சுவர்களை ‘சுயமரியாதைக் கள’மாக்கியவர்
தமிழ்நாட்டுச் சுவர்களை ‘சுயமரியாதைக் களமாக்கிய’ சுவரெழுத்து சுப்பையா, பெரியார் இயக்க வரலாற்றில் நீங்காத இடம் பெற்றவர்களில் ஒருவர். சொந்த வாழ்க்கையை மறந்து கொள்கை வாழ்க்கை வாழ்ந்தவர். சாலை போடுவதற்காக வீதிகளில் கிடத்தப்பட்டுள்ள தார்க் குவளைகளில் உள்ள தாரில் கெரசினைக் குழைத்து துண்டுத் துணியை அந்தக் கலவையில் நனைத்து, சுவர்களில் எழுதுவதே அவரது வழக்கம். கையில் தார்ச் சட்டியுடன் ஊருக்கு ஊர் நடந்தே செல்வார். வழிநெடுக சுவர்களில் எழுதிக் கொண்டே போவார்.
பெரியாரின் சுயமரியாதை கருத்துகளை சொற் சித்திரமாக அவரது சிந்தனையில் செதுக்கி, உள்ளத்தில் பதியச் செய்யும் சொற்களில் எழுதுவார். கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, புராணம், தமிழ் இலக்கியம், பெண்ணுரிமை, சுயமரியாதை வாழ்வியல் என்று அவரது சிந்தனை ஆழமாக பரந்து விரிந்திருந்தது.
தன்னிடம் நெருக்கமாகப் பழகிய தோழர்களிடம் தனது கைப்பட எழுதிய நாட்குறிப்பை அவர் தந்திருந்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணியிட மும், அவரது நாட்குறிப்பு ஒன்று இருந்தது. அவரது இறுதி காலத்தில் நெருங்கிப் பழகி, உதவிகள் புரிந்த கோவை ஆறுச்சாமியிடமும், அவரது நாட்குறிப்பு ஒன்று இருந்தது. கழக சார்பில் இதை நூலாக வெளிக் கொண்டுவர தோழர் ஆறுச்சாமி, மேற்கொண்ட இடைவிடாத முயற்சியால் இப்போது நூலாக வெளி வந்துள்ளது.
17.4.2011 ஞாயிறு அன்று மாலை 7 மணிக்கு, கோவை வி.கே.கே. சாலையில் கோவை மாவட்ட பெரியார் திராவிடர் கழக சார்பாக, “சுவரெழுத்துப் புரட்சியாளர் சுவரெழுத்து சுப்பையா சிந்தனைப் பொறிகள்” நூல் வெளியீட்டு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. தோழர் சிற்பி ராசன், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியோடு துவங்கிய, இந்நூல் வெளியீட்டு விழா நிகழ்விற்கு, கழகப் பொதுச் செய லாளர் கோவை கு. இராமகிருட்டிணன் தலைமை யேற்றார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் வெ. ஆறுச்சாமி வரவேற்புரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நூலை வெளியிட, துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் பெற்றுக் கொண்டார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரை ஆற்றினார். இரா. இரஞ்சித் பிரபு நன்றியுரை ஆற்றினார்.
(கட்டுரை - உள்ளே)
‘தார்ச்சட்டியை தலையில் கவிழ்த்தது காவல்துறை’
மயிலாடுதுறையில் பெரியார் இயக்கத்தின் உறுதியான தொண்டர் மறைந்த டெய்லர் மாரிமுத்து. சுவர் எழுத்து புரட்சியாளர் சுப்பையாவுடன் நெருக்கமாக குடும்பத்துடன் பழகியவர். தனது சொந்த வாழ்க்கையை எவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பாதவர் சுப்பையா. ஆனாலும் டெய்லர் மாரிமுத்துவிடம் கொண்டிருந்த நெருக்கமான கொள்கை நட்பால், சுப்பையாவின் வாழ்க்கைப் பாதையை அவர் பகிர்ந்து கொண்டார். ‘சுவரெழுத்து புரட்சியாளர் சுப்பையா சிந்தனைப் பொறிகள்’ நூலுக்கு தோழர் மாரிமுத்து, மறைவுக்கு முன் வழங்கிய அணிந்துரையை கழக இளைய தலைமுறையினர் அறிவதற்காக இங்கு வெளியிடுகிறோம்.
