முதலில், இத்தலைப்பை தெரிவு செய்து எழுதுவதற்கு ஊந்து சக்தியாக இருந்தது கனடிய மூன்றாவது தமிழீயல் மாநாட்டின் தலைப்பு. “மனிதராய் இருத்தல் தமிழராய் விளங்கல்”. ஆகவே இத்தலைப்பை தெரிவு செய்த இந்நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். தலைப்பு அவர்களுடையது எனினும் இக்கட்டுரையில் வரும் கருத்துக்கள் நான் அறிந்தவற்றிலிருந்தும் என்னிலிருந்தும் எழுவதே...

உலகெங்கும் வாழும் மனிதர்கள் இன்று மனிதர்களாக வாழவில்லை. மாறாக தாம் சாrந்த குழுக்களின் பிரதிநிதிகளாகவே வாழ்கின்றனர். பிரதிநிதிகள் என்பதனைவிட குழுக்களின் அடையாளங்களைக் காவிச் செல்லும் ஜடங்களாக, மிருகங்களாக, பிரச்சார வாகனங்களாக இந்த பூமியில் உலா வருகின்றனர். ஏனெனில், உதாரணமாக தம் மொழி சார்ந்து தமிழராகவோ, சிங்களவராகவோ, மலையாளிகளாகவோ.... மேலும் தம் மதம் சார்ந்து இந்துவாகவோ, பௌத்தராகவோ, முஸ்லிம்மாகவோ, கிரிஸ்தவராகவோ...தம்மை அடையாளப்படுத்தி உலாவருகின்றனர். இவ்வாறு தாம் சார்ந்த இன, மத, மொழி, சாதி குழுக்களின் அடையாளமாகவே மனித உடல்கள் விளங்குகின்றனர். இதைவிட கோட்பாடுகள் சித்தாந்தங்கள் அடிப்படையிலும் மனிதர்கள் முற்போக்குவாதிகளாக, மார்க்ஸிட்டாக, சோசலிசவாதியாக, கம்யூனிஸ்ட்டாக.....ஆஸ்திகர்..நாஸ்திகர்...பின்நவினத்துவ வாதிகளாக....இப்படி தமக்கென ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்களை தம்மைச் சுற்றி காவிச் செல்கின்றனர்.

மனித அடையாளம் என்பது இங்கு மறுக்கப்பட்டு அல்லது அழிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது. நாம் சார்ந்த அடையாளங்களை பிரக்ஞையுடன் விமர்சனத்துக்கும் மீள்பார்வைக்கும் உட்படுத்துவதும், மேலும் இந்த அடையாளங்களை நாம் எவ்வாறு பெற்றோம் எனப் பார்ப்பதும், நமது இயற்கையான அடையாளத்தை, அதாவது மனித அடையாளத்தை மீளப்பெறுவதை நோக்கிய பயணத்திற்கு உதவியானதாக இருக்கும். இதுவே ஒவ்வொரு மனிதரும் வன்முறையற்ற மனிதப் பண்புகள் நிறைந்ததும் இயற்கையானதும் சுய தெரிவிலமைந்ததுமான தனித்துவமானதுமான அடையாளத்துடனும், திறன்களுடனும் அதற்கான உரிமையுடனும் வாழ்வதற்கு வழிகோலும். மேலும் நமது திறன்களும் தகுதிகளும் உரிமைகளும் எந்த அடையாளமாக நாம் விளங்கப்போகின்றோம் என்பதை, நம் சுய தெரிவினுடாக தீர்மானித்து வாழ்வதற்கான வழியையும் வழங்கலாம்.

ஒரு பொருளை அல்லது கருத்தை, மனிதராகப் பார்ப்பதற்கும் அல்லது கேட்பதற்கும், அல்லது ஒரு தமிழராக, சிங்களவராக, இந்துவாக, பௌத்தராக, முஸ்லிமாக, கிறிஸ்தவராக அல்லது கோட்பாடுகளின் ஊடாகப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இடையில் பல வேறுபாடுகள் இருக்கின்றன. காரணம் மனிதராக இருப்பவர் எந்த விதமான கட்டுப்பாடுகளுக்கும் சிந்தனைகளுக்கும் உட்பட்டவராக இருக்கமாட்டார். இவ்வாறானவர் ஒன்றை பார்க்கும் பொழுதோ கேட்கும் பொழுதோ அதுவாகவே பார்ப்பர் அல்லது கேட்பர். ஆனால் ஒன்றுடன் தன்னை அடையாளப்படுத்துபவர் அதன் சிந்தனை அல்லது கருத்தாதிக்கத்திற்கு உட்பட்டு வடிகட்டி தனக்கு சார்பாகவே ஒன்றை பார்ப்பர் அல்லது கேட்பர். இவ்வாறான போக்கே, முரண்பாடுகளை மனிதர்களுக்கிடையில் குழுக்களுக்கிடையில் வளர்க்கின்றன. ஆகவே, இதிலிருந்து விடுபட எவ்வாறு நம்மையும் நமது அடையாளங்களையும் புரிதல் மற்றும் “மனிதராய் இருத்தல்” என்றும் பார்ப்போம்.

முதலாவது அடையாளமிடல் நமது பிறப்பில் நடைபெறுகின்றது. நாம் இயற்கையான மனிதராய் இருப்பதும் வாழ்வதும் முதலில் மறுக்கப்படுவது நமது பிறப்பில். நாம் பிறந்த உடன் நமது உடலின் பால் உறுப்புக்களை கவனித்து நம்மை ஆணாகவோ பெண்ணாகவோ அடையாளமிடுகின்றனர். இதன் பின் நாம் இந்த அடையாளத்துடனையே விளங்க வேண்டும். ஆனால் மனிதர்கள் கருவாக தாயின் வயிற்றில் உருவாகும் பொழுதோ அல்லது பிறந்த பின்போ உடலினுள் நடைபெறும் இரசாயண மாற்றங்கள் மனிதரின் பால் தன்மையில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. இது ஒரு மனிதரின் உடல் உறுப்புகளிலும் அவர் தன்மைகளிலும் பல வகையான (சாதராண சமூகக் கண்ணோட்டத்தல் முரண்பட்ட) விளைவுகளை உருவாக்கின்றது.

