இந்திய நாட்டைப் பொறுத்தமட்டில், கேரள மாநிலம், பல்வேறு புரட்சிகரமான போராட்டங் களை நடத்திய மாநிலம் ஆகும். அவற்றுள், தீண்டாமைக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.

pandit karuppanஉதாரணத்திற்கு, கோயில் நுழைவுப் போராட்டம், கல் மலையறுப்பு தன்மானப் போராட்டம், தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகளைப் பள்ளிக் கூடத்தில் சேர்ப்பதற்காக நடத்திய போராட்டம், வைக்கம் போராட்டம், குருவாயூர் போராட்டம், கம்யூனிஸ்டுகள் தலைமையில் நடைபெற்ற கையூர் விவசாயிகள் போராட்டம் - என, இப்படிப் பல போராட்டங்கள் கேரளாவில் நடந்துள்ளன.

இவைகளைப் பற்றியெல்லாம் வரலாற்று ஏடுகளில் ஆங்காங்கே சின்னஞ்சிறு தலைப்புகளில் சில குறிப்புகள் காணப்பட்டாலும் கூட, அவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களாக மக்கள் முன்னால் எடுத்துக்காட்டப்படவில்லை.

மட்டுமல்ல! நம் நாட்டில் ‘சாதியை மைய மாகக் கொண்டெழுந்த போராட்டங்களுக்கும், சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக மக்களைத் திரட்டி, (ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள்) நடத்திய தலைவர்களைப் பற்றியும் நம் வரலாறு அதிகமாகக் கண்டு கொள்வதில்லை. ஆனால், ‘இந்தியச் சமூகத்தின் வரலாறு என்பது, மேட்டிமைச் சாதியினரின் ஒடுக்குமுறைக்கு ஆளாகிய அடித்தள சாதிகளையும், அதை எதிர்த்து நிகழ்ந்த போராட்டங் களையும் உள்ளடக்கியது. இப்போராட்டங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு இந்தியச் சமூக வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. வர்க்கப் போராட்டத்திற்கு இணையாக, சாதிய மேலாண் மைக்கு எதிரான போராட்டங்கள் இந்திய- மண்ணில் நிகழ்ந்துள்ளன; நிகழ்ந்து வருகின்றன’ - என்பார், தமிழ் கலை இலக்கியப் பண்பாட்டு ஆய்வாளரான பேராசிரியர். ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள்.

இன்றும் கூட நம் நாட்டில், வரலாற்றாசிரியர் களும், அறிவுஜீவிகளும் (ஜனநாயக உணர்வு கொண் டோர் இடதுசாரி அறிவுஜீவிகள் போன்றவர் களைத் தவிர) சாதி ஒடுக்குமுறை, சாதி சமத்துவம் போன்றவைகளை முக்கிய விஷயமாக எடுத்துக் கொண்டு பேசுவதில்லை. “மன்னராட்சி ஒழிக்கப் பட்டு, மன்னர் பரம்பரைகளும் அழிந்து, வருணா சிரம தர்மமும் உடைந்து, நொறுங்கி, ஜனநாயகம் மலர்ந்துள்ள இக்காலகட்டத்தில், சாதி உணர் வோடு, சாதி மேலாதிக்கத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நடப்பவர்கள், நம்மில் ஏராளம் பேர் உண்டு’ என்கிறார், நாவலாசிரியர் பொன்னீலன்.

ஒரு குறிப்பிட்டக் காலம் வரையில், நம் நாட்டின் பல பிரதேசங்களைப் போலவே கொச்சி சமஸ்தானத்தில் சாதிக் கொடுமை வழக்கத்தில் இருந்து கொண்டிருந்தது. பிற சாதி மக்களைப் போல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உடை உடுத்திக் கொண்டு நடக்கவோ, கல்வி கற்கவோ, ஆதிக்கச் சாதியினர் நடந்து வரும் போது, எதிரே செல்லவோ பொது இடங்களில் சஞ்சரிக்கவோ, தங்கள் பெயரில் சொத்துக்களை வைத்துக் கொள்ளவோ முடியாத காலகட்டம், அது. ஏன், தங்கள் உரிமை களைப் பெறுவதற்காக வேண்டி சங்கம் அமைக்கவோ, கேரள மண்ணில் உரிமை கொண்டாடவோ, பொது இடங்களில் கூட்டம் நடத்தவோ கூட (குறிப்பாக தரைப்பகுதியில்) ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்டிருந்தது.

