நவம்பர் 7 - மாலை 4.30 மணி.

அந்த அண்ணா நகர் காலனிப் பகுதியில் காடுகளுக்கு வேலைக்குப் போனவர்கள் அப்போதுதான் திரும்பிக் கொண்டிருந்தனர். இரவு உணவுக்காகச் சிலர் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். வயதானவர்கள் வருகிற தீபாவளிக்கு என்ன செய்யலாம் என்று வீடுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அண்ணாநகர் நுழைவாயிலில் உள்ள ஜோசப் என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகின்றன. வீடு திடுமெனத் தீப்பிடித்து எரிகிறது. ஆடு, மாடுகள் சிதறி ஓடுகின்றன. பெண்டு பிள்ளைகளின் கதறல் அந்தப் பகுதியையே நிலைகுலைய வைக்கிறது. "ஒரு பய இருக்கக் கூடாது. ஓடுங்கடி..." என்கிற மிரட்டல் சத்தம் ஒவ்வொரு வீட்டையும் தாக்கும்போது ஓங்காரமாய் ஒலிக்கிறது.

thirumavalavan_dharmapuri_640

அந்தத் தெருவின் கடைசி வீடு நிறைமாத கர்ப்பிணியாகவுள்ள புவனாவின் வீடு. அப்பா திருப்பூரில் வேலைபார்த்து வருகிறார். அம்மாவோ பக்கத்தில் உள்ள கடலைக் காட்டில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார். தாக்குதலிலிருந்து தப்பிக்க சோளக் கொல்லைக்குள் ஒளிந்து கொள்கிறார் புவனா. அவரது வீட்டுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், தவணை முறையில் வாங்கி வைத்திருந்த புதிய டிவிடி பிளேயர், டிவியை உடைத்துப் போட்டுவிட்டு பாத்திரங்களையும் சிதைத்துவிட்டுச் செல்கிறார்கள்.

புவனா 7 மணி வரை காட்டுக்குள் தனியாக நடந்தே போகிறார். அருகில் உள்ள கிராமத்தில் அடைக்கலம் கேட்கிறார். அவர்களோ, "அடைக்கலம் கொடுத்தா எங்களையும் அடிப்பாங்க... போ போ" என்று விரட்டுகின்றனர். வேறு வழியில்லாமல் அந்த நிறைமாத கர்ப்பிணி 10 கிலோ மீட்டர் தூரம் தனியாக நடந்தே சென்று பேருந்துகள் செல்லும் சாலையை அடைகிறார். போகிற வாகனங்களை வழிமறித்து 'லிப்ட்' கேட்டும்கூட அவருக்கு யாரும் உதவி செய்யவில்லை.

ஒரு வழியாக இரவு 10 மணிக்கு மேல் மீண்டும் அண்ணா நகர் சேரிக்குள் புவனா நுழையும்போது அப்பகுதியே ஒப்பாரியும் ஓலமுமாய் இருந்தது. 60 வீடுகளும் தாக்கப்பட்டிருந்தன. தாக்குதல் என்றால் சாதாரணத் தாக்குதல் இல்லை. பெட்ரோல் குண்டுகளால் சின்னாபின்னமாக்கியிருந்தனர். வீடுகளுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள், அரசு கொடுத்த இலவச மிதிவண்டிகள், பீரோக்கள், கட்டில்கள் என்று வீடுகளிலிருந்த அனைத்துப் பொருட்களும் தீக்கிரையாக்கப்பட்டன. துணிமணிகள் எரிந்துகொண்டிருந்தன. மாற்றுத் துணியில்லை. அண்ணாநகர் பகுதி மட்டுமல்ல கொண்டம்பட்டி சேரியும் இப்படித்தான் சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தது. கொண்டம்பட்டி பழைய காலனியும் தாக்குதலிலிருந்து தப்பவில்லை.

வன்முறைக் கும்பலின் தாக்குதலில் நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனிதான் மிகப் பெரிய தாக்குதலுக்குள்ளான பகுதி. இந்தக் காலனிக்குள் நுழையும்போதே எரிந்த வீடுகளின் சாம்பல் நெடிதான் வரவேற்றது. விவசாயிகளின் பழமைவாய்ந்த மாட்டு வண்டி ஒன்று தொழுவத்தோடு எரிக்கப்பட்டிருந்தது. இன்னமும் அந்த மாட்டு வண்டி நெருப்பில் தகித்துக் கொண்டுதான் இருந்தது. பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தன. உள்ளே இருந்த பட்டுப் புடவைகள், நகைகள், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. சமையல் அறையிலிருந்த கேஸ் சிலிண்டரைத் திறந்துவிட்டு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு ஓடுகின்றனர். மிக நிதானமாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்து நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைக் கொள்ளையடித்தபின் பெட்ரோல் குண்டுகளை வீசி வீடுகளைச் சேதப்படுத்திவிட்டு ஓடுகின்றனர். வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் எலும்புக் கூடுகளைப் போல நின்று கொண்டிருந்தன. வீடுகளின் கட்டிடங்கள் மேற்கூரை மட்டுமல்ல சுவர்கள்கூட தரைமட்டமாயிருந்தன. மாற்றுத் துணிக்குக்கூட வழியில்லாமல் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. வெந்து தணிந்தது அந்தச் சேரி. வன்முறைக் கும்பல் மிகப் பொறுமையாக வந்த வேலையை முடித்துவிட்டுப் பத்திரமாக வீடுபோய்ச் சேர்ந்தனர்.

இது ஏதோ ஈழத்தமிழர்கள் குடியிருக்கும் பகுதியில் சிங்களவர்கள் நடத்திய தாக்குதல் அல்ல. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட தமிழர்களான பறையர்கள் மீது இன்னொரு தமிழர்களான வன்னியர்கள் நடத்திய தாக்குதல்தான்.

இத்தனை வன்முறை வெறியாட்டத்திற்கான காரணமாகச் சொல்லப்படுவது ஒரு காதல் திருமணத்தைத்தான்.

dharmapuri_naththam_village_370தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனி. நல்ல விவசாய பூமிதான். சோளமும் கம்பும் பருத்தியும் விளைகிற பூமி. இந்த நத்தம் காலனியில் உள்ள பறையர்களுக்குச் சொந்தமாக விவசாய நிலம் இல்லையென்றாலும் திருப்பூர், பெங்களூர், கோவை பகுதிகளுக்குச் சென்று வேலை பார்த்து வருவதால் அங்குள்ள வன்னியர்களை நம்பி வாழ்வதில்லை. அதுமட்டுமல்ல கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நத்தம் காலனியைச் சுற்றியுள்ள சேரிகளுக்கெல்லாம் நத்தம் காலனிதான் பாதுகாப்பு. அதற்குக் காரணம் நக்சலைட்டுகள். இங்குதான் அப்பு, பாலன் போன்ற நக்சலைட்டுகள் தங்கி பணிசெய்தனர். அரச பயங்கரவாதத்திற்கெதிராகப் புரட்சி செய்யக் கிளம்பியவர்களுக்கு அடைக்கலம் தந்தது இந்த நத்தம் காலனிதான். அதனால்தான் அப்பு, பாலன் ஆகியோருக்கு ஊரின் நுழைவாயிலில் சிலை வைக்கப்பட்டுள்ளது. தமிழக உளவுத்துறையின் தீவிரக் கண்காணிப்புக்குள்ளான சேரி மட்டுமல்ல 'பொடா' கைதிகள் அதிகம் உள்ள சேரியும், அரசியல் வழக்குகள் அதிகம் உள்ள சேரியும் நத்தம் காலனிதான்.

அப்படிப்பட்ட காலனியைச் சார்ந்தவர் இளங்கோ. தருமபுரி அரசு மருத்துவமனையில் சமையல்காரராக வேலைபார்த்து வருகிறார். பாலாஜி, இளவசரன் என்கிற இரு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வந்தார். பக்கத்து ஊரான செல்லன்கொட்டாயைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் தமது மகள் திவ்யா, மகன் மணிசேகரனுடன் வசித்து வந்தார்.

