கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

புரட்சியின் பிற்பாடு சாதி மதப்பாகுபாடு இருக்காது, அவர்கள் சமமாக நடத்தப்படுவார்கள் என்பதை அறியாதவரை சொத்துடமைச் சமத்துவத்துக்கான புரட்சியில் மனிதர்கள் இணைய மாட்டார்கள். புரட்சிக்குத் தலைமை தாங்கும் ஒரு சோசலிஸ்ட் சாதியில் நம்பிக்கை இல்லை என்று உறுதி அளித்தால் மட்டும் போதாது. உறுதி என்பது மிகவும் ஆழமான அடித்தளத்தில் இருந்து வரும் உத்தரவாதமாக இருக்க வேண்டும். அதாவது, தங்கள் தனிப்பட்ட சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் உணர்வில் ஒருவரையொருவர் நோக்கிய தோழர்களின் உளவியல் அணுகுமுறை என்கிற அடித்தளத்தில் இருந்து அது வரவேண்டும். (1)

I

இன்றைய மார்க்சியம் தொடர்பான விவாதங்களில் புதிய மார்க்சியம் (New Marxism), பின்மார்க்சியம் (Post Marxism), பின்னை நவீனத்துவ அல்லது பின்நவீனத்துவ மார்க்சியம் (Postmodern Marxism), நவமார்க்சியம் (Neo Marxism) எனப் பலவாறு மார்க்சியத்தைக் கூறுபோடும் முறை இருக்கிறது. மார்க்சியத்தை இவ்வாறு கூறு போடுவதற்குப் பதிலாக நாம் மார்க்சிய வளர்ச்சியை வரலாற்றுக் கட்டங்களாகப் (Marxist Development in Historical Stages) பகுத்துக் கொள்வோம்.

ஆதாரமாக, ஜெர்மன் தத்துவம், ஆங்கிலப் பொருளாதாரம், பிரெஞ்சுப் புரட்சிகர அரசியல் பற்றிய மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துக்கள் வெளியான-, அவர்கள் செயல்பட்ட காலகட்டம். இரண்டாவது அதனைக் குறிப்பிட்ட இரசியச் சூழலுக்குப் பொருத்தி லெனின்- டிராட்ஸ்க்கி -ஸ்டாலின் போன்றோர் எழுதிச் செயல்பட்ட காலகட்டம். மூன்றாவதாக சோவியத் அனுபவங்களையும் எடுத்துக் கொண்டு, சீன நிலைமைகள் குறித்து மாவோ எழுதிச் செயல்பட்ட காலகட்டம். இதனை நாம் செவ்வியல் மார்க்சியக் காலகட்டம் (Classical Marxist) எனலாம்.

இரசியப் புரட்சியினால் ஆதர்சம் பெற்றாலும் இரசிய அனுபவங்கள் குறித்த விமர்சனத்துடன் சமாந்தரமாக 1920-கள் முதலே பிறிதொரு மரபு இருக்கிறது. ரோஸா லுக்ச்ம்பர்க், லுகாக்ஸ், கிராம்சி போன்றோரின் மரபு இது. இவர்களை ஆதர்சமாகக் கொண்டு ஸ்டாலினின் இரசிய மாதிரிக்கு மாற்றான மனிதாபிமான மார்க்சிய (Humanist Marxist) மாதிரியொன்று ஹங்கேரிய கோஸ்லாவிய - செக்கோஸ்லவாக்கிய நாடுகளில் உருவானது. பிராக் சிந்தனைப் பள்ளியினர், பிராக்சிஸ் சிந்தனைப் பள்ளியினர் (Parxis School) என இவர்கள் வழங்கப்பட்டார்கள்.

marx 336இரசிய சோசலிச அனுபவங்களும் பாசிச எதிர்ப்பு அனுபவங்ளும் இவர்தம் சமகாலத்தவர்களான பிராங்பர்ட் சிந்தனையினரது (Frankfurt School) பேசுபொருள்களாக ஆகின. புரட்சிகரப் பிரக்ஞை பற்றிப் பேசிய லுகாக்சினால் ஆதர்ஷம் பெற்றவர்களாக இவர்கள் இருந்தனர். இதனுடன் 1968 பிரெஞ்சு தொழிலாளர் - மாணவர் எழுச்சியை ஒட்டி சார்த்தரின் இருத்தலில் மார்க்சியம் (Existentialist Marxism), அல்தூசரின் அமைப்பியல் மார்க்சியம் (Structuralist Marxism) போன்ற சிந்தனைகள் எழுந்தன. இந்தச் சிந்தனைப் போக்குகளின் பின் இருந்தவர்கள் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களாக இருந்தவர்கள். சிலர் கட்சியின் உறுப்பினர்களாக இருந்து அதிலிருந்து வெளியேறியவர்கள்.

இந்த மேற்கத்திய, சீன அனுபவங்களுக்கு அப்பால் காலனியாதிக்க தேசிய விடுதலைப் போராட்ட அனுபவங்களாக வியட்நாமிய, கியூப, அங்கோலா, தெற்கு யேமான் போன்ற நாடுகளின் படிப்பினைகள் இருக்கின்றன. இவ்வாறு மார்க்சியம் கோட்பாடு, செயல்முறை என அதனது அனுபவப் பரப்பு பன்முகத் தன்மையானவை. இதனையே இன்று நாம் பன்முகத் தன்மையிலான மார்க்சியம் (Multidimensional Marxism) என்கிறோம்.

இந்த அத்தனைச் சிந்தனைப் போக்குகளோடும் இதுவரைத்திய இடதுசாரி மரபைப் புரட்டிப்போட்ட ஒரு நிகழ்வாக சோவியத் யூனியனிலும் கிழக்க ஐரோப்பிய நாடுகளிலும் இரசிய மாதிரி சோசலிச அரசுகள் வீழ்ச்சியடைகின்றன. சோவியத் மாதிரி (Soviet Model) சோசலிசத்திற்கு மாற்றான சோசலிச மாதிரிகள் பற்றிய விவாதங்கள் இப்பொது எழுகின்றன. எடின் பாலிபர், சந்தால்மொபே போன்றவர்கள் பேசும் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் (Equality and Freedom) அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகம் (Radical Democray) பற்றிய விவாதங்கள் இப்போது எழுகின்றன.