இது ஆண் பெண் என்ற இரு எதிர் முனைகளுக்கு இடைப்பட்ட பல்வேறு வகையான மனித உடல்களையும் தன்மைகளையும் உருவாக்குகின்றது. ஆனால் சமூகத்தின் கண்ணோட்டத்தில் ஆண் பெண் என இரு உடல்கள் மற்றும் அதன் இரு தன்மைகள் தொடர்பாக வரையறுக்கப்பட்ட இரு நிலைப்பாடுகளும் இரு கருத்தாதிக்கங்களுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. இது இரு உடல்களுக்கு மட்டுமே உறித்தான உறுப்புகளையும் தன்மைகளையும் தீர்மானிக்கின்றது. இதனால் ஆணும் பெண்ணும் ஒன்றுபட முடியாத எதிர் எதிர் நிலைகளில் இருப்பவர்களாக கட்டமைக்கப்பட்டுள்ளன. இதற்கு மாறுபட்டு, இந்த எதிர் நிலைகளுக்கு இடைபட்டு ஒரு உடலும் தன்மையும் ஒருவரில் காணப்படுமாயின் அவ்வாறான மனிதர்கள் கீழ் நிலையானவர்கள் அல்லது அசாதரண குறைபாடுடைய மனிதர்கள் என்ற கருத்தாதிக்கமே பொதுவாக நிலவுகின்றது.

மேலும் இவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவது மட்டுமல்ல மனித இனமாகவே இவர்கள் கருதப்படுவதில்லை. இதனால் நமது உடல் குறிப்பிட்ட ஒரு உறுப்பை கொண்டிருந்தால் அதற்குரிய தன்மைகளையே நாம் வளர்ப்பதில் குறியாக இருக்கின்றோம். இதன் மூலம் நமது இயற்கையான இயல்பான தன்மையை அடக்குவதற்கு நமது சக்தியை விரயம் செய்கின்றோம். இன்றைய அல்லது எதிர்கால விஞ்ஞான உலகில் இவ்வாறான மாறுபட்ட தன்மைகள் உருவாகாமல் கருவிலையே அதற்கான சிகிச்சைகளை செய்யப்படலாம். ஆனால் ஒரு கேள்வி ஒன்று எப்பொழுதும் தொங்கு நிற்கும்.

அதாவது ஆண் உடல் ஆண் தன்மை பெண் உடல் பெண் தன்மை என்ற இரு வரையரைகள் மட்டுமா இயற்கையில் இருக்கின்றன? அப்படி இல்லையெனின் இந்த வரையரைகள் யாரால் தீர்மானிக்கப்பட்டன? கலப்பு உடல்களும் கலப்பு தன்மைகளும் கொண்ட மனிதர்கள், சாதாரண மனிதர்கள் இல்லையா? அல்லது ஆண் பெண் வரையறைகளுக்கு அப்பாற்பட்டு மனித உடல்கள் தன்மைகள் தொடர்பாக புதிய வரையரைகள் தேவையா? அல்லது இவ்வாறான வரையறைகள் இன்றி அல்லது இவற்றுக்கு அப்பாற்பட்டு வெறும் மனிதர்களாக நாம் இருக்க முடியாதா? வாழ முடியாதா?

இரண்டாவது அடையாளமிடல் சாதி தொடர்பானது. ஏந்த சமூகத்தில் அல்லது குடும்பத்தில் பிறக்கின்றோமோ அச் சமூகத்திற்கு குடும்பத்திற்கு உரித்தான சாதிய அடையாளம் நம் மீது திணிக்கப்படுகின்றது. மனிதர்களுக்கு திணிக்கப்படும் இந்த சாதிய அடையாளம் உயர் சாதி என அழைக்கப்படுபவர்களுக்கு அல்லது அடக்கும் சாதிகளுக்கு, அவர்கள் வாழ்க்கையில் பெரும்பாலும் சாதகமாகவே அமைகின்றது. ஆனால் கீழ் சாதி என அழைக்கப்படுபவர்களுக்கு அல்லது அடக்கப்படும் சாதிகளுக்கு பாதகமானதாகவே இருக்கின்றது. கடந்த கால சாதிய வரலாற்று ஆய்வுகளை மீள நோக்கும் பொழுது அல்லது ஆய்வுக்கு உட்படுத்தும் பொழுது மனிதர்கள் தாம் சார்ந்த தொழில் அடிப்படையிலையே பிரிக்கப்பட்டு இச்சாதிய அடையாளங்களை பெற்று விளங்குகின்றனர்.

இந்தப் பிரிவினைகள் யாரால் ஏன் உருவாக்கப்பட்டது என்பது ஆய்வு செய்ய விரும்புகின்றவர்கள் செய்ய்லாம். இன்றைய நமது புரிதல் இந்தப் பிரிவினைகள் நியாயமற்றவை. மனிதர்களில் ஒரு சாரார் தாம் நன்றாக வாழ்வதற்காக மனிதர்களின் ஒரு பிரிவினரை இச்சாதிய அடையாளத்தினுடாக பயன்படுத்தி உள்ளார்கள். இன்றும் பயன்படுத்துகின்றனர். இது மனிதர்களின் சுதந்திரத்தை மறுப்பதாகவும் அவர்களது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவுமே இன்றுவரை இருந்து வருகின்றது. அன்று மட்டுமல்ல இன்றும் ஒவ்வவொரு மனிதர்களும் தனித்துவமானவர்கள் சுதந்திரமானவர்கள் சுய அடையாளம் உள்ளவர்களாகவே இருக்கின்நனர். இவர்கள் எந்த வகையிலும் தாம் பிறந்த சமூகத்தின் அல்லது குடும்பத்தின் சாதிய அடையாளத்தை அல்லது தொழிலை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. அதுவாக விளங்க வேண்டியதும் இல்லை.

