தாமரை இதழ்வழி (1965-1972) தி.க.சி கட்டமைத்த இடதுசாரிக் கருத்துருவாக்கம்
“... சென்ற பதினைந்து ஆண்டுகளாக (1945--1960), ஆரம்பத்தில் அத்தி பூத்தது போலவும், பிறகு இங்கொன்று அங்கொன்றாகவும், அப்பால் ஆண்டுதோறும் கணிசமான அளவிலும் நடந்த, பாரதி, கம்பன், வள்ளுவன், இளங்கோ விழாக்களிலும், அண்மையில் வள்ளலார், வேதநாயகம் பிள்ளை, மனோன்மணியம் சுந்தரனார், மறைமலையடிகள், கவிமணி, புதுமைப்பித்தன், கல்கி, டி.கே.சி நினைவு நாட்களிலும் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் முதலியார், என்.எஸ்.கே. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விழாக்களிலும் ஜீவா, ரகுநாதன், எஸ்.ஆர்.கே., முகவை போன்றோரும் மற்றவர்களும் கலந்துகொண்டு புதிய முறையில் விமர்சனக் கருத்துகளை வழங்கி வந்தார்கள். இந்தக் கருத்துக்களில் சில பல நூல் வடிவம் பெற்றன. மேற்கூறியவர்களோடு ஒரு திசைப் பயணிகளாக மேலும் பலர் - குறிப்பாக எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் அணிவகுத்து நின்றனர். ‘ஜனநாயகம்’, ‘சாந்தி’, ‘சரஸ்வதி’, ‘தாமரை’ போன்ற கலை - இலக்கிய இதழ்களின் வழியாக, கலை - இலக்கிய வளர்ச்சிக்குப் புதுநெறி காட்டப் போராடினர்.” (ஜீவா.தலையங்கம்.தாமரை ஜூலை.1961.- தமிழகக் கலை இலக்கிய மகாநாட்டு மலர்)
தோழர் தி.க.சி. என்று எல்லோராலும் அழைக்கப்படும் தி.க. சிவசங்கரன் (1925-2014) அவர்களின் ஆளுமை உருவாக்கம் உருப்பெறத் தொடங்கிய காலம்தான், மேலே ஜீவா விவரித்திருக்கும் காலம் ஆகும். தமிழ்ச்சூழலில், இடதுசாரி கருத்துசார்ந்த நிலைப்பாட்டில் வாழ்ந்த பல்வேறு ஆளுமைகள் குறித்த, விரிவான பதிவுகள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறமுடியாது. அவர்கள் வாழ்ந்த காலம் நெருக்கடிக்குள்ளான காலம். தகவல்கள் விரிவாகப் பதிவு செய்யப்படாத காலம். இன்றைய சூழலில் பல்வேறு இடதுசாரி ஆளுமைகள் குறித்தத் தேடலை மேற்கொண்டு, அவர்கள் குறித்தப் பதிவுகளைச் செய்யவேண்டிய கடமை நமக்குண்டு. ஆதாரபூர்வமான தரவுகளை முன்னெடுத்து இடதுசாரிக்கருத்து நிலையாளர்களைப் பொதுவெளியில் கொண்டாட வேண்டும். அந்தக் கொண்டாட்டம் புதிய வரலாறுகளை அறிதலாகவும் இளம் செயற்பாட்டாளர்களுக்கு உற்சாகம் தரும் அநுபவமாகவும் அமையக்கூடும். இந்தக் கண்ணோட்டத்தில் தி.க.சி. என்ற ஆளுமையை இங்கு பதிவு செய்ய முயலுகிறேன். தி.க.சி.யின் நூற்றாண்டை நோக்கிய (30.03.2025 இல் நூற்றாண்டு தொடங்குகிறது) இத்தருணத்தில், அவரைப் போற்றிப் பேசும் நல்வாய்ப்பாக இப்பதிவைச் செய்கிறேன்.
தி.க.சி.யின் ஆளுமையைப் புரிந்துகொள்ள அவரது வாழ்க்கை நிகழ்வுகளைப் பின்வரும் வகையில் தொகுத்துக் கொள்வோம்.
- -நெல்லை வாலிபர் சங்கத்துடன் இணைந்து, நண்பர்களுடன் ‘இளந்தமிழன்’ கையெழுத்துப் பத்திரிக்கை நடத்துதல் மற்றும் வல்லிக் கண்ணன் அவர்களோடு தொடர்புகொண்டு செயல்பட்ட தி.க.சி (1941-1946).
-• நெல்லையில் ‘கலைஞர் கழகம்’ என்னும் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் செயல்பட்ட தி.க.சி (1947-1954).
-• நெல்லையில் ‘முற்போக்கு எழுத்தாளர் மன்றம்’ என்னும் அமைப்பில் நண்பர்களோடு செயல்பட்ட தி.க.சி. (1955-1958)
- சிந்துபூந்துறை சண்முகம் அண்ணாச்சி அவர்களுடன் இணைந்து நூல் வெளியீட்டுத் துறையில் செயல்பட்ட தி.க.சி (1952-1962).
-• வங்கி ஊழியராக (1948-1964) வாழ்ந்த தி.க.சி. அவ்வமைப்பின் தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டு வாழ்ந்த காலம்.
தமது ஏழாவது வயதில் தந்தையை இழந்த தி.க.சி. தனது தாயின் அரவணைப்பில் வளர்ந்ததாகக் கூறுகிறார். இந்துக் கல்லூரியோடு தொடர்புடைய நெல்லை வாலிபர் சங்கத்துடன் இணைந்து செயல்படத் தொடங்குகிறார். கையெழுத்துப் பத்திரிக்கை நடத்துகிறார்கள். ‘இதய ஒலி’ எனும் கையெழுத்துப் பத்திரிக்கையை நடத்திக் கொண்டிருந்த வல்லிக்கண்ணனை நண்பர்களுடன் சந்திக்கிறார். தி.க.சி நண்பர்களுடன் இணைந்து நடத்தும் ‘இளந்தமிழன்’ இதழில் வல்லிக்கண்ணன் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள். அரசாங்க வேலையை உதறிவிட்டு முழுநேர எழுத்தாளராக செயல்பட்டுக் கொண்டிருந்த வல்லிக்கண்ணன் அவர்களோடு 1941இல் தி.க.சிக்குதொடர்பு ஏற்படுகிறது. இவரது ஆளுமை வளர்ச்சியில் வல்லிக்கண்ணன் பெரும் தாக்கம் செலுத்தியிருப்பதைக் காணமுடிகிறது. தி.க.சி. வல்லிக்கண்ணனைத் தமது குருநாதர் என்றே சொல்லிக்கொண்டார்.
தி.க.சி.யோடு பேசும் வாய்ப்பு ஏற்பட்டால், வல்லிக்கண்ணன் பற்றி பேசாமல் இருக்கமாட்டார். அதைப்போல் வல்லிக்கண்ணன் அவர்களைச் சந்தித்தால், தி.க.சி. பற்றி நிறையப் பேசுவார். சோசலிசக் கருத்தாக்கம் மீது நம்பிக்கைகொண்ட நண்பர்களாக இவர்கள் வாழ்ந்தனர். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, சென்னை நகரத்தில் நடைபெறும் முற்போக்கான கலை இலக்கிய நிகழ்வுகள் அனைத்திலும் இவ்விருவரைக் காண முடியும். சென்னை நகரத்தில் கலை இலக்கியம் தொடர்பான ஈடுபாடு உடைய இளைஞர்களிடத்தில், இவ்விருவரது தாக்கம் கணிசமான அளவில் உண்டென்றே கூறமுடியும்.
