kolathoormani_kovairamakrishnan 

பெரியார் திராவிடர் கழகத்தின் மாணவர் பிரிவும், முன்னணி அமைப்புமான தமிழ்நாடு மாணவர் கழகத்தின் முதல் மாநாடு கல்வி உரிமை மீட்பு மாநாடாக சேலம் நகரில் 6.8.2011 அன்று காலை முதல் மாலை வரை விஜயராகவாச்சாரியார் அரங்கத்தில் எழுச்சியுடன் நடந்தது. திராவிடர் இயக்க வரலாற்றில் முத்திரைகளை பதித்த பெருமை சேலம் நகருக்கு உண்டு. இதே சேலத்தில்தான் 1944 இல் திராவிடர் கழகம் உதயமானது. இதே சேலத்தில்தான், 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் ‘ராமன், கிருஷ்ணன்’ கடவுள் படங்கள் செருப்பால் அடிக்கப்பட்டு, அது நாடு முழுதும் அதிர்வலைகளை உருவாக்கியது.

 

பெரியார் திராவிடர் கழகம் மாணவர்களிடையே பகுத்தறிவு கல்வி உரிமை, சமூக நீதி சிந்தனைகளைக் கொண்டு செல்லும் நோக்கத்தோடு தமிழ்நாடு மாணவர் கழகம் என்ற முன்னணி அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டது. கோவை சட்டக் கல்லூரி மாணவர் பன்னீர் செல்வத்தை அமைப் பாளராகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, அதன் களச் செயல்பாடுகளை பரப்புரைப் பயணத்திலிருந்து தொடங்கியது. பொள்ளாச்சி - கோவை - கிருஷ்ணகிரியிலிருந்து 3 அணிகளாக பரப்புரைக் குழுவினர் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். பள்ளி, கல்லூரி வாயில்களில் கல்வி உரிமை, பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பி, கோரிக்கைகளை விளக்கும் துண்டறிக்கைகளை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி இறுதியாக சேலம் வந்து சேர்ந்தனர்.

காலை 11 மணியளவில் மாநாடு தொடங்கியது. கோவை மாணவர் நேரு தாஸ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தொடக்கவுரை நிகழ்த்தினார். ‘கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்’ என்ற தலைப்பில் மாணவர் காரைக்கால் விமல், ‘கல்வி கொள்ளை’ என்ற தலைப்பில் மாணவர் சேலம் தீபக், ‘சமச்சீர் கல்வியும் பார்ப்பனர்களும்’ என்ற தலைப்பில் சென்னை மாணவி ஜெயந்தி ஆகியோர் விரிவான கருத்துரைகளை வழங்கினர். திண்டிவனம் மக்கள் கல்வி இயக்கத் தலைவர் பேராசிரியர் பிரபா. கல்வி மணி சிறப்புரை நிகழ்த்தினார்.

சமச்சீர் கல்வி பற்றி தேர்தல் அறிக்கையில் எந்தக் கருத்தையும் கூறாத அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, திடீரென்று சமச்சீர் கல்வியை நிறுத்தியதை வன்மையாகக் கண்டித்த பேராசிரியர் கல்விமணி, இதில் மாணவர்களுக்கு பாடநூல் வழங்கும் தேதியை தள்ளிப் போட்டு வரும் உச்சநீதி மன்றத்தின் போக்கு கண்டிக்கத்தக்கது என்றார். தரமான கல்வியை தாய்மொழியில் மட்டுமே வழங்க முடியும்; மெட்ரிகுலேசன் பள்ளிகள் வழங்கும் கல்வி தரமற்றவை. அவைகள், 9 ஆம் வகுப்பில், 10 ஆம் வகுப்பு பாடத்தையும், மேல்நிலைக் கல்வியில் 11 ஆம் வகுப்பிலேயே 12 ஆம் வகுப்பு பாடத்தையும் நடத்தி விட்டு, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பாடங்களையே நடத்தாத பள்ளிகள் எப்படி தரமான பள்ளிகளாகும் என்று கேட்டார்.

ஆந்திராவில் இருப்பதைப்போல் ‘பிளஸ் 1’, ‘பிளஸ் 2’ இரண்டுக்கும் தனித்தனியே பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத் தினார். சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் தரமான கல்வி பெறுகிறார்கள் என்ற வாதத்தை மறுத்த அவர், 1992 இல் சி.பி.எஸ்.சி. மதிப்பெண் மோசடி நடந்தபோது, நுழைவு தேர்வு மதிப்பெண்ணை மட்டுமே வைத்து தொழில் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கப்பட்டனர். அதில் 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம் என்று நீதிபதி மிஸ்ரா தீர்ப்பளித்த நிலையிலும் 1 புள்ளி 2 சதவீதம் மட்டுமே அவர்களால் தேர்வு பெற முடிந்தது. இதுதான் சி.பி.எஸ்.சி. வழங்கும் கல்வித் தரம் என்றார் கல்விமணி.