II

இருபதாம் நூற்றண்டு சோசலிசம் கம்யூனிஸ்டுக் கட்சி அதிகாரத்தின் கீழான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் (Proletarian Dictatorship), அரசு சோசலிசம் (State Socialism) என்கிற இரசிய மாதிரியாக இருந்தது. இருபத்தியோராம் நூற்றாண்டு சோசலிசம் கீழிருந்து கட்டப்படும் உழைக்கும் வர்க்கச் சமூகக் குழுக்களின் பிரதிநிதித்துவப் பங்கேற்பு- மற்றும் ஒருங்கிணைவில் உருவான ஒரு ஜனநாயக அமைப்பின் விளைவாக அரசு வடிவம் இருக்கவேண்டும் என்று வெனிசுலாவின் சேவாசும்- மைக்கேல் எபோவிட்சும் தெளிவுபடுத்தினர் இதுவே எதிர்கால சோசலிசம் எனவும் அறிவித்தனர்.

வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்தில் தொழிலாளர் புரட்சி என்கிற காலகட்டமல்ல, ஆயுதப் புரட்சியின் மூலம் ஆட்சியதிகாரத்தை அமைத்த காலம் அல்ல, பாராளுமன்ற ஜனநாயகத்தின் (Parliamentary Democracy) வழி சோசலிசத்தைக் கட்டுவதைப் பற்றியே இப்போது நாம் பேசுகிறோம் என்றார் அமெரிக்க - இலத்தீனமெரிக்க மார்க்சியரான மைக்கேல் லெபோவிட்ஸ்.

மார்க்சும் எங்கெல்சும் தமது கம்யூனிஸ்ட்டுக் கட்சி அறிக்கையில் ‘ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் வெற்றி அடைய உழைப்பாளி வர்க்கத்தினது புரட்சியின் முதல்படி பாட்டாளியை ஆளும் வர்க்கத்தின் நிலைக்குக் கொணர்வது’ என்று வாதித்தார்கள். பிற்பாடு, தமது அரசியல் மேலாதிக்கத்தை வலிமையாகக் கொண்டு அனைத்து வகைகளிலும் முதலாளிகளிடமிருந்து மூலதனத்தைக் கைப்பற்றுவது என்றார்கள். தேர்தல்களில் வெற்றி பெறுவதாலோ அல்லது அல்லது அரசைக் கைப்பற்றுவதாலோ தொழிலாளி வர்க்கம் தனது அரசியல் மேலாதிக்கத்தைச் சாதிக்க முடியாது என்பதை இருபதாம் நூற்றாண்டு மெய்ப்பித்திருக்கிறது. சமூகத்தின் உறுப்பினர்களுக்கு அவர்களது நாயகத்தன்மையுடன் தமது திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வெளியைத்தரும் நிறுவனங்களை உருவாக்குவதே இன்று ஜனநாயகத்திற்கான உண்மையான போராட்டமாக இருக்கிறது. (2)

சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்பு இன்றும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் தலைமையில் சீனா, வியட்நாம், வட கொரியா, லாவோஸ், கியூபா போன்ற நாடுகளில் சோசலிசம் நிலவுகிறது. இவை அனைத்தும் உலகளாவிய முதலாளித்துவச் சந்தைப் பொருளாதார (International Capitalist Market Economy) அமைப்புக்குள் நுழைந்து விட்டன. அமெரிக்கா உள்ளிட்டுப் பங்களாதேஷ் வரை உலகில் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் இருக்கின்றன. அவை சோசலிசத்திற்கான தத்தமது பாதைகளையும் தமது திட்டங்களில் கொண்டிருக்கின்றன.

அரசு இடையீடு (State Intervention) செய்து மக்கள் நலனைப் பாதுகாக்கும், முதலாளிகளுக்கும் தொழிற்சங்க இயக்கத்திற்கும் மத்தியஸ்தம் செய்யும் (Mediate) என்கிற கீனிஸியப் பொருளதாரச் சிந்தனையையொட்டிய (Keynesian Economic Thought) தாராளவாதத்தை (Liberalism) இன்று நவதாராளவாதம் (Neo Liberalism) தோற்கடித்து விட்டது. மக்கள் நலனில் அரசுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை எனும் இது மக்கள் நலத்திட்டங்ளைக் கைவிட்டு விட்டது. மக்கள்நலத் திட்டங்களின் நிதிகைளை வெட்டிக் குறைத்து (Austerity) விட்டது. சந்தையையும் கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபத்தையும் மட்டுமே மையமாக் கொண்ட ஒரு பொருளாதார அமைப்பை இது உருவாக்கி விட்டது.

அமெரிக்காவின் ரீகனும் பிரிட்டனின் தாட்ச்சரும் இதனது முன்னோடிகள். இன்று இந்தியா இந்தப் பாதையில்தான் பயணிக்கிறது. பொதுத்துறையை முற்றாக ஒழிப்பது இதனது பொருளியல் கொள்கையாக இருக்கிறது.

இது ஒரு புறமிருக்க சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின் ஐரோப்பாவின் பெரும் கம்யூனிஸ்டுக் கட்சியான இத்தாலிய கம்யூனிஸ்டுக் கட்சி 2012 ஆம் ஆண்டு அதனது இருபதாவது காங்கிரசில் தனது பெயரை ஜனநாயக இடதுசாரிக் கட்சி என மாற்றிக் கொண்டது. அதே ஆண்டு பாலஸ்தீனக் கம்யூனிஸ்டுக் கட்சி தனது பெயரை பாலஸ்தீன மக்கள் கட்சி என்று மாற்றிக் கொண்டது. மார்க்சிய லெனினியத்தைத் தனது கோட்பாடாகக் கொண்டிருந்த குர்திஸ் விடுதலை இயக்கம் இன்று கீழிருந்து கட்டப்படும் ஜனநாயகம் தழுவிய முர்ரே புக்ச்சின் எனும் கோட்பாட்டாளரின் எதேச்சாதிகார எதிர்ப்பு (anti-Authoritarian) மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசத்தைத் (Libertarian Socialism) தேர்வு செய்திருக்கிறது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின் கம்யூனிச அரசியல் இப்படி இரு கூறுகளாக ஆகியிருக்கிறது என்பதுதான் இன்று உலக அரசியல் யதார்த்தம்.