இளைஞனாக வளரும்போதே, வாசிப்பதில் மிகுந்த ஈடுபாடு உடையவராகவும் ஒரு கட்டத்திற்குப் பிறகு பாரதி மீது ஆழ்ந்த ஈடுபாடு மிக்கவராக மாறி, வாழத் தொடங்கினார் தி.க.சி. 1940-1950 காலச்சூழல் என்பது பிரித்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் காலமாக இருந்த அதே நேரத்தில், இடதுசாரி இயக்கங்கள் வீரியத்தோடு வளர்ந்து கொண்டிருந்த காலம் அது. தி.க.சி. இடதுசாரி கருத்துநிலைகளை உள்வாங்கிய இளைஞனாகவே வளரத் தொடங்கினார்.
1947இல் தொ.மு.சி. ரகுநாதன் அவர்களுடனும் இணைந்து ‘கலைஞர் கழகம்’ என்னும் அமைப்பில் பல நண்பர்களுடனும் செயல்படத் தொடங்கினார். இந்த அமைப்பு குறித்து தி.க.சி.தனது 1948ஆம் ஆண்டு (4.1.1948) நாட்குறிப்பேட்டில் பின்வருமாறு பதிவு செய்கிறார்.
“இன்றைய கழகக் கூட்டத்திற்கு (கலைஞர் கழகம்) சம்பந்த மூர்த்தி தலைமை வகித்தார். கு.ஸ்ரீனிவாசனின் நாடகத்தை கு.ஸ்ரீ.யே வாசித்தார். சபாபதியின் (கோவில்பட்டி பஞ்சப் பிரதேசத்துக்குத் தலைவர் சுற்றுப்பிரயாணம் செய்த விஷயத்தைப் பற்றிய) கண்டனத் தீர்மானம் கடுமையான விவாதம் நடந்து வாபஸாயிற்று”. (தி.க.சி. நாட்குறிப்புகள்: 26:2014).
மேற்குறித்த செய்தியின் மூலம் கலை இலக்கியத்துறையில் தி.க.சி.யின் செயல்பாடுகள் எவ்வகையில் இருந்தன? என்பது பற்றித் தெரிந்து கொள்ளமுடிகிறது. கோவில்பட்டிப் பகுதியில் உள்ள பஞ்சம் குறித்த விவாதத்தையும் இக்குழுவினர் மேற்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. நாட்குறிப்பேட்டில் கோவில்பட்டிப் பஞ்சம் தொடர்பான விரிவான செய்திகள் இடம்பெற்றிருப்பதைக் காண்கிறோம்.
‘தி.க.சி. நாட்குறிப்புகள்’ (தொகுப்பு: வே. முத்துக்குமார்) எனும் நூலின் மூலம் தி.க.சி என்ற மனிதரின் அரசியல் செயல்பாடுகள், தொழிற்சங்கச் செயல்பாடுகள், வாசிப்பு முறைமைகள், அவரது ஈடுபாடுகள், குடும்ப உறவுகள் ஆகிய பல செய்திகளின் விரிவான பரிமாணத்தை அறிய முடிகிறது. 1940கள் தொடங்கி அந்தப் பத்தாண்டுகளின் இறுதிக் காலங்களில் தி.க.சி.யின் செயல்பாடுகளை அறிய உதவும் இந்த ஆவணத்தில் மூலம், அவரது இயல்பான பண்புகள், மனிதாபிமான அணுகுமுறைகள் ஆகிய பல கூறுகளை அறிவதற்கான தரவாக இந்த நாட்குறிப்பேடு அமைந்திருக்கிறது.
தொ.மு.சி. தமது பேட்டி ஒன்றில் (இரா. சீனிவாசன்: ‘சாந்தி’ இதழ் குறித்த ஆய்வியல் நிறைஞர் ஆய்வேடு.1989). கலைஞர் கழகம் குறித்தும் அதில் டி.செல்வராஜ் மற்றும் தி.க.சி. ஆகியோர் குறித்தும் கூறியிருக்கிறார். அந்தப் பேட்டியில் 1954இல் தி.க.சி., டி. செல்வராஜ் ஆகியோரோடு இணைந்து நெல்லையில் ‘முற்போக்கு எழுத்தாளர் மன்றம்’ உருவாக்கியது குறித்தும் பதிவு செய்துள்ளார். இம்மன்றத்தின் மூலமாக ‘புதுமைப்பித்தன் நினைவு’ சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தினர். இப்போட்டியில் தெரிவு செய்யப்பட்ட ‘சாந்தி’ இதழில் வெளிவந்த, சுந்தர ராமசாமி அவர்களின் ‘தண்ணீர்’ கதைக்கு ரூ. 100 பரிசளிக்கப்பட்டது. இவ்விழா நாடகக்கலைஞர் தி.க. சண்முகம் அவர்கள் தலைமையில் 1955இல் நடந்தது. இவ்வமைப்பில் ப.சீனிவாசன், நா. வானமாமலை ஆகியோரும் இணைந்து செயல்பட்டனர். தொ.மு.சி.ரகுநாதன், நா.வானமாமலை ஆகியோருடன் இணைந்து இக்காலங்களில் தி.க.சி. செயல்பட்டார். திருநெல்வேலிப் பகுதியில் இடதுசாரி கண்ணோட்டத்துடன், கலை இலக்கியங்களில் ஈடுபடுபவர்களாக அக்காலத்தில் கி.ராஜநாராயணன், சுந்தரராமசாமி ஆகியோர் செயல்பட்டனர். இவர்களுடைய செயல்பாடு நெல்லை முற்போக்கு எழுத்தாளர் மன்றத்துடன் தொடர்புடையதாக இருந்தது. 1954இல் ரகுநாதன் நடத்திய ‘சாந்தி’ இதழில் வெளியான 40 கதைகளில் 10 கதைகள் சுந்தரராமசாமியின் கதைகள் என்பதை அறியமுடிகிறது. அன்றைய இடதுசாரி இயக்கத்தின் விவசாயத் தொழிலாளர் இயக்கத்தில் கி. ராஜ நாரயணன் முக்கியப் பங்கு எடுத்துச் செயல்பட்டார். இந்தச் சூழலை அடிப்படையாகக் கொண்டே தி.க.சியை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நெல்லை சிந்து பூந்துறையில் வாழ்ந்த தோழர் சண்முகம் அண்ணாச்சி, தமிழில் இடதுசாரி மரபுசார்ந்த எழுத்துக்களை அச்சிட்டு, ‘நெல்லை பப்ளிஷிங் ஹவுஸ்’ மூலம் வெளிக்கொண்டு வந்தார். அவருக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டவர் தி.க.சி.. இப்பதிப்பகத்தின் மூலம் அடிப்படையான மார்க்சிய நூல்கள் பல தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு அச்சிடப்பட்டன. ஜனசக்தி பிரசுரலாயம் 1940களில் செய்து கொண்டிருந்த பணியை 1950களில் இப்பதிப்பகம் செய்தது. அவர்கள் வெளியிட்ட சில நூல்கள் வருமாறு: ‘அரசியல் போதனை மலர்கள்’, ‘பாட்டாளி வர்க்கமும் பாட்டாளிக் கட்சியும்’ மற்றும் பல்வேறு லெனின் நூல்கள்; வீர நினைவுகள் (ஜீலியஸ் பூசிக்), நீல விழியாள் (‘சாந்தி’ கதைகள்) மற்றும் பல்வேறு படைப்புகள் வெளிவந்தன. சீன இலக்கியங்களை தி.க.சி இக்காலத்தில் மொழியாக்கம் செய்தார். அவை மேற்குறிப்பிட்ட பதிப்பகத்தின் மூலம் வெளிவந்தன. நா.வா. மொழியாக்கம் செய்த நூல்களும் இப்பதிப்பகத்தின் மூலம் வெளிவந்தன. தோத்தாத்ரி எழுதிய அறிவியல் நூல்களையும் இவர்கள் வெளியிட்டனர். 1950களில் வளமான இடதுசாரி மரபு சார்ந்த அச்சு ஊடகம் நெல்லையில் செயல்படுவதற்கு தி.க.சி.யின் பங்களிப்பு முதன்மையானது. இவ்வகையான தகவல்கள் பொதுவெளியில் விரிவாகப் பதிவாகவில்லை. அவை முழுமையாக வெளிவரும்போது தி.க.சியின் பங்களிப்பை புரிந்துகொள்ள முடியும்.
