ஆதி காலத்தில் நரகாசுரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம். திருமாலுக்கும், பூமா தேவிக்கும் பிறந்த அவன் தேவர்களையெல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம்.

தேவர்கள் இதைப் பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட்டார்களாம். உடனே திருமால் நரகாசுரனைக் கொல்லுவதாக வாக்களித் தாராம். அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும், பூதேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்த நரகாசுரனைக் கொன்று விட்டார்களாம்

நரகாசுரன் சாகும் போது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டானாம்.

கிருஷ்ணன், ‘அப்படியே ஆகட்டும்’ என்று வாக்களித்தாராம்.

அதற்காக வேண்டி மக்கள் எல்லோரையும் கொண்டாடும்படி கடவுள் செய்து விட்டாராம்.

ஆதலால் நாம் கொண்டாடுகிறோமாம்; அல்லது கொண்டாட வேண்டுமாம்.

இதை நமது பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்ப்போம். முதலாவதாக, இந்தக் கதை உண்மையாய் இருக்க முடியுமா?

‘எல்லா உலகங்களையும் உண்டாக்கிய நான் முகனைப் பெற்றவரும், உலகங்களை எல்லாம் காத்து வருபவரும், தேவர்கள் தலைவருமாகிய திருமாலுக்கும் பூமி தேவிக்கும் எப்படி குழந்தை பிறக்கும்? (பூமி தேவி என்றால் பூமி அல்லவா?) பிறந்தவன் எப்படி அசுரனானான்? அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படித் தீய செயல்களைச் செய்தான்? அப்படித்தான் செய்தாலும்,அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான்? அப்படி இருந்தாலும், தானே வந்துதான் கொல்ல வேண்டுமா? மேற்படி நரகாசுரனைக் கொன்ற போது, அவன் தாயாகிய பூமிதேவியும் சத்திய பாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை! இவள்தான் உலகத்தையெல்லாம் காப்பாற்றுகிறளாம்!

உலக மக்கள் செய்யும் பாவங்களையெல்லாம் பொறுத்துக் கொள்கின்றாளாம்! ‘பொறுமையில் பூமி தேவிபோல்’ என்று உதாரணத்திற்குக்கூடப் பண்டிதரும் பாமரரும் இந்த அம்மையாரை உதாரணமாகக் கூறி வருகின்றனரே! இத்தகைய பூமி தேவியார் தனது மகனைக் கொல்லும்போது, தானும் உடனிருக்க வேண்டுமென்று திருமாலைக் கேட்டுக் கொண்டாளாம்!

என்னே தாயின் பாசம்!

தமிழர்களாகிய நம்மையே அசுரர்களென்றும் ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே தேவர்களென்றும் கற்பித்துக் கதைகட்டியிருக்கிற, தேவ - அசுரப் போராட்டத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிற இந்தக் கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம்! நாமே சிறந்த நாளாகக் கருதுகிறோம்! அந்தோ என் செய்வது? நம்மை ஏமாற்றி நம்மையே பழிக்கும் பார்ப்பனர்களின் கட்டுக் கதையை உண்மையென நாம் நம்பி, நாமே கொண்டாடி வீண் செலவு செய்வதென்றால், நமது சுயமரியாதையை என்னென்பது?

புராணங்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மையென்று ஒப்புக் கொண்டு நமது பகுத்தறிவையிழந்து, இந்தத் தீபாவளியைக் கொண்டாடும் நமது தமிழ் மக்களின் அறியாமையை என்னென்று கூறுவது?

சென்றது போக, இனிமேலாவது தீபாவளியை - அர்த்தமற்ற மூடப்பழக்கத்தை - நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக் கொள்ளும் செயலைக் குறித்து ஒரு காசாவது, ஒரு நிமிஷ நேரமாவது செலவு செய்ய வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

‘பகுத்தறிவு’ மலர் 2, இதழ் 7 கட்டுரை - 1936

Pin It