அகில இந்திய நுழைவுத் தேர்வுகளுக்கான வினாத்தாள், மாநில மொழிகளிலேயே வழங்கப் படாததை சுட்டிக் காட்டிய அவர், தமிழ்நாட் டிலேயே பொறியியல் மாணவர் சேர்க்கையில் முதலாவதாக வந்த மாணவன் அசோக் குமார், மத்திய உயர்கல்விக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வை எழுத முடியாது; காரணம் அந்த மாணவர் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர். ஆனால் கேள்வித்தாளோ தமிழில் கிடையாது என்று சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவுரையாற்றினார். 2.30 மணி யளவில் காலை நிகழ்ச்சிகள் முடிந்தன. அனை வருக்கும் மாநாட்டு குழுவினர் சார்பில் புலால் உணவு வழங்கப்பட்டது.

இடைவேளையில் மேட்டூர் டி.கே.ஆர். குழு வினரும் தோழர் நாத்திகனும் கொள்கைப் பாடல்கள் பாடினர். 3.30 மணியளவில் மாநில அமைப்பாளர் கோவை பன்னீர் செல்வம் தலைமையில் மாநாடு நிகழ்ச்சிகள் தொடங்கின. தலைவர் உரையைத் தொடர்ந்து ‘உயர்கல்வியும் வகுப்புரிமையும்’ என்ற தலைப்பில் சேலம் மாணவி தமிழ் மதி; ‘உயர் கல்வியும் பன்னாட்டு நிறுவனங்களும்’ என்ற தலைப்பில் மாணவர் பொள்ளாச்சி நாட்டுத் துரை உரையாற்றினர். மக்கள் கண்காணிப்பக இயக்குனரும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கான தமிழ்நாடு அரசு சிறப்பு பிரதிநிதியுமான கா. ஹென்றி டிஃபேன் சிறப்புரையாற்றினார். கட்டாயக் கல்விச் சட்டத்தில் அடங்கியுள்ள முற்போக்கான கூறுகளை அவர் விளக்கி, இந்த சட்டத்தை அமுல்படுத்துவதை மத்திய அரசும், பல மத்திய மாநில அரசுகளும் விரும்பவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். தமிழ்நாடு அரசு இந்த சட்டத்தை அமுல்படுத்து வதற்காக உருவாக்கிய விதிமுறைகள் சட்டத்தின் நோக்கத்தையே சிதறடிப்பதாக உள்ளது. தேசிய அளவில் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதைக் கண்காணிக்கும் அதிகாரபூர்வ அமைப்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் பிரதிநிதிகளில் ஒருவர் ஹென்றி டிஃபன். எனவே கல்வி உரிமைகளை மீறிச் செயல்படும் கல்வி நிறுவனங்களைக் கண்காணித்து, அதை எதிர்த்துப் போராடும் போராளிகளாக தமிழ்நாடு மாணவர் கழகம் செயல்பட வேண்டும் என்றும், புகார்களை தம்மிடம் தெரிவிக்கலாம் என்றும் தமது மனித உரிமை அமைப்புகள் இதற்கு துணை நிற்கும் என்றும் பெரியார் திராவிடர் கழக மாணவரணியோடு இணைந்து செயலபட தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.

தொடர்ந்து - தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இறுதியில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாநாட்டை வாழ்த்தி நிறைவுரையாற்றினார். 6 மணியளவில் மாநாடு நிறைவடைந்தது. அரங்கம் முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. 300 மாணவ மாணவியர்கள் மாநாட்டில் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்க சிறப்பாகும். கோவையிலிருந்து மாணவர்கள் தனிப் பேருந்தில் வந்து மாநாட்டில் பங்கேற்றனர்.

6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைவருக்கும் கல்வியைக் கட்டாயமாக்கும் சட்டம் 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கான விதிமுறைகளே இன்னும் தமிழ்நாட்டில் உருவாக்கப்படவில்லை. புதிய ஆட்சி அதற்கான விதிமுறைகளை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று இந்த மாநாடு அரசை வற்புறுத்துகிறது.