‘அறிவு’ (1936) என்னும் இதழ் சாத்தான் குளம். அ. இராகவன் மற்றும் தோழர்.ப. ஜீவா ஆகியோர்களால் நடத்தப்பட்ட முதல் இடதுசாரி கருத்துநிலை சார்ந்த இதழ் என்று கூறமுடியும். 1937இல் ஜனசக்தி அப்பணியைத் தொடர்ந்து நடந்தத் தொடங்கியது. 1940களில் இறுதியில் ‘ஜனயுகம்’, ‘ஜனநாயகம்’, ‘முன்னணி’ ஆகிய இதழ்கள் கம்யூனிஸ்ட்கட்சியால் நடத்தப்பெற்றவை. ‘ஜனயுகம்’ இதழைத் தான் ஆசிரியராக இருந்து நடத்தியதாகத் தோழர், கவிஞர் தமிழ்ஒளி பதிவு செய்துள்ளார். இவ்விதழ்களின் தொடர்ச்சியாக, இஸ்மத் பாஷாவின் ‘சமரன்’ (1952), கே.சி.எஸ். நடத்திய ‘நீதி’, தொ.மு.சி. ரகுநாதனின் ‘சாந்தி’ (1954), விஜய பாஸ்கரனின் அவர்களின் ‘சரஸ்வதி’ (1954) ஆகிய இதழ்கள் ஐம்பதுகளில் வெளிவந்தன. இவற்றின் உச்ச வளர்ச்சியாக ‘தாமரை’ (1959) வெளிவரத் தொடங்கியது. இவ்வகையான இடதுசாரி இதழ்களோடு தி.க.சி. கொண்டிருந்த உறவு ஆழமானது. இவ்விதழ்களில் இவர் மேற்கொண்ட பல்வேறு விவாதங்கள், இடதுசாரிக் கருத்துநிலை சார்ந்தவர்களிடத்தில் தாக்கங்களை உருவாக்கின: எடுத்துக்காட்டாக ‘சரஸ்வதி’யில் நடந்த விவாதத்தைக் கூறமுடியும். ‘வீர வழிபாடு வேண்டாம்’ என்று புதுமைப்பித்தனை விமர்சனம் செய்து தி.க.சி. சரஸ்வதியில் எழுதினார். புதுமைப்பித்தன் மறைந்தபின் 1952 இல் புதுமைப்பித்தன் மலரைச் சுந்தரராமசாமி கொண்டு வந்தார். 1948இல் புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றை தொ.மு.சி. எழுதி வெளியிட்டார். இந்தச் சூழலில் புதுமைப்பித்தன் குறித்த தி.க.சி.யின் விவாதங்கள் பல்வேறு தரப்பிலும் விவாதத்திற்குள்ளாக்கப்பட்டது. புதுமைப்பித்தன் ஆக்கங்களில் உள்ள “நம்பிக்கை வறட்சி” எனும் கருத்துநிலையை சோசலிச எதார்த்தவாதக் கண்ணோட்டத்தில் தி.க.சி. அணுகினார். இவ்வகையில் 1950களில் நிகழ்ந்த இடதுசாரி கருத்துநிலை சார்ந்த அனைத்துப் பணிகளிலும் கம்யூனிஸ்ட்கட்சி சார்ந்து செயல்பட்டவராகத் தி.க.சி.யைக் கூறமுடியும். விரிவான விவரங்களுடன் இத்தன்மை குறித்து விவாதிக்கும் தேவை இருப்பதாகக் கருகிறேன்.
கலை இலக்கியம் தொடர்பான இயக்கப் பணிகள் மற்றும் அச்சு ஊடகம் சார்ந்த செயல்பாடுகள் குறித்து மட்டும் நம்மால் ஓரளவு அறிந்துகொள்ள முடிகிறது. 1945-1964 காலத்தில் வங்கி ஊழியராகச் செயல்பட்ட போது நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளமுடியாத, தொழிற்சங்கவாதியாக தி.க.சி. செயல்பட்டார். அவரது 1948ஆம் ஆண்டு நாட்குறிப்பேட்டில் இச்செயல்பாடுகள் குறித்த சில பதிவுகள் உள்ளன. இது தொடர்பான தி.க.சி. பின்வரும் பதிவைச் செய்துள்ளார். “19 ஆண்டுகளாக, 1945 - 1964 வரை வங்கி ஊழியராகவும் தொழிற்சங்கவாதியாகவும் தமிழகத்திலும் கேரளத்திலும் நான் பெற்ற அனுபவங்களை ஒரு நாவலாகச் சித்திரிக்க வேண்டும் என்கிற எனது பேராசை, பல்வேறு காரணங்களால் இன்று வரையில் நிறைவேறவே இல்லை”. (தி.க.சி. நாட்குறிப்பு 16:2014) தி.க.சியின் இந்தப் பக்கம் குறித்து அறியாமல் போனது பெரும் இழப்பு. தொழிற்சங்க ஈடுபட்டால் பல்வேறு ஊர்களுக்கும் அவர் இடமாற்றம் செய்யப்பட்டதும் இறுதியாக அந்த வாழ்க்கையின் கொடுமையிலிருந்து 1964இல் வெளியேறவும் செய்தார். தொழிற்சங்க தி.க.சியைத் திறனாய்வாளர் தி.க.சி.க்குள் காண இயலாமல் போனதைப் புரிந்துகொள்ள வேண்டும். அன்றைய தொழிற்சங்க வரலாறு என்பது இடதுசாரி இயக்க வரலாறுகளோடு இணைந்தது. இதில் தி.க.சி.யின் பல்வேறு பயணங்களை அறிந்துகொள்ள முடிகிறது.
தி.க.சி எனும் ஆளுமையைப் புரிந்துகொள்ள, இளமைக்கால இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கிய காலம் தொடங்கி, வங்கிப் பணியைத் துறந்து சென்னையில் சோவியத் செய்தித்துறை அலுவலராகப் பணியேற்பதோடு (1941&1963) ஒரு தொகுப்பாகக் கொள்ளலாம். சென்னை வாழ்க்கையில், சோவியத் நாடு அலுவலகம், மற்றும் ‘தாமரை’ இதழ்ப்பணி (1965&1972) ஆகிய காலத்தை, இன்னொரு தொகுப்பாகக் கொள்ளலாம். இதில் சோவியத் செய்தித்துறைக் குறித்த தி.க.சி.யின் பதிவு வருமாறு.