திவ்யா வெளியூரில் இளநிலை செவிலியர் பட்டப் படிப்பு படித்து வந்தார். இளவரசன் வெளியூரில் பிஎஸ்சி படித்து வந்தார். பேருந்துகளில் போகும்போதும் வரும்போதும் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாகி, கடந்த அக்டோபர் 14 அன்று வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். மறுநாள் அக்டோபர் 15ஆம் தேதி சேலம் சரக டி.ஐ.ஜி. சஞ்சய்குமாரிடம் தஞ்சமடைந்து பாதுகாப்புக் கேட்கின்றனர்.

அது வரை பதுங்கியிருந்த சாதிவெறி அப்போதுதான் தலையைத் தூக்கியது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர் மதியழகன். அக்கட்சியின் ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். வெள்ளாய்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் ராஜா, ஆண்டியல்லி பஞ்சாயத்துத் தலைவர் சின்னச்சாமி, பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணசாமி மற்றும் பாமகவைச் சேர்ந்த பச்சையப்பன், மெடிக்கல் சிவா உள்ளிட்டோர் ஊர்க்கூட்டம் போடுகின்றனர். இக்கூட்டத்தில் புளியம்பட்டி, கோனயம்பட்டி, சவுலுப்பட்டி, செல்லங்கொட்டாய், வாணியம்படியான் கொட்டாய், புதூர், ரக்கிரியான் கொட்டாய், கதிர் நாயக்கன் நல்லி, குப்பூர், செங்கல்மேடு, சவுக்குத்தோப்பு, மத்தன் கொட்டாய், மூலக்காடு, கொல்லப்பட்டி, கொட்டாவூர், குட்டூர், கீழாண்டி அல்லி, மேலாண்டி அல்லி, வன்னியம்பட்டி, சீராம்பட்டி, லலிதாவூர், லாலாக்கொட்டாய், ஒட்டையான்கொட்டாய், காமராஜ் நகர், தாளிக்காரன் கொட்டாய், நாயக்கன்கொட்டாய், சவுலுக்கொட்டாய், வெள்ளாள்பட்டி உள்ளிட்ட 36 ஊர்களைச் சேர்ந்த வன்னியர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சரவணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் இந்த ஒருங்கிணைப்பில் பின்னணியாகச் செயல்பட்டனர்.

ஊர்க்கூட்ட்டத்தின் முடிவில் தமது சாதிப் பெண்ணான திவ்யா வன்னியர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் போடுகின்றனர். இதனடிப்படையில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி நத்தம் காலனியைச் சார்ந்தவர்களை வரவழைத்து பஞ்சாயத்து நடத்துகின்றனர் வன்னியர்கள். பஞ்சாயத்தில், "வருகின்ற 7ஆம் தேதிக்குள் திவ்யாவை ஒப்படைக்காவிட்டால் பறப் பசங்க யாரும் உயிரோடவே இருக்க முடியாது" என்று பகிரங்கமாக மிரட்டப்படுகின்றனர்.

இந்நிலையில் திவ்யாவின் தந்தை நாகராஜ் நவம்பர் 7ஆம் தேதி மாலை 3 மணியளவில் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, மாலை 4 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர் வன்னியர்கள். பா.ம.க. பொதுச் செயலாளர் சரவணன் தலைமையில் இந்தச் சாலை மறியல் நடைபெறுகிறது. 4.30 மணிக்கெல்லாம் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி, கொண்டம்பட்டி பழைய காலனி ஆகிய பகுதிகளில் நுழைந்து தீக்கிரையாக்குகின்றனர்.

தருமபுரியிலிருந்து பிரதான சாலையான செங்கல்மேட்டிலிருந்த மரங்களை அறுத்துப் போடுகின்றனர்.

சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக வன்னிய சாதிவெறிக்கும்பல் அவசரமில்லாமல் பதற்றமில்லாமல் காவல்துறை வந்துவிடுவார்களோ என்ற பயமில்லாமல் பொறுமையாக இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை பல சேரிகள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன, தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. சங்கராபுரம், குண்டுபட்டி, மருக்காளம்பட்டி, கொடியன்குளம், மீனாட்சிபுரம், அருப்புக்கோட்டை சத்தியவாணி முத்து நகர்... இப்படிப்பட்ட சேரிகளை சாதிவெறியர்கள் தாக்கிவிட்டு, வீடுகளுக்குத் தீ வைத்துவிட்டு ஓடியுள்ளனர். ஆனால் நத்தம் காலனி தாக்குதல் என்பது தமிழகத்திலேயே இதுவரை நடந்திராத கொடூரமான தாக்குதலாகும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னிய சாதிவெறியர்கள் சேரிக்குள் நுழைகிறார்கள். இதில் பெண்கள் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். முதலில் வீட்டுக்குள் உள்ள பீரோக்களை உடைப்பது அதில் உள்ள பணம், நகைகள், பட்டுப்புடவைகளைக் கொள்ளையடிப்பது. அதற்குப் பிறகுதான் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். வீட்டின் முற்றத்தில் உள்ள கார்கள், பைக்குகளைத் தீக்கிரையாக்கிவிட்டு விலை உயர்ந்த டி.வி., பிரிட்ஜ், லேப்-டாப், டிவிடி பிளேயர் போன்றவற்றையும் கொள்ளையடித்துள்ளனர். ஒரு சில வீடுகளில் இவைகளை உடைத்தும் போட்டுள்ளனர். அதாவது தூக்கிச் செலல முடிந்தவற்றைத் தூக்கிச் சென்றுள்ளனர். முடியாதவற்றை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். இதன் உச்சகட்டமாக நத்தம் காலனிக்காரர்கள் வணங்கும் கொடகாரி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

ஒவ்வொரு வீட்டைத் தாக்கும்போதும் "பறத் தேவடியா மகனுகளுக்கு வந்த வாழ்வப் பாருடா. வசதியப் பாருடா. இவனுங்களுக்கு இதெல்லாம் ஒரு கேடா..." என்று சொல்லிக்கொண்டே தாக்கியுள்ளளர்.

பறையர் வகுப்பைச் சேர்ந்த இளவரசன், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த திவ்யா போன்ற காதல் திருமணங்கள் இப்பகுதியில் முதல் முறையன்று. அப்பகுதியில் இதுபோன்ற சாதி கடந்த காதல் திருமணங்கள் நிறைய நடந்துள்ளன. ஆனால் இத்தகைய கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பின்னணி இந்தக் காதல் திருமணம் மட்டுமல்ல.

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அரச பயங்கரவாதத்திற்கெதிராக எழுந்த நக்சல்களின் பாதுகாப்பு அரண் நாயக்கன் கொட்டாய் காலனிதான். பறையர்கள் மட்டுமல்லாமல் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இக்கிராமத்திற்கு வந்து செல்வார்கள். இந்த நத்தம் காலனிக்காரர்களே பல திருமணங்களை முன்னின்று நடத்தியுள்ளனர். அது மட்டுமல்ல சுற்றியுள்ள தலித்துகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் எந்தப் பிரச்சனை என்றாலும் நத்தம் காலனி மக்கள்தான் களத்தில் நிற்பார்கள். அந்த வகையில் உழைக்கும் மக்களுக்கான பாதுகாப்பு அரண் நத்தம் காலனிதான். ஆதிக்கச் சாதி வன்னியர்களைச் சார்ந்து வாழாமல் தனித்து சுயமாய் உழைத்து வாழ்ந்து வந்த நாயக்கன்கொட்டாய் பகுதி சேரி மக்கள் மீது வன்னியர்கள் மட்டுமல்ல, அப்பகுதி காவல்துறையும் வெறுப்புணர்வைக் கக்கியது. நாள் பார்த்தது. அந்த நாள்தான் நவம்பர் 7ஆம் நாள். நெடு நாட்கள் பசியை - வெறியை - உளவுத்துறையின் உதவியுடன் வன்னிய சாதி வெறியர்கள் தணித்துக் கொண்டனர்.

