் தங்களுக்குக் கீழானவர்களாகவும் வைத்துக் கொள்ளவும் - தீண்டாமை, பாராமை, அண்டாமை என அனைத்து வகையான சமூகக் கொடுமைகளை உழைக்கும் மக்களாகிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திணித்து ஆதிக்கம் செய்யவும் - கடவுள்களையும், மதங்களையும், அதன் பெயரால் உருவாக்கப்பட்ட வேத, இதிகாச, புராணக்கதை களையும் பயன்படுத்திக் கொண்டனர். 

இன்றைய நவீன அறிவியல் யுகத்திலும் இராமராஜ்ய ரதயாத்திரை என்ற பெயரில் தங்களின் சமூக மேலாண்மையை நிறுவு வதற்கும், ஆட்சி அதிகாரங்களைத் தக்க வைப்பதற்கும் இராமாயணத்தையும் இராமனையும் பயன்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட இராமன் எப்படி ஆட்சி செய் தான் என்பதை விளக்குவது தான் “இது தான் ராம ராஜ்யம்” என்ற நூலாகும். திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் அவர்கள் இந்நூலை எழுதியுள்ளார்.

இராமனுடைய ஆட்சியில் நடைபெற்ற இரண்டு சம்பவங்களை வைத்து இன்றைய இளைய தலைமுறையினருக்கு இராமன் யார்? என்ற கேள்வியைக் கேட்க வைக்கின்றார். இராமன் கடவுளா? மன்னனா? சராசரி மனிதனா? என கேள்விகள் இந்த நூலைப் படிப்பவர்களுக்குக் கண்டிப்பாக எழும்.

வால்மீகி இராமாயணம் என்னும் நூல் ஏழு காண்டங்களைக் கொண்டது. ஆனால் தமிழில் கம்பர் எழுதியது ஆறு காண்டங்களைக் கொண்ட கம்ப ராமாயணம் ஆகும். உத்திர காண்டமாகிய ஏழாவது காண்டத்தைத் தமிழில் கம்பர் எழுதவில்லை. இராமனின் இராஜ்யத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஏழாவது காண்டமாகிய உத்திர காண்டத்தை எல்லோரும் படிக்க வேண்டும். உத்திர காண்டம் 111 சருக்கங் களைக் கொண்டது. இதில் இராமனின் ஆட்சி, மக்களின் வாழ்நிலை, சீதைக்கு நேர்ந்த நிலை என பல்வேறு கதைகள் உள்ளன. இராமன் 11000 ஆண்டுகள் ஆட்சி செய்ததாக உத்திர காண்டம் கூறுகிறது. அப்படி 11000 ஆண்டுகள் ஆட்சியின் நிலை பற்றித் தெரிந்து கொள்ள நமக்கு இந்தச் சிறுநூல் உதவுகிறது. இராம இராஜ்யத்தில் சமூகநீதியும் குடும்ப நீதியும் எப்படி இருந்தது என்று விளக்குகிறது இந்த நூல்.

இராமஇராஜ்யத்தில் ஜாதி

இராம இராஜ்யத்தில் உத்திர காண்டத்தில் 73 முதல் 76 ஆம் சருக்கங்களில் இராமன் ஒரு குலத்திற்கு ஒரு நீதி சொல்லும் வருணாசிரம வெறியோடு ஆட்சி செய்தான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். இராமனுடைய ஆட்சியில் ஒரு பார்ப்பனச் சிறுவன் இறந்துவிட்டதாகவும் அதற்குக் காரணம் யாரோ ஒரு சூத்திரன் தவம் செய்வதுதான் என்றும் நாரதன் சொல்லியதைக் கேட்டு காடுகளில் தேடி அலைகிறான் இராமன். அப்படி அலையும் போது தென்திசையில் ஒருவர் தவம் செய்கிறார். அவருடன் நடந்த உரையாடலை நூலாசிரியர் ஆதாரத்துடன் விளக்குகிறார். இந்நூலின் பத்தாம் பக்கத்தில் 76 ஆம் சருக்கத்தின் தொடக்கத்திலேயே நடந்த உரையாடல்:

“நீ எந்த வருணத்தைச் சேர்ந்தவன்? நீ பிராம்ணனா? பராக்கிரமசாலியான ஷத்திரியனா?  நான்காம் வருணத்தவனா?”