“சோவியத் செய்தித்துறையில் தோழர் ஏ.எஸ். மூர்த்தியின் (சம்பந்த மூர்த்தி) இடையறாத ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் ‘சரஸ்வதி, விஜய பாஸ்கரன், தொ.மு.சி. ரகுநாதன், மாஜினி, கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் மற்றும் பல நண்பர்களுடன் இருபத்தைந்து ஆண்டுகளாகப் பணியாற்றியதை ஓர் ஆவணமாகப் பதிவு செய்யலாம். அதுவும் என்னால் இயலவில்லை. மிக வருந்துகிறேன்.” (தி.க.சி. நாட்குறிப்பு. 18:2014).
தி.க.சி.யின் தொழிற்சங்க வாழ்க்கை குறித்து அறிய இயலாமல் போனது போலவே அவரது சோவியத் செய்தித்துறை சார்ந்த வாழ்க்கையும் நமக்குக் கிடைக்கவில்லை. தன்னைச் சமூகத்திற்கு ஒப்படைத்த மனிதர்களின் வாழ்க்கை குறித்தத் தரவுகள் இவ்வாறு அறிய முடியாமல் போகிறது. தி.க.சி.யின் ‘தாமரை’இதழ்ப் பங்களிப்பு அனைத்துத் தரப்பிலும் விதந்து பேசப்படுகிறது. அவரது ‘தாமரை’ இதழ் சார்ந்த பணிகளின் மூலம், அறியலாகும் ஆளுமைக் கூறுகளை பின்கண்டவாறு தொகுக்கலாம்.
- -1950களில் பல்வேறு இடதுசாரி கலை இலக்கிய அமைப்புகளின் செயல்பாட்டில் தன்னை இணைத்துக் கொண்டவர் தி.க.சி. இந்த மரபின் தொடர்ச்சியாக, தாமரை இதழ் மூலம் அவர் பதிவு செய்திருக்கும் பல்வேறு கலை இலக்கிய அமைப்புகள் தொடர்பான விவரணங்கள்.
-• -பாரதி மீது அவருக்கிருந்த ஈடுபாடு காரணமாக ‘தாமரை’ இதழ் வழி கட்டமைந்த ‘பாரதி இயல்’ குறித்த ஆக்கங்கள்.
-• -சோவியத் செய்தித்துறையில் பணியாற்றிக் கொண்டிருப்பதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, சோவியத் அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகிய பிற குறித்தப் பதிவுகளை ‘தாமரை’ இதழில் இடம் பெறச் செய்தமை.
-• -கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்ட பல்வேறு தலைவர்களின் அரிய ஆக்கங்களைத் ‘தாமரை’யில் வெளிவரச் செய்த அரிய பதிவுகள்.
-• -தமிழ் இலக்கியம் படித்துக் கொண்டிருந்த மற்றும் பயிற்றுவித்த தமிழாசிரியர்களின் ஆக்கங்களை வெளியிட்டுள்ள பாங்கு.
- -‘கதைக்கு கரு’ என்னும் தொடர் மூலம் பல்வேறு படைப்பாளிகளின் படைப்புச் சூழல் குறித்துப் பதிவாகியுள்ள படைப்பு வரலாறு.
-• -ஈழத்துப் படைப்பாளிகளின் ஆக்கங்களுக்கு முதன்மை கொடுத்து வெளியிட்ட சிறப்பு.
-• -அட்டைப்படங்களில் படைப்பாளிகளின் நிழற்படங்களை வெளியிட்டு அங்கீகரித்த தன்மை.
-• -‘எழுத்து’ இதழ் (1959) வழி உருவான புதுக்கவிதை மரபின் இன்னொரு பிரிவினரை, முதன்மைப்படுத்திக் கவிதைகளை
வெளியிட்டதன் மூலம், புதுக்கவிதை மரபில் புதிய மரபுகளை இனம் காட்டியமை.
- --‘மலரும் அரும்புகள்’ எனும் தலைப்பில் முகமறியாத புதிய சிறுகதைப் படைப்பாளிகளை இனம் கண்டு அவர்களது ஆக்கங்களை வெளியிட்ட மிக அரிய நிகழ்வு.
தி.க.சி.பொறுப்பில் (1965-1972) எட்டு ஆண்டு ‘தாமரை’ இதழ் வெளிவந்திருப்பதைக் காண முடிகிறது. மேலே தரப்பட்டுள்ள பல்வேறு கூறுகளையும் உரையாடலுக்குப்படுத்த தி.க.சி. பொறுப்பாசிரியராக இருந்த ‘தாமரை’ இதழ் தரவாக அமைகிறது. தமிழக இடதுசாரிக் கண்ணோட்டம் சார்ந்த ஆக்கங்கள் குறித்த வரலாற்றில், இவை பெறுமிடம் குறித்த உரையாடலை மேற்கொள்ளும் தேவையுண்டு.
பொது வெளியில் செயல்படத் தொடங்கிய காலம் முதல் இயக்கம் சார்ந்து செயல்படுவதில் நம்பிக்கையுடையவராக தி.க.சி. இருந்தார். 1947-1964 இடைப்பட்ட காலத்தில் அவரது செயல்பாடுகள் மூலம் இதனைப் புரிந்துகொள்ள பல்வேறு நிகழ்வுகளை முன்பகுதியில் விவாதித்தோம். அவர் ‘தாமரை’யில் பணியாற்றிய காலத்தில், இத்தன்மையை மேலும் வளர்த்தெடுத்துள்ளார்.
தமிழ்நாடு வாசகர் பேரவை (தாமரை: மார்ச்.1968), பூம்பொழில் இலக்கிய வட்டம் (நவம்.1968) ஸ்ரீவில்லிப்புத்தூர் இலக்கிய வட்டம் (அக்.1970), பொள்ளாச்சி மக்கள் எழுத்தாளர் மன்றம். (அக் 1970), திருச்சி மக்கள் இலக்கியக் குழு (அக். 1970), இராசபாளையம் இலக்கிய வாசகர் குழு (மே 1970), பரமக்குடி மக்கள் இலக்கிய மன்றம் (மே 1970), தமிழ் இலக்கியப் பேரவை (ஜூன் 1970) சென்னை மக்கள் எழுத்தாளர் சங்கம் (ஜூலை 1971), ஆகிய அமைப்புகள், கலை இலக்கியம் தொடர்பாகச் செயல்பட்ட பதிவுகள் ‘தாமரை’ இதழ்களில் பதிவாகியுள்ளன. இவ்வமைப்புகளில் ‘தாமரை’ இதழ்கள் குறித்த விமர்சனக் கூட்டங்கள் நடைபெற்றதை அறிகிறோம். சமகாலத்தில் வெளிவந்த நாவல்கள் குறித்த திறனாய்வுக் கூட்டங்கள் நடைபெற்றதை அறிய முடிகிறது. எடுத்துக்காட்டாக, திருச்சி மக்கள் இலக்கியக்குழு, ஈழத்து எழுத்தாளர் செ. கணேசலிங்கம் அவர்களோடு நடத்திய உரையாடல் பதிவாகியுள்ளது. மதுரை வாசகர் வட்டத்தில் ‘தீபம்’ இதழில் தொடராக வெளிவந்த அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ குறித்த விமர்சனக் கூட்டம் நடைபெற்றதை அறிகிறோம். இதைப்போல் தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலை அந்த ஆண்டின் சிறந்த நாவலாக இக்குழு பரிந்துரை செய்த செய்தியும் இடம்பெற்றுள்ளது. கோவையில் இயங்கிய பூம்பொழில் -வட்டம், புதுக்கவிதைகள் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் நடத்தியிருப்பதை அறிகிறோம். இதனை முல்லை ஆதவன் முன்னின்று நடத்தியுள்ளார்.