thirumavalavan_dharmapuri_641

உளவுத் துறைக்குத் தெரியாமல் ஒரு சேரி மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட முடியாது. மரங்களை வெட்டிப்போட்டு போக்குவரத்தைத் தடுத்துள்ளனர். பெட்ரோல் குண்டுகளை உருவாக்க பெட்ரோல் வாங்கியுள்ளனர். 36 கிராமங்களில் உள்ள வன்னியர்களை ஊர் ஊராய் போய்த் திரட்டியுள்ளனர். நக்சல்கள் பயிற்சியில் ஈடுபட்ட நாயக்கன் கொட்டாய் உளவுத்துறையின் முழு கண்காணிப்புக்குள்ளான பகுதி என்பதால் உளவுத்துறை போலீஸ் பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உளவுத் துறையின் நோக்கம் மீண்டும் நக்சல்கள் இங்கு வந்து போவதைத் தடுப்பது. சாதிவெறியர்களின் நோக்கம் பொருளியல்ரீதியாக சேரி மக்கள் தலைநிமிர்ந்து நிற்பதைச் சிதைப்பது. ஒரே காதல் பிரச்சனையில் இரண்டு பிரச்சனையைத் தீர்த்துக்கொண்டனர் உளவுத்துறையினர். உயிர்ச் சேதமில்லாமல் கொள்ளையடித்து வீடுகளை சின்னாபின்னப்படுத்தியதன் மூலம் மீண்டும் 20 ஆண்டுகளுக்குப் பின்னால் நகர்த்தியிருக்கிறது இத்தாக்குதல்.

ஒவ்வொரு வீட்டிலும் 5 பவுன், 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ரூ. 5000 முதல் 5 லட்சம் வரை திருடப்பட்டிருக்கின்றன. இதுவரை 120க்கும் மேற்பட்ட வன்னியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் யாரிடமும் இன்னமும் நகைகளையோ பணத்தையோ கைப்பற்றியதாகத் தகவல் இல்லை.

தங்குவதற்கு வீடு இல்லை. மாற்றிக்கொள்ள உடையில்லை. வாசலில் அகதிகளைப்போல கண்ணீரும் கம்பலையுமாய் உடகார்ந்திருக்கிறார்கள். முந்தைய தலைமுறைக்குப் பின்னால் பொருளாதாரரீதியாக எழுந்த இந்த தலைமுறை அடுத்த தலைமுறையில்தான் எழுந்து நிற்கும் என்கிற அளவில் இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் பெருவிழாவில் பேசிய காடுவெட்டி குரு, "கலப்புத் திருமணங்கள் செய்பவர்களை உயிரோடு விடக்கூடாது" என்று பகிரங்கமாகப் பேசியதை மருத்துவர் ராமதாஸ் அவர்களும் ரசித்தார்.

சாதிவெறியோடு தமது சமுதாயத்தைத் திருடர்களாக, கொள்ளையர்களாக மாற்றிய மகத்தான சாதனையைச் செய்துவரும் மருத்துவர் ராமதாஸ் இனிமேல் தமிழ்ச் சமூகம் என்றோ தமிழ்த் தேசியம் என்றோ பேச அருகதை உண்டா? நடந்த சம்பவத்திற்கு பா.ம.க. பொறுப்பேற்று வெளிப்படையாக மன்னிப்புக் கேட்குமா?

பா.ம.க. வன்னியர்கள் மட்டுமல்லாமல், திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், மகஇக என கட்சி பேதம் இல்லாமல் ஒட்டுமொத்த வன்னியர்களும் இத்தாக்குதலில் கலந்துகொண்டு முதலில் சாதி, அப்புறம்தான் கட்சி என்பதை நிலைநிறுத்தியுள்ளனர்.

சேரி மக்களின் விடுதலைக்கு ஆயுதம்தாங்கிய புரட்சிதான் ஒரே வழி என்று முழக்கமிட்ட புரட்சிகரக் குழுக்களுக்குப் பதுங்குமிடமே சேரிகள்தான். இன்றைக்கு 'புரட்சி' செய்யப் புறப்பட்ட அந்த நக்சல்பாரிகள், அப்பாதையிலிருந்து விலகி தாங்கள் சார்ந்த சாதி அரசியல் கட்சிகளிலும், கட்டப்பஞ்சாயத்துகளுக்காக தனியே இயக்கங்களும் நடத்தி பிழைக்கப் போய்விட்டார்கள். பாவம் சேரிமக்கள். புரட்சிகரக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக இந்தத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். 'புரட்சிக்காரர்களோ' பாதுகாப்பாகவும் வசதியாகவும் சாதி அரசியலில் வலம் வருகின்றனர். அரச பயங்கரவாதத்தை ஒழிக்க வந்தவர்கள் சாதி பயங்கரவாதிகளாக இன்று மாறிப்போனார்கள்.

இன்று நாயக்கன்கொட்டாய் முகப்பில் தோழர்கள் அப்புவும் பாலாவும் மட்டுமே உடைபடாமல் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்குச் சிலை வைத்த மக்களோ வீடின்றி வாசலின்றித் தவிக்கின்றனர்.

தமிழ்த்தேசியம் பேசுகின்ற எந்தத் தமிழ்த் தேசியவாதிக்கும் சேரி மக்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லக்கூட மனமில்லை. வெளிப்படையாக வன்னியர்களைத் தூண்டிவிடும் காடுவெட்டி குருவையும், அந்த குருவைத் தூண்டிவிடும் ராமதாசையும் கண்டிக்க எந்தத் தமிழ்த் தேசியவாதிக்கும் துணிச்சல் இல்லை என்பதைத்தான் இந்தத் தாக்குதல் நமக்கு உணர்த்துகிறது.

புரட்சிகரக் குழுக்களின் பிழைப்புவாதமும் பாமகவின் சாதிவெறியுமே நத்தம் காலனியைச் சிதைத்துள்ளது. 10க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்று சேர்ந்து விடுதலைப்புலிகள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதாக அறிவித்தனர். 36க்கும் மேற்பட்ட ஊரார் சேர்ந்து நத்தம் காலனி மீது தாக்குதல் நடத்தி வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.

ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் கொதிப்பும் தோல்வியடைந்ததாக வரலாறு இல்லை.

சேரிப்புயல் ஒரு நாள் வரம்பு மீறும் - அன்று
வரலாறு மாறும்
அப்போது,
ஒப்பாரியும் ஓலமும் சேரிக்கு மட்டுமே சொந்தமாக இருக்காது.

- வன்னி அரசு, மாநிலச் செய்தித் தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Comments