இன்று மார்க்சின் எழுத்துக்களை மட்டும் தனியே எடுத்துக்கொண்டு அதனைத் திட்டவட்டமான சிந்தனையமைப்பாக ஆய்வுசெய்யும் கல்வியியல் சார்ந்த முறை ஒன்று இருக்கிறது. மார்க்ஸ் இந்த உலகைப் புரிந்துகொள்ள விஞ்ஞானபூர்வமான ஒரு முறை­யியலை உருவாக்குகிறார். இந்த முறையியலின் வழி, குறிப்பிட்ட வரலாற்று மனிதாய சக்தியின் வழி ஒரு எதிர்காலக் கனவுலகை அவர் வழிமொழிகிறார். அதாவது இயங்கியல் பொருள்முதலியல், வரலாற்றுப் பொருள்முதலியல் என்பது பகுப்பாய்வு, தொழிலாளி வர்க்கம் வரலாற்றுச் சக்தி, கம்யூனிசம் எதிர்காலக் கனவுலகு. இதில் முதலிரண்டு விஷயங்களை விரித்து எழுதிய மார்க்ஸ் அரசு முதலாளித்துவம்- சோசலிசம்- கம்யூனிசம் இவற்றுக்கு இடை­யிலான மாற்றம் எவ்வாறு எந்தத் தருணத்தில் நிகழம் என்பதை விரித்து எழுதவில்லை. அவை சிதறலாக அங்கும் இங்குமான குறிப்புகளாகவே இருக்கின்றன. அவற்றை இன்றயை பொருளியல் வளர்ச்சியுடன் ஒப்பிட்டு இற்றைப்படுத்தும் திட்டம் ஒன்றை ஜெர்மன் ரோஸா லக்சம்பர்க் ஆய்வு நிறுவனத்தினர் மார்க்சின் முழுமையடையாத திட்டம் (The Unfinished System of Marx) எனும் பொருளில் முன்னெடுத்து வருகின்றனர்(3).

III

மார்க்சுக்கு முன்னும் பின்னுமாகவும் சோவியத் யூனியனது வீழ்ச்சிக்குப் பின்னரும் சோசலிசம் குறித்த கருத்துக்கள் எவ்வாறு மாறிவந்திருக்கிறது என்பதை நாம் தொகுத்துக் கொள்வோம்.

மார்க்சுக்கு முன்னராகக் கோட்பாட்டு அடிப்படையில் ஆய்வுமுறை­யியல் சார்ந்து அல்லாமல் சமத்துவ சமூகத்தைப் படைத்தல் எனச் சிந்தித்த கற்பனாவாத சோசலிஸ்ட்டுகள் (Utopian Socialists) என ரூசோ, புனித சைமன், சார்ல்ஸ் பூரியர், ரோபரட், ஓவன் போன்றவர்கள் வேறுவேறு சமூக மாதிரிகளை முன்மொழிந்தார்கள். வர்க்கத்தின் மூலம் (Class Based) வரலாற்றுப் பரிணாமத்தைப் பற்றிய செயிண்ட சைமனின் பகுப்பாய்வு, சுற்றுச்சூழல் (Environmentalism) நிர்ணயவாதத்தில் ஓவனின் வலியுறுத்தல், சமூக அடக்குமுறை வடிவங்களின் (Social Oppressions) முக்கியத்துவம் பற்றிய போரியரின் அங்கீகாரம் ஆகியவை பிற்காலச் சோசலிசப் பகுப்பாய்வுகளில் முக்கியமான கூறுகளை வழங்கின. சமத்துவத்தின் பின்னணியில் ஒத்துழைப்பு, சங்கமித்தல், நல்லிணக்கம் போன்ற குறிப்பிட்ட மதிப்புகளில் கவனம் செலுத்துவதன் மூலம் கற்பனாவாதிகள் சோசலிசத்திற்குக் கணிசமான பங்களிப்பைச் செய்தனர். ஓவன் மற்றும் போரியரின் விஷயத்தில் இது பாலியல் சமத்துவத்தை (Sexual Equality) வலியுறுத்துவதாக இருந்தது.

கற்பனாவாத சோசலிஸ்ட்டுளைக் கடந்து, அரசு மறுப்புச் சோசலிஸ்ட்டுகளோடு (Anarchist Socialists) அரசு எனும் பிரச்சினையில் மார்க்ஸ் முரண்பட்டார். அரசு அடிப்படையில் ஒடுக்குமுறை வடிவம் என்ற அரசு மறுப்பு (Anti-State) என்பதைத் தமது சிந்தனையின் அடிப்படையாக முன்வைத்தனர். இதற்கு மாறாகக் கூட்டுறவு அமைப்புகள் (Cooperatives), கம்யூன்கள் (Communes), உழைப்பாளர் கவுன்சில்கள் (Workers Councils) போன்றவற்றை முன்வைத்தனர். மார்க்ஸ் புரவுதோன், பகுனின் போன்றவர்களோடு வாதிட்டு, இயங்கியல் (Dialectics), வரலாற்றுப் பொருள்முதல்வாத ஆய்வு (Historical Materialism), வர்க்கப் போராட்டம்- பாட்டாளி வர்க்கத் தலைமை (Proletarian Leadership) என விஞ்ஞான ரீதியில் சோசலிசத்திற்கான பாதையை விளக்கினர். இரசியாவில் அமைந்த சோசலிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் தலைமை என்று சொல்லிக் கொண்ட அதிகார வர்க்கத்தின் (Bureaucratic State in the name of Proletariat) ஆட்சியாக ஆகியது. (4)

இத்தகைய சோவியத் மாதிரிக்கு மாற்றான ஒன்றையே 21 ஆம் நூற்றாண்டுகான சோசலிசமாக இந்திய மார்க்சிஸ்டுக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான பிரகாஷ் காரட் முன்வைக்கிறார். 20 ஆம் நூற்றாண்டின் சோசலிசத்தில் சோவியத் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு உற்பத்திச் சாதனங்களின் பொதுவுடைமை பெருமளவில் அரசிடம் இருந்தது. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் முக்கியவடிவமாக இருப்பதால் அது பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும், இயக்கும் அதிகாரவர்க்கத்தின் கட்டுப்பாட்டுக்கு அது வழிவகுத்தது. நிறுவனங்களை நடத்துவதில் தொழிலாளர்களுக்கு எந்தக் கருத்தும் இல்லை. 21 ஆம் நூற்றாண்டில் சோசலிசத்தின் கீழ் பொதுவுடைமை பல்வேறு வடிவங்களில் இருக்க வேண்டும். அரசு உடைமை அந்த வடிவங்களில் ஒன்றாகும். அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் அல்லது பொதுத்துறையாக அது இருக்கலாம். தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குச் சொந்தமான கூட்டுறவு நிறுவனங்கள் இருக்க வேண்டும். சோவியத் யூனியனில் இருந்த மிகவும் மையப்படுத்தப்பட்ட அமைப்பைப் போல அல்லாமல், பல்வேறு வகையான பொதுவுடைமை அமைப்புகள் இருக்க வேண்டும் என்கிறார் பிரகாஷ் காரட். (5).