சம்பூகன்: “மஹாராஜா, நான்  நான்காம் வர்ணத்தவன், சம்பூகன் என்று எனக்குப் பெயர். இந்தச் சரீரத்துடன் தேவபதியை அடைய விரும்புகிறேன். ஆகையால் பொய் சொல்ல மாட்டேன்” என்று அவர் சொல்கிறார். உடனே இராமன் தன் உறையிலிருந்து கத்தியை உருவி, சம்பூகன் தலையை வெட்டினான். தேவர்கள் அனைவரும் “நல்லது” “நல்லது” என்று ஆர்ப்பரித்து மகிழ்ந்தார்களாம்.

இராமராஜ்யத்தில் வருணாசிரம ஏற்றத் தாழ்வுகள் எவ்வாறு இருந்தன என்பதற்கு இதற்கு மேல் ஆதாரம் தேவையில்லை. தவம் செய்வதற்குச் சூத்திரனுக்கு அனுமதி இல்லை என்பதை இராம இராஜ்யத்தின் நாயகனே தெளிவாகச் சொல்லி விட்டார். சமூகத்தில் பார்ப்பனர் அல்லாதார் யாராக இருந்தாலும் கடவுளை அடைய நினைக்கக் கூடாது என்பதைத்தான் இராமாயணம் நமக்கு உணர்த்துகிறது.

தவம் செய்து இறைவனை அடைய நினைத்த சம்பூகன் கொல்லப்பட்டார். அளவுக்கு அதிகமான இறை பக்தியால் தன் உழைப்பில் கிடைத்த பணத்தை நன்கொடையாக வழங்கிய இளையராஜா அவமானப்படுத்தப்பட்டார். தன் தாய்மொழியான தமிழில் வழிபாடு செய்த ஓதுவார் ஆறுமுகசாமி அடித்து விரட்டப்பட்டார். அன்று முதல் இன்று வரை கடவுளை வணங்குவதற்குக்கூட நான்காம் வருணத்தாருக்கு அனுமதி இல்லை என்பது தான் வருணாசிரம கோட்பாடு.

இராஜ்யத்தில் பெண்கள்

இராமனின் இராஜ்யத்தில் சமூக நீதி தான் சந்தி சிரிக்கிறது என்றால் அவரின் குடும் நீதி எப்படி உள்ளது என்று பார்ப்போம். இன்றைக்கும் கிராமத்தில் மனைவியைச் சந்தேகப்படுபவரை பெரியவர்கள் திட்டும் போது சந்தேகப் புத்தி இருந்தால் குடும்பம் உருப்படாது என்பார்கள். ஆனால் கடவுளான?? இராமனே தன் மனைவியைச் சந்தேகப்படுவதுதான் இராமராஜ்யத்தின் சிறப்பு?. இராமனைக் கடவுளாகவும், காவிய நாயகனாகவும் மாற்றுவதற்கு வால்மிகி இராமாயணத்தில் இல்லாத செய்திகளையெல்லாம் இட்டுக்கட்டி எழுதிய இனத் துரோகி கம்பனே இராமன் சந்தேகப்பட்டதை ஒத்துக்  கொள்கிறார். கம்ப ராமாயணத்தின் 10157 வது பாடல்

 “ஊண்திறன் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட

மாண்டிலை முறைதிறம்பு அரக்கன் மாநகர்

ஆண்டுறைந் தடங்கினை அச்சம் தீர்ந்தீவண்

மீண்டது ஏன்?“

“ஒழுக்கம் பாழ்பட மாண்டிலை” என்கிறான் இராமன். அதாவது ஒழுக்கம் கெட்ட பின்பும், ஏன் இன்னும் செத்துத் தொலையாமல் இருக்கிறாய்? என்றும் “ஊண்திறன் உவந்தனை” என்பதற்கு அவர்கள் கொடுத்த வகைவகையான உணவு வகைகளைத் தின்று மகிழ்ந்திருந்தவள் தானே நீ? என்று கேவலமாகக் கூறியதைக் கம்பனே பாடியுள்ளார். வால்மீகி ராமாயணத்தில் 43 வது சருக்கத்தில் பத்ரன் சீதையைப்பற்றி ஊரே இழிவாக பேசுவதாக இராமனிடம் கூறிகிறான். அதைக் கேட்டுச் சந்தேகப்படுவதாக உள்ளது.