முன் மொழிந்தவர்: சிலம்பரசன் - செங்கை சட்டக் கல்லூரி

பொதுக் கல்வி முறையை மத்திய அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். முதற்கட்டமாக பொதுக் கல்வி முறைக்கு முன்னோட்டமாக மாநில அரசு, சமச்சீர் கல்வி என்று வழங்கப்படும் பொதுப் பாடத் திட்டத்தை இந்த ஆண்டே இப்போதே நடைமுறைப்படுத்த வேண்டும். உச்சநீதிமன்றம் பலமுறை வற்புறுத்திய பிறகும் கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்கால வாழ்வில் அக்கறையின்றி வீண்பிடிவாதத்தால் பொதுப் பாடத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

முன் மொழிந்தவர்: சிலம்பரசன் - கோவை சட்டக் கல்லூரி

கல்விக்கான உரிமைகள் மாநில அரசுகளின் கீழ் இல்லை . 1976 ஆம் ஆண்டில் கல்வி உரிமையை மாநில அரசுகளால் அதிகாரம் செலுத்த இயலாத - முடிவு எடுக்க இயலாத பொதுப் பட்டியலுக்கு மத்திய அரசு பறித்துச் சென்றுவிட்டது. தமிழ் நாட்டின் வகுப்புரிமைக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரான மத்திய அரசின் செயலை இந்த மாநாடு வன்மையாகக் கண்டிப்பதோடு மாநில அரசு உடனடியாக கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

முன் மொழிந்தவர்: பிரபாகரன் - கோவை சட்டக் கல்லூரி

மத்திய அரசால் தேசிய உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆணையம் என்ற நிறுவனம் உருவாக்கப் பட்டு இந்தியா முழுவதிலுமுள்ள பொறியியல் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் அதில் ஒருங் கிணைக்கப்பட உள்ளன. பொறியியல், மருத்துவம், வணிக மேலாண்மை போன்ற படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. பள்ளிகளிலேயே மேல்நிலைக் கல்வியில் இந்தியா முழுவதற்கும் பொதுப் பாடத் திட்டம் வர உள்ளது. இதனால் தேசிய இனங்களின் உரிமை களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமைகளுக்கும் எதிரான தேசிய உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆணையத்தை இழுத்து மூட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

முன் மொழிந்தவர்: வீரபெருமாள் - தூத்துக்குடி காமராசர் கலைக் கல்லூரி

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் பொறியியல் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்கள் அவர்களுக்கான இடஒதுக்கீட்டில் பாதி அளவுக்குக்கூட விண்ணப்பிக்கவில்லை என்று வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. உயர் கல்வி பெறுவதில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பின்தங்கியிருப்பதையே இது காட்டுகிறது. எனவே மராட்டிய மாநிலத்தைப் போல அனைத்து அரசு மற்றும் தனியார் நடத்தும் மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்நுட்பக் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கான முழுமையான கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் என மாநாடு வலியுறுத்துகிறது.

முன் மொழிந்தவர்: ராசேசுவரன் - நெல்லை இந்துக் கல்லூரி

தனியார் கல்விக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த அரசு முன்வர வேண்டும். சென்னை எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளியின் 11 ஆவது வகுப்பிற்கான கட்டணம் 11 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டணம் குறித்த விவரங்களை பள்ளிகள் வெளிப்படையாக அறிவிக் காமல், ரகசியமாக வைத்துக் கொண்டு விருப்பம் போல் பணம் வசூலிக்கின்றன. இது தவிர சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் கட்டணத்தை அந்தந்த பள்ளிகளே தீர்மானித்துக் கொள்ள நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழு அனுமதித்துள்ளது. கல்வி நிறுவனங்களின் கொள்ளைக்கு இது மேலும் வழி வகுக்கும். அரசு இதில் தலையிட்டு, குறைந்த பட்சம் கடந்த ஆண்டு வசூலித்த கட்டணத்தையாவது இந்த ஆண்டு வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிக் காசோலைகளை, வரைவோலைகள் மூலம் மட்டுமே கட்டணம் பெறுவதை கட்டாயமாக்க வேண்டும்.

