உலகை ஒற்றைத் தன்மை அமைப்பாகக் காலனியம் மாற்றி வந்தபோது அதை எதிர்த்து உருவான மெய்யியல் இயக்கம் பின் நவீனத்துவமாகும். வேற்றுமைகளைக் கொண்டாடுவோம் என்ற முழக்கத்துடன் பெருங்கதையாடல்கள், ஒற்றைப் பெரும் பண்பாட்டுத் திணிப்பு, அதிகார ஆதிக்கம் போன்ற எல்லாவற்றையும் எதிர்த்தது அது. ஆனால் அது இனக் குழுக்களின் விடுதலை, பண்பாட்டு மீட்பு என்பனவற்றைப் போற்றவில்லை. ஆனால் பின் காலனியம் என்ற கருத்தக்கம் காலனியத்திற்கு மாற்றாக இனக்குழுக்களின் பண்பாட்டு மீட்பு, தொன்மங்களின் புரிதல்கள் என்ற வகையில் மெய்யியலை முன்வைத்து பண்பாட்டு மேலாதிக்கத்திற்கு எதிராக உருவெடுத்தது. பின்காலனியம் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொண்ட அரசியல் தத்துவம் ஆகும். பின்காலனியம் ஒரு மெய்யியல் அறிவுக் கோட்பாடு அல்ல.அது விடுதலைக்கன குரலாக இலக்கியம் மூலம் வெளிப்பட்டது. இலக்கியப் பரப்பில் ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் சினுவாஆச்சிபே, கூகிவாத்யாங்கோ போன்றவர்கள் பின்காலனிய எழுத்தாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். பின்னர் அது ஒரு கோட்பாட்டுத் தன்மையைப் பெற்றது பாலஸ்தீனிய சிந்தனையாளர் எட்வர்ட் சயித், இந்தியாவின் "ஹாமி பாபா மற்றும் காயத்திரி ஸ்பிவக் போன்றவர்களால்தான். எட்வர்ட் சயித் எழுதிய ஓரியண்டலிசம் எனும் நூல் மிகவும் புகழ் பெற்றது. இவர்களின் படைப்புகள் கிழைத் தேய நாடுகளின் பண்பாடுகள் பற்றிய ஒரு அரசியல் ஆய்வை மேற்கொள்ளத் தூண்டின.
பின் காலனியப் படைப்புகளின் ஆணிவேராக கருதப்படுவது இனக்குழுக்களின் மாண்புகளை காலனிய ஆதிக்கத்தின் பிடியிலிருந்து மீட்பது ஆகும். மேற்கத்திய ஆதிக்கப் போக்கினை எதிர்த்து பல தளங்களில் எழுச்சி அடைவதை முன்வைப்பதே பின் காலனியம். பண்டைய இலக்கியங்களிலிருந்தும், தொன்மங்களிலிருந்தும், வரலாற்றிலிருந்தும் இனக்குழுக்களின் தனித் தன்மையை மீட்டெடுபதே இதன் முறைமை ஆகும்.
இந்த அடிப்படையில் இந்தியா நீண்ட கால காலனியாதிக்கத்திற்கு உள்ளன நாடாகவும், பின்னர் ஒற்றைத் தன்மையை முன்வைக்கும் நவீனத்துவத்துவத்தின் பாதிப்பில் ஜனநாயகக் குடியரசாகவும் உருவெடுத்தது. இன்று ஒரே நாடு, ஒரேபண்பாடு, ஒரே மொழி எனும் முழக்கத்தை முன்னிறுத்தும் அளவிற்குச் சென்றுள்ளது. இந்த" சூழலில்தான் தமிழகம் தன் தனித்தன்மையைக் காப்பாற்றும் வகையில் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்தே தன் குரலை எழுப்பியுள்ளது. சுதந்திரத்திற்குப் பின் இந்தி மொழித் திணிப்பு தமிழ் தேசீயத்திற்கான பெரும் எழுச்சியை உண்டாக்கியது. இந்த தமிழ் தேசிய எழுச்சிக்கு முதற்கட்ட முன்னுரை எழுதியவர் வள்ளலார் எனலாம். அதை தீவிரமாக்கிய முக்கிய இலக்கியவாதியாக பாவேந்தர் பாரதிதாசனைக் காணலாம்.
