உ.பி. மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்ட மன்றத்துக்கான தேர்தல் வர இருக்கிறது. இதனால் பார்ப்பனர்களின் ஓட்டுகளைப் பெற மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் போட்டிப் போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. நவம்பர் 14 ஆம் தேதி உ.பி. தலித் முதல்வர் மாயாவதி லக்னோவில் பார்ப்பனர்களின் மாநாட்டை நடத்தினார்.

“பார்ப்பனர்கள் பெருமளவில் சுரண்டப்படு கிறார்கள்” என்று கண்ணீர் வடித்த மாயாதேவி, காங்கிரஸ் - பா.ஜ.க.வினர், ஏன் பார்ப்பனர்களை முதலமைச்சருக்கான வேட்பாளர்களாக அறிவிக்க வில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். “பார்ப்பன சமாஜ் பய்ச்சாரா சமிதி” என்ற பெயரில் கூட்டப்பட்ட மாநாட்டில் பேசிய மாயாவதி தமது கட்சியிலும், ஆட்சியிலும் பார்ப்பனர்களை அதிகாரத்தில் அமர்த்தியிருப்பதை பெருமையுடன் கூறிக் கொண்டார்.

“பகுஜன் சமாஜ் கட்சிக்கு பார்ப்பன முகம் உண்டு; சதீஷ் சந்திர மிஸ்ராவை மாநிலங்களவை உறுப்பின ராக்கியுள்ளோம். எரிசக்தித் துறை அமைச்சர் ராம்வீர் உபாத்யாயா, பொதுப் பணித் துறை அமைச்சர் நசிமுதின் சித்திக்கி, பஞ்சாயத்துத் துறை அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா இவர்களின் நெருக்கமான உறவினர்களுக்கு அரசுப் பதவிகளும் கட்சிப் பதவிகளும் வழங்கியுள்ளோம் என்று கூறி, பார்ப்பனர் களின் பெயர்களை பட்டியலிட்டார் மாயாவதி.

கடந்த 2007 சட்டமன்ற தேர்தலில் - பகுஜன் சமாஜ் கட்சி 86 பார்ப்பனர்களை வேட்பாளர்களாக நிறுத்தியது. இதில் 43 பேர் வெற்றிப் பெற்றனர். “காங்கிரசும் பா.ஜ.க.வும் பார்ப்பனர்களை முதல்வ ராக்குவதாக அறிவிக்கக் கூடும். அதில் ஏமாந்து விடாதீர்கள்” என்றும் மாயாவதி பார்ப்பனர்களை எச்சரித்தார்.

அதைத் தொடர்ந்து காங்கிரசும், பார்ப்பனர்களுக்கு வலைவீசக் கிளம்பியிருக்கிறது. மாயாவதி பார்ப்பனர் மாநாடு நடத்திய அடுத்த நாளே காங்கிரஸ் கட்சி சோனியா தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்தது. வைதீகப் பார்ப்பனரும், காசி இந்து பல்கலைக்கழகத்தை உருவாக்கியவருமான மதன் மோகன் மாளவியாவின் 150 ஆவது பிறந்த நாள் மற்றும் நேருவின் தந்தை பண்டிட் மோதிலால் நேரு பிறந்த நாள் விழாக்களை நடத்தி பார்ப்பனர்களை மகிழ்விக்க காங்கிரஸ் முன் வந்துள்ளது. உ.பி.யில பல்வேறு பகுதிகளிலும், டெல்லி, மும்பை, பெங்களூரிலும் இவர்களுக்கான விழாக்களை காங்கிரஸ் கட்சி நடத்த திட்டமிட்டுள்ளது.

லண்டன் வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்கச் சென்ற மதன்மோகன் மாளவியா என்ற பார்ப்பனர், கடல் கடந்து போவது “பிராமணனுக்கு” எதிரானது என்பதால், அந்த ‘தோஷத்தை’க் கழிக்க, தன்னுடன் காசியிலிருந்து ஒரு ‘பிடி மண்ணை’ லண்டனுக்கு எடுத்துச் சென்று பூஜை நடத்தினாராம். எனவே, அவருக்கு ‘மண்ணுருண்டை மாளவியா’ என்ற பட்டப் பெயரும் உண்டு. காங்கிரஸ் இயல்பாகவே பார்ப்பனர்களுக்கான கட்சி என்ற உணர்வை மீண்டும் புதுப்பிக்க திட்டமிட்டுச் செயல்படுகிறது என்றும், அதனாலேயே ராகுல்காந்தி, தனது தேர்தல் பிரச்சாரத்தை நேரு போட்டியிட்டு வெற்றிப் பெற்ற புல்பூர் தொகுதியிலிருந்து தொடங்கினார் என்றும் ‘இந்து’ நாளேட்டின் செய்தியாளர் எழுதியுள்ளார். (நவம்.15)

மாயாவதி பார்ப்பனர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள தாம் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளதோடு, உ.பி. மாநிலத்தில் உயர்சாதிக் காரர்களான பார்ப்பனர் தாகூர்களுக்கிடையே நிலவும் பகைமையையும் பயன்படுத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சி, திக் விஜய் சிங் என்ற தாக்கூரையும் பா.ஜ.க. ராஜ்நாத் சிங் என்ற தாக்கூரையும் தங்கள் கட்சியின் முதலமைச்சர்களாக அறிவித்துள்ளதை பார்ப்பனர்கள் மறந்துவிடக் கூடாது என்று மாயாவதி பேசி வருகிறார். மண்டல் அலை வீச்சுக்குப் பின் உ.பி.யில் ஓரம் கட்டப்பட்ட பார்ப்பன அரசியல் செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்த பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் போட்டிப் போட்டுக் கொண்டு நிற்கின்றன.

Pin It