32 comments

32
செ.நாகேந்திரகுமார் திலகவதி
தமிழ்த் தேசியம் பேசும் நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்டவர்கள்... ஜெயலலிதா, ஸ்டாலின், சரத்குமார், ராமதாஸ் யாருமே பாதிக்கப்பட்ட கிராமங்களையும், மக்களையும் சந்திக்க வரவில்லை. அரசியல் அவலங்களே... உங்களை அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்!
அ. ஜெயபால்
சாதி மனநிலை ஒரு தீராத நோய். இது வரை எந்த ஒரு தலித்தும் ஊரை கொளுத்தியதாக வரலாறு இல்லை. தொடரும் வன்முறை என்ன அர்த்தம் என்றே புரியவில்லை. நண்பர்களாக இருக்கும் சாதி இந்துக்களும் கள்ள மெளனம் காக்கிறார்கள். இந்த தேசத்தில் வாழ்வதற்க்காக எண்ணி வேதனைப் படுகிறேன்.
சத்திரியன்
தலித்துக்களுக்காக உங்களின் குரல்கள் ஒலிப்பதை நிறுத்தியதால் தான் வன்னியர்களுக்கு இந்த வெறி வந்துள்ளது. மீண்டும் நீங்கள் டி.பி.ஐ யாக உருவெடுத்தாலொழிய தலித் மக்களை காப்பற்றமுடியாது.
EZHIL RAJ
ஊடகஙல் புரக்கனிப்பது வெட்க கெடான விஷயம்.
Guest
நம்ம கரம் உயரட்டூம்
Vinayagam. R
தமிழ் நாட்டிற்கு மீண்டும் ஒரு அவலம்... தமிழ் நாடும் நாட்டு மக்களும் திருந்தவேமாட்டார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்...வெட்ககேடு !!
அன்பு
பாட்டாளி என்றும் தமிழர் என்றும் வேடம் போட்டாலும் ராமசாசு அவர்கள் சாதிவெறிக் கட்சி நடத்துகிறார். காடு வெட்டி குரு போன்ற சாதி வெறியர்கள் வெளியே தெரிகின்றார்கள் பா.மா.க நிர்வாகிகள் அனைவரும் ஒவொவ்ரு காடு வெட்டி குருவுக்கு சமம். ஆதிக்க சாதிக் காரர்கள் தனக்கு கீழே உள்ள சாதிப் பெண்களை மணக்கலாம் ஆனால் ஆதிக்க சாதிப் பெண்களை கீழ் சாதிக் காரர்கள் மணம் புரிவது மனுதர்மத்தின் படி பெரிய குற்றமாகும். இந்து மதத்தின் கோர முகத்தினை மனுவில் காணலாம் அதைத்தான் தர்மபுரி வன்னியர்கள் காட்டி உள்ளார்கள்.
ராஜ்
ஜாதி ஒழிப்பு கொள்கை மற்றும் பார்பனீய ஒழிப்பு கொள்கையில் உறுதியுடன் செயல்படும் மகைக மீது ஏன் சேற்றை அடிக்கிரீர்கள் வன்னி அரசு. சாட்சிகள் இருந்தால் அதை வெளியிடுங்கள். மகைக பற்றி பேச திருமாவக்கு கூட தகுதி கிடையாது. முதலில் தர்மபுரி நிகழ்வை பற்றி வினவு தான் செய்தி வெளியிட்டது.பிழைப்புவாதமாக பாமக-வுடன் கூட்டனி வைத்த நீங்கள் தான் கடைந்தெடுத்த பிழைப்புவாதிகள். அப்போது கூட வன்னிய சாதி வெறியர்கள் உங்களுக்கு ஒத்தழைப்பு தரவில்லை என செய்திதாள்களில் வந்துள்ளது. நீங்கள் எந்நாளும் பாமக வுடன் இனி கூட்டனி வைக்கமாட்டோம் என கூறுவீர்களா?
http://www.vinavu.com/2012/11/10/dharmapuri-vanniyar-pmk-atrocity/
ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.வினவு.சொம்/2012/11/10/தர்மபுரி-வன்னியர்-ப்ம்க்-அட்ரொசிட்ய்/
NAAN TAMIZHANALLA
தோழர்களே! காடுவெட்டி குரு வன்னிய பெண்கள் திருமணம்... தலித் ஆண்கலை வெட்டவேண்டும் என்றூ சொன்னது எவ்வளவு குற்றமோ.....ஒவ்வொரு வன்னிய பெண்களீன் வயிற்றீல் தலித் ஆண்களீன் வாரிசு வளர வேண்டும் என்றூ கூறீய திருமாவும் குற்றவாளீ தான். இந்த சாதித்தலைவர்களீல் எவரும் யோக்கியன் இல்லை...சமுக நல்லினக்கத்திற்க்கு முதலில் பாடுபடுவோம்....பின் சாதியை ஒழிப்பதைப் பற்றீ ஆராய்வோம்...
muthuraj
இது தமிழ் நாட்டிற்கு ஒரு அவலம் என்ற சொல்ல வேனடாம் இந்த சாதியில் உள்ள சில மேல் மட்ட மக்களூக்கு ஒரு பாடம் , நமக்கும் இதற்கும் என்ன இருக்கிற்து ,என்ற மன ஒட்டம் வெட்க கேடானது அடுத்தவனை சொல்ல என்ன இருக்கிறது, முன்னேறி விட்டோம் என்ற நிலை மாற வேண்டும்
இளங்கோ
``ம.க.இ.க என கட்சி பேதம் இல்லாமல் ஒட்டுமொத்த வன்னியர்களும் இத்தாக்குதலில்'' -எழுத்து பிழையா?
உண்மை என்றால் ஏதேனும் ஆதாரம் இருந்தால் பதிவு செய்யுங்கள்.
boopathy
ம.க.இ.க? இதுதான் தோழர்களை வளர்த்த விதமோ? பதில்சொல் ம.க.இ.க?
UDHAYAKUMAR L
Dalits needs to Unite permanently... We have 21 % population in Tamilnadu, but we are scattered across all Political parties and still mwe are Educated Political Slaves to Other Parties like DMK,ADMK, MDMK,CONGRESS....But other caste politicians like PMK, they Unite for their CASTE irrespective of the party line.. why don't we do the same ? Dalits ,particularly Educated DALIT youths Must take part in this SOCIAL TRANSFORMATION process...But unfortunately we have become Selfish Dalits...This must go from us.. Like Vanniyars, Kongu's, Nadars we must think, Work for our Dalit Society..NEVER vote for Non-Dalit Party..Let's have our Coomon Political Pary,Common Flag and one Leader, One Policy, One Society..

Never Forgive PMK,RAMADOSS , DMK, ADMK, MDMK, DMDK....

If Dalit Candidates are not nthere in Election process, simply DO NOT VOTE..

As told by Dr.Ambedkar, Dalits need Political Freedom first, then Economic Freedom...only then real Social Development, Equal Society will born...

This Incident is lesson for us... let's not go behind any Non-Dalit Politicians..

Udhay
Harur
UDHAYAKUMAR L
VERY GOOD FACT FINDING ARTICLE...

BUT, IMPORTANTLY DALITS MUST UNITE ATLEAST NOW....,.

COME OUT OF ALL POLITICAL PARTY MEMBERSHIP AND GET UNITED FOR OUR SOCIETY..

Udhay
தலித் ஆய்வு மையம்
டாக்டர் அய்யாவின் பத்திரிக்கையாளர் சந்திப்பை மக்கள் தொலைக்காட்சியில் பார்த்தேன். வட மாநிலங்களின் ஆதிக்கச் சாதி வெறியர் பேசினால் எப்படிப் பேசுவாரோ அதை தமிழில் பேசினார். இவ்வளவுக்குப் பிறகும் திருமாவளவன் நல்லிணக்கத்துக்கு பா.ம.கவுடன் ஒத்துழைக்கத் தயார் எனச் சொல்கிறார். ராமதாஸையாவது அவரது சொந்த சமூக மக்கள் ஏற்றுக் கொள்வர். திருமாவளவன் அரசியல் அநாதையாகும் அவலம் நேரிடலாம்.
che
வன்னி அரசுக்கும் அவர் சார்ந்த அமைப்பிற்க்கும் அரசியல் நேர்மை இருந்தால் ம.க.இ.க பற்றி கூறியுள்ள குற்றசாட்டுக்கு ஆதாரம் அளிக்க வேண்டும் அவ்வாறில்லாமல் போகிற போக்கில் 'ஏதோ ஒன்று' கரண்டு கம்பத்தில் அசிங்கம் செய்வது போல அவதூறு செய்வது அயோக்கியதனம்....
AANANDHA GOWTHAMAN
.பட்டாசு கிளப்பியிருக்கின்றார் வன்னியரசு .அதிலே சிலவைகள் நமுத்து போனவைகள் .புரட்சி செய்யப் புறப்பட்ட அந்த நக்சல்பாரிகள்,அதிலிருந்து விலகி தாங்கள் சார்ந்த சாதி கட்சிகளிலும் கட்டபஞ்ஜாயத்துகளுக்காக தனியே கடை நடத்த போய்விட்டதாக சொல்லியிருக்கின்றார்.

இப்படி திரிந்து போனவர்கள் ஆதிக்க சாதியிலிருந்து வந்த நக்சல் பாரிகள் மட்டுமா ? தலித் மக்களில் இருந்து வந்தவர்கள் மட்டும் வெளியேறி புரட்சிகர இயக்கங்களின் மீதான அதிருப்தியிலிருந்து வெளியேறி வடக்கிருந்து உயிர் துறந்தார்களா என்ன ? இவர்களுக்கு கட்டபஞ்சாயத்து செய்ய தெரியாதா இல்லை வன்னியரசுக்கு அந்த பட்டியல் தெரியாதா ?