இராமாயணத்தை எழுதிய வால்மீகியும், கம்பனும் இருவருமே இராமன் சந்தேகப் படுபவதையும் அதனால் சீதையைத் தீக்குளிக்க சொல்வதையும் பதிவு செய்துள்ளனர். ஆக இராமன் ஆணாதிக்க வெறியுடன் அடுத்தவர் பேச்சைக் கேட்டு மனைவியைத் தீக்குளிக்கச் சொல்லும் ஒரு காட்டுமிராண்டியாகவே இருந்துள்ளான். மேலே உள்ள ஆதாரங்கள் எவையும் தோழர் பெரியாரின் நூல்களிலோ, தோழர் அம்பேத்கரின் நூல்களிலோ, தோழர் அண்ணா அவர்களின் நூல்களிலோ எடுத்துக்காட்டப்பட்டதல்ல.

இந்த நூலின் ஆசிரியர் மிகத் தெளிவாக முன்னுரையிலே  மொழி பெயர்த்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். மனைவியைச் சந்கேப்படும் ஒருவனின் பெயரில் ஒரு இராஜ்யம் அமைந்தால் பெண்களின் நிலை என்னவாகும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் ஆஷிகா வண்புணர்வு ஆகும்.  ஒரு சிறுமியை வன்புணர்வு செய்த காட்டுமிராண்டிகளை ஆதரித்து ஊர்வலம் போகிறார்கள் என்றால் இவர்கள் சொல்லும் இராம இராஜ்யம் அமைந்து விட்டால் அய்யோ, நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. ஜாதி வெறியும், மதவெறியும் பெண்ணடிமைத்தனமும், கோரத் தாண்டவமாடும்.

இந்தியா முழுக்க இராமராஜ்ய இரத யாத்திரை என்ற பெயரில் சென்ற மாதம் புறப்பட்டது. எதிர்ப்பே இல்லாமல் வந்த யாத்திரைக்குத் தமிழகம் கடுமையான எதிர்ப்பைக் காட்டியது. ஆனால் அரசியலில் இராமராஜ்யம் ஆகாது என்று சொல்லும் அனைத்துக் கட்சிகளும், முற்போக்கு இயக்கங்களும், இடதுசாரி சிந்தனை யாளர்களும் சமூகத்தில் நிலவும் இராம நம்பிக்கைக்கு எதிராக என்ன எதிர்வினை ஆற்றியுள்ளனர். இந்தியத் துணைக்கண்ட அளவில் தமிழகத்தில் உள்ள பெரியாரின் இயக்கங்களைத் தவிர மற்ற இடதுசாரி, மதச்சார்பின்மை பேசும் அமைப்புகள் இராமனுக்கும், இராமாயணத்துக்கும் எதிராக என்ன எதிர்வினை செய்தனர் அல்லது இனிமேல் செய்யப்ப போகின்றனர் என்பது கேள்விக்கூறி ஆகும்.

இராமனின் வருணாசிரம வெறியையும் பெண்ணடிமைத்தனச் சிந்தனைனையும் கேள்விக் குட்படுத்தாவிட்டால் மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி இராமாராஜ்யச் சிந்தனையை அவர்கள் உருவாக்க முயற்சிப்பார்கள். எனவே இராமாயணம் மட்டுமல்லாமல், நால்வருண வேறுபாட்டையும், ஜாதி இழிவையும், பெண்ணடிமைத்தனத்தையும் நிலைநிறுத்தும் வேத, புராண, இதிகாசங்களுக்கு எதிரான பரப்புரையை மேற்கொள்ள வேண்டும். ஆரிய வாழ்வியலுக்கு எதிரான வாழ்வியலை மேற்கொள்ள வேண்டும். மனித சமூகத்தில் வேறுபாடுகளைக் கற்பிக்கும் இராமாயணம் உள்பட வேத, புராண, இதிகாசங்களை அரசு தடை செய்ய வேண்டும். இன்றைக்கு இந்தியா அளவில் இராமனை வைத்து மக்களின் உணர்ச்சிகளைத் துண்டிவிட்டு ஒரு பாசிச ஆட்சியைத் தக்கவைக்க நடக்கும் சூழலில் “இதுதான் ராம ராஜ்யம்” சரியான தருணத்தில் வெளிவந்துள்ள நூலாகும். மதச்சார்பற்ற அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய ஒரு கருத்தாயுதம் ஆகும்.

வெளியீடு: திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை - விலை - ரூ 20

கிடைக்குமிடம்: கருஞ்சட்டைத் தமிழர் அலுவலகம், 122/130, என்.டி.ஆர். தெரு, அரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை- பேச-0444 2047162

Pin It