மேலே குறித்துள்ள சிறுசிறு அமைப்புகளின் செயல்பாடுகளை தி.க.சி. பதிவு செய்துள்ளார். இவ்வமைப்புகளில் செயல்பட்டவர்கள் பின்னர் இடதுசாரிக் கண்ணோட்டமுடையவர்களாகச் செயல்படத் தொடங்கியிருப்பதைக் காண்கிறோம். கலை இலக்கியச் செயல்பாடுகளை மிக விரிந்த தளத்தில், இடதுசாரிப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டவர்களைத் ‘தாமரை’ இதழின் மூலம் பதிவு செய்த செயல், மிக முக்கியமானது. இவ்வகையான அமைப்புகள், தமிழில் இடதுசாரி மரபு சார்ந்த ஆக்கங்கள் வளருவதற்குத் தளம் அமைத்ததை, நுணுக்கமான விவரங்கள் மற்றும் கள ஆய்வுகள் வழி உறதிப்படுத்தமுடியும். தி.க.சி. என்ற ஆளுமையின் தொலைநோக்காக இதனைக் கருதமுடியும். “தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டு” (1975) என்று சி.எஸ்.சுப்பிரமணியன் (1910-2011) எழுதியுள்ள சிங்காரவேலர் வாழ்க்கை வரலாற்று நூலில், 1927&1930 ஆம் ஆண்டுகளில் சுயமரியாதை இயக்கத்தின் மூலம் நூற்றுக்கணக்கான படிப்பகங்கள், தலைவர்களின் பெயர்களில் தமிழகத்தில் உருவாக்கப்பட்டது குறித்துப் பதிவு செய்துள்ளார். தமிழ்ச் சூழலில் அன்று உருவாகிய சுயமரியாதை இயக்க எழுச்சியையும் 1960களில் உருவான இடதுசாரிக் கண்ணோட்ட ஆக்க இலக்கிய உருவாக்கத்தையும் இணைத்துக் காண வேண்டும். இதன் மூலம் தமிழ்ச் சமூகத்தின் நுண் அலகுகளில் உருவான மாற்றங்களைப் புரிந்து சொல்ல முடியும். அவை மேலும் மேலும் தொடர்ந்தனவா? என்பது வேறு விவாதம். ஆனால் இவ்வகையான கலை இலக்கிய அமைப்புகள் குறித்த பதிவைத் ‘தாமரை’ இதழ் செய்திருப்பதும் அதற்கு மூலமாக தி.க.சி. இருந்ததும் இன்றைய சூழலில் விதந்து பேச வேண்டிய ஒன்றாகக் கருதவேண்டும்.
பாரதி மீது தி.க.சி. கொண்டிருந்த ஆழமான ஈடுபாட்டின் மூலம், ஜீவா வளர்த்தெடுத்த பாரதி இயலை அதன் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத் ‘தாமரை’ இதழ் பாரதி தொடர்பான இதழாகவே வெளிவந்திருப்பதைக் காண்கிறோம். 1950களில் ‘சரஸ்வதி’ இதழ் மூலம் பாரதி ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தொ.மு.சி, ‘தாமரை’ இதழ்களில் பாரதி ஆய்வுகளை மிக விரிவாக மேற்கொண்டிருக்கிறார். பாரதி இயலில் தொ.மு.சியின் தனித்த இடத்தை அவரது “பாரதி: காலமும் கருத்தும்” நூல்வழி அறியமுடியும். அதில் இடம்பெற்றுள்ள பல கட்டுரைகள் ‘தாமரை’ இதழ்களில், தி.க.சி. பொறுப்பாக இருந்தபோது வெளிவந்தவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்; செப்.1966 பாரதி மலரில் பாரதி குறித்துக் கட்டுரை எழுதியவர்கள், ரகுநாதன், எஸ்.இராமநாதன், இளம்பாரதி, ஆர். சூடாமணி, நா. பார்த்தசாரதி, பெ.நா. அப்புசாமி உள்ளிட்ட 12 பேர். இது ஒர் எடுத்துக்காட்டு மட்டுமே. இவ்வகையில் ஜீவாவுக்குப் பிறகு பாரதி குறித்த ஆய்வில் மிகப்பெரும் வீச்சை உருவாக்கியது ‘தாமரை’ என்று சொல்லமுடியும். இதற்கும் மூலமாக தி.க.சி இருந்திருக்கிறார்.
1967 செப். தாமரை பாரதிதாசன் மலராக வெளிவந்தது. இடதுசாரிக் கண்ணோட்டத்தை முதன்மைப்படுத்திப் பேசியவர்கள், பாரதிதாசனை மிகவும் காலம் கழித்தே அங்கீகரித்தார்கள். ஆனால் தி.க.சி. தனது குருநாதர் வல்லிக்கண்ணன் மரபில் பாரதிதாசனைத் தொடர்ந்து கொண்டாடினார். இதன் வெளிப்பாடே பாரதிதாசன் மலர். பாரதிதாசன் குறித்து இம்மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் விதந்து பேசத்தக்கவை. பாரதிதாசனும் இடதுசாரி இயக்கமும் என்று நாம் அடையாளப்படுத்துவோமானால் அதில் முதல் நபராக தி.க.சி.செயல்பட்டிருப்பது வரலாற்றுப் போக்கில் தனித்துப் பேசத்தக்கது.
1967 அக். தாமரை இதழ் ‘சோவியத்’ யூனியன் பொன்விழா மலராக வெளிவந்தது. சோவியத் படைப்பாளிகள் பலரது ஆக்கங்களை வெளியிட்டதோடு, சோவியத் இலக்கியங்கள் தொடர்பான விமர்சனக் கட்டுரைகள் ‘தாமரை’ இதழில் இந்தக் காலத்தில் தொடர்ந்து வெளிவந்தன. சோசலிச எதார்த்தவாதம், சோசலிச எதார்த்த விமரிசனவாதம் ஆகிய பல கோட்பாடுகள் குறித்து பல கட்டுரைகள் வெளிவந்தன. தமிழ் இலக்கியம் மற்றும் கலை குறித்து ஆய்வு செய்த சோவியத் ஆய்வாளர்கள் ‘தாமரை’யில் அறிமுகப்படுத்தப்பட்டனர். கார்க்கியின் கதைகள் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டன. சோவியத் செய்தித் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்ததன் மூலம் பெற்ற வாய்ப்புக்களை தி.க.சி. ‘தாமரை’யில் பதிவு செய்திருக்கிறார். 1950களில் தமிழ்ச் சூழலில் பரவலாக அறியப்பட்டிருந்த சோவியத் கலை இலக்கியம் தொடர்பான கூறுகள் 1960களில் ‘தாமரை’ மூலமாக நிலைபேறு கொள்வதில் தி.க.சி.யின் இடம் தனித்தது. இத்தன்மை மிக முக்கியமானது.
கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேரத் தொண்டர்களாகவும் தலைவர்களாகவும் பணியாற்றிய பலரின் ஆக்கங்களை ‘தாமரை’ வெளிக்கொண்டு வந்துள்ளது. பேரா.நா. வானமாமலை, தோழர் சிந்துபூந்துறை சண்முகம், தோழர்கள் ப. மாணிக்கம், மணலி.கந்தசாமி கே. பாலதண்டாயுதம், ஆர். நல்லகண்ணு, கே.பி.கே. தங்கமணி, கே.இராமநாதன் மற்றும் தோழர்கள் தா.பாண்டியன், பொன்னீலன் ஆகியோர் இக்காலத்தில் தாமரையில் தொடர்ந்து எழுதியிருப்பதைக் காண்கிறோம். கட்சியில் நேரடியாகச் செயல்படும் தோழர்கள் கலை - இலக்கிய மரபு குறித்துக் கொண்டிருந்த கருத்துநிலைகள் பதிவாகியுள்ளது. தோழர் கே.பாலதண்டாயுதம் அவர்களின் தத்துவார்த்த உரையாடல்கள் சார்ந்த கட்டுரைகள் தரம் மிக்கவை. தாமரையில் அக்காலத்தில் அவர் எழுதியவை பின்னர் நூல்வடிவில் வெளிவந்தன. மனிதநேயம் என்பதைத் தத்துவ நிலைப்பாட்டிலிருந்து உரையாடலுக்கு உட்படுத்தியது அவரது எழுத்து.
தமிழ் மாணவர்களாகவும் தமிழாசிரியர்களாகவும் இருந்த பலர் ‘தாமரை’ இதழில் எழுதினர். எழில் முதல்வன், அழகப்பன், முல்லை ஆதவன், தா.வே. வீரசாமி, க.ப. அறவாணன், கி.நாச்சிமுத்து ப.மருதநாயகம், அ.அ.மணவாளன் ஆகிய பிறர் இக்காலங்களில் பல்வேறு கட்டுரைகளைத் ‘தாமரை’யில் எழுதினர். நாட்டார் வழக்காற்றியல், கவிதை, பிற துறைக் கட்டுரைகள் அவைகளாகும். 1959-இல் ‘தாமரை’ தொடங்கியபோதே, தமிழ்த்துறை சார்ந்த பேராசிரியர்களைத் தோழர்.ஜீவா தாமரையில் எழுதச் செய்திருப்பதைக் காண்கிறோம். அந்த மரபைத் தி.க.சியும் தொடர்ந்து செயல்படுத்தி வந்திருப்பதைக் காண்கிறோம்.
நவீனப் படைப்பாளிகள் கதை எழுதும் சூழல், மனநிலை ஆகிய பிறவற்றைப் பதிவு செய்யும் ‘கதைக்கரு’ எனும் தொடரை எழுத்தாளர்களை எழுதச் செய்து வெளியிட்டார். கி.ராஜநாரயணன் தொடங்கி பல எழுத்தாளர்கள் இப்பகுதியில் எழுதியுள்ளனர். இப்பகுதியை தொகுத்து தனியாகக் கொண்டு வரும் தேவை இருக்கிறது. ஈழத்துப் படைப்பாளர்கள் பலரும் தாமரையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். செ.கணேசலிங்கன், கே.டேனியல், ஆழியான், பெணடிக் பாலன், செ.யோகநாதன், மல்லிகை டொமினிக் ஜீவா, நீர்வை. பொன்னையன் ஆகியோருடைய சிறுகதைகள் தாமரையில் வெளிவந்துள்ளன. ‘மலரும் அரும்பு’ எனும் பகுதியிலும் சிறுகதை மலரிலும் (1967-ஜூலை) இவர்களுடைய கதைகள் இடம்பெற்றுள்ளன. ஈழத்தில் இடதுசாரிக் கண்ணோட்டம் சார்ந்த ஆக்கங்களை வெளிக்கொண்டு வருவதற்கான சூழல் குறைவாக இருந்தபோது, ‘தாமரை’ அந்த இடத்தை நிறைவு செய்தது. செ. கணேசலிங்கம், கே.டேனியல் போன்றோர் ஆக்கங்கள் தமிழக இதழ்களில் மிகுதியாக வெளிவந்தன. இதில் ‘தாமரை’யின் இடம் தனித்தது. இவ்விதமான நிகழ்வுக்குப் பின்புலமாகத் தி.க.சி. என்ற மனிதர் இருந்தார் என்பதை வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு பார்க்கும்போது அதன் முக்கியத்துவத்தை இன்று நாம் உணரமுடிகிறது.
இக்காலத்தில் ‘தாமரை’ அட்டைப்படங்களில் பெரும்பாலான படைப்பாளிகளின் படங்கள் இடம்பெறத் தொடங்கியது. பல்வேறு சோவியத் படைப்பாளர்கள், பாரதி, பாரதிதாசன் படங்களை வெளியிட்டதை நாம் தனித்த ஒன்றாகக் கருதமுடியாது. ஆனால், கே.சி.எஸ். அருணாச்சலம், கு.அழகிரிசாமி, ஆர். சண்முகசுந்தரம், நா.வானமாமலை, டொமினிக் ஜீவா, வில்லிசைக் கலைஞர் கார்க்கி மற்றும் சிந்துபூந்துறை அண்ணாச்சி ஆகியோரின் படங்கள் இடம்பெற்ற நிகழ்வைத் தனித்துப் பார்க்கும் தேவை இருப்பதாகக் கருகிறேன். சமகாலத்தில் செயல்படுவோரை இவ்வகையில் அங்கீகாரம் செய்யும் மரபு, இடதுசாரி இயக்கங்களில் குறைவாகவே இருந்துள்ளது. சமகாலத்தில் செயல்படுவோரைக் கொண்டாடுவதன் மூலம், இயக்கச் செயல்பாடுகள் வீரியமாக வளர வாய்ப்பு உண்டு. இந்தப் பணியை தி.க.சி. செய்தார். ஆளுமைகளின் ஐம்பது ஆண்டு அகவைக் கொண்டாடும் அட்டைப்பட மரபு விதந்து பேசவேண்டியதாகக் கருதலாம்.
1959இல் வெளிவரத் தொடங்கிய ‘எழுத்து’ இதழ் புதுக்கவிதை மரபில் தனக்கென தனி இடத்தைக் கொண்டு செயல்பட்டது. இந்த மரபின் தொடர்ச்சியாகவும் அதே வேளையில் மாற்றாகவும் செயல்பட்ட பாங்கு தி.க.சி. பொறுப்பாசிரியராக இருந்த ‘தாமரை’க்கு உண்டு. நா. காமராசன், மீரா. புவியரசு, சிற்பி, பரிணாமன், கே. முருகையன், கோவேந்தன் ஆகிய பலரின் கவிதைகளை வெளியிட்டதோடு, நா. காமராசன் கவிதைகள் குறித்த விரிவான விமர்சனங்களும் ‘தாமரை’யில் வெளிவந்தன. இடதுசாரி கண்ணோட்டமுடைய அறிஞர்களான நா. வானமாலை போன்றோர் புதுக்கவிதை பற்றிக் கொண்டிருந்த விமரிசனங்களை உள்வாங்கியதோடு, அந்த மரபு அடுத்த நிலைக்கு வளருவதற்குத் ‘தாமரை’ கால்கோள் செய்தது. இக்கவிஞர்கள் குறித்த தி.க.சி.யின் பதிவுகள் சிறப்பாகவே இருந்ததைக் காணமுடிகிறது. நா.காமராசன் ஆக்கங்கள் குறித்துத் தி.க.சி. செய்துள்ள பதிவு வருமாறு:
“பகுத்தறிவு, சோசலிசம் என்கிற அடிப்படை இலட்சியங்கள் எனக்குண்டு. அவற்றைக் கலாபோதையோடு நான் பாடுவேன்” என்று கருப்பு மலர்கள் முன்னுரையில் காமராசன் கூறுகிறார். இதை நான் உளமார வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். ஆனால் அந்தக் ‘கலாபோதை’ அவரை மாயாவாதம் (Mysticism), அப்பாலைத் தத்துவம் (Meta Physics) என்ற சரிவுப் பாதைகளில் சில வேளை தள்ளி விடுகிறது என்பதையும், இந்தத் தத்துவங்கள் சோசலிசத்திற்கும் பகுத்தறிவுக்கும் முரணானவை என்பதையும் தோழமை உணர்வோடு நான் அவருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.” (தாமரை: ஜூலை.1971).