பொதுவாக, அக்காலகட்டம், கேரளத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள், விழிப்புணர்வு பெற்று மேட்டிமைச்சாதியினரின் ஆதிக்கத்திற்கும், சாதிக் கொடுமைகளுக்கும் எதிராகக் கச்சைக் கட்டிக் கொண்டு இறங்கியிருந்த காலகட்டமாகும். ஒடுக்கப் பட்ட மக்களை பிராமணர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்காததினால் தங்களுக்கென ஒரு சிவனை பிரதிஷ்டை செய்து வணங்கத் தொடங்கி யிருந்தனர். ஆண்களையும் பெண்களையும் ஒன்று திரட்டி, சங்கம் அமைத்துப் போராடத் துவங்கி யிருந்தனர். பல சாதிகளை ஒன்றிணைத்து, சாதி சமத்துவத்தைக் கொண்டு வர, “சமபந்தி போஜனம்’ நடத்தப்பட்டது. தங்கள் குழந்தைகளைப் பள்ளிக் கூடங்களில் சேர்க்க வேண்டும் என்றும், தங்கள் சாதியில் படித்தவர்களுக்கு அரசு அலுவலகங்களில் வேலை வழங்கவேண்டும் என்றும், மன்னரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்த காலமாக இருந்தது.

இந்தக் காலத்தை ஒட்டித்தான், ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து வளர்ந்த பண்டிட் கருப்பன், கொச்சி சமஸ்தானத்தில், தன்னுடைய கவிதை களாலும், நாடகங்களினாலும், ஒடுக்கப்பட்ட மக்களை சாதிக் கொடுமைகளுக்கு எதிராகத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தார். சாதி உணர்வை விமர்சித்து அவர் எழுதிய ‘ஜாதிக்கும்மி’ கவிதை நூல் அக்காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே மிகவும் பிரபலமாகியிருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடையேயும், ஏழை-எளிய பண்டிட் கருப்பனின் புரட்சிகரமான நடவடிக்கைகள் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. காலம் காலமாகப் பள்ளத்திற்குள் வீழ்ந்து கிடப் போரை யாராவது கை தூக்கிவிட வரும் போது, அவர்களுடைய கரங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டு கரையேறத் துடிப்பது போல் ஒடுக்கப் பட்ட மக்களுக்காக வேண்டி போராடிக் கொண் டிருந்த பண்டிட் கருப்பனை அடையாளம் கண்டு, தேடிச் சென்றார்கள்.

‘நாம், இனியும் சிந்திச் சிதறுண்டு கிடந்தால், தங்கள் கழுத்தில் ஏற்றி - வைக்கப்பட்டுள்ள தீண்டாமை நுகத்தடியைத் தூக்கி எறிய முடியாது!; நாம் பெற வேண்டிய மனித உரிமைகளைப் பெற முடியாது. எனவே, ஒடுக்கப்பட்ட மக்களாகிய நாம் அணி திரண்டு ஒன்றாகச் சேர வேண்டும்!’ என்று, உணர்வு பெற்றுக் கொண்டிருந்த வேளை, அது.

இது ஒருபுறம் இருக்க, ஒடுக்கப்பட்ட மக்களில் விழிப்புணர்வு பெற்ற ஒரு சிலர், தங்கள் மக்களை அணிதிரட்டி, கொச்சியில் ஒரு பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தத் தீர்மானித்து, அதற்கான அனு மதியைப் பெறுவதற்காக வேண்டி மன்னரைக் காணச் சென்றார்கள். அங்கே, மேட்டிமைச் சாதி யினர் அவர்களுக்கு அனுமதி வழங்க மறுத்து, திருப்பி அனுப்பி விட்டார்கள்.

சோகத்தோடு வீடு திரும்பிய அவர்கள், பண்டிட் கருப்பனைக் கண்டு விஷயத்தைச் சொல்கிறார்கள்.

‘அய்யா, நாங்கள் அரண்மனைக்குச் சென்று பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட் டோம். தாழ்த்தப்பட்ட மக்களாகிய உங்களுக்கு, நிலத்தில் வைத்து பொதுக்கூட்டம் நடத்த உரிமை கிடையாது; வெளியே போங்க!- என்று சொல்லி விட்டார்கள்.’ என்று.

மேட்டிமைச் சாதியினர் ஒருபுறமிருக்க, மன்னரின் உத்தரவு அல்லவா! சற்றுநேரம் யோசித்த பண்டிட் கருப்பன் கீழ்க்கண்டவாறு சொன்னார்:

‘சரி, நிலத்தில் வைத்துதானே உங்களிடம் பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது என்று சொன் னார்கள்? ஒன்று செய்யுங்கள்; நம் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் நீங்கள் பக்கத்திலிருக்கும் வேம்ப நாட்டுக் காயலுக்கு (ஏரிக்கு), வரச் சொல்லி, அறிவிப்புக் கொடுங்கள்’ என்று. (இந்த இடம், எர்ணாகுளத்திலுள்ள ராஜேந்திர மைதானத் திற்கும், ஃபைன் ஆர்ட்ஸ் ஹாலுக்கும் முன்னால் பரந்து விரிந்து கிடக்கும் ஏரிப்பகுதியாகும்). உடனே எல்லோருக்கும் அறிவிப்பு போகிறது. எர்ணாகுளம், முளவுகாடு, பனம்புகாடு போன்ற, கொச்சிக் கடற்கரையோரமுள்ள குட்டிக்குட்டித் தீவுகளில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள். அனை வரும் நாலாதிசைகளிலிருந்து அணிதிரண்டு, பல ஓடங்களில் கொடிகட்டி, கோஷம் போட்டபடி, நீர்வழித்தடங்கள் வழியாக பொதுக் கூட்டம் நடத்துவதற்காகத் தீர்மானித்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

பின்னர், பண்டிட் கருப்பனின் வழிகாட்டுதலின் படி, பல ஓடங்களைத் தண்ணீரில் சேர்த்துக் கட்டி, அவற்றின் மீது பலகைகளைப் போட்டு, மேலே பந்தல் அமைத்து, அலங்கரிக்கப்பட்டது.