அல்லது மார்க்சிய லெனினிய வழிகளின் மீது நம்பிக்கை இன்றி அம்பேத்காரியமே அனைத்துக்கும் தீர்வு என்று கிளம்பிய சாதி ஒழிப்பு போராளிகள் சாதியத்தின் ஒரு செங்கலையாவது பெயர்த்திருப்பார்களா .

உண்மையில் சாதி ஒழிப்பை நடைமுறை படுத்தி இழிதொழில் செய்வதிலிருந்து அம்மக்களை விடுவித்து நக்சல்புரியாய் இருந்தது உண்மைதான் . இன்று அவர்களும் அந்த தத்துவமும் அங்கில்லாததால் இந்த வன்கொடுமை நடந்தது என்று எல்லா பத்திரிக்கைகளும் செய்கின்ற பதிவு வன்னியரசு சார்ந்திருக்கும் கட்சிக்கு கிலி உண்டாகியிருக்கலாம். ஆக புரட்சிகர சக்திகளுக்குத்தான் ஆதிக்க சாதி வெறியர்கள் அடங்கி இருப்பார்கள் என்ற புரிதலுக்கு அப்பாவி தலித் இளைஞர்கள் வந்து விட்டால் கூடாரம் காலியாகும் என்றும் முன்னுனரலாம்.

மக்கள் யுத்தம் கட்சியினரும் பிந்தைய மாவோயிஸ்டுகளும் ஆயுத பாதையை முன்னெடுத்தவர்கள்.அவர்களின் ஆயுதம் ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாய் இல்லாமல் ஆதிக்க சக்திகளுக்கு எதிராய் இருந்ததை அப்பகுதி மக்கள் அறிவார்கள். எனவே ஆதரித்தார்கள்.பதுங்குமிடம் தரவில்லை அதிலே பங்கெடுத்தும் இருந்தார்கள். அப்போதெல்லாம் வன்னியரசு சார்ந்திருக்கும் கட்சி அங்கிருந்ததில்லை.

சேரிப்புயல் ஒரு நாள் வரம்பு மீறட்டும் - அன்று
வரலாறும் மாறட்டும்
அப்போது,
ஒப்பாரியும் ஓலமும் சேரிக்கு மட்டுமல்ல யாருக்குமே சொந்தமாக இருக்க கூடாது
Aanandha gowthaman
தமிழக அரசியலில் சிலர் ''புலிப்பால்'' போதையில் கிர்ர்ரடித்திருக்கின்றார்கள் சிலரோ பழைய ''சாதிப்பாலில்'' கிர்ர்ரடித்திருக்கின்றார்கள்

மக்களோ இவர்களின் பாதிப்பால் கிர்ர்ரடித்துகிடக்கின்றார்கள்
அம்பேத் சித்தார்த்
அறிவு நாணயம் என்ற சொல்லை அவர் குறைந்தபட்சம் கேள்விப்பட்டிருப்பாரேயானால், தாக்குதலில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டும் மகைக காரர்கள் யார் என்பதை சொல்லட்டும். அல்லது அவரது கட்டுரையை பெருமகிழ்ச்சியோடு பிரசுரித்திருக்கும் கீற்று, பெரியார் தளம் வலைத்தளங்களுக்கு கொஞ்சமாவது நேர்மை இருக்குமானால் வன்னி அரசுவை விளக்கமளிக்குமாறு கோரட்டும்.

வன்னி அரசு வகையறாக்களின் வன்னிய சேவை!
http://www.vinavu.com/2012/11/20/vanni-arasu-the-lier/
கதிர்
ம.க.இ.க மீதான குற்றசாட்டுக்கு ஆதாரம் அளிக்க வேண்டும் அவ்வாறில்லாமல் பொறுக்கி தின்ன ஓட்டுக்கட்சியும், உப்புசப்பில்லாத போராட்டத்துக்கு சாதிக்கட்சியோட கூட்டும் வெச்சிக்கிட்டு சொந்த மக்களை காப்பாத்த வக்கில்லாம புரட்சிகர அமைப்பை அடிப்படை ஆதாரமில்லாமல் குறை சொல்வதை விட கீழான செயல் ஏதும் இல்லை. இதுக்கு வேற வேலை பாக்கலாம்.
அம்பேத் சித்தார்த்
திருமாவளவனின் ஓட்டுப்பொறுக்கி கூட்டாளியும் வன்னிய சாதிவெறிக் கட்சியுமான ராமதாஸ் கும்பல் தர்மபுரியில் நடத்திய சாதி வெறியாட்டத்தைப் பற்றி கட்டுரை எழுதியுள்ள வி.சி. செய்தித் தொடர்பாளர் வன்னியரசு தனது கட்டுரைக்கு 'பா.ம.க.வின் சாதிவெறியும் புரட்சிகர குழுக்களின் பிழைப்புவாதமும்’ என்று பெயர் சூட்டியுள்ளார். அக்கட்டுரையில் சாதிவெறியர்களோடு ம.க.இ.க.வும் தாக்குதலில் ஈடுபட்டதாக துணிந்து புளுகியிருக்கிறார்.

வன்னியரசு பதட்டமில்லாமல் இப்படி பொய் பேச என்ன காரணம்? பல காரணங்கள் உண்டு. ஒன்று தமிழகத்தில் தலித் மக்கள் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தி வரும் திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றவர்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருவது ம.க.இ.க. மட்டும் தான்.

இவர்களுடைய பிழைப்புவாத அரசியலுக்கு ம.க.இ.க. தடையாக இருக்கிறது உண்மை. எனவே ம.க.இ.க.வை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத இது போன்ற பிழைப்புவாதிகளும், ஏகாதிபத்திய எச்சில் காசில் தலித் மக்களுக்கு விடுதலை வாங்கித் தருவதாக பேசும் பத்திரிகைகளும் இப்படி அவதூறு பேசுவது ஒன்றும் புதிதில்லை. இவர்கள் ஏற்கெனவே பலமுறை இதைச் செய்திருக்கிறார்கள். புரட்சிகர அமைப்புகளின் அரசியல் ரீதியான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத தருணங்களில் எல்லாம் இந்த பிழைப்புவாதக் கும்பல் கையிலெடுக்கும் ஒரே ஆயுதம் இது தான்.

இரண்டாவதாக திருமா போன்ற தலித் பிழைப்புவாதிகளை மட்டுமின்றி அவர்கள் சாதி ஒழிப்பிற்காக முன்வைக்கும் அம்பேத்கரியத்தையும் அரசியல் சித்தாந்த ரீதியில் விமர்சிப்பது ம.க.இ.க. மட்டும் தான். இது அவர்களை சித்தாந்த ரீதியில் முடமாக்குகிறது. இதற்கும் அவர்களால் பதிலளிக்க முடியாமலிருப்பது ஒரு காரணம்.

மேலும் தர்மபுரி தாக்குதலை தொடர்ந்து பத்திரிகைகள் அனைத்தும் தமிழகத்தின் பிற பகுதிகளில் சாதி ஒடுக்குமுறை இருந்தாலும் தர்மபுரி மாவட்டம் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்ததற்குக் காரணம் நக்சல்பாரி இயக்கம் தான் என்று எழுதியுள்ளன. இவை அனைத்தும் தான் இவர்களது ஆத்திரத்திற்குக் காரணம். இது தான் ம.க.இ.க.வும் சாதிவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக திருமாவின் அடிபொடியை எழுத வைத்திருக்கிறது.

சாதிவெறி பிடித்த ராமதாசுக்கு தமிழ்க் குடிதாங்கி என்று பட்டமளித்து தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது யார்? அதே போல இன்னொரு சாதிவெறியனான முத்துராமலிங்கன் பெயரை மதுரை விமான நிலையத்திற்குச் சூட்ட வேண்டும் என்று கோரியது யார்? பண்ணையார் மூப்பனார் வீட்டுக்கு விருந்துக்குப் போவது யார்? நாலு சீட்டுக்காக பாப்பாத்தி ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றது யார்? புரட்சிகர அமைப்பான ம.க.இ.க.வா, பிழைப்புவாதி திருமாவா?