தி.க.சி. நா.காமராசன் ஆக்கங்களில் நம்பிக்கை வாதமும் நம்பிக்கையின்மை வாதமும் மாறிமாறி வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளார். இவ்வகையில் உருவான நா.காமராசன், மீரா, புவியரசு போன்றவர்கள் பின்னர் உருவான வானாம்பாடிக் கவி மரபில் மிகத் தாக்கம் செலுத்தினார்கள்: ‘எழுத்து’ இதழ்க் கவி மரபுக்கு மாற்றான ‘வானம்பாடி’க் கவிமரபு உருவானது. இதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்ததில் இக்கால ‘தாமரை’யின் பங்கு மிக முக்கியமானது. நவீன தமிழ்க் கவிதை வரலாற்றில், ‘எழுத்து’ மரபிற்கு மாற்றான ‘வானம்பாடி’ உருவாக்க மரபு என்ற வரலாற்றை ‘தாமரை’ சாத்தியப்படுத்தியிருப்பதை நாம் இதுவரை பதிவு செய்யாமல் விட்டுவிட்டோம். இந்த வரலாற்றுக்கு மூலமாக தி.க.சி செயல்பட்டிருப்பதை பதிவு செய்யும் கடமை நமக்குண்டு.
கே.டேனியல், வல்லிக்கண்ணன், வீர.வேலுச்சாமி, சார்வாகன், நீல.பத்மநாதன், கி.ராஜநாராயணன், கர்ணன், வை.ரங்கநாதன், செ.கணேசலிங்கம், பெணடிக், அசோகமித்திரன், ஆர்.சூடாமணி, ம.இராஜராம், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, உ.ரா.வரதராசன், பா.செயப்பிரகாசம், வண்ண நிலவன், ஆழியான், தஞ்சை பிரகாஷ், பொன்னீலன், ம.ந. ராமசாமி, செ.யோகநாதன், சே.இராமசாமி, ஆ.பழனியப்பன், பூமணி, சி.ஆர்.இரவீந்திரன், டி. செல்வராஜ், முத்தானந்தம், அகஸ்தியர், நீர்வை. பொன்னையா, நாகை.ப.ஜீவா எனப் பலரின் சிறுகதைகள் தாமரையில் இக்காலகட்டத்தில் வெளிவந்துள்ளன. இப்பட்டியல் முழுமையானது அன்று. விடுபாடுகள் உள்ளன. தனது முதல் ஆக்கத்தை வெளியிடுபவர்களை ‘மலரும் அரும்பு’ என்னும் தலைப்பில் அவர்களது கதைகள் வெளியிடப்பட்டன. இப்பகுதியில், இப்பட்டியலில் உள்ள வீர வேலுச்சாமி, உ.ரா.வரதராசன், வண்ண நிலவன், பூமணி, வேந்தன், ப. ஜீவா, வள்ளி, ம.ந.ராமசாமி, ஆகிய பலர் உள்ளனர். இதுவும் முழுமையன்று. முன்னரே கதை எழுதியவர்களோடு முதன் முதலாகக் கதை எழுதியவர்களை ‘மலரும் அரும்பு’ என்னும் அடைமொழியோடு வெளியிட்ட தாமரையின் செயல்பாடு, தமிழ்ப் படைப்பு வரலாற்றில் மிகவும் விதந்து பேச வேண்டிய ஒன்று. இதற்குப் பின்புலமாக தி.க.சி. இருந்தார். இப்படைப்பாளிகள் யார்? என்ற உரையாடல் முக்கியமானது.
1930கள் தொடங்கி தமிழில் உருவாகி வந்த ஆக்க இலக்கிய வாணர்கள் என்போர், ஆங்கில மொழி வழி வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள். அதனையே பழக்கமாகவும் கொண்டிருந்தனர். தமிழ்ப்புனைவுலகம் உருப்பெற்ற சூழலில், அத்தன்மையின் தாக்கம் தவிர்க்க முடியாத ஒன்று. இயல்பான நடைமுறையும்கூட. இந்தத் தொடர்ச்சியில்தான் இந்தியாவில் உள்ள பிறமொழி இலக்கியங்கள், ஆங்கிலமொழி இலக்கியங்கள், சோவியத், சீனம் போன்ற நாடுகளிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட இலக்கியங்கள் தமிழ்ச்சூழலில் வாசிக்கப்பட்டன. தமிழில் உருவான புதிய புனைகதையாளர்களும் இந்தப் பின்புலத்தோடுதான் உருவானார்கள். ‘தாமரை’ அறிமுகப்படுத்திய படைப்பாளிகள் மேற்குறித்த நிலையில் முற்றிலும் வேறானவர்கள். ஆங்கிலமொழி வாசிப்பதற்கான வாய்ப்போ, பயிற்சியோ இவர்களுக்குக் கிடைக்கவில்லை. புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் மரபுசார்ந்த கதைகளை வாசித்தவர்கள் இவர்கள். முதல் தலைமுறை எழுத்துப்பயிற்சி பெற்றவர்கள். குக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய ஆக்கங்கள், புதுமைப்பித்தன் மரபின் தொடர்ச்சியாக உருப்பெற்றவை. இதில் ‘தாமரை’ முன்னத்தி ஏர்ப்பிடித்தது. இதற்கு மூலமாக இருந்தவர் தி.க.சி.. தி.க.சி.யின் இந்தப் பங்களிப்பைத் தமிழ்ச்சமூகம் அங்கீகரித்துள்ளதா? என்ற கேள்வியை எழுப்ப முடியும். தமிழ்ப் படைப்புலக வரலாற்றில் தி.க.சி.க்குத் தனித்த இடமிருக்கிறது. தமிழ்ப்புனைவு மரபை மடைமாற்றம் செய்த மரபு இதுவாகும். இந்த மரபே பின்னர் பெரும் மரபாக வடிவம் பெற்றுள்ளது. இந்தப் பின்புலத்தில் தி.க.சி என்னும் ஆளுமை தமிழ்ப் புனைவு உலகை ஆல்போல் தழைக்கச் செய்தாலும் ஆலமரத்தின் கீழுள்ள விதையாக அவர் மறைந்து, ஒதுங்கி, தன்னை முன்னிலைப்படுத்தாத, அவரது அற மரபை, தமிழ்ச்சமூகம் கொண்டாட வேண்டும். இத்தன்மை குறித்து தி.க.சி. அவர்களின் பதிவு பின்வருமாறு.
“நான் சோவியத் செய்தித்துறை ஆசிரியர் குழுவில் ஒருவனாகப் பணியேற்றேன். இங்கு பணியாற்றிய காலத்திலேயே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை - இலக்கிய இதழான ஜீவாவின் ‘தாமரை’யில் 1965&1972 வரையில் பொதுப்பதிப்பாசிரியனாக கடமையாற்றும் பேறும் எனக்குக் கிடைத்தது. இந்த மகத்தான பொறுப்பை எனக்களித்த கட்சித் தலைமைக்கு என்னுடைய நன்றி என்றும் உரியது. ‘தாமரையுகம்’ என்ற பெயரில், தாமரையின் சாதனைகள் பற்றியும் முற்போக்கு கலை இலக்கியத்தின் வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு பற்றியும் ஒரு தனி நூலே எழுதலாம். அந்தப் பொறுப்பை இலக்கிய வளர்ச்சியைப் பதிவுசெய்யும் ஆய்வாளர்கள் வசம் விட்டுவிடுகிறேன்.” (தி.க.சி.டைரி குறிப்புகள். 18:2014).
