“ஏகலைவன்” மற்றும் “சர்வதேசியவாதிகள்” ஆகிய இருவரும் எமது முந்தையக் கட்டுரைக்கு எதிர்வினையாக இரு கட்டுரைகள் எழுதியிருக்கின்றனர். இது போன்ற ம.க.இ.க.வினரின் கட்டுரைகள் தாம் இவர்களை மேலும் அம்பலப்படுத்த மறைமுகமாக உதவுகின்றன என்பதால் இதனை மனமுவந்து வரவேற்போம். இதற்காக அவர்களுக்கு நன்றிகள் பல உரித்தாகுமாக!

 அடிப்படையற்ற அவதூறுகளுடன் கூடிய வசைகளை நாம் பொழிந்து விட்டோம் என்று ம.க.இ.க.வின் ஏகலைவன் குறைபட்டு கொள்கிறார். இதுவரை ம.க.இ.க. எழுதாத நாகரீகமற்ற வசைகளையும், அவதூறுகளையும் விடவா நாம் அதிகமாக எழுப்பிவிட்டோம்? 1976 இல் தொடங்கி இன்று வரை ம.க.இ.க. கும்பலின் “புரட்சிகர” விமர்சன பாணியே இது தானே! இவர்களது அரசியல் பாதையை உன்னித்துப் பார்த்தால் இது நன்கு விளங்கும் அன்றோ! இதோ ம.க.இ.க.வின் அரசியல் தத்துவப் பாசறையில் பயின்ற பிரச்சார பீரங்கி “சூப்பர்லிங்ஸ்”(Superlinks) கூறியிருக்கிறார் பாருங்கள். “மூஞ்சி மொகரக்கட்டைய விலாசத்தோட காட்டிடுங்க” என்று இவர்கள் கூறினால், நாம் எந்த அமைப்பு என்று கேட்பதாக அர்த்தமாம்.. புரி்ந்து கொள்ளுங்கள்... என்னே இவர்களது புரட்சிகர நாகரீகம்..! இந்தத் தவறை சுட்டிக் காட்டுவதால் எனக்கு “இலக்கிய ஆசான்” பட்டம் சூட்டி வெடித்திருக்கும் தோழர் ஏகலைவன், “சூப்பர்லிங்க்” செய்யும் இந்த “புதிய கலாச்சார” சேட்டை நடவடிக்கைகளை மெளனமாகத் தானும் அங்கீகரிக்கிறார். அடங்கேப்பா...! இவர்களது “புரட்சிகர” நடவடிக்கைகள் நம்மை பயங்கொள்ளவே வைக்கின்றன.

 இந்தியக் கம்யுனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யுனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சிகளை போலி கம்யுனிஸ்டுகள் என்று தாம் ம.க.இ.க.வினர் அழைக்கின்றனர். இதன் சாரத்தில், இவர்களெல்லாம் போலிகள் என்றும் தாங்கள் தான் உண்மையான கம்யுனிஸ்டுகள் என்றும் ம.க.இ.க. தம்மை பறைசாற்றிக் கொள்கின்றனர். இவ்வாறெனில், தம் கட்டுரையின் தலைப்பில் “போலித் தமிழ்த் தேசிய அரசியல்” என்று ஏகலைவன் எழுதியிருப்பதால், ம.க.இ.க. “உண்மையான தமிழ்த் தேசிய அரசியல்” என்ற ஒன்று இருப்பதை ஏற்றுக் கொள்கின்றதா? என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. தமிழ் உணர்வு, தமிழ்த் தேசியம் என்று கேள்விப்பட்டாலே இனவாதம், குறுந்தேசிய வெறி என்று குதறித் தீர்க்கும் ம.க.இ.க., நாளைக்கு நாங்கள் தான் உண்மையான தமிழ்த் தேசியப் போராளிகள் என்று தம்மைத் தாமே அழைத்துக் கொண்டாலும் நாம் ஆச்சர்யங்கொள்ளத் தேவையில்லை. இது அவர்களுக்கு கைவந்த கலை. ஒருவேளை, இக்கேள்வியிலிருந்து தப்பிப்பதற்காக, “தேசியம்” என்பதே கற்பிதம், முதலாளிகளின் கண்டுபிடிப்பு அதனால் நாங்கள் சர்வதேசியத்தைத் தவிர வேறு எந்த தேசியத்தையும் ஏற்கவே மாட்டோம்” என்று இவர்கள் வாதிட்டாலும் வாதிடுவார்கள். அதே நேரத்தில், மறைமுகமாக, இந்தியத் தேசியத்திற்கும் வால் பிடிப்பார்கள். 

