சேலம் பல்கலையில் நடந்த பெரியார் விழாவில் பேராசிரியர் மூர்த்தி பேசுகையில் பெரியாரின் கைத்தடியே இன்று தேவைப்படுகிறது என்றார்.

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் முப்பெரும் விழாவின் முதல் நாளாக 1.11.2010 புதன்கிழமை அன்று காலை முதல் மாலை வரை பெரியார் விழா நடைபெற்றது. பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முத்துச்செழியன் விழாவினை துவக்கி வைத்துப் பேசினார். பேராசிரியர் மூர்த்தி, “பெரியார் இன்றும் தேவைப்படுகிறார்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அவர் தனது உரையில், “எந்த பெருமையைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல், மக்கள் தேவைக்காக களம் கண்டவர் பெரியார். அது மட்டும் இல்லாமல் எந்த ஒரு மனிதரையும் மகாத்மா என்பதற்காகவோ, பெரிய அறிஞன் என்பதற்காகவோ பாராட்டியவர் அல்ல பெரியார். தந்தை பெரியார் அவர்களின் அளவுகோல் என்பது ஒரு மனிதன் இந்த சமூகத்திற்கு பயன்படுகிறானா  இல்லையா என்பதுதான். மற்ற தலைவர்களுக்கெல்லாம் இல்லாத சிறப்பு தந்தை பெரியாருக்கு என்னவென்றால், இந்த சமூகத்திலுள்ள அனைத்து ஏற்ற தாழ்வுகளுக்கும் அடிப்படையாக இருக்கக்கூடிய வர்ண தர்மத்தை அடையாளம் காட்டியவர். தந்தை பெரியாரின் தேவையை தமிழ்நாட்டில் இருப்பவர்களைவிட, வடநாட்டில் இருக்கக்கூடிய என்னைப் போன்றவர்கள் நன்கு அறிவார்கள். இன்றும்கூட தொழிற்சங்கங்களை நிர்வகிக்கும் திறமைகூட உங்களுக்கு இல்லையென்றால், நீங்கள் எப்படி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உருவாக்க முடியும் என்று தொழிலாளர்களைப் பார்த்துக் கேட்டார். உங்கள் தொழிற் சங்கங்களுக்கு அரசியல்வாதிகளின் தலைமையை ஏற்காதீர்கள். உங்கள் தலைமையை அரசியல்வாதிகளை ஏற்கச் செய்யுங்கள் என்றார். பெரியாரை புகழ்வது, பெரியாருக்கு சிலை வைப்பது என்பதைவிட, பெரியாரின் கைத்தடி இன்றும் தேவைப்படுகிறது என்று பேசினார்.

 சமீபத்தில் பெரியார் விருது பெற்றதற்காக பாராட்டப்பட்ட தமிழக மேலாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஏற்புரை வழங்கினார். அடுத்து கவிஞர் வைரமுத்து சிறப்புரை யாற்றினார். தொடர்ந்து “நம் பெரியார்” என்ற தலைப்பில் மக்கள் சிந்தனை பேரவை நிறுவனரும், பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்தவருமான ஸ்டாலின் குணசேகரன் உரையாற்றி னார். இறுதியாக முனைவர் இராமசாமி, தஞ்சை நிஜ நாடகக் குழு சார்பாக “தோழர்கள்” நாடகம் நடைபெற்றது.

Pin It