இவர்களுடைய கவலை எல்லாம் எவன் கூடவாவது சேர்ந்து கொண்டு நாலு காசு பார்க்க வேண்டும் என்பதற்கு மேல் ஒன்றும் இல்லை. அப்படி காசு வருகிறது என்றால் எந்தக் காரியத்தையும் செய்வார்கள் என்பதற்கு கண்ணகி முருகேசன் பிரச்சினையில் கட்டைப்பஞ்சாயத்து செய்தது ஒரு சான்று. எனவே சாதியை ஒழிப்போம், சமத்துவம் படைப்போம் என்பதெல்லாம் தலித் மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதற்காக மட்டுமே பேசப்படும் வசனங்கள் தான்.

- அம்பேத் சித்தார்த்
amuthan
Don't blame people's arts and literary association. If
you have a evidence please produce it.
தமிழன்
கருத்து கூறும் அனைவருக்கும் எனது வணக்கம். ஆனால் இந்த சம்பவத்தில் ஒரு குடும்பம் தலைவனை இழந்து மகளை பிரிந்து வாடுவது தங்களுக்கு தெரிய வில்லையா? திருமணம் செய்த இளவரசன் வெறும் 19 வயது சிறுவன் என்பது தங்களுக்கு தெரியாதா? இதன் மூலம் நான் இந்த சம்பவத்தை நியாயம் என்று கூறவில்லை ஆனால் ஒரு தலைபட்சமாக கருத்து கூறுவது தவறு. நன்றி.
Sukdev
ம.க.இ.க மீது மனசாட்சியே இல்லாமல் ஒரு அவதூறை இக்கட்டுரையாளர் இங்கு கிளப்பியுள்ளார். புரட்சிகர இயக்கங்களும், தலித் இயக்கங்களும் இணைந்து நின்றால் அந்த பலத்திற்கு ஈடு, இணை இருக்க முடியாது. தமது தேர்தல் அரசியல் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை விமர்சிக்கிறார்கள் மற்றும் கறாரான அரசியல் நெறிமுறைகளை கையாளுகிறார்கள் என்பதற்காக எரிச்சலும், பொறாமையும் கொண்டு இத்தகைய கீழ்மையான நிலைக்கு வன்னியரசு இறங்கியுள்ளதை அனுமானிக்க முடிகிறது. வன்னியரசுவே! நக்சல்பாரி வழிமுறை கொஞ்சம் கடினமானது தான். எனினும் அது பூரண விடுதலைக்கான பாதை. சந்தர்ப்பவாத நடைமுறைகளை கைவிட்டுவிட்டு திறந்த மனதோடு இப்பிரச்சினையை அணுகுங்கள். பண்டைய காலத்தில் அரசனை எந்த பிரதிபலனும் பார்க்காமல் உயிரை பணையம் வைத்து காக்க ஆபத்துதவிகள் இருப்பார்கள். அது போல, நக்சல்பாரிகள், தலித் மக்களுக்கு ஆபத்பாந்தவர்கள் என்பதை அறிவீர்.

யாரும், எதற்கும் பயன்படுத்தி கொள்வது போல உமது தளத்தை வைத்திருக்கும், கீற்றுவே! உமக்கு நவீன, முற்போக்கு முகமூடி ஒரு கேடா?
தமிழ் மகன்
இக்கட்டுரைக்கு வினவு தளத்தின் எதிர் வினையை பின் வரும் இணைப்பில் படியுங்கள்:

http://www.vinavu.com/2012/11/20/vanni-arasu-lies/#tab-comments
பகத்
இக்கட்டுரை வெளிவந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமா இத்தாக்குதலைப் பற்றிக் கூறியது:

// // “தருமபுரி அருகே நடந்துள்ள வன்முறை வெறியாட்டங்களுக்கு பா.ம.க-வும் வன்னியர் சங்கமும் காரணம் இல்லை என்று பா.ம.க நிறுவனர் இராமாதாசு அவர்கள் வெளிப்படையாக அறவித்துள்ளதை நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் சமூக பொறுப்புணர்வோடு வரவேற்க கடமைப்பட்டிருக்கிறது”. ..
“மறுபடியும் மறுபடியும் குற்றம் சாட்டுவது விடுதலைச் சிறுத்தைகளின் நோக்கமல்ல. ஒருதாய்; மக்கள் மாநாடுகள், சமூக நல்லிணக்க மாநாடுகள,; புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகள் ;திறப்பு, மற்றும் பா.ம.க-வில் தலித்துகளுக்கு அதிகாரம் வாய்ந்த கட்சி பொறுப்புகள் அளித்தல் போன்ற பாராட்டுதலுக்குரிய பல்வேறு களப்பணிகளை நடைமுறையில் செய்துகாட்டியிருக்கிற பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில்தான் இதனை விடுதலைச் சிறுத்தைகள் உரிமையோடு சுட்டிக்காட்டுகிறது”.
“கடந்த 16.11.2012 அன்று செய்தியாளர்களை சந்தித்தபோது விடுதலைச் சிறுத்தைகள் பா.ம.க நிறுவனருக்கு வெளிப்படையான வேண்டுகோள் விடுத்தது. அதாவது மொழி, இனம் ஆகியவற்றின் நலன்களுக்காக, தமிழீழ விடுதலைக்காக, தமிழக மாநில உரிமைகளுக்காக, கடந்த காலங்களில் பா.ம.கவும் விடுதலைச் சிறுத்தைகளும் தொலைநோக்குப் பார்வையோடு கைகோர்த்து களமாடியதைபோல, தற்போதைய நெருக்கடியான இச்சூழலில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் மீண்டும் பா.ம.க-வும் விடுதலைச் சிறுத்தைகளும் கைகோர்ப்போம் வாருங்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுத்துள்ளது.”… (நவ, 18, பெரியார்தளம்) // //

கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு பா.ம.க மீது சீறுகிறார். ஆனால் கட்சியின் தலைவர் பா.ம.க வின் அறிக்கையை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டு இணைந்து செயல்படுவதற்கு அறை கூவல் விடுக்கிறார்.

இரு பிழைப்புவாதிகளும் சேர்ந்து தலித் மக்களை, தமிழ் மக்களை ஏய்க்கிறார்கள். இந்த ஓட்டுப் பொறுக்கிகளை இரு சாதியைச் சார்ந்த உழைக்கும் மக்களும் புறக்கணிக்க வேண்டும்.
பகத்
ம.க.இ.க வை ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளுடன் இணைத்து அவர்களும் இத்தாக்குதலில் பங்கு பெற்றவர்கள் போன்று கூறுவது அயோக்கியத்தனமானது.

கொள்கை, கருத்தியல் ரீதியான விமர்சனங்களை அனுமதிக்கலாம். ஆனால் மாற்றுக் கருத்துகளை அனுமதிக்கிறோம் பேர்வழி என்று கூறிக்கொண்டு இது போன்ற அடிப்படையற்ற, ஆதாரமற்ற குற்றச்சாடுகளை அனுமதிப்பது சரிதானா? என்று கீற்று இணையதளத்தினர் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
KUTTY SAITHAN
நவ 7- நாய்க்கன் கொட்டாய் சாதிவெறித் தாக்குதல் பற்றி அறிந்தவுடனேயே மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் அங்கு சென்றனர். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.. நாய்க்கன்கொட்டாய் பகுதியில் விவிமு இல்லையென்பதால், பென்னாகரம் பகுதி விவிமு தோழர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாத்தியமான நிவாரண உதவிகளையும் செய்திருக்கின்றனர். அவர்கள் திரட்டி அனுப்பி வைத்த செய்தி மற்றும் புகைப்படங்களை நவம்பர் 10 அன்று வினவு தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

தற்போது நவம்பர் 16 ஆம் தேதியன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர், வன்னி அரசு. “பாமகவின் சாதிவெறியும் புரட்சிகரக் குழுக்களின் பிழைப்பு வாதமும்” என்ற தலைப்பில் கீற்று தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்,

“பா.ம.க. வன்னியர்கள் மட்டுமல்லாமல், திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், மகஇக என கட்சி பேதம் இல்லாமல் ஒட்டுமொத்த வன்னியர்களும் இத்தாக்குதலில் கலந்துகொண்டு முதலில் சாதி, அப்புறம்தான் கட்சி என்பதை நிலைநிறுத்தியுள்ளனர்” என்று இந்த சாதிவெறித் தாக்குதலில் மகஇக வையும் வேண்டுமென்றே சேர்த்து அவதூறு செய்திருக்கிறார் வன்னி அரசு.