 சரி, அவரது வாதத்தையே எடுத்துக் கொள்வோம். அதில், தமிழ்த் தேசிய அரசியல் என்பதே ஏகாதிபத்தியங்களின் எடுபிடி அரசியல் என்று தத்துவ மழை பொழிந்திருக்கிறார், ஏகலைவன். ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிப்பதற்கு ஏற்ற சந்தையாக, ஏற்ற கட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ள ஏக “இந்தியத் தேசிய அரசியல்” தான் ஏகாதிபத்தியங்களுக்கு ஏதுவான அரசியல் களமே தவிர, தமிழ்த் தேசியம் அல்ல. தமிழ்த் தேசியம் தன் பிறப்பிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் களமாக பரிணமித்திருக்கிறது. உலகமயம் வேக வேகமாக அழித்து வருகின்ற தேசிய இன அடையாளங்களை உயர்த்திப் பிடித்து, அத்தேசிய இனங்கள் தமக்கான சுயநிர்ணய உரிமையை அடைவதற்காக தமக்கான விடுதலைப் போரை தொடங்கினால், அது ஏகாதிபத்தியங்களின் எடுபிடி அரசியல் என்றாகுமா? தமிழ் இனம் இந்தியத் தேசிய ஆதிக்கத்திற்குள் தான் கிடக்க வேண்டும் என்று எண்ணுகின்றது ஏகாதிபத்தியம். இவ்வாறு ஏகாதிபத்திய சக்திகள் தானே முன்னின்று எதிர்க்கின்ற, “தமிழ்த் தேசியம்” என்ற கோட்பாட்டை, ஏகாதிபத்தியத்திற்கு நன்மை பயக்கிறது என்று கூச்சலிட்டு, ஏகாதிபத்திய சக்திகளுக்கே பாடமெடுக்கிறார், ஏகலைவன். 

 “இந்தியத் தேசிய அரசியல்” தான் ஏகாதிபத்தியத்தை “கதிகலக்கும்” அரசியல் என்று ஏகலைவன் கருதுவாரானால், அந்தப் பிழை அவரிலிருந்து உதித்ததில்லை. அவர் சார்ந்திருக்கும் அமைப்பின் பிறப்பிலிருந்தே அது உதித்துள்ளது. புரட்சிகர சொல்லாடல்கள், வாய்ச்சவடால் பேச்சுகள், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சார இதழ்கள், கீழைக்காற்று என்ற புத்தக வெளியீட்டகம் என மக்கள் கலை இலக்கியக் கழகம் என்று சொல்லப்படுகின்ற ம.க.இ.க.வின் ஒருமுகம் தான் தற்பொழுது வெளியுலகில் பலருக்கும் தெரிந்திருக்கின்றது. இந்த அமைப்பிற்கு பின்னாலிருந்து இயக்கும் ஒரு “அகில இந்தியக்” கட்சி உள்ளது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அக்கட்சியின் பெயர், “இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி (மார்சிஸ்ட் - லெனினிஸ்ட்) - மாநில அமைப்புக் கமிட்டி, தமிழ்நாடு” என்பதாகும். ஆங்கிலத்தில் "CPI (ML)(SOC) State Organizing Commitee, Tamilnadu" - (சி.பி.ஐ.-எம்.எல்.-எஸ்.ஓ.சி.)என்பார்கள். அந்தக் கட்சியின் ஒரு மக்கள் திரள் அமைப்புத் தான், ம.க.இ.க. , பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு., வி.வி.மு., பெ.வி.மு., உள்ளிட்ட அமைப்புகள் எல்லாம். இன்றும் கூட எஸ்.ஓ.சி. கட்சி தடை செய்யப்பட்ட ஒர் அமைப்பல்ல. தடை செய்யும் அளவிற்கு இதுவரை அவர்கள் ஒரு துரும்பும் செய்ததுமில்லை. ஆனால், அந்தக் கட்சி தலைமறைவுக் கட்சி என்பது போல பிலிம் காட்டுவது நகைப்புக்குரிய இவர்களது “புரட்சிகர” “ரகசிய” நடவடிக்கைகளில் ஒன்றாகும். 

 “மாநில அமைப்புக் கமிட்டி, தமிழ்நாடு” என்று இருப்பதால், “மாநில அமைப்புக் கிமிட்டி, கேரளம்”, “மாநில அமைப்புக் கிமிட்டி, ஆந்திரம்” என்று பல கிளைகளைக் கொண்ட ஓர் “அகில இந்திய”க் கட்சி தான் இதுவோ என்று யாரும் எண்ணிவிடக் கூடாது. அப்படி எண்ணினால், நாம் முட்டாள்களே ஆவோம். அவ்வாறு நாம் எண்ண வேண்டும் என்பதற்காகவே, இக்கட்சியின் தலைமை ஓர் “அகில இந்திய”க் கட்சி போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தும் படியாக, பீலிம் காட்டும் நோக்கத்திலேயே இப்பெயரை நன்கு திட்டமிட்டு வைத்திருக்கின்றனர் போலும். இல்லையெனில், “மாநில அமைப்புக் கமிட்டி, தமிழ்நாடு” என்று பெயரை வைத்துக் கொண்டு மற்ற “மாநிலங்களில்” கிளையோ, அமைப்போ, உறவோ கொள்ளாமலும், அதற்கான நடவடிக்கைகளில் கூட இறங்காமலும் இருப்பது ஒன்றே இவர்களது பெயர் பித்தலாட்டத்திற்கு சான்றளிக்கும். தம் கட்சிப் பெயரில் உள்ள “இந்திய” என்ற வார்த்தை தான் ம.க.இ.க.வின் அரசியல் எது என்பதனை நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றது. தமது கட்சிப் பெயரில் கூட தமிழ்நாடு இந்தியத்தின் ஓர் அடிமை மாநிலமே என்று உணர்த்துமாறு “மாநில அமைப்புக் கமிட்டி, தமிழ்நாடு” என்றே வைத்துள்ள இவர்கள் தாம் தமிழ்நாட்டிற்கு உண்மையாகவே போராடும் புரட்சியாளர்களாம். நம்புங்கள். நாம் நம்பித் தான் தீர வேண்டும். ம.க.இ.க. அறைகூவல் விடுக்கிறது.