IV

மார்க்சியம் எந்தச் சமூகத்தையும் பகுப்பாய்வதற்கான ஓர் ஆய்வுமுறையை முன்வைக்கிறது. அதுதான் இயங்கியல் - வரலாற்றுப் பொருள்முதலியல். பிற்பாடு மார்க்சில் முக்கியமானது - வர்க்கப் போராட்டம்- புரட்சிகரக் கட்சி - வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்தில் புரட்சி- சோசலிசம்- அதன் வளர்ந்த கட்டமாகக் கம்யூனிசம்.

ஐரோப்பாவில் கார்ல் மார்க்ஸ் எதிர்பார்த்தது போல, வளர்ச்சியடைந்த முதலாளித்துவம், வளர்ச்சியடைந்த பாட்டாளி வர்க்கத்தலைமை என்பது உலகின் முதல் புரட்சியான இரசியப் புரட்சியில் இல்லை. சீனாவில் முன்னணிப்படை, விவசாயிகள். கியூபாவில் மாணவர்- நடுத்தர வர்க்கத்தினர். வெனிசுலா, பொலிவியா உள்ளிட்ட இலத்தீனமெரிக்க நாடுகளில் பிரதானமாகப் பூர்வகுடி மக்கள். இந்தியாவில், பிரதானமாகத் தொழிலாளி வரக்கத்தினருடன் தலித்துகள்.

இரசியப் புரட்சியை மூலதனத்துக்கு எதிரான புரட்சி என்றார் கிராம்சி. இவ்வாறு புரட்சிக்கு யார் முன்னணி வகிப்பது என்பது அந்தந்தச் சூழலால் தீர்மானிக்கப்படுவது. இவை அனைத்தினதும் இலக்கு சோசலிசம். மார்க்ஸ், லெனின், பிடல், லுமும்பா-சேவாஸ் என அனைவரதும் இலக்கு மார்க்ஸ் முன்வைத்த சோசலிசம்தான்.

ambedkar 530பகுப்பாய்வுக் கருவி ஒன்று. முறைகள் அந்தந்த நாட்டுக்கு உரியவை. முக்கியமான விஷயம், அந்தந்த நாட்டின் பிரத்யேகத் தன்மையைக் கவனம் கொள்வது என்பதுதான். அம்பேத்கரும் அரச சோசலிசம் (State Capitalism) தான் தனது இலக்கு என்று பேசுகிறார். அவரோடு உரையாடல் மேற்கொள்வது என்பது இந்தியாவின் 17 சதவீதமாகத் திரண்டிருக்கிற ஒடுக்கப்பட்ட மக்களிடம் உரையாடல் மேற்கொள்வது.

மார்க்ஸ் எதிர்பார்த்தபடி வளர்ச்சியடைந்த முதலாளித்துவ சமூகத்தில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் புரட்சி என்பது நடைபெறவேயில்லை. ஆயுதப் புரட்சி நடைபெற்ற சமூகங்களிலும் இரண்டாம் உலகப் போரில் விளைந்த கிழக்கு ஐரோப்பிய சமூகங்களிலும்தான் ஒற்றைக்கட்சி கம்யூனிச ஆட்சி வந்தது. அடுத்து சீனா, வியட்நாம், கியூபாவில் காலனியாதிக்க எதிர்ப்பு ஆயுதப்புரட்சி நடந்தது. இவை அனைத்தும் எழுபது ஆண்டுகளுக்கு முந்திய அனுபவங்கள்.

நிகரகுவாவில் (1979--90) இடதுசாரிகள் ஆயுதப் புரட்சியின் மூலம் ஆட்சிக்கு வந்து பிற்பாடு பாராளுமன்ற ஜனநாயகத்திற்குத் திரும்பினார்கள். இன்று கம்யூனிஸ்ட்டுகள் உலகில் எங்குமே ஆயுதப் புரட்சியின் மூலம் ஆட்சி என்பதைப் பேசுவது இல்லை. இலத்தீன் அமெரிக்காவில் ஆயுத இயக்கங்கள் கடந்த காலம் என்றார் பிடல். இலத்தீனமெரிக்க இடதுசாரிகள் பாராளுமன்ற ஜனநாயகம் வழிலான சோசலிச சமூகம் என்றுதான் பேசுகிறார்கள்.

மேற்கிலும் மேற்கல்லாத நாடுகளிலும் தாராளவாத முதலாளித்துவத்­திலிருந்து சோசலிசம் நோக்கி என்பதுதான் இன்று இடதுசாரிச் சிந்தனையாக இருக்கிறது. பொதுத்துறையின் கீழ் அடிப்படைத் தேவைகள், கலப்புப் பொருளாதாரம், ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சமூகநீதி, கல்வி, மருத்துவம், இருப்பிடம் போன்றவற்றில் சமத்துவம், பெண்ணிலைவாதம் (Feminism), கருத்துச் சுதந்திரம், சூழலியல் (Ecology), அரசியல் ஜனநாயகம், சிறுபான்மையினர் உரிமை என்பதுதான் இன்றைய சோசலிச சிந்தனை. 21 ஆம் நூற்றாண்டு சோசலிசம் இதிலிருந்துதான் உருவாக முடியும்.

இன்று உலகின் அனைத்துப் பிரச்சினைக்கும் ஒரு தனிச் சிந்தனையாளரிடம் ரெடிமேட் பதில்களை எதிர்பார்க்க முடியாது. காலமும் இடமும் ஒருவரது சிந்தனையைத் தீர்மானிக்கிறது. கால மாற்றத்தில் அவரது சிந்தனை பலராலும் விரித்தெழுதப்படுகிறது. பிரச்சினை நம் காலத்தின் பிரச்சினைகளை எதிர்கொள்வது என்றால் நாம் அதனை மையமிட்டுதான் சிந்திக்க வேண்டும்.

இதனால்தான் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் சிந்தனையின் ஒருங்கிணைவை நாம் பேசுகிறோம். இவை அனைத்துமே உறவும் முரணும் கொண்டவை. இனியான தேடலும் தேவைப்பட்டவை. இந்தியச் சூழல் இதனைக் கோருகிறது. நமக்கு என்ன வேண்டும்? அதன் விரிவான அர்த்தத்தில் இந்திய ஒடுக்கப்பட்ட மனிதரின் விடுதலை. இதற்கு ஓர் அமைப்பாக எந்தத் தனியொருவரதும் சிந்தனை போதாது. அதனால்தான் விடுதலைச் சிந்தனைகளில் இருந்து தேர்வை மேற்கொள்கிறோம். ஹெகலில் கருத்து முதலியலை நிராகரித்துவிட்டு இயங்கியலைத் தேர்ந்து அதனை இயங்கியல் பொருள்முதலியலாக மார்க்ஸ் உருவாக்கவில்லையா?