ஆனால் சாதிய அடக்குமுறை அவர்களின் தனி மனித சுதந்திரத்தை உரிமைகளை மறுத்து அவர்கள் சார்ந்த சமூகத்தை அதன் அடையாளத்தை பின்பற்ற நிர்ப்பந்திக்கின்றது. சாதிய சங்கங்களோ சாதிய அரசியலோ இந்த அடக்குமுறைகளிலிருந்து விடுதலையைப் பெற்றுத்தராது. மாறாக, இவை மேலும் இந்த அடையாளங்களை வலுப்படுத்தவே உதவி செய்யும். மற்றம் சிலருக்கு அரசியல் தொழில் செய்வதற்கும் ஆய்வுகள் செய்வதற்கும் ஊன்று கோலாக இந்த அடையாளங்கள் இருக்கும். ஆகவே, இத்திணிக்கப்பட்ட சாதிய அடையாங்களில் இருந்து விடுபட்டு விடுதலை பெறுவதே அடக்கப்பட்ட மற்றும் அடக்கும் சாதிகளை சேர்ந்த மனிதர்களுக்கு விடுதலையையும் விமோசனத்தையும் தரும். அதாவது நமது இயற்கையான மனித அடையாளத்தை பெறுவதே “மனிதராய் இருத்தல்” என்பதற்கு வழி சமைக்கும்.

மூன்றாவது அடையாளமிடல் மதம் சார்ந்து நடைபெறுவதாகும். இது பிறப்பினாலும் மற்றும் மத மாற்றங்களினாலும் அடையாளமிடப்படுகின்றது. இங்கு மதம் என்பது மத நிறுனங்களாலேயே நிர்வகிக்கப்படுகின்றது. அதாவது மத நிறுவனங்கள் தமக்கு அங்கத்துவ எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தமது வரலாற்று தொன்மைகளை அல்லது சாதனைகளை அதிசயங்களை அல்லது மக்களின் வறுமையை பயன்படுத்தி உதவி செய்வதன் மூலம் அல்லது அரசியல் மயப்படுத்தல் என்பவற்றை பயன்படுத்துகின்றன. மேலும் சடங்குகள் சம்பிரதாயங்கள் எனக் கூறி மனிதர்கள் தம் மதங்களை தொடர்ந்தும் பின்பற்றுவதற்காக பயிற்சிகள் அளிக்கின்றனர். இது முளைச் சலவை போன்ற ஒரு செயற்பாடு.

இதற்கு குடும்பமும் சமூகமும் பயிற்றுவிக்கும் தளங்களாகவும் பாதுகாப்பு அரண்களாகவும் செயற்படுகின்றன. இது மதங்களிலிருந்து மனிதர்கள் விலகுவதை தடுப்பதற்கான ஒரு ஊத்தியாகப் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது. (மேலும் மனிதர்கள் எதாவது ஒரு மதத்துடன் தம்மை அடையாளப்படுத்துவதே பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. மதங்களைப் பின்பற்றாதவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. மதங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நாஸ்திகராக அல்லது கம்யூனிஸ்ட்டாக இருப்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. ஆனால் ஒன்றுடனும் தன்னை அடையாளப்படுத்தாதவரை ஏற்றுக்கொள்வதற்கு அனைவரும் தயங்குகின்றனர்). இவ்வாறான வியாபார நோக்கங் கொண்ட மதங்களிலிருந்து விலகுவதற்குப் பதிலாக தம் மத அடையாளங்களை உயர்த்திப் பிடித்து அதற்காக தமது வாழ்வை உயிரை முழுமையாக மனிதர்கள் அர்ப்பணிக்கின்றனர்.

ஏனெனில், இதுவே இவர்களது அடையாளமாகின்றது. இம் மதங்கள், மனிதர்களை அவர்களது ஆன்மீகப் பாதையில் இருந்து திசை திருப்புகின்றன என்றால் மிகையானது அல்ல. ஏனெனில் மனிதர்கள் தம் வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமக்கான தேவையை பூர்த்தி செய்து கொண்டு அடுத்த கட்டத் தேவையை பூர்த்தி செய்வதற்காக செல்கின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன. இதன் இறுதிக் கட்டம் சுய கண்டுபிடிப்பு அல்லது தன்னை அறிதல் அல்லது உண்மையை அறிதல் என அர்த்தப்படுத்தலாம். ஆரம்பகால மனிதர்கள், வேவ்வேறு பிரதேசத்தில் வாழுபவர்கள் தம்மை அல்லது உண்மையை அறிவதற்காக பல்வேறுவிதமான தேடல்களின் மூலம் பல வழிகளை முறைமைகளைப் பின்பற்றியிருக்கலாம். இவையே பிற்காலங்களில் நெறிப்படுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவன மதங்களாக குறிப்பிட்ட பிரதேசங்களில் மாற்றம் பெற்றிருக்கலாம்.