 ம.க.இ.க. சார்ந்திருக்கும் நாடு என்பது ”இந்தியத் தாய்த்திருநாடு”. ம.க.இ.க.வின் தேசியம் என்பது ”இந்தியத் தேசியம்” என்பது இவை மூலம் நமக்குப் புலனாகிறது. இருந்த போதும், காசுமீர், மணிப்புர், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் சுயநிர்ணய உரிமை வேண்டுமெனவும் முழக்கமிடுவது தான் ம.க.இ.க.வினரின் ஸ்டைல். ஒருவேளை புதிய ஜனநாயகப் புரட்சி ஏற்பட்ட பின்னர், இவர்கள் கூறுவது படி அனைத்து மாநிலங்களும் பிரிந்து போக வேண்டுமென முடிவெடுத்துவிட்டால், ”இந்தி”யப் புரட்சியை இதயத்தில் வைத்திருக்கும் எஸ்.ஓ.சி. கும்பல், அந்த இந்தியமே தகர்ந்து போவதற்கு அனுமதிக்குமா? அனுமதிக்கவே அனுமதிக்காது. கம்யுனிசத்தின் பெயரால் இன்றைக்கு சீனா எப்படி திபெத்தை அடக்கி ஒடுக்கி வருகின்றதோ, அதே கதி தான் நாளை இவர்கள் சுயநிர்ணய உரிமை வழங்கப்போவதாக பட்டியலிடும் அனைத்து மாநிலங்களின் கதியும். இவ்வாறு, ”இந்திய” என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு அவர்களை பின்னின்று இயக்கும் ”அகில இந்திய”க் கட்சி, எந்த நாட்டில் புரட்சி செய்யப் போராடுகின்றது? எந்த நிலப்பரப்பில் புரட்சி செய்யப் போராடுகின்றது? எந்த நில எல்லைக்குள்ளான பகுதிகளை புரட்சி செய்து கைப்பற்றப் போகின்றது? என்று திட்டமிடாமல், யார் எதிரிகள், யார் நண்பர்கள் என வெளிப்படையாகவும் வரையறுக்காமல் ”அரைகுறை” திட்டத்தைக் கூட வகுக்க வக்கில்லாத, இந்த ”இந்திய” கும்பல் தான், தமிழ்த் தேசியப் புரட்சியை பார்த்து கிண்டலடிக்கிறது. 

 “சமூகத்தில் நிலவுகின்ற மதம், சாதி, இனம் போன்ற வேறுபாடுகளை, அடையாளங்களை மிகைப்படுத்தி ஒரு கலாச்சாரமாகப் பராமரிப்பதன் மூலமாக வர்க்க அடையாளத்தை இல்லாமல் செய்துவிடலாம் என்று ஏகாதிபத்தியம் நம்புகிறது; ” என்றும் அக்கட்டுரையில் எழுதியிருக்கிறார், ஏகலைவன். வர்க்க அடையாளத்தை இல்லாமல் செய்து விட வேண்டும் என்ற நோக்கில் தான் ஏகாதிபத்தியம் மதம், சாதி, இனம் போன்ற அடையாளங்களை மிகைப்படுத்திக் காட்டுகின்றதாம். 

 ஈழத்தமிழினம் அழிவுக்குள்ளாகி வந்த சூழலில் அனைத்துத் தரப்பு மக்களும் தமிழகத்தில் “நாம் தமிழர், அங்கே அழிக்கப்பட்டு வருவது நமது இனம்” என்ற விரிந்த பார்வையில் களமிறங்கி போராடினர் என்று கூறினோம். இது இந்தியத் தேசிய வெறியர்களுக்கு மட்டுமல்ல, ம.க.இ.க.விற்கும் அவ்வாறே அதிர்ச்சியையும் வெறுப்யையும் ஏற்படுத்தியிருப்பதை உணர முடிகின்றது. ஈழத்தமிழினத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டு மக்கள் நடத்தியப் போராட்டத்தை பார்த்து நாம் கனவு காண்கிறோமாம், “சர்வதேசியவாதி”யின் புலம்புல்கள் இதனை உணர்த்துகின்றன. 

 ஆரிய பார்ப்பனியமே தமிழ் மக்களை சாதி ரீதியாக கூறு போட்டு பிளவுபடுத்தியது. தமிழ்த்தேசியர்கள், ஆரியப் பார்ப்பனியத்தை தம் முதன்மை எதிரியாகக் கணக்கிட்டு போராட வேண்டுமென நாம் சொல்கிறோம். தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும், சாதி இழிவுகளைத் தாங்கிக் கொண்டு ஆதிக்கச் சாதிகளின் கீழே அடிமைப்பட்டே கிடக்க வேண்டுமென எந்தத் தமிழ்த் தேசியவாதி எழுதினார்? பேசினார்? இதற்கு ம.க.இ.க. முகாமில் பதில் கிடைக்காது. 