V

கார்ல் மார்க்ஸ் (1818--1883) மறைந்து எட்டு ஆண்டுகளின் பின் அம்பேத்கர் (1891--1956) பிறந்தார். மார்க்ஸ் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிந்தனையாளர் என்றால், அம்பேத்கர் இருபதாம் நூற்றாண்டின் மத்தியகாலச் சிந்தனையாளர். இருவரும் 65 ஆண்டுக் காலம் உயிர் வாழ்ந்தார்கள்.

உலக அளவில் என்றால் அம்பேத்கரின் மார்க்சியம் குறித்த அனுபவம் என்பது சோவியத் சோசலிசம் குறித்த அனுபவம்தான். ஸ்டாலின் காலம் குறித்த குருஷ்சேவின் ஆவணம் 25 பிப்ரவரி 1956 சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 30 ஆவது காங்கிரசில் சமர்ப்பிக்கப்படுகிறது. அம்பேத்கர் அதே ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி மரணமடைகிறார். குருஷ்சேவ் ஆவணம் குறித்து அம்பேத்கர் ஏதாவது எழுதியிருக்கிறார் என்பதற்கான ஆவணம் இல்லை. அம்பேத்கர் மார்க்ஸ், லெனின் குறித்துச் சாராம்சமாக எழுதியிருக்கிறாரே அல்லாது இவர்களிலிருந்து குறிப்பான நூல்களிலிருந்து குறிப்பான மேற்கோள்களை அம்பேத்கர் பாவித்திருக்கவில்லை.

இந்தியாவில் நிலப்புரபுத்துவத்தை ஒழிப்பது என்பது சாதியை ஒழிப்பதன் மூலமே சாத்தியம் என அம்பேத்கர் கருதினார். வர்க்க ஒற்றுமைக்கான முன்நிபந்தனையாகப் பிரக்ஞைபூர்வமாகத் தொழிலாளி வர்க்கத்தினிடையில் சாதிய நீக்கமனநிலை உருவாக வேண்டும் என அவர் கருதினார். இந்தப் பிரச்சினை அவர் காலத்தில் வர்க்க மையவாதத்தை முன்னுறுத்திய கம்யூனிஸ்ட்டுகளுக்கும் அவருக்குமான பெரும் முரணாக எழுந்தது.

சாதி ஒழிப்பு என்பது ஒரு சட்டமுறை அணுகல், அதற்கு முன்பாக அது பிரக்ஞை மாற்றம். தொழிலாளி வர்க்கத்திடம் இந்தப் பிரக்ஞை மாற்றத்தை (Conscious Building) யார் உருவாக்குவது? அதற்கான கருத்தியல் அடிப்படை இல்லாமல் அது எப்படிச் சாத்தியம்? பஞ்சாலைத் தொழிலகத்தில் துப்புரவு, கடும் உடலுழைப்பு கோரும் வேலைகளை (Menial and Manual Jobs) மட்டும் தலித்துகளுக்கு ஒதுக்காமல், நெசவுப் பிரிவிலும் (Weaving Department) தலித்துகளுக்கு இடம்தரப் போராடுவது என்பது வர்க்கப் போராட்டதின் பகுதி. வர்க்க ஒற்றுமைக்கு இந்த சாதியப்பிளவு மனநிலை தடையாக இருக்கிறது. சாதியம் நிலைபெறக் காரணம் நிலப்பிரபுத்துவ முறை. நிலப்பிரபுத்துவ ஒழிப்பின் முதல் எதிர்முனை விவசாயக் கூலித் தொழிலாளர்களில் பெரும்பான்மையான தலித் மக்கள்தான். இவர்கள் குறித்த சாதியப் பிரக்ஞை மாற்றம் உருவாகாமல் எவ்வாறு நிலமற்ற விவசா­யிகள் - கூலித் தொழிலாளர் ஒற்றுமை உருவாகும்?

உழைப்பு, சுரண்டல், முதலாளிய மூலதனத் திரட்டல் பற்றிப் பேசும்போது மார்க்ஸ் உற்பத்தியில் ஒப்புதலுடனான உழைப்பு (Free Labour), ஒப்புதலற்ற நிர்ப்பந்திக்கப்பட்ட உழைப்பு (Unfree Labour) பற்றிப் பேசுகிறார்.

உழைப்புக்கான ஊதியம் என்ற ஒப்புதலுடன் உற்பத்தியில் ஈடுபடுவது முதல் வகை. திரட்டப்பட்ட தொழில்கள், அரசு- மற்றும் தனியார் அமைப்புத் தொழிற்சங்கங்களில் இருப்போர் இத்தகைய தொழிலாளர். அடிமை முறைக்குள் (Slavery) கொணரப்பட்ட, சங்கிலிகள் பூட்டப்பட்ட நிலையில் கொட்டகைகளில் அடைக்கப்பட்டு, மிருகங்களைப் போல் உழைப்புச் செலுத்த நிர்ப்பந்திக்கப்படடவர்கள் ஆப்பிரிக்க மக்கள், வெவ்விந்தியப் பூர்வகுடி மக்கள் போன்றோர்.

மார்க்ஸ் இத்தகையவர்களை முதலாளிய உறபத்தி முறைக்கு முன்னரான காலத்தவராகப் பிரிக்கிறார். இந்தியச் சூழலில் தலித் மக்கள் இத்தகைய பின்ணணியில்தான் பரம்பரை அடிமைகளாக (Bonded Labourers) வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இன்று மேற்கத்திய-அமெரிக்க முதலாளிய மூலதனத் திரட்டலுக்கு வரலாற்று ரீதியில் இன-நிற மூலதனம் (Racial Capitalism) எனப் பெயரிடுகிறார்கள். இத்தகைய நோக்கில் இந்திய நிலைமையில் நிச்சயமாக சாதிவாத மூலதனத் திரட்டல் (Casteist Capitalism) என்பது நிகழ்ந்தேயிருக்கிறது. (6)

வர்க்க அரசியல் பெருமளவு ஒப்புதலுடனான உழைப்பில் ஈடுபடும் திரட்டப்பட்ட தொழிலாளர்களினிடையேதான் தொழிற்சங்கங்களின் வழி செயல்படுகிறது. உண்மையில் இன்றும் விவசாயக் கூலித்தொழிலாளர்கள், உதிரித்தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழில்களில் ஈடுபடுபவர்கள் நிப்பந்திக்கப்படும் உழைப்பைத் தருபவர்களாவே உள்ளனர். இப்படி இருப்பவர்கள் பெரும்பாலும் தலித் மக்கள்தான். எனவேதான் ஒப்புதலுடனான உழைப்பு, நிரப்பந்திக்கப்படும் உழைப்பு என இரண்டையும் உற்பத்தி உறவுகளில் வைத்துப்பேச வேண்டும். இந்த வகையில் வர்க்கமும் சாதியும் கறுப்பினமும் சமமுக்கியத்துவம் கொண்டதாக ஆகின்றன.

