உயர்கல்வி நிறுவனங்கள் வரை எட்டிப் பார்க்கும் தலித் மாணவர்கள் - பார்ப்பன சாதி வெறி பேராசிரியர்கள் - துன்புறுத்தலால் உளம் உடைந்து, தற்கொலை செய்யும் அவலம் தொடருகிறது.

சண்டிகார் அரசு மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு மாணவர் ஜஸ்பிரீத் சிங் கல்லூரி நூலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். தனது ஐந்தாண்டு காலப் படிப்பில் ஒரு தேர்வில்கூடத் தோல்வியுறாதவர். சிறந்த மதிப்பெண்கள் பெற்றுத் தேறியவர். அவமதிப்பும், பழிவாங்கலும் எல்லை மீறியபோது அவர் தற்கொலை விளிம்புக்குத் தள்ளப்பட்டார். காரணம் வேறொன்றுமில்லை. அவர் ஒரு தலித்.

ஜஸ்பிரீத் சிங் சிறந்த டாக்டராக மட்டுமல்ல, சண்டிகர் மருத்துவ உயர்கல்வி ஆய்வு மையத்தில் மேற்படிப்புக்காக மருத்துவக் கல்லூரியில் நுழைந்தவர். சாதி வெறி பிடித்திருந்த சமூக மருத்துவத் துறைத் தலைவர், “நீ தாழ்த்தப்பட்டவன், இட ஒதுக்கீட்டில் இடம் பெற்றிருக்கலாம். ஆனால் டாக்டராகி நீ வெளியே போக முடியாது” என்று சபதம் போட்டார். மனம் உடைந்த ஜஸ்பிரீத் சிங் தற்கொலை செய்து கொண்டார். ஏழு மாதங்களுக்குப் பின் அவரது தேர்வுத் தாளை மூன்று பேராசிரியர்கள் மறு மதிப்பீடு செய்து, அவர் தேர்வு பெற்றார் என்று அறிவித்தனர்.  ஆனால் தான் ஒரு டாக்டராகி விட்டோம் என்ற லட்சியக் கனவு நிறைவேறுவதைக் கேட்டு மகிழ ஜஸ்பிரீத் சிங் உயிருடன் இல்லை.

அண்ணனின் அகால மரணத்தால் மனம் உடைந்த அவரது சகோதரி தானும் தற்கொலை செய்து கொண்டார். அவர் ஒரு கணினிப் பயன்பாட்டுப் பட்டப் படிப்பு மாணவி.

இத்தனையும் 2008 ஜனவரியில் ‘இன்சைட் ‘ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட புலனாய்வால் வெளிப்பட்டது. உயர்கல்வி தேடிச் சென்று அவமானப்பட்டு தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர்கள் 4 ஆண்டுகளில் 18 பேர் எனப் பட்டியலிடுகிறது ‘இன்சைட்’.

மற்றொரு தலித் மாணவரான பால் முகந்த், அகில இந்திய மருத்துவப் பல்கலைக்கழகத்தின் (AIMS) மாணவர் 2010 மார்ச்சில் தற்கொலை செய்துகொண்டார். அவர் எவ்விதக் கடிதத்தையும் விட்டுச் செல்லவில்லை. ஆனால், “தனக்கு நிகழும் இழிவுகள் குறித்து வருத்தமும், மனச் சோர்வும் கொண்டிருந்தார். தனது பெயரை மாற்றிக் கொண்டு, வேறு நாட்டுக்கு ஓடிப் போனால் தான் தனது சாதி இழிவிலிருந்து தப்ப முடியும்” என்று அவர் பலமுறை புலம்பியதாக அவரது தந்தை கூறுகிறார்.

செய்தி: ‘இந்து’ நாளிதழ் - 08.05.2011
Pin It