அந்நியமாதல்

பொருளாதாரம், அரசியல், தத்துவம், அறவியல், அழகியல், வரலாறு ஆகியவற்றை ஒன்றிணைத்து மார்க்சியத்தை ஈடு இணையற்ற புரட்சிகரத் தத்துவக் கோட்பாடாகக் காட்டும் முதல் தமிழ் நூலாகிய 'அந்நியமாதல்" எனும் இந்நூலின் முதல் பதிப்பு வெளியாகி ( 1979 ) ஏறக்குறைய 43 ஆண்டுகளுக்கு பிறகு க்ரியா வெளியீடாக - இரண்டாம் பதிப்பாக ­தற்பொழுது இந்நூல் வெளிவந்துள்ளது.

" பொருளாதார, தத்துவக் கையெழுத்துப் படிகள் 1844" (Economic and Philosophical Manuscripts 1844 - எனும் மார்க்சின் நூல் அறிவுத்துறையில் மாபெரும் அதிர்வுகளை உருவாக்கிய முக்கியப் படைப்பாகும். அதன் சாரமான அந்நியமாதல் எனும் கருத்தாக்கம் குறித்து நாடறிந்த மார்க்சிய அறிஞர் எஸ்.வி. ராஜதுரை அவர்கள் இந்நூலில் தெளிவு படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதிகம் பேசப்படாத அல்லது தவறாகப் பேசப்படும் மார்க்சின் இயற்கை குறித்த கரிசனம் பற்றிய விவரங்களும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது இப்புத்தகத்தின் மற்றுமோர் சிறப்பம்சமாகும்.

இந்நூலின் முதல் பதிப்பினைப் போலவே, இரண்டாம் பதிப்பும் மார்க்சியம் பற்றிய விவாதங்களைத் தூண்டிவிடும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நூலைப் படிக்கும் பொழுதே, "பொருளாதார, தத்துவக் கையெழுத்துப் படிகள் 1844" எனும் நூலின் மெய்யான தமிழாக்கம் இதுவரை தமிழில் வரவில்லையே என்ற ஆதங்கம் மேலிடுகிறது. இதற்கான முன்னெடுப்புகள் கடந்த காலத்தில் அவ்வப்பொழுது மேற்கொள்ளப் பட்டிருந்தாலும், எதுவும் நிறைவடையவில்லை.

எனவே எஸ்.வி.ஆர். அவர்களே இம்மாபெரும் பணியையும் மேற்கொள்ள வேண்டும் என "புதுமலர் இதழ் சார்பாக இத்தருணத்தில் வேண்டுகிறோம்.

பக்கங்கள் - 304 விலை - ரூ.350. வெளியீடு - க்ரியா தொடர்புக்கு - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

***

perarasin sithaivugalபேரரசின் சிதைவுகள்

புரட்சியாளர்களின் கனவு உலகாக நெடுங்காலம் விளங்கிய சோவியத் குடியரசு வீழ்ச்சியுற்று ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்குப் பின்னால் 1997 ஆம் ஆண்டில் இரசிய அரசியல் அறிஞர் கோர்கி ஐ.மிர்ஸ்கி அவர்களால் எழுதப்பட்டது இந்நூலாகும். ஆங்கிலத்திலிருந்து க. விஷயகுமார் மூலம் தமிழாக்கம் செய்யப்பட்டுத் தமிழோசைப் பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இடம் பெற்றிருந்த15 குடியரசுகள், இப்பொழுது இறையாண்மையுள்ள தனித்தனி நாடுகளாக மாறிவிட்டன. அந்நாடுகள் இரசியாவுடன் முன்பு எவ்விதமான உறவைக் கொண்டிருந்தன? இப்பொழுது நிலைமை எப்படி மாறி உள்ளது? என்பவை குறித்தும், அந்நாடுகள் எதிர்கொள்ளும் அரசியல், பொருளாதாரச் சிக்கல்கள், அந்த நாடுகளுக்குள்ளேயே நடைபெறுகின்ற இன, அரசியல் மோதல்கள், உள்நாட்டுப் போர்கள் ஆகியவற்றிக்கான பின்னணியை இந்நூல் பகுப்பாய்வு செய்கிறது.

குறிப்பாக இனக்குழுக்கள், இனம், அரசு உருவாக்கம், தேசம், தேசப்பற்று, தேசியவாதம் ஆகியவை குறித்து நூலாசிரியர் கோர்கி ஐ. மிர்ஸ்கி, பல அறிஞர்களின் கருத்துக்களை மேற்கோள்களோடு விளக்குகிறார். "தேசிய இனப்பிரச்சனையில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் தவறாமல் படித்தறிய வேண்டிய நூல் இது" என மொழிபெயர்ப்பாளர் குறிப்பிடுகிறார்.

பக்கங்கள் - 296

விலை - ரூ.320.

தொடர்புக்கு - 97884 59063

வெளியீடு - தமிழோசைப் பதிப்பகம், கோவை.