 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான ஆதிக்கச் சாதிகளின் திமிர்த்தனத்தை எதிர்த்துப் போராடும் அதே வேளையில், சாதி வேற்றுமைகளைக் கடந்து தமிழர்கள் ஒன்றுபடுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டுமென்றே, தமிழ்நாட்டு தமிழ் உணர்வாளர்கள் விரும்புகின்றனர். உளவுத்துறை தான் முத்துராமலிங்கன் என்ற சாதி வெறி நாயைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஏவிவிட்டதா என்று எதிர் கேள்வி எழுப்பியுள்ளார், “சர்வதேசியவாதி”. இக்கேள்விக்கு எதிராக தோழர் ஏகலைவன் கூற்றுப்படி, “ஏகாதிபத்தியம் தான் வர்க்க அடையாளத்தை மறைக்க சாதி வேற்றுமையை மிகைப்படுத்திக்” காட்டியதா என்று நான் கேள்வி எழுப்பலாமா? தோழர் ஏகலைவன் கூற்றுப்படி, இங்கு நிலவும் சாதி, மத, இன வேறுபாடுகள் அனைத்திற்கும் ஒரே காரணம் ஏகாதிபத்தியம், ஏகாதிபத்தியம் மட்டுமே என எடுத்துக் கொள்ளலாமா? வர்க்க அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காகத் தான் ஏகாதிபத்தியம் இன அடையாளத்தை மிகைப்படுத்தி ஈழத்தில் தமிழினத்தின் மீது சிங்கள இனவெறி அரசை விட்டு அடக்குமுறையை ஏவியதா? வர்க்க அடையாளம தெரியக்கூடாதென்றக் காரணத்தினால் தான் ஏகாதிபத்தியம், இந்தியாவில் தீண்டாமை சாதி ஒடுக்குமுறையை மிகைப்படுத்தி பராமரித்தா? 

 இவற்றை நாம் எழுப்பவில்லை, ஏகாதிபத்தியத்திற்குத் தான் வர்க்க அடையாளத்தை மறைக்க வேண்டியத் தேவை இருக்கிறது என எழுதியிருக்கும் ஏகலைவனின் வரிகள் தாம் எம்மை இவ்வாறு எழுத வைத்திருக்கின்றது. “சர்வதேசியவாதி” இதனை தோழர் ஏகலைவனிடமே கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ளலாம். இதற்கு நாம் தடையல்ல..

 தமிழ்த் தேசியர்களின் நிலைப்பாடு என்பது வெளிப்படையானது. ஆரியப் பார்ப்பனியமே தமிழினத்தின் முதல் பகையாக வரலாறெங்கும் விளங்கி வருகின்றது. இந்த ஆரியப் பார்ப்பனியத்தின் பாசிச சட்டவடிவு தான் ”இந்தியா” என்ற ஏகாதிபத்திய செயற்கைக் கட்டமைப்பு. இந்தக் கட்டமைப்புத் தகர்க்கப்பட்டு, அதில் சிறைபட்டிருக்கும் தமிழ் இனம், தமக்கான விடுதலையை வென்றெடுக்க வேண்டுமென நாம் விரும்புகிறோம். அதற்கான கோட்பாடாக தமிழ்த் தேசியத்தை முன் வைக்கிறோம். ஆரிய இந்தியத்தைக் கருவறுக்கப் போராடும் அதே வேளையில், தமிழ் இனத்திற்குள் படிந்திருக்கும் சாதி வேற்றுமை அழுக்குகளை அப்புறப்படுத்த வேண்டுமே தவிர, சாதி வேற்றுமையை மட்டும் அம்பலப்படுத்திக் கொண்டிருந்தால், அது நம் கழுத்தைச் சுற்றி அமர்ந்திருக்கும் இந்தியத் தேசியக் கருநாகத்தி்ற்கே நம்மை காவு கொடுத்து விடும். 

 சாதியக் கட்டமைப்புகளை தகர்க்கவும், அதன் சட்டவடிவான இந்தியத் தேசியத்தை உடைத்தெறியவும் கோரும் இந்தத் தமிழ்த் தேசிய அரசியல் தான் ஏகாதிபத்தியத்தின் எடுபிடி அரசியலாம், எழுதுகின்றார் ம.கஇ.க.வின் ஏகலைவன். காசுமீர் பிரச்சினையை முன்னிட்டு பாகிஸ்தான் உளவுத்துறை இந்தியாவை பிளவுபடுத்த சதி என்று இந்தியத் தேசியவாதிகள் வாந்தியெடுப்பதைப் போலவே, அவர்களது வளர்ப்புப் பிராணி ம.க.இ.க.வும் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி, ”இந்திய”த்தையும் சர்வதேசியத்தையும் பிளவுபடுத்த சதி என்று அவ்வாறே அவர்களது சொந்த பாணியில் வாந்தி எடுக்கின்றனர். 