இனத்தைச் செய்தது மொழிதான் என்ற பாரதிதாசனின் வரிகள் அவர் மொழியை ஒரு சமூகப் பார்வைடேன் என்னவாகப் பார்க்கின்றார் என்பதை உணர்த்துகின்றது. இனம் மட்டுமல்ல இனத்தின் மனத்தைச் செய்ததும் மொழி எனும் போது ஒட்டு மொத்த தமிழர்களின் பண்பாடு என்பது தமிழ் மொழியால் உருவக்கப்பட்டது என்ற புரிதலை முன்வைக்கின்றார். இதுதான் தமிழின் பின் காலனிய செயல்பாட்டின் அஸ்திவாரம் எனலாம். இனத்தின் ஆணிவேராக தமிழைக் காணவைத்ததுதான் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என பாட வைத்தது. இந்தப் புரிதல் அல்லது இந்தப் பாடல் உணர்ச்சிவசப்பட்டு முழங்கிய முழக்கம் அல்ல. கூர்மையான பண்பாட்டு அரசியல் புரிதலுடன் ஒரு கவிதையாக முன்வைக்கப்பட்ட கருத்தியலாகும். இன்று மொழி அரசியல் பற்றிய பல்வேறு இயக்கங்களும் ஆய்வுகளும்ப் செழித்து வருகின்றன. அது வெறும் கருத்தியலாக அன்றி செயல் பாட்டுத் தளத்திலும் உந்து சக்தியாக செயல்பட்டுவருகின்றது. தமிழரின் மொழிப் பற்று என்பது எதோ தமிழனாகப் பிறந்து விட்டோம் என்ற அடையாளத்தால் ஏற்பட்ட இன அபிமானம் அல்ல. அது தமது வாழ்வியல், அரசியல்,வரலாறு ஆகியவற்றின் ஊடாக தமிழ்குலம் பெற்ற அறம் சார்ந்த விழுமியங்களைப் போற்றும் செயலாகும். இதற்கனப் புரிதலுடன் கூடிய புரட்சிக் கவியின் முழக்கம் தமிழரை வீரு கொள்ள வைத்தது என்றால் அது மிகையில்லை.
வாழ்வும் வளமும் மங்காத தமிழ் எனும் வரியில் தமிழ் வெறும் ஒரு தொடர்பு மொழியாக அவரால் புரிந்து கொள்ளப்படவில்லை என்பது தெளிவாகின்றது. தமிழ் என்ற சொல்லை ஒரு பரந்து பட்ட தளத்தில் வைத்து அதற்குரிய பல பரிமாணங்களை அவர் உணர்ந்ததால்தான் அப்படி எழுத முடிந்தது.