***

மணிமேகலை - தமிழ்அறம்

மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய "மணிமேகலை" காப்பியம் குறித்த ஆ.கிருட்டிணன் அவர்கள் எழுதிய இந்நூல், தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு குறித்த செய்திகளைக் கொண்டுள்ள காத்திரமானதோர் ஆய்வு நூலாகும். மணிமேகலை கூறும் பௌத்த அறம் என்பது தமிழ் அறம் என இந்நூல் வெளிப்படுத்துகிறது.

திருக்குறள், புறநானூறு மற்றும் பிற சங்கப்பாடல்களின் அறக்கோட்பாடுகள் மணிமேகலையில் எவ்வாறு உட்செறிந்துள்ளன என்பதை ஒப்பிட்டு இந்நூல் பேசுகிறது. பார்ப்பனிய ஒழிப்பு, வர்ணகுல ஒழிப்புப் பற்றிப் பேசும் மணிமேகலையைத் தமிழ் கூர் நல்லுலகு பயன்படுத்திக் கொள்ளாதது குறித்து நூலாசிரியர் கேள்வி எழுப்புவது கருதத்தக்கது.

தவிரவும், பௌத்தத்திற்கும் தமிழ் மரபுக்கும் இருந்த நல்லுறவு இதில் தெளிவு படுத்தப் பட்டுள்ளது. எனவே "புத்தரின் கையடக்கமான பிடக நெறி எனும் நான்கு பேருண்மைகளை வைத்துக் கொண்டு, மணிமேகலை காப்பியத்தை உருவாக்கிய சாத்தனாரின் மொழியையும், அறிவையும் தமிழ் மக்களிடையே கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்" எனும் வேட்கையோடு உருவாக்கப் பட்டுள்ள இந்நூல், மணிமேகலை பற்றிய ஆய்வு நூல்களில் குறிப்பிடத்தக்கதாகும்.

பக்கங்கள் - 156

விலை - ரூ.160.

தொடர்புக்கு - 80155 31019.

வெளியீடு - மருது பதிப்பகம், ஈரோடு....

***

தமிழ் பயிற்றுமொழி ­கனவும் நனவும்

தமிழ்நாடு டாக்டர் எம் ஷி. ஆர். மருத்துவப் பல்கலைக் கழகச் சிறப்புநிலைப் பேராசிரியராக விளங்கும் முனைவர் டாக்டர் சு. நரேந்திரன் அவர்கள் ஆங்கில முறை மருத்துவர் மட்டுமல்ல, தமிழ் பயிற்றுமொழி குறித்துப் பல்லாண்டுகளாக வலியுறுத்தி வரும் நற்றமிழ் அறிஞர் ஆவார். மருத்துவக் கல்வியைத் தமிழில் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்த முடியும் என்பது குறித்த இவரது ஆய்வு நூல் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூரத் தக்கதாகும். தவிரவும், தனது ஆங்கில முறை மருத்துவம் குறித்தும் நூல்களை எழுதிப் பல்வேறு பரிசுகளை வென்றவர்.

தமிழ்வழிக் கல்வி குறித்த வரலாற்றை நூலாசிரியர் மிக விரிவாக இப்படைப்பில் தொகுத்துள்ளார். தவிரவும், இப்பொருள் சார்ந்து அமைக்கப்பட்ட ஆணையங்கள் குறித்தும், அவற்றின் பரிந்துரைகள் குறித்தும் விரிவான பதிவுகள் இதில் உள்ளன.

தவிரவும், தமிழ் பயிற்று மொழி பற்றி உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு குறித்த விமர்சனங்கள் மிகவும் பயனுடையவையாகும். அவை எதிர்காலத்திற்கான புதிய திறப்புகள் என்றே கருத வேண்டும்.

வெளிநாட்டில் தமிழ் பயிற்று மொழியாக இருப்பது பற்றிய விவரங்களும், உலக நாடுகளில் தாய் மொழிக் கல்வி குறித்த விவரங்களும் பலரும் அறிய வேண்டிய செய்திகள் ஆகும்.

பயிற்று மொழியாக மட்டுமல்லாமல், ஆட்சிமொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் தமிழ் வர வேண்டியதன் தேவையை இந்நூல் வலியுறுத்துகிறது.

நீட் தேர்வு குறித்து நூலாசிரியர் முன்வைக்கும் பரிந்துரை குறிப்பிடத்தக்கது." ஒன்றிய அரசின் அறிக்கை, சுதேச மொழியிலும் தொழில்நுட்பக் கல்வியைக் கற்பிக்கலாம் என்று சொல்லும் நிலையில், நாம் ஏன் மருத்துவக் கல்வியைத் தமிழில் தொடங்கக்கூடாது? தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியைத் தொடங்கும் நிலையில் நிச்சயமாக வெளி மாநிலத்தவர்கள் நீட் எழுதித் தமிழ் வழியில் படிக்க முன்வர மாட்டார்கள்.

100 விழுக்காடு இடங்களும் நமக்கே கிடைத்துவிடும். இக்காலகட்டத்தில் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வுக்கு விலக்குக் கிடைத்தாலும் அதையும் மனமுவந்து ஏற்றுக் கொள்வோம்" எனும் அவரது முன்வைப்பு கருதத்தக்கது.

பக்கங்கள் - 304

விலை - ரூ.340.

வெளியீடு - என் சி பி எச், சென்னை.