அந்த வேளையில் பண்டிட் கருப்பனைத் தவிர, அன்றைய தீண்டாமை எதிர்ப்புப் போராளி களான திரு. கே.பி. வள்ளோன், திரு. கிருஷ்ணாதி ஆசான், திரு. பி.சி. சாஞ்சன், பண்டிட் கருப்பனின் உற்றத் தோழரான திரு. டி.கே. கிருஷ்ண மேனன் போன்றவர்களும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்றார்கள்.

இந்தப் புரட்சிகரமான ஏரிப் போராட்டம் நடைபெற்றது 1913-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதியாகும்.

ஏராளமான ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள், தங்கள் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து அங்கு வந்து கூடவே, பண்டிட் கருப்பன் தலைமையில் பொதுக்கூட்டம் ஆரம்பமானது.

‘உங்களைப் போல் நாங்களும் மனிதர்களே! இந்தப் பூமியில் எங்களுக்கும் வாழ உரிமையுண்டு’ - என்று, நம் நாட்டு ஆதிக்கச் சாதியினருக்கு எதிராகக் கொச்சியில், முதன்முதலில் ஒடுக்கப் பட்ட மக்கள் நடத்தியப் போராட்டம்- இந்த ஏரிப் போராட்டம்!

இந்தப் போராட்டம் பற்றிய சேதியானது, கொச்சியைச் சுற்றியுள்ள பிரதேசமெங்கும் காட்டுத் தீ போல் பரவியது.

கொச்சி மன்னருக்கும், அவரைச் சுற்றியிருந்த மேட்டிமைச் சாதியினருக்கும் எதிர்த்து, ஒன்றும் பேச இயலவில்லை. காரணம், நிலத்தில் வைத்து தானே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பொதுக் கூட்டம் நடத்துவதற்கு உரிமை மறுக்கப்பட்டது! ஏரியில் (தண்ணீரின் மீது) வைத்து நடத்தக்கூடாது என்று ஆணை பிறப்பிக்கவில்லையே!

இந்தப் போராட்டத்தை ஒட்டித்தான் ஒடுக்கப் பட்ட மக்கள், தங்கள் உரிமைகளைப் பெறுவதற் காக வேண்டி சாதிச் சங்கம் அமைத்தது!

இந்த ஏரிப் போராட்டத்தில் வைத்து எடுக்கப் பட்ட தீர்மானத்தின்படி, அதே ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி, எர்ணாகுளம் புனித ஆல்பர்ட் பள்ளிக் கூடத்தில் பண்டிட் கருப்பன் முன்கை எடுத்து, ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டி, வேறொரு மாநாடும் நடத்தினார். இந்த மாநாட்டில் வைத்து தான் ‘புலையர் மகாசபை’ அமைக்கப்பட்டது.

சபையின் தலைவராக திரு. கிருஷ்ணாதி ஆசானும், செயலாளராக திரு. பி.சி. சாஞ்சனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சமூகத்தின் கால் பாதங்களுக்கு அடியில் கிடந்து ‘நெரிந்து’ கொண் டிருந்த புலையர் சாதி மக்களின் முன்னேற்றமும், கல்வியறிவு பெறுதலும் சங்கத்தின் முக்கிய நோக்கங் களாக அறிவிக்கப்பட்டன.

நம் நாட்டின் தென்கோடியில் நடைபெற்ற இந்தக் ‘கொச்சி காயல் சமரம்’ (ஏரியில் வைத்து நடத்தப்பட்டப் போராட்டம்), ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்த மண்ணில் உரிமை கிடையாது என்றும், ஒற்றுமையாக ஒன்றுகூடி பொதுக் கூட்டம் நடத்துவதற்கு உரிமை கிடையாது என்றும் காலம் காலமாக சாதிய ரீதியாகக் கட்டுப்படுத்தி வைத் திருந்த இந்திய சாதி அமைப்பிற்கும், வருணாசிரம தர்மத்திற்கும் எதிராக கொச்சியில் வாழும் ஒடுக்கப் பட்ட மக்கள் கிளர்ந்தெழுந்து நடத்திய முதல் போராட்டம் என்று இதைக் குறிப்பிடலாம்.

மட்டுமல்ல! சமூக வரலாற்றில் இந்தக் ‘காயல் சமரமு’ம், புலையர் மகா சபையின் பிறப்பும் பொன் னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை களாகும்.

Pin It