 ஈழத்திற்கு எதிரான சிங்கள இனவெறி அரசின் போர் குறித்து ஒரு டுபாக்கூர் தீர்மானம் ஐ.நா. மன்ற மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டு வரப்பட்டது நம் அனைவருக்கும் தெரியும். அதில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து விட்டதாக இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பட்டிலிட்ட ம.க.இ.க.வின் புதிய ஜனநாயகம், சோசலிசக் கியுபாவையும், நிகராகுவா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க இடதுசாரி நாடுகளையும் அப்பட்டியிலில் சேர்க்கவில்லை. ”பிற நாடுகள்” என்ற பெயரில் இவை அமுக்கப்பட்டு விட்டனவே, இது தான் உங்களது சர்வதேசியத்தின் லட்சணமா? நீங்கள் போற்றி பாதுகாக்கும் கியுபா, நிகரகுவா உள்ளிட்ட லத்தின் அமெரிக்க இடதுசாரிகள் இலங்கை இனவெறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததை கண்டிக்கும் புரட்சிகர அரசியல் நேர்மை இல்லாத ம.க.இ.க., ”சர்வதேசியம“ பேசுகிறதாம். ஒருவேளை, இந்தப் போலிப் புரட்சியாளர்களின் அகராதியில் இந்த பித்தலாட்டத்திற்குப் பெயர் தான் சர்வதேசியம் என்பது போலும்.

 தமிழ்நாட்டின் தமிழ் உணர்வாளர்கள் கடந்த நாடாளுமன்றத் தோ்தலின் போது எடுத்த நிலைப்பாடுகள் மீது தோழர் ஏகலைவன் தம் கட்டுரையில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். மேலும் அக்கட்டுரையில், நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தோ்தலில் தமிழ்நாட்டுத் தமிழ் உணர்வாளர்கள் மேற்கொண்ட நிலைப்பாடுகள் பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு ஆதவாகப் போய்விட்டதாம், ஒப்பாரி வைத்துள்ளார், ம.க.இ.க.வின் ஏகலைவன். அவரது விமர்சனங்களை ஆராய்வோம். 

 ஈழத்தில் தற்பொழுது நடந்து முடிக்கப்பட்டிருக்கும், இனவெறிப் போரை சிங்கள இனவெறி அரசைக் கொண்டு திட்டமிட்டும், முழு பலத்துடனும் நடத்தியது இந்திய அரசே என்பது தான் தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியர்கள் அனைவரும் கொண்ட ஒரே நிலைப்பாடு. இதில் மாற்றுக் கருத்து இல்லை. இதனால் தான், இந்தியாவின் துரோக முகத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், யார் இந்தப் போரை தலைமையேற்று நடத்துகின்றனரோ அந்த அரசை அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அந்த அரசின் பெயரைச் சொல்லி “போரை நடத்துவது நீங்கள் தான் எனவே போரை நிறுத்து!” என்று பொருள்படும் விதமாக ”இந்திய அரசே! போரை நிறுத்து!” என்ற முழக்கம் தமிழ் உணர்வாளர்களால் முன் வைக்கப்பட்டது. இந்த முழக்கம் வெகு மக்களைச் சென்றடையும் பொழுது இந்திய அரசு இப்போருக்கு பின்னணியாக இருப்பது அம்பலமாகியது.
 
 இவ்வாறு செய்யாமல், தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, ”சிங்கள அரசே! போரை நிறுத்து!” என்றும் ”இலங்கை அரசே! போரை நிறுத்து!” என்றும் முழக்கமிடுவது என்பது, ”போரை சிங்கள அரசு தான் நடத்துகின்றது, இந்திய அரசுக்கு இதில் சம்பந்தமே இல்லை” என்று பறைசாற்றுவதற்கு ஒப்பாகும். இம்முழக்கம், ”இப்போரைப் பற்றி இந்தியாவிற்கு ஒன்றுமே தெரியாது, இலங்கை அரசு தான் போரை நடத்துகிறது, நாம் என்ன செய்ய முடியும்?” என்ற கேள்வியைத் தான் பாமர மக்களிடம் எழுப்பும். இதைத் தான் இந்தியத் தேசிய ஆளும் வர்க்கம் விரும்புகிறது. இந்த உளவியலைக் கட்டியமைக்கத் தான் இந்திய உளவுத்துறை கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்தது. போரை தலைமையேற்று நடத்தும் இந்திய அரசின் ”நற்பெயருக்கு” களங்கம் வந்துவிடக் கூடாதென்ற காரணத்தினால் தான், பார்ப்பன இந்தியத் தேசியத்தின் பாதந்தாங்கிகள், திட்டமிட்டு ”சிங்கள அரசே! போரை நிறுத்து!” என்றும் ”இலங்கை அரசே! போரை நிறுத்து!” என்றும் முழக்கங்களை ஏந்தி நின்றனர்.
 
 இந்திய அரசிற்கு தலைமையேற்று நடத்தும் பார்பபன பனியாக்களின் கட்சியான காங்கிரஸ் கட்சியும், அந்தக் கட்சியை விழுந்து விடாமல் தூக்கிப் பிடித்துப் பிழைப்பு நடத்தும் தமிழகத்தின் ”கருணா” கருணாநிதியும் இம்முழக்கத்தை முன்வைத்தே தம் போராட்டங்களை நடததினர். இதனால், தம்மை காத்துக் கொண்டிருக்கும், ”இந்தியத் தேசியத்தை” பாதுகாக்கும் ”பெரும்பணி”யை அவர்கள் செய்து கொண்டிருந்தனர். ”இலங்கை அரசே! போரை நிறுத்து!” என்று துரோக சக்திகள் ஒரே குரலில் முழக்கமிட்டனர். இதில் வினோதம், என்னவென்றால், ”நாங்கள் தான் உண்மையான புரட்சியாளர்கள்”, ”நாங்கள் தான் இந்தியத் தேசியத்தைத் திரைக் கிழிப்பவர்கள்”, ”தமிழ்த்தேசியர்கள் எல்லோரும் போலிகள்” என்று ஓலமிட்டனரோ அவர்களும் இதே குரலில் தான் முழக்கமிட்டனர் என்பது வேடிக்கையானது.
 