ஆனால் இன்று மதங்களின் நோக்கங்கள் மனித வளர்ச்சிக்குப் பயன்படுவதற்குப் பதிலாக பிற மதத்தினரை கொன்று தம் மதங்களை வளர்க்கவும் தம் மத அடையாளங்களை உயர்த்திப் பிடிக்கவுமே பயன்படுகின்றது. ஆகவே, மனிதர்கள் மீண்டும் தம் மத அடையாளங்களை களைந்து தமது இயற்கையான இயல்புடன் தம்மை அறிவதற்கான, உண்மையை அறிவதற்கான தமது பாதைகளை சுயமாக தெரிவு செய்தோ கண்டறிந்தோ முன்செல்ல வேண்டியவர்களாகின்றனர். ஏனெனில் ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர்கள். பலவகையான வேறுபட்ட திறன்களை கொண்டிருப்பவர்கள். ஆகவே ஒரு சமூகத்தில் அல்லது குடும்பத்தில் பிறந்ததினால் அவர்கள் பின்பற்றுவதையே பிறந்தவர்களும் பின்பற்றுவது அவருக்குள் முரண்பாடுகளை உருவாக்கலாம். இந்த முரண்பாடு அவசியமற்ற ஒன்று. தன்னை அறிதல் என்பது ஒவ்வவொருவரதும் அடிப்படை உரிமை மட்டுமல்ல வாழ்வின் பிறப்பின் நோக்கமும் ஆகும். இதற்கான பயணமும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது என்பது புரிந்து கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும். இது மத அடையாங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகும்.

மனிதர்களின் மீது சுமத்தப்படும் மொழி அடையாளம் என்பது சமூகங்களில் குடும்பங்களில் நடைபெறும் ஒரு வன்முறையான செயற்பாடாகும். ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அதிகாரத்தின் கீழ் இருந்த பல நாடுகளில் ஆங்கிலம் பேசுவது என்பது சமூகத்தில் உயர் அந்தஸ்து உயர் கலாசாரம் என்பதாக கருதப்படுகின்றது. ஆகவே மனிதர்கள் மீது அதன் குடும்பமும் அது சார்ந்த சமூகமும் தமது (தாய்) மொழியை விட ஆங்கில மொழியை கற்பதிலும் கற்பிப்பதிலும் பேசுவதிலுமே மிகவும் அக்கறை கொண்டிருக்கின்றனர்.

குறிப்பிட்ட சமூகத்தில் கற்பிக்கப்படும் பேசப்படும் பராம்பரிய(தாய்) மொழி பற்றிய பிரக்ஞை அக்கறை இவர்களுக்கு குறைவானதாகவே இருக்கின்றது. இன்று ஆங்கிலம் பேசும் நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் இங்கு பிறந்த குழந்தைகளுக்கு தம் தாய் மொழியை (தமிழ், ஹிந்தி போன்றன) கட்டாயப்படுத்தி திணிக்கின்றனர். காரணம் தமது பாரம்பரிய அடையாளம் அழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதனாலாம். மொழியின் தேவை மறக்கப்பட்டு மனிதர்களுக்கான அடையாளமாக மட்டும் மொழி பயன்படுத்தப்படுவது கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

ஒரு குழந்தை தனது எழு வயதிற்குள் குறைந்தது நான்கு மொழிகளிலாவது பாண்டித்தியம் பெறக்கூடிய திறன்களை கொண்டிருக்கின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே ஒவ்வொரு மனிதரும் குறைந்தது இரண்டுக்கு மேற்பட்ட மொழிகளில் பாண்டித்தியம் பெறுவது இன்றைய வாழ்க்கைக்கு இன்றியமையாதது. இன்று உலகம் சுருங்கிவிட்டது. உலகம் ஒரு கிரமாமாக மாறிவரும் சூழலில் பல நாட்டு மனிதர்களுடன் தொடர்பு கொள்வதற்கு உறவு கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் தவிர்க்க முடியாமல் வருகின்றன. மேலும் ஒவ்வொரு மொழியும் தன்னளவில் தனித்துவமானது தனக்கென ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது.

ஒரு மொழியை மற்ற மொழிகளுடன் ஒப்பிட்டு வேறுபாடுகளை காணலாம் ஆனால் உயர்வு தாழ்வை நீர்ணயிக்க முடியாது. ஏனெனில் எந்த ஒரு மொழியும் ஒன்றைவிட ஒன்று எந்தவகையிலும் குறைந்தது அல்ல. மேலும் மொழி ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல் எல்லா மொழிகளுக்குமான மூலம் ஒன்று என்கின்றனர். இது எந்தளவிற்கு உண்மையானது என கூறமுடியாவிட்டாலும் மனிதர்கள் மொழியை தமது அடையாளமாக விளங்கி பிற மொழியை அடையாளமாக விளங்குபவர்களுடன் சண்டை, போர் என்பவற்றில் ஈடுபடுவது பக்குவமற்ற பொறுப்பற்ற செயல் என்பது மட்டுமல்ல அதிகாரத்திலிருப்பவர்களால் இம்மனிதர்கள் மொழியின் பெயரால் தவறான வழிகளில் பயன்படுத்தப்படுகின்றனர் எனக் கூறலாம்.

இதனால்தான் தம் மொழி அடையாளங்களை காப்பதற்காக தமது உயிரை மொழியை விட கீழானதாக மதித்து மொழிக்காக தற்கொலை தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றனர் அல்லது ஈடுபட வைக்கப்படுகின்றனர். இது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு செயற்பாடாகும். சிறு வயதிலிருந்தே இரண்டுக்கு மேற்பட்ட மொழியை பயின்று இயல்பாக பேசும் ஒரு மனிதரை எந்த மொழி அடையாளத்திற்குள் சேர்ப்பது. இவ்வாறான ஒரு மனிதரை ஒரு குறிப்பிட்ட மொழி அடையாளத்துடன் இணைப்பது குறுகிய மனப்போக்கல்லவா? வன்முறையான செயற்பாடாகாதா?