" தமிழறியான் தமிழர்நிலை, தமிழர்நெறி, தமிழர்களின் தேவை, வாழ்வு தமையறிதல் உண்டோ? எந் நாளுமில்லை! தமிழறியான் சுவையே காணான்! சுமை சுமையாய் அரசியல் சீர் சுமந்தவர்கள் இதுவரைக்கும் சொன்ன துண்டோ தமிழ்க்கல்வி தமிழ்நாட்டில் கட்டாயம் என்பதொரு சட்டம் செய்ய? என்று கவிநயம் காணப் பேசுவது தமிழ்த் தேசிய அரசியல் அல்லவா? தமிழறியாதவர் தமிழர் நிலை அறியமுடியாது, அவர்களின் தேவைகளையும் புரிய முடியாது என்று அறுதியிடுவதும், தமிழிலேயேதான் தமிழர் கல்வி இருக்க வேண்டும் என்று கூறுவதும் பின் காலனியத்தின் முக்கிய புள்ளிகளாகும். கட்டாயத் தமிழ் கல்விக்கான சட்டம் பற்றி வலியுறுத்துவது இன்று மிக மிகத் தேவையான விடயமாகும். தமிழ்மொழியை பள்ளிகளில் மிகவும் பலவீனமானதாக ஆக்கிவிட்டோம். ஆங்கில அறிவுக்குத் தரும் முக்கியத்துவம் தமிழுக்கு இல்லை என்பது அறிந்ததே! தமிழை எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிவதனால் தமிழ் அறிந்தவராவதில்லை. தமிழ் பண்பாட்டை அதன் சிறப்புகளை, இலக்கியப் பங்களிப்புகளைப் புரிந்து கொள்ளும் அறிவே தமிழறிவாகும். நவீனத் தமிழ் படைப்புக்களைக் கூட அறியாத இளைஞர் கூட்டம் அதிகரித்து வருகின்றது. தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்கள் நவீன காலனிய நுகர்வியத்தால் விழுங்கப்பட்டு, உள்ளீடற்ற தமிழ் இளைஞர்கள் உருவாகும் ஆபத்து அதிகரித்து வருகின்றது. திருக்குறளைக் கூடப் படிக்க முடியாத, புரிந்து கொள்ள முடியாத, அல்லது தவறாக புரிந்து கொள்ளும் அவல நிலை உள்ளது. ஆங்கிலத்தையும் ஒரு தொடர்பு மொழியாக மட்டுமே புரிந்து, தெரிந்து வைத்திருக்கும் இத் தலைமுறை ஆங்கிலேயக் காலனியப் பண்பாட்டின், அதன் அரசியலின் தன்மை குறித்த எந்த அறிவையும் பெற்றிருக்க முடியாது.
"ஆங்கிலநூல் அறிவுக்குச் சான்றிருந்தால் அதுபோதும் அலுவல் பார்க்க!
ஈங்குள்ள தமிழர்நெறி அவர்க்கென்ன தெரிந்திருக்கும்? இதுவு மன்றி,
மாங்காட்டுச் செவிடனெதிர் வடிகட்டி ஊமையரை வைத்ததைப்போல்
தீங்கற்ற தமிழறியான் செந்தமிழ்நாட்டலுவலின் மேற் செல்லலாமோ?"
என்று பாரதிதாசன் உரைப்பது எத்தனைப் பேருக்கு உறைக்குமெனத் தெரியவில்லை. பாரதியின் உணர்வுநிலை மற்றும் வீரிய தமிழின் எளியநடை, பெரியாரின் மூடநம்பிக்கை எதிர்ப்பு, பெண்ணுரிமைக் கருத்தியல், கம்யூனிஸ்ட்டுகளின் பொதுவுடைமைக் கருத்துகள், உழைப்பாளர் உரிமைகள், மறை மலை அடிகளின் தனித்தமிழ்; தமிழர் எழுச்சி இவை அனைத்தின் ஒருங்கிணைப்பாக உருவானவர்தான் பாரதிதாசன்! சாதிமதம் தமிழில்லை .அந்தச் சாதி மதத்தைத் தமிழ் கொள்வதுமில்லை" என நாட்டின் மிக முக்கியமான பிரச்சினையான சாதி மதம் குறித்து அவர் பாடியது கவனிக்கத்தக்கது. ஒரு புறம் தனித் தமிழ் அடையாளத்தை முன்வைத்தும், அதே சமயம் அது சாதி மத பேதமற்ற ஒரு சமுதாயம் என முன்வைக்கும்போது, அவர் தமிழ்ப் பற்று என்பதை இனவெறியாக அல்ல, சமத்துவத்தை வலியுறுத்துவதாகக் காணலாம். காலனியாதிக்கதிற்கு முன்பு சாதியம் கெட்டிபட்டிருந்த நிலை. காலனியம் அதைச் சற்று அசைத்தது என்பதை மறுக்க இயலாது. ஆனால் காலனியத்திற்கு மாற்றாக மரபை முன்னிறுத்தும் போது, மிகவும் கவனமாக அதன் கசடுகளை நீக்கி மானுட விடுதலை பேசும் நல்லறம் பற்றியே பறை சாற்றுவது என்பது ஒரு தமிழிய மறுமலர்ச்சித் தத்துவமாகக் காணலாம். சாதி ஒழித்தல் ஒன்று நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று; இதில் பாதியை நாடு மறந்தால் மறுபாதி துலங்குவதில்லையாம்" என்று எனக்குப் பாரதி சொல்லித் தந்தார்" என்று பாவேந்தர் கூறுகிறார். சாதி ஒழிப்புக்கு மொழி என்ன பாங்காற்ற வேண்டும் என்பதை தீவிரமாக ஆய்வுக்குட்படுத்தவேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
"சேரிப் பறையர் என்றும் தீண்டாதோர் என்றும் சொல்லும் வீரர் நம் உற்றாரடி" என்ற பாடல் வரிகள் உயர்சாதித் தமிழரிடம் உள்ள சாதிய வேற்றுமை உணர்வைக் கண்டு வேதனைப் படுகின்றது.