 இதனை ம.க.இ.க.வின் புதிய ஜனநாயகம் இதழ் அண்மையில் வெளியிட்ட ஒரு பிரசுரத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறது. ”இந்திய மேலாதிக்கத்திற்கு பலியான ஈழம்: வர்க்கப் பார்வையை மறுக்கும் தமிழ்த் தேசியர்களுக்கு மறுப்புரை” என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத்தால் வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தின் பக்கம் 24, பத்தி 4இல் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுருக்கிறது பு.ஜ.
 
””சிங்கள பேரினவாத அரசே, ஈழத்தமிழர்களின் மீதான இனப்படுகொலைப் போரை நிறுத்து” என்பதே சரியான கோரிக்கையாகும்”.

 அதாவது, இந்திய அரசு போருக்கு தலைமையேற்றிருப்பதை மறைத்து விட்டு, தமிழ்நாட்டில் சிங்கள அரசை எதிரியாகக் காட்டும் விதமாக, ”சிங்கள அரசே! போரை நிறுத்து!” என்ற முழக்கத்தை நாம் எழுப்ப வேண்டுமாம் பாடம் எடுக்கிறது ம.க.இ.க. நாம் ஏற்கெனவே சொன்னது போல் சிங்கள அரசிடம் கோரிக்கை எழுப்புவது போல் எழுப்பி, இந்தியத்தின் துரோகத்தை மக்களிடம் அம்பலப்படுத்தும் முழக்கத்தை முனைமழுங்கச் செய்து, இந்தியத்தின் துரோகத்தை மறைமுகமாக மறைத்திடும் மேற்கண்ட துரோக முழக்கத்தை, தி.மு.க. எழுப்பலாம், காங்கிரஸ் எழுப்பலாம், ஆனால், ”எங்கள விட்டால் தமிழ்நாட்டில் வேறு புரட்சியாளர்களே கிடையாது” என்று அடித்து வாதாடும் ம.க.இ.க. கும்பல் எழுப்பலாமா?
 
 ”இந்திய அரசே! போரை நிறுத்து!” என்ற தமிழ்த் தேசிய ஆற்றல்கள் எழுப்பிய முழக்கத்தின் மூலம் இந்தியத்தின் முகத்திரைக் கிழிபடுவதை ம.க.இ.க. கும்பலால் ஏன் தாங்கிக் கொள்ள முடியவில்லை? இந்தியத்தின் துரோகத்தை அம்பலப்படுத்தும் இம்முழக்கம் வெகுமக்களை சென்றடைவதை ம.க.இ.க.வின் தலைமை ஏன் விரும்பவில்லை? இது தான் நீங்கள் இந்தியத் தேசியத்தை அம்பலப்படுத்தும், திரைகிழிக்கும் லட்சணமா? இந்திய அரசை எதிர்க்க தங்களுக்கு மட்டுமே வக்கிருப்பதாக எழுதும் ம.க.இ.க. இவ்வாறு செய்யலாமா? எதிர்ப்பது போல் எதிர்த்தும் பேசி விட்டு, மறைமுகமாக பார்ப்பனியத் தந்திரத்துடன் அதனை ஆதரிப்பது என்பது தான் ம.க.இ.க.விற்கு கைவந்த கலையாயிற்றே. பிறகு வேறன்ன செய்வார்கள் இவர்கள்? ம.க.இ.க.வின் பார்ப்பனிய நடைமுறைத் தந்திரத்தை மட்டுமே இதிலிருந்து புரிந்து கொண்டு நாம் எச்சரிக்கை பெற வேண்டியிருக்கிறது.
 
 மேலும், தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியர்கள் அனைவரும் ம.க.இ.க.வை போலவே தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்க வேண்டுமாம், ஏகலைவன் நமக்கு அறிவுரை கூறியிருக்கிறார். இதனை ஆராய்வோம்.
 
 தேர்தல் தினத்திற்கான இடைவெளி குறைந்து வர வர, ஈழத்தில் தினம் தினம் செத்து விழும் தமிழர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்று கொண்டிருந்தது. சிங்கள அரசு குண்டுகளை மூர்க்கத்தனமாக வீசிக் கொண்டிருந்தது. அந்தக் குண்டுகளின் விசை டில்லியில் இருந்தது. தமிழ் மக்களின் ஓலம் தமிழ்நாட்டுத் தமிழர்களின் நெஞ்சைப் பிழிந்தது. போரைத் தலைமையேற்று நடத்திய இந்திய அரசை ஆள்வது, வழிநடத்துவது காங்கிரஸ் கட்சியே என்பது வெளிப்படை. எனவே எந்த விலைக் கொடுத்தாவது அக்கட்சியை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கி போரை நிறுத்த வேண்டும் என்பது மட்டுமே தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. காங்கிரசின் போர் வெறிப் போக்கில், அக்கட்சியுடன் உறவு வைத்துள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் உடன்பாடு உண்டு என்பதால், அதன் தோழமைக் கட்சிகளையும் நாம் வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஈழத்தின் போர்க் குண்டுகளின் வேகமும் ஈழத்தமிழனின் அவலமும் நெஞ்சை அப்பிய நிலையில், காங்கிரஸ் அணியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நிர்பந்தம் மட்டுமே தமிழ் உணர்வாளர்களுக்கு அப்பொழுது எழுந்தது.
 