இவற்றுடன் நாம் கற்றவற்றிலிருந்தும் நமக்கான அடையாளங்களை நமது முகமுடிகளாக அணிந்து திரிகின்றோம். இது பிரக்ஞையற்ற நாம் கற்ற கருத்துக்களின் மீதான காதலினால் உருவாவது. இதுவும் மனிதர்களுக்கு இடையில் முரண்பாடுகளையும் வன்முறை செயற்பாடுகளையும் உருவாக்குகின்றது. பல உயிர்களையும் பலி எடுக்கின்றது என்பது நாம் கண்ட வரலாறு. அதாவது கருத்து முதல்வாதிகள், பொருள்முதல்வாதிகள் முதல் ....பாஸிஸ நாஸிஸவாதிகளுடாக...கம்யூனிஸ சோசலிச வாதிகளிலிலிருந்து ...தேசியவாதிகளாகி....இன்று பின் நவீனத்துவவாதிகளாக முரண்பட்டு சண்டையிடுகின்றனர்.

இவர்களது கையில் இருப்பது எல்லாம் வெறும் சொற்களும் தர்க்கீகமுமே. நாம் என்ன எழுதுகின்றோம் என்ன உரையாடுகின்றோம் என்பதில் எவ்வித பிரக்ஞையும் மற்ற இவர்கள் இவற்றைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக முகமுடிகளாக அணிந்து மல்லுக்கு நிற்கின்றனர். இவர்களிடம் தீர்வுகள் மற்றும் செயற்பாடுகள் மட்டும் கிடையாது. ஆனால் கடந்த கால வரலாற்றை அக்குவேறு ஆணிவேராக விளக்குவர் விமர்சிப்பர். மீண்டும் மீண்டும் இதையே இவர்கள் செய்வர். இன்று நாம் என்ன செய்யவேண்டும் என்பதற்கு இவர்களிடம் பதில் இருக்காது. ஏனெனில் இவர்களின் கோட்பாட்டில் தத்துவத்தில் இதற்குப் பதில் இருக்காது. இவர்களும் இந்த கோட்பாட்டு தத்துவார்த்த அடையாளங்களை முகமுடிகளை கடந்து களைந்து “மனிதர்களாக இருக்க விளங்க” வரவேண்டியவர்களே.

மனிதர்கள் தாம் வாழும் சமூகமும் அது சார்ந்த சாதி மதம் மொழி இனம் என்ற அடையாளங்களுடனும் அதன் பழக்கவழக்கங்கள் சடங்குகள் என்பவற்றுடனும் ஒன்று கலந்து வாழ்கின்றனர். மேற்குறிப்பிட்ட அனைத்தும் மனிதர்களின் சுய தெரிவின்றி அவர்கள் மீது திணிக்கப்பட்டது. அதாவது சுமத்தப்பட்ட அவசியமற்ற ஒரு சுமை. ஆனாலும் வாழ்வின் மீதான காதலினாலும் வாழவேண்டி இருப்பதனாலும் இவற்றை சகித்துக் கொண்டனர். அல்லது எந்த விதமான கேள்விகளும் விமர்சனமும் இல்லாது சரியானது என ஏற்றுக் கொண்டனர் அல்லது ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டனர். ஏனெனில் பிறந்த குழந்தைகள், குடும்பத்திடமும் சமூகத்திடமும் தனது வாழ்க்கைத் தேவைகளுக்கான தங்கியிருப்பதுவும் அவர்களது இயலாமையும் அவர்களை பாரம்பரிய பண்பாட்டு வழிக்குப் பயிற்றுவித்து பயன்படுத்த அதிகாரத்திலிருப்பவர்களுக்கு வசதியானதாக இருக்கின்றது.

அவர்களது சுயத்தை சுதந்திரத்தை உரிமையை சமூகமோ குடும்பமோ மதிப்பதோ அங்கிகரிப்பதோ இல்லை. இதையும் மீறி கேள்வி கேட்டவர்கள் விமர்சித்தவர்கள் அடக்கப்பட்டனர் அல்லது வெளியேற்றப்பட்டனர். மேலும் ஆணாதிக்க பாலின சாதி மத மொழி அடையாளங்களும் கருத்தாக்கங்களும் ஆதிக்கம் செய்வதும் அவற்றை மீள் உறுதி செய்வதுமே மனிதர்களின் கலாசாரங்களும் பண்பாடுகளும் என்றால் மிகையல்ல. இவ்வாறு உருவானது தான், இன்றைய நமது கலாசாரம் பண்பாடு. இதை நாம் போற்றி புகழ்ந்து பாடிக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் அதற்காக உயிரையும் இராணுவமாக போராளிகளாக பலி கொடுக்கின்றோம்.

அதாவது நமது கலாசாரம் பண்பாடு என்பவற்றை பாதுகாப்பதானது, நாம் ஆணாதிக்கத்தை பாலியல் அடக்குமுறையை சாதியத்தை மதவாதத்தை இன வாதத்தை மீண்டும் மீண்டும் நாம் வலியுறுத்திப் பாதுகாப்பதையே செய்கின்றோம் என்பதை பிரக்ஞையுடன் உணர, புரிந்து கொள்ள மறுக்கின்றோம். ஒருபுறம் நமது பண்பாடு காலாசாரத்தை பாதுகாக்க போராடும் நாம் மறுபுறம் ஆணாதிக்கம் சாதியம் மதவாதம் என்பவற்றின் அடக்குமுறைக்கு எதிராகவும் போராடுகின்றோம். இது ஒரு முரண்பாடான செயற்பாடாக இருக்கின்றது. ஆக உண்மையான விடுதலை சுதந்திரம் என்பது இன்றைக்கு வரையான கடந்த காலத்தையும் அது நம் மீது திணித்தவற்றையும் தயவு தாட்சணியமின்றி கேள்விக்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்த வேண்டும். மேலும் பிரக்ஞையுடன் இவற்றை அணுகுவதுடன் இவற்றிலிருந்த நம்மை முறித்து அறுத்துக் கொள்ள வேண்டும். இதுவே நமக்கு புதிய பார்வையை பாதையை திறக்கும்.