காரைக்குடிக்கு அருகில் உள்ள சூரக்குடி கிராமம் தான் சுவரெழுத்து சுப்பையாவின் சொந்த ஊர். இளமையில் அவர் மயிலாடுதுறை அஞ்சலகம் அருகில் தேனீர்க் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அருகிலிருந்த தாயுமானவன் என்ற தையல் கடைக்காரர் பெரியாரைப் புகழ்ந்து பேசியபோது சுப்பையா அவரிடம் எதிர்வாதம் செய்து பெரியாரை தப்பாகப் பேசிவிட்டார். கோபமுற்ற தாயுமானவன் இவரை அடித்து விட்டு, பெரியாரைப் பற்றித் தெளிவாக விளக்கியுள்ளார். அதன்பின் பெரியார் என்னதான் சொல்கிறார் எனக் கவனிக்க ஆரம்பித்து அடிக்கடி பெரியாரின் கூட்டங்களுக்குச் சென்று அவர் பேச்சைக் கேட்டு சிந்திக்கத் தொடங்கினார்.
முற்றிய இளமையில் மயிலாடுதுறை நண்பர்கள் இவருக்கு ஒரு துணை வேண்டும் என்று எண்ணி திருமணம் செய்வதென முடிவு செய்தனர். பல நாட்கள் தட்டிக் கழித்து விட்டு இவரும் சரியென தலையாட்டிச் சம்மதித்தார். இந்தப் பொறுப்பை யார் செய்வதென யோசித்து, “பேட்டை தானா” என்று அழைக்கப்பட்ட கழகத்தின் மூத்த தொண் டரும் பெருநிலக்கிழாருமான முத்துப்பேட்டை தருமலிங்கம் அவர்களிடம் சொன்னார்கள். பெரியார் கூட்டம் மயிலாடுதுறையில் நடக்கின்ற போதெல் லாம் முத்துப்பேட்டை தருமலிங்கம் அங்கு வந்து விடுவார். அவர் சொன்னால் சுவரெழுத்துச் சுப்பையாவும் காது கொடுத்துக் கேட்பார் என்பதால் அவரிடம் சொன்னோம். அதே போல, நடிகவேள் எம்.ஆர்.ராதாவிடம் சுப்பையா நெருக்கமாக இருந்தார். எம்.ஆர். ராதாவும், பேட்டைதானாவும் நல்ல நண்பர்கள். (கம்யூனிஸ்டுகளை அரசு ஒடுக்கிய போது, மணலி கந்தசாமி போன்ற பல கம்யூனிஸ் டுகளை அரவணைத்துக் காப்பாற்றியவர்களில் இந்த இருவரும் முக்கியமானவர்கள்) எனவே, எம்.ஆர். ராதாவிடம் சொல்லி திருமண ஏற்பாடு செய்வோம். அவர் மூலம் அறிவித்தால் பணம் சேர நல்ல ஏற்பாடாக இருக்கும் என்று “தானா” அவர்கள் இராதாவிடம் சொல்லி பணம் வசூல் செய்யத் தொடங்கினார். திருமணம் செய்வதென்றால் திருமணச் செலவு மட்டுமின்றி குடியிருக்கக் கூரை வீடாவது வேண்டும். எனவே, கிடைக்கின்ற பணத்தையெல்லாம் அவ்வப்போது சுப்பையா அவர்களிடம் கொடுத்து வந்தோம். அவர் சுவரெழுத்து செய்கின்ற பணிக்கே செலவழித்து விட்டார். பின்னர் திருமண எண்ணமே நீர்த்துப் போய்விட்டது.
ஒரு முறை, சென்னையில் சுவரெழுத்து செய்து கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் தந்த புகாரின் பேரில் தார் சட்டியுடன் அவரை காவல் நிலையத் திற்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் காவலர்கள் தார்சட்டியை இவரது தலையில் கவிழ்த்து விட்டனர். யார் உதவியும் கோராமல் உழைப்பின் பரிசு என சுப்பையா பேசாமல் இருந்து விட்டார். இவரைத் தெரிந்தவர் சென்னையில் உள்ள தோழர்களுக்குத் தகவல் சொல்ல தோழர்கள் உடனே காவல் நிலையத்திற்குச் சென்று இவரை விடுவித்த துடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே ஒழிய அடாத செயல் செய்யக் கூடாது எனக் கூறி, அந்தக் காவலரை மன்னிப்புக் கேட்கச் செய்த பின்னரே அவரைத் திரும்ப அழைத்துச் சென்றனர்.
காவலர் செய்த அடாவடித்தனமான செயலால் சுவரெழுத்து சுப்பையாவின் கண்கள் மிக விரைவாக ஒளியை இழந்து மங்கத் தொடங்கியது. அந்தக் குறைந்த பார்வையோடுதான் தனது இறுதிக் காலம் வரை சுப்பையா அவர்கள் தனது பணியைச் செய்தார். பார்வைக் குறைவு அவரது கொள்கையை - கடமையை - உழைப்பை குறைத்து விடவில்லை.