தி.க.சி.யின் இந்த வேண்டுகோளை நிறைவேற்றும் பொறுப்பு நமக்குண்டு. அன்றைய சூழலில் எழுத்து (சி.சு.செல்லப்பா) ‘தீபம்’ (1965- நா.பார்த்தசாரதி) இலக்கியவட்டம் (1964. க.நா.சு) ‘கணையாழி’ (1965) கண்ணதாசன் (1968) ஆகிய பல இதழ்கள் வெளிவந்தன. இதே காலத்தில் தி.க.சி.யின் ‘தாமரை’யும் வெளிவந்தது. மேற்குறித்த இதழ்களிலிருந்து ‘தாமரை’ எங்கே வேறுபட்டு எங்கே ஒன்றிணைந்து தமிழ்ச் சூழலில் செயல்பட்டது. அத்தன்மை எவ்வகையில் இடதுசாரிக் கருத்துநிலை மரபை உருவாக்கியது என்ற உரையாடலை நிகழ்த்துவது அவசியம். அதில் தி.க.சி என்னும் மனிதன் எவ்வாறு செயல்பட்டு இருக்கிறார் என்ற புரிதல் அவசியம். ‘தாமரை’யின் ஒன்பதாம் ஆண்டு நிறைவில் அதில் எழுதப்பட்ட தலையங்கம் பின்வருமாறு அமைகிறது.
“புதிய சிந்தனைகள், புதிய வடிவங்கள், புதிய முயற்சிகள் அத்தனைக்கும் தாமரை இடம் கொடுத்துள்ளது. இலக்கியத் தரம் மிக்க கதைகள், கட்டுரைகள், கவிதைகள், ஆராய்ச்சிகள் முதலிய பல்சுவைப் படைப்புகளையும் தாமரை வாசகர்களுக்கு ஈந்துள்ளது. தரமுள்ள எழுத்துக்கும் தமிழ் இலக்கிய உலகில் இடம் உண்டு என்ற நம்பிக்கையை படைப்பாளிகளிடையில் தோற்றுவித்ததுதான் தனது பெரும் கடமையாக தாமரை எண்ணுகிறது.”
ஜூலை 1968இல் இந்தப் பதிவை தி.க.சி. செய்திருக்கலாம். இந்தத் தன்மை முழுமையாகத் ‘தாமரை’யில் நடமுறைப்படுத்தப்பட்டதை தி.க.சி எனும் ஆளுமையின் அடையாளமாகக் கருத இயலும்.
‘தாமரை’யில் இக்காலத்தில் தி.க.சி எழுதியது குறைவு. எழுதச் செய்யும் பணியே அவரது நோக்கமாக இருந்தது. மேலே 1941-1964 காலத்தின் தி.க.சி மற்றும் 1965&1972 கால தி.க.சியை நாம் மேலே உரையாடலுக்கு உட்படுத்தினோம். 1972-2014 என்ற பிற்கால அவரது வாழ்க்கைக்குறித்து எழுதுவதற்காகத் தரவுகளைத் தேட வேண்டியுள்ளது. விரிவான தேடலில் அதனைப் பதிவு செய்யவேண்டும். தரவுகளின்றி எப்படிப் பதிவு செய்வது? ஆனால் இந்தக் காலம் குறித்து தி.க.சி கூறியுள்ள பதிவை இங்கு நினைவுப்படுத்திக்கொள்ளலாம். அப்பகுதி வருமாறு:
“இந்தக் கால் நூற்றாண்டில் வெளிவந்த ‘தீபம்’, ‘கணையாழி’, ‘கண்ணதாசன்’, சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’, க.நா.சு.வின் ‘இலக்கிய வட்டம்’, கோமலின் ‘சுபமங்களா’, ‘செம்மலர்’, கோவையிலிருந்து வெளிவந்த ‘வானம்பாடி’ முதலிய இதழ்களின் வளர்ச்சிக்கும் எனது பங்களிப்பை செலுத்தியதில் நான் மிகுந்த மனநிறைவடைகிறேன். அதேபோல் மதிப்பிற்குரிய தமிழ் இலக்கிய அன்பர்கள் ப.லட்சுமணன் மற்றும் பாரதி நடத்தி வந்த ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் மாதாந்திர கூட்டங்களில் எழுத்தாளர் என்.ஆர்.தாசன் போன்ற நண்பர்களுடன் நான் பங்கேற்றதுண்டு. இந்த வருடங்களில் தான் எனது தேடல்களும் படைப்பாற்றல்களும் பகிர்தல்களும் சிகரத்தை நோக்கி சென்றன. தமிழ்ப்படைப்பாளிகள், பதிப்பாளர்கள், ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், வாசகர்கள் ஆகியோரின் பேரன்பையும் அங்கீகாரத்தையும் நான் பெற்றேன்”. (தி.க.சி.நாட்குறிப்புகள் 18-10-2014).
இந்த பதிவு மூலம் ஓரளவு இந்த காலத்தின் தி.க.சியைப் புரிந்துகொள்ளலாம். தமிழ்த் தேசிய மரபிலிருந்து இந்திய தேசிய மரபை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் தமது இறுதிக் காலங்களில் அவர் பதிவு செய்துள்ளார். இது தொடர்பான தரவுகளைக் கொண்டு இக்கட்டுரையை வேறொரு சந்தர்ப்பத்தில் விரித்து எழுத வேண்டும். தி.க.சி.என்னும் ஆளுமை தமிழ்ச் சமூக வரலாற்றில் என்றும் பேசப்படும் ஆளுமை என்பதே அவருக்கான அடையாளமாகப் பதிவு செய்வோம். நூறு ஆண்டுகள் நிறைவுபெறும் தி.க.சி.நம்மோடு வாழ்கிறார்.
இக்கட்டுரை எழுத உதவிய தரவுகள்:
- தாமரை இதழ்கள். 1965-1972. ‘கல்மரம்’ நூலகச் சேகரிப்பு.
• முத்துக்குமார்.வே.(தொகுப்பு) தி.க.சியின் நாட்குறிப்புகள். சந்தியா பதிப்பகம். சென்னை.83.
குறிப்பு :
தி.க.சி. 25.03.2014 இல் மறைந்தபோது, பனுவல் புத்தக அரங்கில் நடந்த அஞ்சலி உரையின் திருத்தப்பட்ட வடிவம் இக்கட்டுரை. பத்தாண்டுகள் கழித்து தி.க.சி. நூற்றாண்டை நோக்கியப் பதிவாகச் செய்ய மூலமாக அமைந்த தோழர் கண.குறிஞ்சி அவர்களுக்கும், தி.க.சி நூல்களை வெளியிட்ட சந்தியா நடராசன் அவர்களுக்கும், தி.க.சி. ஆக்கங்களைத் தொடர்ந்து பதிப்பித்துக் கொண்டுவரும் வே. முத்துக்குமார் அவர்களுக்கும், இரங்கல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த பனுவல் அமுதரசன் மற்றும் சிவ.செந்தில்நாதன் ஆகியோருக்கும் நன்றி. தி.க.சி. நூற்றாண்டைக் கொண்டாட இப்பதிவு மூலமாக அமையட்டும். நன்றி.
- பேராசிரியர் வீ.அரசு