இறுதியாக, இன்றைய மனிதர்கள் மனிதர்களாக வாழவில்லை. மாறாக தமது அடையாளங்களான சாதி மதம்; மொழி இனம்...கோட்பாடுகள் என்பவற்iறை சுமந்து கொண்டு அதுவாகவே விளங்குகின்றனர். இவர்களது வாழ்வும் இதைச் சுற்றியே பிண்ணப்பட்டிருக்கின்றது. ஆகவே இந்த அடையாளங்களை துறப்பதே புதிய ஒரு வாழ்வுக்கு வழிவகுக்கும். மனிதர்கள் யாராக (தமிழராக, சிங்களவராக) இருப்பதல்ல, விளங்குவதல்ல இன்று முக்கியத்துவமானது. மாறாக “மனிதராக இருத்தல்” “மனிதராக விளங்கல்” என்பதே முக்கியமானதும் அவசியமானதுமாகும். இதற்கு நமது செயற்கையான இயல்புகளை முகமுடி அடையாளங்களை அழித்து அகற்றுவதுடன் நம்மை மீளுருவாக்கம் செய்யவும் வேண்டும்.

அதாவது நாம் மீண்டும் புதிய மனிதர்களாக பிறக்க வேண்டும். இதன்பின்பு ஒருவர் யாராக இருக்க விரும்புகின்றார் என்பதும் எப்படி வாழ விரும்புகின்றார் என்பதும் அவரது சுய தெரிவாக இருக்கவேண்டும். தெரிவுகளற்று இருப்பதும் ஒரு தெரிவே. அதற்கான சகல சந்தர்ப்பங்களும் சுதந்திரமும் உரிமைகளும் ஒருவருக்கு உறுதி செய்யப்படவேண்டும், அங்கீகரிக்கப்பட வேண்டும். ஒருவர் தனக்கானதை தெரிவு செய்வதற்கான திறன்களை குழந்தைப் பருவத்திலிருந்து பயிற்றுவிக்க வேண்டும். இது இம்மனிதர்களிடம் புதைந்து கிடக்கும் பல வகையான ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவதற்கு உதவுவதுடன் தன்னம்பிக்கையையும் வாழ்வின் மீது மதிப்பையும் நம்பிக்கையையும் வளர்க்கும். இது ஒவ்வொரு மனிதர்களும் தனித்துவமானவர்கள என்பதை பறைசாற்றும். இதுவே இன்றைய மனிதர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தீர்ப்பதற்கும் அவர்கள் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதற்கும் அடித்தளமிடும்.

ஓவ்வொரு மனிதரும் தனக்குள் நடைபெறும் அடக்குமுறைகளிலிருந்து பிரக்ஞையுடன் வெளிவருவதும் சுதந்திரமான தனித்துவமான மனிதராக வாழ்வதே தனி மனித புரட்சியாகும். இதுவே ஆரோக்கியமான பிற புரட்சிகளுக்கு வழி காட்டும். தனக்குள் புரட்சி செய்யாத மனிதர் வெளிப் புரட்சிகர செயற்பாடுகளில் ஈடுபடுவது பயனற்றதே. “மனிதராக இருத்தலையும் மனிதராக விளங்குவதையும்” நோக்கியே இன்றைய நமது செயற்பாடுகள் இருக்கவேண்டும்.

பிற்குறிப்புகள்:

மனிதராக இருப்பதற்கான பயணத்தை மேற்கொள்ளும் அதேவேளை நமது சொற்களின் கருத்துக்களின் மட்டுப்படுத்தல்கள் மற்றும் அதன் மூலம் தொடர்பாக நமக்கு பிரக்ஞை இருப்பது இன்றியமையாதது. முதலாவது காரணம் ஆணாதிக்கப் பார்வையிலிருந்து இன்றும் நாம் விடுபடாமலிருப்பது நமது பல கருத்துக்களை ஆணாதிக்கதன்மை உடையனவாக்கின்றன. நாம் சாதாரணமாக பயன்படுத்தும் சொற்கள் மற்றும் வசனங்களில் மட்டுமல்ல கவனத்துடன் (ஆனால் பிரக்ஞையின்றி) நாம் எழுதும் அதி சிறந்த கட்டுரைகள் மற்றும் ஆய்வுகளில் கூட இவ்வாறன ஆணாதிக்க தன்மைகள் வெளிப்படுவது தவிர்க்கப்பட முடியாமல் இருக்கின்றது.

ஆணாதிக்கம் பெண்களுக்கு எதிரான போதும் சாதாரண பெண்கள் மட்டுமல்ல பெண் விடுதலை மற்றும் பெண்ணியம் பேசும் எழுதும் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இதிலிருந்து விடுபட்டவர்கள் இல்லை என்பது நாம் காணும் ஒர் உண்மை. ஏனெனில் அந்தளவிற்கு நம் உடல் குருதி மனம் என்பவற்றுடன் ஒன்றுகலந்து பிரிக்க முடியாதவாறு இந்த ஆணாதிக்க தன்மை நம்முடன் வாழ்கின்றது. ஆகவே, ஆணாதிக்க அதிகாரத்திலிருந்து விடுபடுவது என்பதன் ஒரு அங்கம் அதன் கருத்தாதிக்கத்திலிருந்தும் விடுபடவேண்டியதும் ஆகும். இந்த விடுபடலானது உடனடியாக நடைபெறக் கூடிய ஒன்றல்ல. இது பிரக்ஞையுடன் நடைபெறக்கூடிய படிப்படியான வளர்ச்சியாகவே இருக்கும்.