இராஜகோபாலாச்சாரி குலக் கல்வித் திட்டம் கொண்டு வந்த போது, அதனை எதிர்த்து மன்னார்குடியில் சுவரெழுத்து செய்து வந்தார். அங்கு ஒரு சுவரில் இவர் எழுதிக் கொண்டிருந்தபோது பார்ப்பனர் ஒருவர் இவரைக் குச்சியால் தட்டினார். ஏனென்றால், அது அந்தப் பார்ப்பனரின் வீடு. இவர் எழுதிக் கொண்டே இருந்தார். அந்த பார்ப்பான் தட்டிக் கொண்டே இருந்தான். இவர் எழுதி முடித்த பின் தான் திரும்பிப் பார்த்தார். இவரது வழக்கமே இதுதான். சுவரெழுத்துச் செய்கின்றபோது யாராவது திட்டினாலும் கூட திரும்பியே பார்க்க மாட்டார். தன்னுடைய வேலை முடியும் வரை எந்த இடை யூறும் அவரைத் தடுக்க முடியாது. அதுபோலவே, அன்றும் எழுதிய பிறகே திரும்பிப் பார்த்தார்.
“யாரைக் கேட்டுடா என் சுவற்றில் எழுதினாய்” என்று அந்தப் பார்ப்பான் கேட்டான். “யாரை கேட்டுடா இராமானுஜர் பிரச்சாரம் செய்தார்?” என்று சுப்பையா எதிர்க் கேள்வி கேட்டார். அந்தப் பார்ப்பனர் சிறிது நேரம் எதுவும் பேசாமல் யோசித்தபடியே நின்று கொண்டிருந்து விட்டு தானே வீட்டுக்குள் சென்று தாழிட்டுக் கொண்டார்.
அதுபோல, தந்தை பெரியாரைப் பற்றி யாராவது தவறாகப் பேசினால் பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டார். விபூதி வீரமுத்து என்று ஒரு நபர் இருந்தார். பக்தி நிகழ்ச்சிகளிலும் கூட்டங்களிலும் கலந்துகொண்டு பேசுவார். இவரது பேச்சில் நாகரிகமே இருக்காது. கொச்சையாகப் பேசுவதே இவரது பேச்சின் சாரம். இவர் நிகழ்ச்சியில் தந்தை பெரியாரைப் பற்றியும் தரக்குறைவாகப் பேசுவதுண்டு. ஒரு முறை மயிலாடுதுறையில் லாகடம் என்ற பகுதியில் இவரது கூட்டம் போட்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் சுவரெழுத்து எழுதும்போது சுப்பையா அவர்கள், “கறுப்புக்கு மறுப்புக் கூறும் வீரமுத்துக்கு செருப்புப் பரிசு” என்று எழுதி விட்டார். இது தோழர்களைச் சூடு ஏற்றும் வகையில் அமைந்துவிட்டது. கூட்டம் தொடங்கி, நடக்கும் போது வீரமுத்து தந்தை பெரியாரைப் பற்றி விமர்சிக்க தொடங்கியவுடன் கூட்டத்தில் கலந்து இருந்த தோழர்கள் மேடையை நெருங்கி தகராறு செய்து அடிதடி ஆகிவிட்டது. விபூதி வீரமுத்து மேடையில் இருந்து தப்பி, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி ஒளிந்து கொண்டார். கூட்டம் நிறுத்தப்பட்டு விட்டது.
சுப்பையா அவர்களுடைய எழுத்து உணர்ச்சியைத் தூண்டுவதாக மட்டுமே இருந்ததில்லை. படித்தவர்களை சிந்திக்கத் தூண்டும்; கேள்வி கேட்கத் தூண்டும்; இப்படியும் பதில் சொல்ல முடியுமா! என்று புது வழியை உருவாக்கும். “பார்ப்பானே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு” என்ற முழக்கம் தமிழ்நாட்டில் எழுந்தபோது, திருவாரூர் சுவர்களில் “பார்ப்பானே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு” என்று சுப்பையா அவர்கள் எழுதி வைத்திருந்தார். அப்படி எழுதப்பட்டிருந்த சுவரில் சிலர், “அவர்கள் எங்கே போவார்கள்?” என்று அருகிலேயே எழுதி வைத்து விட்டனர். அடுத்த நாளே அவர்கள் எதிர்த்து எழுதிய இடத்திலேயே “மேலே ஏழு லோகம், கீழே ஏழு லோகம் இருக்கிறது என்கிறான்களே பார்ப்பான்கள். அங்கே ஏதாவது ஒரு லோகத்துக்குப் போகட்டுமே, உனக்கேனடா அந்தக் கவலை” என்று மடக்கி எழுதி வைத்தார். பின்னர் அதற்கு எதிர்க் கேள்வி வரவில்லை.
அவருடைய சுவரெழுத்து எத்தனையோ பேரை தந்தை பெரியாரின் இயக்கத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. அவரைப் போல சுவற்றில் சிந்தனைகளை எழுதிக் குவித்தவர் இதுவரை யாருமே இல்லை. ட