 தமிழகத்தின் தேர்தல் கட்சிகள் அந்நேரத்தில் இரண்டு அணிகளாக பிளவுண்டிருந்தன. ஒன்று கருணாநிதி, காங்கிரஸ் பங்கேற்ற எதிரிகள் அணி. மற்றொன்று பார்ப்பன செயா, போலி கம்யுனிஸ்டுகள் உள்ளடக்கிய துரோகிகள் அணி. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. நிலைமை இவ்வாறிருக்க நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ் உணர்வாளர்கள் தமிழ்நாட்டுத் தேர்தல் கட்சிகளில் யாரையும் முழுமனதோடு ஆதரிக்க முடியாதென்பது தான் உண்மை. இவர்கள் அனைவரும் போலிகள் என்று அனைவருக்குமே தெரிந்துள்ளது. இச்சூழலில் காங்கிரஸை அதிகாரத்திலிருந்து விரட்டி போரை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தை செயல்படுத்த, தேர்தலை புறக்கணித்தல் என்ற முடிவை கைகளில் எடுக்கலாமா? அது வெகு மக்களை சென்றடைவது சாத்தியம் தானா? இத்தேர்தல் புறக்கணிப்பால் போர் நிறுத்தம் ஏற்பட்டு விடுமா? என்ற ஐயங்கள் எழும்பின.
 
 காங்கிரஸ் அதிகாரத்திலிருந்து இறக்கப்பட்டவுடன், பார்ப்பன பா.ச.க.வோ அ.தி.மு.க.வோ அல்லது மற்ற கட்சிகளோ இந்திய அரசிற்கு தலைமையேற்றால், ”ஈழம் உடனே கிடைத்து விடும்” என்று தமிழ்நாட்டில் ஒருத்தரும் நினைக்கவில்லை. உணர்ச்சிவயப்பட்ட சிலர் மட்டுமே அவ்வாறு கருதிக் கொண்டிருந்தனர். அந்நேரத்தில், தமிழகத் தமிழ் உணர்வாளர்களின் நோக்கம் வெளிப்படையானது, அது காங்கிரஸ் அணியினர் வீழ்த்தப்பட்டு, சிங்கள அரசுக்கு இந்திய அரசு கொடுத்து வரும் ஆதரவில் விரிசல் ஏற்பட்டு, உடனடி போர் நிறுத்தத்திற்கு வழி ஏற்பட வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே நம்மை இயக்கிக்கொண்டிருந்தது. இது மட்டுமே தற்காலிகப் போர் நிறுத்தத்தை மட்டுமாவது சாதிக்கும் என்று நம்பிய தமிழ் உணர்வாளர்கள் தான் இங்கு அதிகம்.
 
 மேலும், தேர்தல் குறித்து தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசிய சக்திகளுள், பல்வேறு முரண்கள் இருந்தன. அய்யா நெடுமாறன் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கம், தேர்தல் புறக்கணிப்பை தன் கட்சித் திட்டத்தில் கொண்டிருந்தாலும் கூட, அவ்வப்போது சூழ்நிலை கருதி தேர்தலில் பங்கேற்காமல் ஏதேனும் ஒரு அணிக்கு பிரச்சாரம் செய்வதை தன் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. ”பொடா” கொடுங்கோல் சட்டத்தை எதிர்ப்பதற்காக 2006 ஆம் ஆண்டுத் தேர்தலில் பார்ப்பன செயாவிற்கு எதிராக த.தே.இ. தமிழகமெங்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. பெரியார் திராவிடர் கழகம் பெரியார் காலந்தொட்டே தேர்தல்களில் பங்கெடுப்பதில்லை. புறக்கணித்ததும் இல்லை. பெரியார் காலம் தொடங்கி தேர்தல் குறித்த பெ.தி.க.வின் பார்வை வெளிப்படையானது. தேர்தலில் பங்கெடுக்காமல், அவ்வப்போது சூழ்நிலைக் கருதி தோ்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவர் அவ்வளவே. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், இந்திய அரசு நடத்தும் தேர்தல்களில் அடிமைச் சமூகமான தமிழ்ச் சமூகம் பங்கேற்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருப்பதால், தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தன. தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகளும் இவ்வாறே நிலையெடுத்தன.
 
 தேர்தல் குறித்த இவ்வாறான பல்வேறு முரண்களைக் கொண்டாகவே தமிழ்த் தேசிய அமைப்புகள் இருந்தன. இச்சூழ்நிலையில், ஈழத்தில் நடந்த போரின் கொடூர முகம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை கணக்கில் கொண்டு, எதிரிகள் அணி உடனடியாக அதிகாரத்திலிருந்து விரட்டப்பட வேண்டும் என்ற உளவியலே தமிழ்த் தேசிய இயக்கங்களையும் தமிழ்நாட்டு உணர்வாளர்களின் மனதிலும் மையம் கொண்டிருந்தது. இதற்காக காங்கிரஸ் அணியினரை குறிவைத்து ஆட்சியதிகாரத்திலிருந்து இறக்க வேண்டுமென முரண்களை மறந்து விட்டு தமிழ்த் தேசிய அமைப்புகள் ஒன்றுபட்டு பாடுபட்டன. இதில் என்ன தவறு இருந்தது?
 