அறிவு நாணயம் என்ற சொல்லை அவர் குறைந்தபட்சம் கேள்விப்பட்டிருப்பாரேயானால், தாக்குதலில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டும் மகஇக காரர்கள் யார் என்பதை சொல்லட்டும். அல்லது அவரது கட்டுரையை பெருமகிழ்ச்சியோடு பிரசுரித்திருக்கும் கீற்று, பெரியார் தளம் வலைத்தளங்களுக்கு கொஞ்சமாவது நேர்மை இருக்குமானால் வன்னி அரசுவை விளக்கமளிக்குமாறு கோரட்டும்.

“நக்சல்பாரிகளுக்குப் பயந்து எங்ககிட்ட எந்த வம்புதும்பும் இல்லாம இருந்தாங்க. அந்தக்கட்சி காலப்போக்கில இல்லாமல் போனதும், இளவரசன் கல்யாணத்தை சாக்கா வெச்சு இப்படிப் பண்ணிட்டாங்க” – இது தருமபுரி தாக்குதல் பற்றி ஆனந்த விகடன் வெளியிட்டிருக்கும் கட்டுரையில் தாக்குதலுக்கு ஆளான அண்ணாநகரைச் சேர்ந்த வசந்தா என்ற பெண் கூறியிருக்கும் உண்மை. “நக்சல்பாரி இயக்கம் ஒடுக்கப்பட்டதனால்தான் சாதிய அமைப்புகள் தலையெடுத்திருக்கின்றன” என்று இச்சம்பவத்தை ஒட்டி பல பத்திரிகைகளும் எழுதியிருக்கின்றன. இந்த உண்மைதான் வன்னி அரசுவை சுடுகிறது. அதனால்தான் அவர் பொய்களையும் அவதூறுகளையும் கடை விரிக்கிறார்..

இது தாழ்த்தப்பட்ட மக்கள் வாழப்பொறுக்காத காரணத்தால் வன்னிய சாதிவெறியர்கள் நடத்திய தாக்குதல் என்று வினவு கட்டுரையில் எழுதியிருந்தோம். வன்னி அரசு இந்த தாக்குதலுக்கு முற்றிலும் வேறு காரணத்தை கண்டுபிடித்திருக்கிறார். சேரிமக்கள் புரட்சிகரக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காகத்தான் இந்தத் தண்டனையை அனுபவித்து வருகிறார்களாம்.

நத்தம் காலனி மக்களுடன் நக்சல்பாரி இயக்க தோழர்கள் ஐக்கியப்பட்டிருந்ததும் அவர்கள் ஆதரவைப் பெற்றிருந்ததும் உண்மைதான். அண்ணா நகர் வசந்தாவின் கூற்றுப்படி பார்த்தால், “அதற்கு இதுதான் தண்டனை” என்ற வசனம் அன்றைக்கு தாக்குதல் நடத்திய வன்னிய சாதிவெறியர்கள் பேசவேண்டியது. அதே வசனத்தை வன்னி அரசு ஏன் பேசவேண்டும்?

ஏனென்றால், “நக்சல்பாரி கட்சியில் சேராதீர்கள்” என்று வன்னி அரசுகள் தொடர்ந்து கதறினாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் அதை காதில் வாங்குவதில்லை. நக்சல்பாரிகள்தான் உழைக்கும் மக்களின் நண்பர்கள், உண்மையான சாதி எதிர்ப்பாளர்கள் என்று அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பதால் அவர்கள் புரட்சியாளர்களை நம்புகிறார்கள். நக்சல்பாரி இயக்கத்தில் திரள்கிறார்கள். பிறப்பால் தலித்தாகவே இருந்தாலும், பிழைப்புவாதிகளை நிராகரிக்கிறார்கள். இந்த வயிற்றெரிச்சலும், கம்யூனிச எதிர்ப்பு வெறியும்தான் வன்னி அரசுவை இப்படிப் பேசவைக்கிறது. மகஇக வுக்கு எதிராகப் புளுக வைக்கிறது.

வாய்க்கு வந்தபடி பேசுவதற்கும், “என்னயத் தடுக்காதீங்க” என்று சவுண்டு விடுவதற்கும், “உஸ்” என்று அடக்கினால் மறுகணமே மான வெக்கம் பாக்காமல் காலில் விழுவதற்கும் தயாராக இருக்கும் நபர்கள்தானே ஓட்டுக் கட்சிகளில் கைத்தடிகளாக வளர முடியும்?

“சாதிவெறியோடு தமது சமுதாயத்தைத் திருடர்களாக, கொள்ளையர்களாக மாற்றிய மகத்தான சாதனையைச் செய்துவரும் மருத்துவர் ராமதாஸ் இனிமேல் தமிழ்ச் சமூகம் என்றோ தமிழ்த் தேசியம் என்றோ பேச அருகதை உண்டா?” என்று அந்தக் கட்டுரையில் பயங்கரமாக சவுண்டு விடுகிறார், வன்னி அரசு. இது நவம்பர் 16 ஆம் தேதி.

அடுத்து வெளிவருகிறது தலைவர் திருமாவின் அறிக்கை.

“தருமபுரி அருகே நடந்துள்ள வன்முறை வெறியாட்டங்களுக்கு பா.ம.க-வும் வன்னியர் சங்கமும் காரணம் இல்லை என்று பா.ம.க நிறுவனர் இராமாதாசு அவர்கள் வெளிப்படையாக அறவித்துள்ளதை நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் சமூக பொறுப்புணர்வோடு வரவேற்க கடமைப்பட்டிருக்கிறது”. ..
“மறுபடியும் மறுபடியும் குற்றம் சாட்டுவது விடுதலைச் சிறுத்தைகளின் நோக்கமல்ல. ஒருதாய்; மக்கள் மாநாடுகள், சமூக நல்லிணக்க மாநாடுகள,; புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகள் ;திறப்பு, மற்றும் பா.ம.க-வில் தலித்துகளுக்கு அதிகாரம் வாய்ந்த கட்சி பொறுப்புகள் அளித்தல் போன்ற பாராட்டுதலுக்குரிய பல்வேறு களப்பணிகளை நடைமுறையில் செய்துகாட்டியிருக்கிற பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில்தான் இதனை விடுதலைச் சிறுத்தைகள் உரிமையோடு சுட்டிக்காட்டுகிறது”.
“கடந்த 16.11.2012 அன்று செய்தியாளர்களை சந்தித்தபோது விடுதலைச் சிறுத்தைகள் பா.ம.க நிறுவனருக்கு வெளிப்படையான வேண்டுகோள் விடுத்தது. அதாவது மொழி, இனம் ஆகியவற்றின் நலன்களுக்காக, தமிழீழ விடுதலைக்காக, தமிழக மாநில உரிமைகளுக்காக, கடந்த காலங்களில் பா.ம.கவும் விடுதலைச் சிறுத்தைகளும் தொலைநோக்குப் பார்வையோடு கைகோர்த்து களமாடியதைபோல, தற்போதைய நெருக்கடியான இச்சூழலில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் மீண்டும் பா.ம.க-வும் விடுதலைச் சிறுத்தைகளும் கைகோர்ப்போம் வாருங்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுத்துள்ளது.”… (நவ, 18, பெரியார்தளம்)
இவையெல்லாம் அந்த அறிக்கையில் காணப்படும் வாசகங்களில் சில.

