அனைத்திந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க 18வது அகில இந்திய மாநாடு மத்திய பிரதேசம் மாநிலம் ஜெபல்பூரில் ஆகஸ்ட் 20 முதல் 22 முடிய நடைபெற்றது. இந்தியா முழுவதிலுமிருந்து 600 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அகில இந்திய செயல் தலைவர் நாராயண ராய் தலைமையில் பொதுச்செயலாளர் சுக்தேவ் சிங் செயல் அறிக்கையை சமர்ப்பித்தார்.

ஜனநாயகக் குடியரசைப் பாதுகாப்போம், அரசியலமைப்பைப் பாதுகாப்போம், சுரண்டலுக்கு எதிராக களமாடுவோம், சமுதாய முன்னேற்றத்தில் இலக்கியத்தின் பங்கு, நவீன காலத்தின் நம்பிக்கை ஒளிக்கீற்றுகள், எழுத்தாளர்களின் இன்றைய கடமைகள் என்ற தலைப்பில் கருத்தரங்குகள் நடைபெற்றன. நாடெங்கிலும் இருந்து பல அறிஞர்கள் கலந்து கொண்டனர். அமைப்பு நிலைக் கருத்தரங்கமும் இறுதி நாளில் நடைபெற்றது.

முதல் நாள் மாலை ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்ற கலை இலக்கியப் பேரணி நடைபெற்றது. கவிஞர் ஹரிசங்கர் பர்சாய் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இரண்டு நாட்களிலும் இசை நிகழ்ச்சிகளும், நாடகங்களும், நடனங்களும் அரங்கேற்றப்பட்டன.

இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆதரவாகவும், மத வெறிக்கு எதிராகவும், வெறுப்பு அரசியலுக்கு எதிராகவும், மணிப்பூர் மக்கள் பாதுகாப்பு, தேசிய பொது அமைதி பாதுகாப்பு உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆந்திர வழக்கறிஞர் பி.லெட்சுமிநாராயணா புதிய தலைவராகவும், பஞ்சாப் மாநில சுக்தேவ் சிங் மீண்டும் பொதுச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழகத்திலிருந்தும் பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். காஞ்சி செங்கை மாவட்ட கலை இலக்கியப் பெருமன்ற குழுவைச் சேர்ந்த மாநில துணைத் தலைவர் டி.எஸ்.நடராசன் தேசிய செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். க.இ.பெ.மன்ற மாநில தலைவர் எஸ்.கே.கங்கா (குமரி மாவட்டம்), செயலர் மருத்துவர் அறம் (சாத்தூர்) ஆகிய இருவரும் தேசிய குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய பொறுப்பாளர்களை தமிழகப் பிரதிநிதிகள் பாராட்டினர்.

- சங்கர நாராயணன்

Pin It