இந்தியச் சமூகத்தில் இந்துமதம்-, சாதி-, பார்ப்பனியம், - அரசதிகாரம் என்பவற்றுக்கு இடையிலான இடையறாத உறவை அம்பேத்கர் வெளிப்படுத்தினார். பார்ப்பனியம் குறித்த அவரது பார்வையும் மதத்தை ஒரு விமர்சன அலகாக விலக்கி வைத்த கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் பார்வையும் இருவருக்குமிடையில் பெரும் முரணாக எழுந்தது. தமிழகத்தில் பெரியாரியத்துக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையிலான முரணாகவும் இது இருந்தது.

எல்லா வகைத் தத்துவ நோக்குகளும், கோட்பாட்டுப் பார்வைகளும், அறிவுத்துறைகளும் தீர்க்க வேண்டிய பிரச்சினை இதுதான். அமைப்பு பிரச்சினையாக, சிக்கலானதாக, வலிதருவதாக, நெருக்கடி மிக்கதாக, மாற்ற வேண்டியதாக இருக்கிறதா? இதற்கு பிரக்ஞையின் பங்கு என்ன? மாற்ற வேண்டியதில் மனிதனின் பங்கு என்ன? அமைப்பு குறித்த ஆய்வுக்கு மார்க்சை விட்டால் வழியேது? கூடுதலாக அல்தூசர், கிராம்சி. பிரக்ஞையை (Consciouness) ஆழ்ந்து கற்க லுகாக்ஸ். கூடுதலாக சார்த்தர். மனிதனின் பங்கு (Human Agency) குறித்து அளவிட லெனின். கூடுதலாக மாவோ, சேகுவேரா. உலகின் அத்தனைச் சிந்தனையமைப்புகளையும்-. ஆம், அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டு- இதற்குள் இருத்திவிடலாம்

அம்பேத்கர் பொருளியலாளராகவும் இந்திய யாப்பை எழுதியவராகவும், தலித் விடுதலைக் கோபாட்டாளராகவும் அரசமைப்பு, மக்கள்நலன், அரசு சோசலிசம், சாதிய நீக்கம் போன்ற பிரச்சினைகளை மையம் கொண்டே அவரது சிந்தனைகள் கோட்பாட்டாக்கம் பெற்றன.

இரசிய சோசலிசம் என்பது ஒற்றைக்கட்சியான கம்யூனிஸ்ட்டுக் கட்சி (One Party State directed by Single Party) வழிகாட்டுதலில் அரசு முதலாளித்துவத்தை (State Capitalism) இடைக்கால கட்டமாகவும், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் (Proletarian Dictatorship) கொண்ட அடுத்தகட்ட அரசை சோசலிசம் (Socialism) எனவும் லெனின் வரையறுத்தார். அம்பேத்கர் அரசின் அடிப்படையாகச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதை முன்வைத்தார். அவரது அரச சோசலிசம் பல்கட்சி பாராளுமன்ற ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது. அம்பேத்கர் பலகட்சிகள் பங்கேற்கும் பாராளுமன்ற அமைப்பில் ஜனநாயக சோசலிசத்தை (Democratic Socialism) முன்வைத்தார். அதனை அவர் அரசு சோசலிசம் என்கிறார்.

வர்க்கத்தைக் கீழ்கட்டுமானத்தில் (Basic Structure) வைத்து வரையறுக்கும் இந்திய மார்க்சியர்கள் சாதியை மேல்கட்டுமானத்தின் (Super Structure) பகுதியான பண்பாட்டுப் பிரச்சினையாக (Caste as Cultural issue) முன்வைத்ததை அம்பேத்கர் மறுத்தார். சாதி உற்பத்திஉறவாகவும் வர்க்கத்திற்கு இணையாகவும் (Caste oppression as parallel to Class oppression) பார்ப்பனிய மேலாதிக்கப் பண்பாட்டின் பகுதியாகவும் இருக்கிறது. இவ்வாறு கீழ்-மேல் கட்டுமானம் என இரண்டிலும் சாதி வலுவான இருப்பைக் கொண்டிருக்கிறது. வேறு வேறு சூழல்களில் கீழ்க் கட்டுமானம் சார்ந்த பொருளாதார நிர்ணயம் (Economic Determinism) என்பதற்கு மாறாக, மேல்கட்டுமானம் அரசியல் மற்றும் கலாச்சாரமும் நிர்ணயக்கூராக இருக்க முடியும்.

குறிப்பாக மார்க்சின் வரையறையில் மேல்-கீழ் கட்டுமானம் என்பது ஒரு உருவகம் (Metaphor). அது இறுகிய (Static), உறைநிலைக் கட்டமைப்பு (Freezed) அல்ல. இரண்டும் பரஸ்பரம் பாதிப்பதும் மாற்றத்துக்கு உட்பட்டதாகவும் இருக்கினறன. மூலதனம், -அரசு-, பாசிசம் பற்றிய ஆய்வில் இது வெளிப்படும். கிராம்சி, அல்தூசர் போன்றவர்கள் இதனைச் சொன்னார்கள். (7)

மார்க்சும் அம்பேத்கரும் சோசலிசம் பற்றிச் சிந்தித்தவர்கள். சோசலிசத்திற்கான முன்நிபந்தனை நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட வேண்டும். சாதியமைப்பு ஒழியாமல் நிலப்பிரபுத்துவம் ஒழியாது. வர்க்கப் போராட்டத்தின் வழியிலான சோசலிசத்திற்கு ஏதுவான சூழல் சாதி ஒழிப்பில்தான் இருக்கிறது என்கிறார் அம்பேத்கர். அம்பேத்கரின் சோசலிசம் என்பது இரசிய அனுபவங்கள், மதம்- சாதி- பார்ப்பனியத்தை ஆய்வுக்குட்படுத்தாத அவர்காலத்திய இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளின் பாலான விமர்சனத்தில் இருந்து வடிவம் பெற்றது. சுதந்திரம் சமத்துவம் சகோரத்துவம் எனும் அவரது அவாவில் இருந்து வடிவம் பெற்றது.