"இருட்டறையில் உள்ளதடா உலகம்
சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே
மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே
வாயடியும் கையடியும் மறைவதெந்நாள்?"
இருட்டறையிலிருந்து வெளிவர தமிழ் ஒளிகாட்டும் என்பதே அவரின் புரிதல்.
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
என்று முழக்கமிடும்போது ஏதோ தமிழ் எழுத்துக்களைப் போற்றுவதாகப் புரிந்தால் நாம் இன்னும் வளரவில்லை என்றுதான் அர்த்தம். தமிழ் இலக்கியங்கள் காட்டும் வரலாற்றுத் தரவுகள், மக்களின் வாழிவியல் கூறுகள், இவற்றின் சிறப்பை நாம் ஆழ்ந்தறிந்து புரிதல் என்பதையே அவர் தமிழறிவு என்பதின் மூலம் உணர்த்துகின்றார்.
"மேதினினய ஆளுபவன் சத்திரியனாம் மிக
நீதமுடன் வைசியன் என்று உயர்வு செய்தோர் மிக
நாதியற்று வேலைகள் செய்தே முன்பு
நாத்திறம் அற்றிருந்தவன் சூத்திரன் என்றே சொல்லி
ஆதியினில் மனு வகுத்தான் இவை
அன்றியும் பஞ்சமர்கள் என்பதும் ஒன்றோம்",
(பாரதிதாசன் கவிதைகள் 3, ஞாயமற்ற மறியல் 6)
"சாதிப் பிரிவு செய்தோர்
தம்மை உயர்த்துவற்காக நீதிகள் சொன்னோரடிசகியே
நீதிகள் சொன்னோரடி",
(பாரதிதாசன் கவிதைகள் 3, சமத்துவப்பாட்டு 45)
போன்ற எண்ணற்ற படைப்புக்களை சாதியத்தை எதிர்த்து முன் வைத்தவர் பாரதிதாசன். இவை சாதியம் என்பதை எப்படி பின் காலனியம் இங்கு அணுக வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதலாகவும் கொள்ளலாம். பின் காலனியம் என்பதே ஒரு இனத்தின் மீது மற்றொரு இனம் அடக்கு முறை செய்வதை எதிர்ப்பதாகும். ஒரு இனத்திற்க்குள்ளாகவே சாதிப் படிநிலைகள் உண்டாக்கி அதில் உயர்சாதி ஆதிக்கம் செய்மோனல் அதை எதிர்பதும் பின் காலனியமாகும். பின் காலனியத்தின் ஆதேங்கள் அந்தந்த மரபின் வேர்களிலிருந்தே எடுக்கப்படுகின்றன. அதைத்தான் பாரதிதாசன் செய்திருக்கின்றார். தமிழினம் என்றால் அது சாதி சமய பேதமற்ற ஒரு இனம் என்பதே அவரின் நிலைப்பாடு. அது தற்போது தீவிரத்தன்மை அடைவதை நாம் காணலாம். திராவிடம் என்ற பெருங்கதையாடல் இன்று தமிழினம் என்ற சொல்லாடலால் கேள்விகுள்ளாக்கப்பட்டுள்ளது. தமிழர் என்ற அடையாளம் பின் காலனிய அடையளமாக இன்று உருவெடுத்துள்ளது. பாரதிதாசனின் இந்த வகைப் புரிதலுக்கான தொடக்கப் புள்ளியாகக் கொள்ளலாம். பின் காலனியம் தமிழின் அழகை வர்ணிக்கும் இலக்கிய வகை அல்ல, அது அரசியல். கூர்மையான அரசியல் மெய்யியல். தமிழைக் கொண்டே அந்த அரசியலை கூர்மைபடுத்தினார் புரட்சிக் கவிஞர். பெரியார் தமிழைப் பழித்தபோதும், அவர் தமிழின் பக்கமே ஆணித்தரமாக நின்றார். பாரதி வேத தர்மம் பாடியபோதும், அதை நிராகரித்து நின்றவர் பாரதிதாசன்,