வன்னி அரசுவால் வசை பாடப்படும் மகஇக, மருத்துவர் ராமதாசுக்கு குடிதாங்கி, இடிதாங்கி போன்ற பட்டங்களை வழங்கவில்லை. மாறாக, அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் படங்களைப் போட்டு அவர் கம்பெனியை தொடங்கிய நாள் முதலாகவே அம்பலப்படுத்தி வருகிறது.

ஆனால், இன்று நத்தம் காலனியை எரித்து சாம்பலாக்கிய பிறகும், தலித் இளைஞர்கள் ஆதிக்க சாதி பெண்களை காதல் வலையில் வீழ்த்தி கைவிடுவதாக குற்றம் சாட்டி, எல்லா சாதிவெறியர்களுக்கும் ராமதாசு கொம்புசீவி விட்ட பின்னரும், “பாட்டாளி மக்கள் கட்சி என்பது அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் கொள்கைகளை உள்வாங்கி செயல்படும் இயக்கம் என்று நம்புவதாக” அந்த அறிக்கையில் தோழமையோடு திருமா கூறியிருக்கிறார்.

“இன்னுமாடா ஊர்ல நம்மள நம்புறாய்ங்க?” ன்னு பெரியய்யா காடுவெட்டியிடம் கேட்டிருப்பாரோ?

இப்படியாக, வன்னி அரசுவின் 16 ஆம் தேதி கட்டுரைத் தலைப்பில் குற்றவாளிகளாக காட்டப்பட்டிருந்த பாமக சாதிவெறியர்கள், 18 ஆம் தேதி நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டு விட்டார்கள். இனி வன்னி அரசுவின் கட்டுரையில் மிச்சமிருக்கும் குற்றவாளிகள் நக்சல்பாரி புரட்சியாளர்கள்தான். “வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் பாட்டாளி சொந்தங்களை விடுதலை செய்! நக்சல்பாரி புரட்சியாளர்களை கைது செய்!” என்று வன்னி அரசு சவுண்டு விட்டால், நல்லெண்ணத்துடன் கை கோர்ப்பதற்கு மருத்துவர் ஐயா உடனே முன்வந்து விடுவார்.

இதையே கொஞ்சம் ஜாடையாக சொல்லியிருக்கிறார் வன்னி அரசு. “இன்று நாயக்கன்கொட்டாய் முகப்பில் தோழர்கள் அப்புவும் பாலனும் மட்டுமே உடைபடாமல் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்குச் சிலை வைத்த மக்களோ வீடின்றி வாசலின்றித் தவிக்கின்றனர்” என்று தனது கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒருவேளை வால்டர் தேவாரம் இதைப் படிக்க நேர்ந்தால், புல்லரித்திருப்பார். “இப்படி ஒரு கைத்தடி 80 களில் நமக்கு வாய்க்கவில்லையே” என்று வருந்தி, இடிப்பதற்கு 2 கடப்பாரைகளையும் பாதுகாப்புக்கு பத்து போலீசாரையும் அனுப்பி வைத்திருப்பார்.
அம்பேத் சித்தார்த்
வன்னியரசுக்கு விவசாயிகள் விடுதலை முன்னனியின் தோழர் ஆம்பள்ளி.முனிராஜ் சவால்!

http://www.vinavu.com/2012/11/30/vanni-arasu-exposed-by-aamballi-munirasu/
அரும்பு
//////வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் பாட்டாளி சொந்தங்களை விடுதலை செய்! நக்சல்பாரி புரட்சியாளர்களை கைது செய்!” என்று வன்னி அரசு சவுண்டு விட்டால், நல்லெண்ணத்துடன் கை கோர்ப்பதற்கு மருத்துவர் ஐயா உடனே முன்வந்து விடுவார். இதையே கொஞ்சம் ஜாடையாக சொல்லியிருக்கிறார் வன்னி அரசு. “இன்று நாயக்கன்கொட்டாய் முகப்பில் தோழர்கள் அப்புவும் பாலனும் மட்டுமே உடைபடாமல் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்குச் சிலை வைத்த மக்களோ வீடின்றி வாசலின்றித் தவிக்கின்றனர்” என்று தனது கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறார். ஒருவேளை வால்டர் தேவாரம் இதைப் படிக்க நேர்ந்தால், புல்லரித்திருப்பார். “இப்படி ஒரு கைத்தடி 80 களில் நமக்கு வாய்க்கவில்லையே” என்று வருந்தி, இடிப்பதற்கு 2 கடப்பாரைகளையும் பாதுகாப்புக்கு பத்து போலீசாரையும் அனுப்பி வைத்திருப்பார்./////

செருப்படி
அரும்பு
தேர்தலுக்கு தேர்தல் திராவிட கட்சிகளுக்கு காவடி தூக்கி பிழைக்கும் ராமதாசுக்கும் கூட ஒரு சொம்பு தூக்கி இந்த உலகில் இருப்பாரென்றால் அது நமது தென்னகத்து பிரபாகரன் "திருமாவளவன்" தான். இவ்வளவு பெரிய அயோக்கியத்தனத்தை வழிநடத்தி திட்டமிட்டு தலித் மக்களை பா.ம.கவினர் வேட்டையாடிய பிறகும் "ராமதாசு அவர்கள் இச்சம்பவத்துக்கு வன்னியர்கள் காரணம் அல்ல என்று கூறியதை சமூக நல்லிணக்கத்தோடு வரவேற்பதாக" கூறியதிலிருந்தே திருமா வொளவன் எவ்வளவு பெரிய பிழைப்புவாதி என்பது வெளிச்சம். திராவிடக் கட்சிகளின் ஜால்ராவால திருமா வின் ஜால்ரா வன்னியரசு, அடுத்த தேர்தலுக்கு கூட்டணி பாதிப்பு வரக்கூடாது என்று மிகத் தெளிவாக தலைப்பிலேயே புரட்சிகர குழுக்களை குற்றம் சாட்டுவது போல், போலீசு உளவுத்துறையுடன் இணைந்து இக்கொடுமையை அனுமதித்த ஜெயலலிதாவை, கண்டும் காணாமல் அறிக்கை விட்ட கருணானிதியைப் பற்றி பேசாமல் பதிவிட்டுள்ளார்.
வன்னி அரசின் இந்தக் கட்டுரை மிகத் தெளிவாக தமது அடுத்த கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்காமல் தலித் மக்களின் ஓட்டைப் பொறுக்கித் தின்பது எப்படி என்று ’திருமா’வுடன் இணைந்து இராமதாசின் ஆலோசனையோடு சிந்தித்து எழுதப்பட்டது என்பதற்கு இந்தக் கட்டுரையின் தலைப்பே ஒரு ஆதாரம். இத்தகைய தலித் விரோத பிழைப்புவாத கட்டுரையை கீற்று எவ்வாறு வெளியிட்டது? என்பது தான் புரியாத புதிர்
அரும்பு
////புரட்சிகரக் குழுக்களின் பிழைப்புவாதமும் பாமகவின் சாதிவெறியுமே நத்தம் காலனியைச் சிதைத்துள்ளது. . ////

பாமக வின் சாதி வெறி பின் சென்ற மர்மம் என்ன ?.. அடுத்த தேர்தலா ?..

////10க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்று சேர்ந்து விடுதலைப்புலிகள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதாக அறிவித்தனர்/////

விடுதலைப் புலிகள் மீதான அப்போரை முதலாளிகளின் இலாப வேட்டைக்காக நடத்திய இந்திய அரசின் கூட்டணியில் இருந்து கொண்டே தனது அரசியல் ஆதாயம் தமிழகத்தில் தன் கைவிட்டுப் போகாமல் இருக்க வாயிலேயே வடை சுட்ட வி.சி.க வின் வன்னியரசா இது ?..

//// 36க்கும் மேற்பட்ட ஊரார் சேர்ந்து நத்தம் காலனி மீது தாக்குதல் நடத்தி வெற்றியைக் கொண்டாடியுள்ளனர். /////

அதன் கனியை இராமதாசும் திருமா வும் அடுத்த தேர்தலில் சுவைக்கத் தயாராயுள்ளனர் .

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.