முன் மொழிந்தவர்: இராசாகிருட்டிணன் - மதுரை

மருத்துவக் கல்வியில் நாடு முழுவதுக்கும் பொது நுழைவுத் தேர்வைக் கொண்டுவரத் துடிக்கும் இந்திய மருத்தவக் கழகத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படாது என அறிவித்திருக்கும் தமிழக முதல்வருக்கு இம்மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

முன் மொழிந்தவர்: கார்த்திக் - அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பழனி

மத்திய அரசின் அனுமதி பெற்று புற்றீசல் போல் தனியார் பல்கலைக்கழகங்கள் வரத் தொடங்கி விட்டன. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கும் கதவு திறந்து விடப்பட்டுவிட்டது. சென்னையிலும், மும்பையிலும், டெல்லியிலும் பல்வேறு அந்நிய நாட்டு கல்வி நிறுவனங்கள் கால் ஊன்றிவிட்டன. இந்தியாவில் கனிம வளங்களைக் கொள்ளையடிக் கும் வேதாந்தா குழுமமும், டாடா குழுமமும், ரிலையன்ஸ் குழுமமும் உயர்கல்வியில் தமது வணிகத்தைத் தொடங்கிவிட்டன. நூற்றுக் கணக்கான தனியார் கல்லூரிகளிலும், தனியார் பல்கலைக் கழகங்களிலும் அந்நிய நாட்டு கல்வி நிறுவனங்கள் கல்வி ஒப்பந்தங்களைப் போட்டு பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வணிகக் கொள்ளையை நடத்தி வருகின்றன. இந்நிலையில் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டியதில்லை என்றும் கல்விக் கட்டணங்களை அந்நியர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் கபில்சிபல் அறிவித்தார். உயர்கல்வியில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் வட இந்திய, இந்திய தேசிய முதலாளிகளின் வணிகக் கொள்ளைக்குக் கதவு திறந்துவிட்டுள்ள மத்திய அரசை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

முன் மொழிந்தவர்: செந்தில் குமார் - பாரதிதாசன் பல்கலை, திருச்சி

சட்டம் படித்தவர்கள், ‘அகில இந்திய நுழைவுத் தேர்வு’ எழுதி தேர்ச்சிப் பெற்ற பிறகே தொழில் நடத்த முடியும் என்ற மத்திய அரசின் திட்டம், சமூக நீதிக்குப் பெரும் தடையாகும். தமிழ் நாட்டில் நுழைவுத் தேர்வுகளை ஒழித்ததால்தான் கிராமப்புற - ஏழை, எளிய மக்கள் உயர் கல்வி பெறும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மீண்டும் ஏதேனும் ஒரு வடிவில் நுழைவுத் தேர்வுகளைத் திணிப்பது கல்வியைப் பரவலாக்குவதற்கு எதிரான ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சியேயாகும். சட்டக் கல்லூரி மாணவர் களுக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என இம்மாடு வலியுறுத்துகிறது.

முன் மொழிந்தவர்: மலைக்கொழுந்தன், கரூர்

மக்களின் வரிப் பணத்தில் பல்லாயிரம் கோடி செலவில் அய்.அய்.டி., அய்.அய்.எம்., ஏ.அய்.எம்.எஸ். போன்ற உயர் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள், உயர்சாதியினரின் ‘அக்கிரகாரங்களாகவே’ செயல் படுகின்றன. அந்த நிறுவனங்களில் பிற்படுத்தப்பட் டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு செய்து, மத்திய அரசு சட்டம் கொண்டு வந்த பிறகும், இட ஒதுக்கீடுகள் மறுக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டோருக்கு 22.5 சதவீத இடஒதுக்கீடு இருப்பதாகச் சட்டம் சொன்னாலும் நடைமுறை யில் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய மொத்தமான முழுமையான இடங்கள் பூர்த்தியாக விடாமல் பொதுப் போட்டியில் வென்று வரும் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி. மாணவர்களின் எண்ணிக் கையை இடஒதுக்கீட்டுக் கணக்கில் சேர்த்து தொடர்ந்து முறைகேடுகளைச் செய்து வரும் மத்திய அரசை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

முன் மொழிந்தவர்: சதீசு குமார் - சசூரி பொறியியல் கல்லூரி, அன்னூர்

எஸ்.ஆர்.வி. போன்ற தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சாதி ரீதியாக இழிவுபடுத்தப்பட்டும், மாணவிகள் பாலியல் ரீதியாக தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்பட்டும், தற்கொலை செய்து கொண்டார்கள் என்று மூடி மறைக்க முயற்சி செய்யப்படும் - கொல்லப்படும் நிகழ்வுகள் நடந்த வண்ணமாக உள்ளன. இது குறித்து காவல்துறையும், அரசும் உரிய கவனம் செலுத்தி, உண்மை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

முன் மொழிந்தவர்: ராமர் - சரபோசி கலைக் கல்லூரி, தஞ்சை

- நமது செய்தியாளர்

Pin It