ஒரு புறம் இந்திய விடுதலைக்கானப் போராட்டம், மறுபுறம் தமிழின விடுதலை என்பதை அவர் கவனமாக கையாண்டது கவனிக்கத் தக்க விடயமாகும். ஆனால் இன்னும் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகள் நிறைய உள்ளன.
"பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு
மண்ணடிமைத் தீர்ந்துவருதல் முயற்கொம்பே ",
(பாரதிதாசன் கவிதைகள், 'சஞ்சீவி பர்வதத்தின் சாரல்')
பெண்ணடிமைத் தீருமட்டும் மண்ணடிமைத் தீராது என்று விளக்கத் தொடங்கிப் பெண்ணுரிமை பற்றி அவர் எழுதியுள்ளவை பல பழந்தமிழ் இலக்கியங்கள் வலியுறுத்தும் பெண்ணடிமைக் கருத்துக்களை மறுப்பதாகவும் இருப்பதைக் கவனிக்க வேண்டும். அப்படியே அவர் ஆராயமல் தமிழ் இலக்கியப் புகழ் பாடவில்லை. அதே சமயம் இம்மாதிரி காலத்திற்கு ஒவ்வாத கருத்துகள் தமிழில் காணப்படுவதால் தமிழை தரம் தாழ்த்தவும் அவர் விரும்பவில்லை. மாறாக மானுடம் போற்றும் சிறப்பு அம்சங்களை அவர் முன்னிறுத்தித் தமிழைப் போற்றியுள்ளார்.
அவருக்குத் தமிழ் என்பது பல பொருள்களைக் கொண்டது. கோவை ஞானி சொல்வது போல அகராதியில் அவர் கண்ட பொருட்களைக் காண இயலாது. பாரதிதாசனுக்குத் தமிழ் என்றால் அன்பு, அறிவு, ஆண்மை, பெண்மை, தாய்மை, வீரம், நீதி, அறம், அழகு, கலை, தவம், விடுதலை, ஆட்சி போன்ற பல பொருட்களாகும். இதிலிருந்தே அவர் தமிழை வெறும் எழுத்துக்களின் கூட்டாகக் காணவில்லை, அதை ஒரு மானுடப் பண்பாடாகக் கண்டார் என்பது புரியும். தமிழர் நில வளங்களைப் பாதுகாப்பதும் அதில் அடங்கும். தமிழரின் மீதான மொழி மற்றும் பண்பாட்டுத் திணிப்பை எதிர்ப்பதும் அவரின் முக்கிய நோக்கம். தமிழ் மக்களின் வாழ்வாதரங்களைப் பெரும் முதலாளிகள் சுரண்டுவதையும் எதிர்க்கும் புரட்சிக் குரல் அவருடையது. பின் காலனியம் இவற்றின் குரலாகத்தான் உள்ளது. பாரதிதாசனைத் தமிழ்ப் பின்காலனியத்தின் முன்னோடி என்று சொல்வதில் தயக்கமில்லை.
- பேராசிரியர் இரா.முரளி, மேனாள் முதல்வர் மதுரை கல்லூரி