இந்த வளர்ச்சிப்போக்குக்கு, நாம் பயன்படுத்தும் சொற்கள் மற்றும் எழுத்துக்கள் தொடர்பான பிரக்ஞை இருப்பதும், மற்றும் பிரக்ஞையுடன் வெளிப்படுத்துவதும் முக்கியமான ஒரு படியாகும். மேலும் இது தொடர்பான பிறரது விமர்சனங்களை தனிநபர் தாக்குதல்களாக பார்க்காமல் நம் தன்முனைப்புக்கு இழுக்கானது என கருதாமல் ஒரு படிப்பினையாக பிரக்ஞையுடன் உள்வாங்கலாம். இதேவேளை விமர்சிப்பவரும் தனக்கே எல்லாம் தெரியும் என்கின்ற மேலாதிக்க மனப்பான்மையிலிருந்து விமர்சிக்காமல் தன்னைப்போல் “மனிதராய் இருப்பதற்கான” பயணத்தில் ஈடுபட்டிருக்கும் சக(பயணியின்) மனிதரின் வளர்ச்சிக்கான முன்னேற்றத்திற்கான ஒரு வழிகாட்டியாக இருத்தலே மேலானது. ஏனெனில் நாளை சக பயணி, இன்று தன்னை விமர்சித்தவரை விட தன் பயணத்தில் முன்னேறிச் செல்லாம். அப்பொழுது இவர் மற்றவர் மீது விமர்சனத்தை அல்லது தனது புதிய கண்டறிந்த அல்லது அனுபவ கருத்தை முன்வைக்கலாம். இந்த நிலைமை, இப் பயணத்தில், வாழ்க்கையில் மாறி மாறி நடைபெறும் சாத்தியங்களை கொண்டுள்ளது.

இன்று நடைபெறும் விவாதங்களில் இவ்வாறான ஒரு பண்பட்ட பண்பான முதிர்ந்த நிலைமையை விமர்சிப்பவர்களிடமும் கருத்துக்களை முன்வைப்பவர்களிடம் காணமுடிவதில்லை. ஓவ்வொருவரும் பிறர் என்ன கருத்தை முன்வைத்துள்ளார் என்று பார்ப்பதில்லை. மாறாக, “இவர் யார் இந்தக் கருத்தை தெரிவிப்பதற்கு”, “இவருக்கு என்ன தகுதி உள்ளது”, “இவர் எப்படி என்னில் குற்றம் கண்டுபிடிக்கலாம்”, என்பதே மற்றவரின் கருத்து தொடர்பாக நம் மனதில் எழும் முதன்மையான, எண்ணங்களாக இருக்கின்றன. மேலும் நம் தன்முனைப்பை பாதித்தால் விளைவாக வெளிவரும் மாற்றுக் கருத்து மேலும் மோசமானதாக இருக்கின்றது.

அதாவது பிறரின் கருத்துக்களை முன் மதிப்பீடு செய்து வடிகட்டியே நமக்குள் உள்வாங்குகின்றோம். இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படும் விவாதங்கள் ஆரோக்கியமற்ற சூழலையே விவாதத்தின் தளத்தில் மட்டுமல்ல மனிதர்களுக்கிடையிலான உறவிலும் உருவாக்குகின்றன. இந்த நிலைமை இப்படியே நீடிக்குமாயின் விவாதங்களின் நோக்கங்கள் அர்த்தமற்றும் பலனெதுவும் அடையாது இழுபடும் அல்லது நின்றுவிடும். மனிதர்களே! நண்பர்களே! நமது நோக்கங்கள் உயர்ந்தவையாக இருந்தபோதும் நாம் உயர்ந்தவர்களாக இல்லாமலிருப்பது கவலைக்கிடமானது. கருத்துக்களின் வளர்ச்சி மட்டுமல்ல நமது வளர்ச்சியும் முக்கியமானதும் கவனத்தில் கொள்ளவேண்டியதுமாகும்.

இன்னுமொரு முக்கியமான விடயம் யாதெனில் கடந்த கால வரலாற்றிலிருந்து விடயங்களை பெறுவதுடன் அந்த விடயங்களை நாம் அனுகும் முறையும் மற்றும் கேள்விக்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தப்படவேண்டியதும் முக்கியமானது. ஏனெனில் விஞ்ஞானிகள் ஒரு விடயம் தொடர்பாக ஆராய்ந்து கருத்தை வெளியீடும் பொழுது கடந்த கால முடிவுகளை கருத்துக்களை கவனத்தில் கொள்வதுடன் மேலும் ஆழமான பரந்த ஆய்வுகளை மேற்கொண்டே புதிய கருத்துக்களை தெரிவிக்கின்றனர். உதாரணமாக பொருள், சக்தி தொடர்பான ஆய்வுகள். இங்கு ஆராய்பவரும் ஆராயப்படும் பொருளும் தனித்தனியாக இருக்கின்றது. மேலும் ஆராயப்படும் பொருளிலிருந்தே தனது இறுதியான முடிவான கருத்தை ஆராய்பவர் முன்வைக்கின்றார்.

இதற்கும் மேலாக ஆராய்பவர் எந்த ஆதாரமும் இல்லாமல் அப்பொருள் தொடர்பாக தனது கருத்து மேலாதிக்கத்தை திணிக்க முடியாது. மாறாக அது தொடர்பான கேள்விகளை அல்லது தனது ஊகங்களை முன்வைக்கலாம். ஆனால் இந்தவிதமான போக்கு அல்லது நிலைமை தத்துவ சமூகவியல் அறிஞர்களிடம் காண்பது அறிதாக இருக்கும். ஏனெனில் இவர்கள் பெரும்பாலும் கடந்தகால கருத்துக்களில் தங்கியிருப்பவர்கள். இக்கருத்துக்கள் கூட கடந்த கால ஆய்வாளர்களின் ஊகங்களாக இருக்கலாம். அல்லது அவர்களுக்கு சார்பான கருத்துக்களாக முன்வைத்திருக்கலாம். இக்கருத்துக்களின் மீது இன்று ஆராய்பவர்கள் தமது கருத்தாதிக்கத்தை பிரக்ஞையற்று ஏற்படுத்தலாம்.