அம்பேத்கரின விமர்சனத்தைக் கருத்தில் கொண்டு இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் மூத்த தவைர்களில் ஒருவரான ஏ. பி. பரதன் இவ்வாறு சொல்கிறார் :

சாதியை ஒழிப்பதும் சாதியமைப்பை ஒழிப்பதும் இந்திய ஜனநாயகப் புரட்சியின் ஒருங்கிணைந்த பகுதியாகும். சாதி அமைப்பை ஒழிக்காமல் இந்திய நிலப்பிரபுத்துவத்தை முற்றிலும் ஒழிக்க முடியாது. இந்திய முதலாளித்துவ அமைப்பிற்குச் சாதி அமைப்பைத் தகர்க்க அரசியல் மற்றும் பொருளாதார விருப்பம் இல்லை, ஏனெனில் சாதிப் பிளவுகள் உழைக்கும் மக்களைப் பிரிக்க உதவுகின்றன, இதனால் கூலித் தொழிலாளைரைச் சுரண்ட உதவுகின்றன. இடது மற்றும் கம்யூனிஸ்ட்டு இயக்கங்கள் விரவான வகையில் பொருளாதார ஒடுக்குமுறை மற்றும் சமூக பாகுபாடுகளுக்கு எதிராக உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும். (8)

VI

மார்க்சிய ஆய்வு முறையியலுக்கோ மார்க்சியம் சொல்கிற கம்யூனிசத் திட்டத்திற்கோ மாற்றாக, அதனைப் பிரதியீடு (Replace) செய்ய ஒரு முழுமையான சமூகத் திட்டத்தைப் பெரியார் உருவகிக்கவில்லை. அது அவரது நோக்கமும் இல்லை. அவர் கம்யூனிசத்தை ஒரு சமூகத் திட்டமாக ஏற்றவர்.

இந்து மதம், சாதி, பார்ப்பனியம் போன்றவற்றில் மார்க்சியர் கவனம் கொள்ளவேண்டும் என அவர் கோருகிறார். இது பண்பாட்டரசியலில். இந்திய நிலைமையில் மேல்கட்டுமானத்தில் மேலாதிக்கம் செய்யக் கூடியதாக, நிர்ணயமான பாத்திரம் வகிக்கக் கூடியதாக இது இருக்கிறது.

பெரியார் பொதுவுடமையை ஏற்கவே செய்கிறார். கம்யூனிஸட்டுக் கட்சி அறிக்கையைத் தமிழில் கொண்டு வந்தவர் அவர்தான். கிராம்சி, அல்தூசர் வழியில் பெரியார் இந்திய நிலைமையில் மார்க்சியத்தின் ஒரு தொடர்ச்சி.

periyar 345அம்பேத்கர் தனது இறுதிக் காலத்தில் புத்தரா மார்க்சா என்று கேள்வி கேட்டு புத்தரது அமைதி வழியை மாற்றுச் சமூகத் திட்டமாக (Alternative Society) முன்வைத்தவர்தான். புத்தமதம் தனிமனித வாழ்வுக்கான வழிகாட்டு நெறியாக அமையலாமேயல்லாது, மார்க்ஸ் முன்வைக்கிற முழுமையான ஒரு சமூகப் பொருளியல் பண்பாட்டு மாற்றாக ஆக முடியாது.

அரசுடன் இணைந்து கொண்ட எந்தமதமாயினும் அது வன்முறையாக அடுத்தவர் மீதான ஒதுக்கலாகவும்தான் ஆகி விடுகிறது என்பதற்கு இலங்கை, பர்மா போன்ற நாடுகள் எடுத்துக்காட்டு. ஒரு அரசியல் திட்டமாக புத்தமதப் பார்வை மார்க்சியத் திட்டத்துக்கு மாற்றாகி விடமுடியாது.

அம்பேத்கர், சாதியப் பிரச்சினையை வர்க்கப் பிரச்சனையுடன் இணக்கப்படுத்துவதற்கு இடையறாது முயன்றவர். இந்துமதம்- சாதி ஒதுக்கல்- பார்ப்பனியம் வெறுமனே மேல்கட்டுமானம் சார்ந்த பணபாட்டுப் பிரச்சினை அல்ல, அது அனைத்தும் தழுவிய இந்திய அமைப்பு சார்ந்த பிரச்சினை என கம்யூனிஸ்ட்டுக் கட்சியோடு வாதிட்டுக் கொண்டிருந்தார். அதில் அவர் விரக்தியுற்றார். இவ்வாறுதான் அவரது இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி சார்ந்த ஒவ்வாமை உருவானது.

 அடுத்து, அத்யாவசிய மக்கள் சேவைகள் பொதுத்துறையின் கீழ், பிற சமூகத் திட்டங்கள் அனைத்தும் சுதந்தரம், சகோரதரத்துவம, சமத்துவம் என்பதன் அடிப்படையில் அமைய வேண்டும் என்றார் அவர். அன்றைய பிரித்தானியத் தொழிலாளர் கட்சி (British Labour Party) முன்வைத்த அரசின் தலையீடு - அரசின் வழியில் மக்கள் நலத்திட்டங்கள் எனும் பாதையையே அவர் தேர்வு செய்தார்.

பிரித்தானியத் தொழிற்கட்சியின் தலைவரான நார்மன் இயான் மெக்கன்சியின் சோசலிசம் : ஒரு குறு அறிமுகம் (Socialism : A short Introduction) எனும் நூல் மற்றும் அமெரிக்க சமூக ஜனநாயகவாதியான ஜான் டூயியின் ஜனநாயகமும் கல்வியும் (Democracy and Education) எனும் நூலின் ஆதர்சத்தினாலும் உருவானது அம்பேத்கரின் அரசியல் கருத்தியல்.