உதராணமாக தத்துவ சமய சாதிய அரசியல் ஆணாதிக்க வரலாற்று குறிப்புகளும் ஆய்வுகளும் சார்புத்தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன. இவ்வாறு முன்வைக்கப்படும் கருத்துக்களில் ஆய்வாளரின் பிரக்ஞையற்ற பாதிப்பும் அக்கருத்தின் மீது இருக்கலாம். ஏனெனில் இங்கு ஆராய்பவரும் ஆய்வு செய்யப்படும் பொருளும் (மனமும் கருத்துக்களும்) ஒன்றுடன் ஒன்று இனைந்தும் இணையாமலும் காணப்படுகின்றது. அதாவது ஆராய்பவரும் ஆராப்படும் பொருளின் (மனதின் எண்ணங்கள்) ஒரு அங்கமாக இருக்கின்றார். அதாவது மனதிலிருந்தே நமது கருத்துக்களுக்கான எண்ணங்கள் பிறக்கின்றன. ஆனால் இந்த மனம் உள்ளெடுக்கும் பல விடயங்களை தனது கட்டுப்பாடான சிந்தனையுடாக வடிகட்டியே உள்வாங்குகின்றது.

துரதிருஷ்டவசமாக இது தொடர்பான பிரக்ஞை ஆராய்பவரிடம் பெரும்பாலும் இருக்காது. ஏனெனில் மனிதர்கள் பெரும்பாலும் பிரக்ஞையற்றே வாழ்கின்றனர். மேலும் இது போன்ற ஆய்வுகள் சொற்களுடன் தொடர்புடையது என்பதானால் தர்க்கத்தினால் மட்டுப்படுத்தப்பட்டு வரையறைக்கு உட்படுகின்றது. அதாவது இந்த ஆய்வுகள் சொற்காளால் நிறைந்த நம் மனதுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஆய்வாகவே இருக்கின்றது. ஆனால் நமது வாழ்வும் இந்த இயற்கையும் நம் சொற்களுக்கு அப்பாற்பட்டது. சொற்களால் கருத்துக்களால் விளக்கவோ விளங்கவே முடியாதது. ஆகவே, நம் மன வரையறைகளுக்குள் சுருக்க முடியாததாக இருக்கின்றது. இதனால்தான் இவ்வாறன கருத்துக்கள் மீதான விவாதங்கள் முடிவின்றி தொடர்வது மட்டுமல்ல தம் கருத்தை நிலைநாட்ட மனிதர்களும் குழுக்களும் வன்முறையையும் நாடிச் செல்கின்றனர்.

இவ்வாறான ஆய்வுகளை நாம் முன்வைக்கும் முன்பு சோக்கிரட்டிஸ் கூறிய “உன்னை அறி” என்பதை நாம் பின்பற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம். இதுவே முன்றாவது வகை ஆய்வுக்கு நம்மைக் கொண்டு செல்லலாம். இதில் ஆராய்பவர் தன்னையும் தான் ஆராயும் கருத்தையும் மற்றும் சமூகத்தையும் இணைத்தே ஆராய்வார். இங்கும் ஆராய்பவரும் ஆராயப்படுவதும் ஒன்றாக இருந்த போதும் ஆராய்பவர் தன் மீதான பிரக்ஞை உடையவராக இருப்பார். அதாவது ஆராய்பவர் முன்றாம் நிலையில் இருந்து ஆராய்வார். இதானல், தான் முன்வைக்கும் கருத்தில் தனது பாதிப்பை சார்புத்தன்மையைக் குறைப்பதற்கு முயற்சிப்பது மட்டுமல்ல உண்மையையும் நோக்கியும் அவரது பார்வை நெருங்கலாம். இவ்வாறான ஒரு பார்வையே மேற்கில் பைதகரஸம் கிழக்கில் புத்தரும் மேற்கொண்டனர். ஆனால் இருவரும் அன்றைய ஆதிக்க சக்திகளால் அழிக்கப்பட்டனர். இன்று பைதகரஸ் வெறும் கணித தேற்றம் ஒன்றுடன் மட்டுப்படுத்தப்பட்ட கணித மேதையாகவும் புத்தர், பௌத்த மதத்தை உருவாக்கிய கடவுளாகவும் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒரு பொருளை அல்லது கருத்தை பார்க்கும் பொழுதோ அல்லது உள்வாங்கும் பொழுதோ உடனடியாக அது தொடர்பான ஒரு மதிப்பீடு நமக்குள் எழுகின்றது. இதிலிருந்தே அப்பொருள் அல்லது கருத்து தொடர்பான நமது கருத்து மீள வெளிவருகின்றது. ஓசோவின் கூற்றுப்படி ஒரு பொருளை பார்க்கும் ஒருவருக்கும் அப்பொருளுக்கும் இடையில் நடைபெறும் உறவை பொருளைப் பார்ப்பவரே முன்றாம் நிலையிலிருந்து (வெளியில்) கவனிக்கும் பொழுது அப்பொருள் தொடர்பானதும் பார்ப்பவர் பற்றியதுமான பார்ப்பவரின் விளக்கம் ஆழமானதாக அழகானதாக இருக்கின்றது. ஏனெனில் இங்கு எந்தவிதமான முன் மதிப்பிடும் இருக்காது என்கின்றார். 

- மீராபாரதி

Pin It