ஒரு வார்த்தையில் சொன்னால் சோசலிசம் குறித்த அவரது தேர்வு அவரது கால இரசிய சோசலிசத்திற்கும் (Russian Socialism based on Proletariaon Dictatorship), பிரித்தானியத் தொழிலாளர் கட்சியின் சமூக ஜனநாயக (Socialism based on Multi party Democracy) சோசலிசத்திற்கும் இடையிலானதாக இருந்தது. அவர் சமூக ஜனநாயக சோசலிசத்தைத் தேர்வு செய்தார். கம்யூனிசம், இந்தியக் கம்யூனிஸ்ட்டுகள் தொடர்பான அவரது நிலைபாடுகளை இவ்வாறுதான் நாம் புரிந்து கொள்ள முடியும். (9)

சோசலிசத்தில் ஜனநாயகம் குறித்த வலியுறுத்தலை இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி- லிபரேசன் அமைப்பின் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா பின்வருமாறு குறிப்பிடுகிறார் :

சோவியத்திற்குப் பிந்தைய உலகில் உலகளாவிய பொருளாதார அரசியல் போக்குகளின் பின்னணியில் தற்போதைய இந்திய முன்னேற்றங்களைக் கண்டறிய முடியும் என்றாலும், இந்திய வரலாறு மற்றும் சமூகத்தில் இதற்கான வலுவான வேர்கள் உள்ளன. அம்பேத்கரையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் ஏற்கும்போது அவர் விடுத்த எச்சரிக்கைகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசியலில் இடதுசாரிகளின் பார்வையும் பங்கும் வரலாற்று ரீதியாகச் சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதற்கான கருத்துக்கள், சோதனைகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது, ஆனால, ஜனநாயகத்தின் ஓர் உயர்ந்த மாதிரியை வழங்குவதற்கான சோசலிசத்திற்கான சவால் ஆபத்தான வகையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒரு பாசிசத் தாக்குதலை எதிர்கொள்ளும் போது, இந்தியாவில் இடதுசாரிகள் ஜனநாயகத்தின் மிகவும் நிலையான, நம்பகமான போராளிகளாக வெளிப்பட்டு அதனை உறுதிப்படுத்த வேண்டும். (10)

இன்றைய நிலையில், வர்க்கத்துக்கு இணையானது சாதி, இந்துமதம்-, சாதி-, பார்ப்பனியம், -இந்திய அதிகார அமைப்பு என்கிற அம்பேத்கரது வலியுறுத்தலை ஏற்று அம்பேத்கரை மார்க்சியர்கள் தமது அனைத்தும் தழுவிய முழுமையான கம்யூனிசத் திட்டத்தினுள் ஏற்க முடியும். உண்மையில் இந்திய சோசலிசம் நோக்கிய மார்க்சிய வழியில் இருக்கிற தடைக்கற்களைத்தான் அம்பேத்ரும் பெரியாரும் அக்கறையுடன் சுட்டிக் காட்டி­யிருக்கிறார்கள்.

மார்க்சும் லெனினும் வலியுறுத்திய கருத்தாக்கங்களான முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் போன்றன இன்று அதனது அடுத்த கட்டமாக கார்ப்பரேட்டிசமாக வடிவம் பெற்றிருக்கிறது. சமூக ஜனநாயக தாராளவாதம் இன்று நவதாராளவாதமாக வடிவம் பெற்றிருக்கிறது. உடலுழைப்புத் தொழிலாளர்கள்- சேவைத் துறைத் தொழிலாளர்கள், திரட்டப்படாத தொழிலாளர்கள் என்று வர்க்க அரசியலை அணுக வேண்டியிருக்கிறது. மார்க்ஸ் அனைத்துத் துறை அறிவும் சார்ந்து சிந்தித்தவர். அவர் ஹெகல் முதலான அவரது காலத்தின் சிந்தனையாளர்களைக் கடந்து வந்தவர். இதனாலேயே மார்க்சிய மரபு அனைத்துத் துறைகளையும் பாதிக்கிறது. அம்பேத்கரும் பெரியாரும் இந்திய நிலைமையில் மார்க்சியத்தின் உடன்பயணிகள். அவர்களோடு இணைந்தும் கடந்தும் அது அதனது பொதுவுடைமைத் திட்டம் நோக்கி நடக்கும் வலிமை கொண்டது.

இந்திய சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பாராளுமன்ற ஜனநாயகம் இந்தியாவில் இயங்கி வருகிறது. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் இந்தியா பாராளுமன்ற ஜனநாயகத்தில் இயங்கி வருகிறது. இந்திய அரசியல் அமைப்புக்குள்தான் நாம் இன்று சோசலிசம் பேசமுடியும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இங்கு சாத்தியமில்லை. ஒற்றைக்கட்சி ஆட்சியதிகாரம் என்பது இந்தியாவிற்கான பாதையாக இருக்க முடியாது. ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரதும் தலைமையில் அமைகிற ஆட்சியே இந்திய சோசலிசத்திற்கான பாதையாக ஆக முடியும்.

மார்க்ஸ் காலத்திலும் அவரது பின்னும் எத்தனையோ பின், நவ கோட்பாடுகள் வந்து போய் விட்டன. மார்க்சியம் மட்டுமே தொடர்ந்து விமோசன அரசியலாகக் களத்தில் இருக்கிறது. அதற்கான காரணம், அதுவெறும் பகுப்பாய்வு மட்டும் அல்ல. அது சொர்க்கத்தை மண்ணில் படைக்கும் அனைத்தும் தழுவிய, மனித விடுதலைக்குகான அனைத்தையும் உள்ளடக்கும் ஒரு நடைமுறைத் திட்டம். அதனைப் பிற சிந்தனைகள் பிரதியீடு செய்துவிடும் எனக் கருத முடியாது.

References:

(1) B.R. Ambedkar/Annihilation of Caste/ 1936.

(2) Michael A. Lebowitz/ What Is Socialism for the Twenty-First Century? / Monthly Review/01 October 2016.

(3) Judith Dellheim and Frieder Otto Wolf /The Unfinished System of Karl Marx : Critically Reading Capital as a Challenge for our Time/ Springer/ 2018.

(4) Michael Newman/Socialism : A very short Introduction/ OUP/2005.

(5) Prakash Karat/CPI-M/ Marxism in the 21st Century: Alternative to Neoliberal Capitalism and Imperialism/The Marxist, XX V II 4/ October–December 2011.

(6) Sheetal Chabria / Where Does Caste Fit in A Global History of Racial Capitalism? / Historical Materialism/ July 2 023.

(7) D.Raja and N.Muthumohan / Marx and Ambedkar Con t inuing the Dialogue / Refer Muthumohan’s talk on Basic-Superstrucure/2018.

(8) A.B.Baradhan/CPI/Introduction/CPI /Marx and Ambed kar Continuing the Dialogue/ D.Raja and N.Muthumohan/NCBH /2018.

(9) V.Geetha /Bhimrao Ramji Ambedkar and the Question of Socialism in India/ Refer Communists, Caste and Hindu Religion /2021.

(10) Dipankar Bahttacharya/CPI(ML) Liberation/ Fascism Democracy and the Left Forum Speech /20 th December /2020.

- யமுனா ராஜேந்திரன்