 ஒருவேளை, ஆட்சியதிகாரத்திலிருந்து காங்கிரஸ் கட்சியை உடனடியாக இறக்கப்பட வேண்டும் என்பதில் ம.க.இ.க.விற்கு உடன்பாடில்லாமல் கூட இருந்திருக்கலாம். அதனால் தான் போகாத ஊர் ஒன்றிற்கு வழி காட்டியது ம.க.இ.க.
 
 இந்த அரசியல் சமூகச் சூழலில் தான், காங்கிரஸ் அணியினர் வீழ்த்தப்பட்டு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்ற தமிழ் உணர்வாளர்கள் மனதில் எழுந்த ஒற்றை நோக்கத்தை சீர்குலைத்து, மழுங்கடிக்கும் விதமாக ”தேர்தல் புறக்கணிப்பே தீர்வு” என்று சாமியாடிக் கிளம்பியது ம.க.இ.க. ம.க.இ.க.வினர் தம் அமைப்பு தொடக்கத்திலிருந்து தேர்தல்களில் பங்கேற்பதில்லை. அதனை புறக்கணிக்கக் கோரிப் பிரச்சாரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாகவே, இத்தேர்தலையும், ஈழத்தை முன்வைத்துப் புறக்கணிக்கக் கோரினர். வெகுமக்கள் இதற்கு செவிசாய்க்க மாட்டார்கள் என்பது தெரிந்தும், மக்களின் உளவியல் தேர்தல் புறக்கணிப்புக்கு ஏற்றதாக இல்லை என்பது தெரிந்தாலும், தனது வழக்கத்தை மாற்றக் கூடாதென ”தேர்தல் புறக்கணிப்பு” அறைகூவல் விடுத்தது ம.க.இ.க. தொடர்ந்து இதையே அவர்கள் செய்து வருவதால், இத்தேர்தலை அவர்கள் புறக்கணித்ததில் யாருக்கும் வியப்பேதுமில்லை.
 
 "இந்தத் தேர்தலில் வாக்களித்தால் இந்திய அரசின் துணையுடன் ஈழத்தில் நடந்து வரும் இன அழிப்புப் போருக்கு நாம் ஒப்புதல் கொடுத்தவர்கள் ஆவோம்" என்றது ம.கஇ.க. ஒருவேளை, வாக்களிக்காமல் நாம் அப்படியே இருந்து விட்டால் என்ன நடக்கும் என்று ம.க.இ.க. ஒரு போதும் எண்ணிப் பார்க்கவில்லை. ஈழத்தில் மக்கள் தினம் தினம் செத்து விழுவதைப் பற்றியோ, போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற உடனடி கடமையோ, அக்கறையோ அவர்களுக்கு கவலையில்லை. மாறாக, அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? “இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணித்து, புதிய ஜனநாயகப் புரட்சிக்கு மக்களைத் திரண்டெழச் செய்வதுதான்” அவர்களது நோக்கமாக இருந்தது.
 
 ஈழத்தில் செத்து விழும் பிணங்களைக் காட்டி பதவிப் பொறுக்குகின்றன, ஓட்டுக் கட்சிகள் என்று ஒப்பாரி வைத்த ம.க.இ.க., அவர்களை விட மிகக் கேவலமாக மார்க்சிய லெனினியத்தின் பெயரால் மோசடி செய்து கொண்டு, தங்கள் கட்சித் திட்டமான தேர்தல் புறக்கணிப்பை நிறைவேற்றிக் கொண்டு ஆள்பிடிக்க, இத்தேர்தலை பயன்படுத்துகிறோமே என்ற வெட்கம் சிறிதும் இன்றி செயல்பட்டது.
 
 நாளுக்கு நாள் ஈழத்தமிழர்கள் கொன்றொழிக்கப்படுவதால் வெளியேறும் இரத்தம் கடலை சிவப்பாகிக் கொண்டிருந்த நேரம் அது. அந்நிலையில், எப்பாடுபட்டாவது, எவ்விலை கொடுத்தாவது உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்ற முனைப்பு, வேகம் மட்டும் தமிழக மக்கள் மனதிலும், தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும் குடி கொண்டிருந்தது என்பது ம.க.இ.க.வினருக்கு மட்டும் உறைக்காதது ஏன்?
 
 “போர்” என்ற கொடிய மின்சார நாற்காலியில் அமர்த்தப்பட்டு ஈழத்தமிழனின் உயிர் போய்க் கொண்டிருக்கிறது. அந்நேரத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சுகின்ற விசையை, அதிகாரத்தில் அமர்ந்திருப்பதால், தம் வசம் வைத்திருந்தது இந்திய அரசின் ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சி. உடனடியாக அந்த விசை நிறுத்தப்பட, அதிகாரத்தை பிடுங்குவது தான் தீர்வு. அதை ஓரளவு சாத்தியத்தியப்படுத்துவதற்கான ஒரு வழியை இந்த போலி ஜனநாயகத் தேர்தல் ஏற்படுத்தியிருந்த நிலையில், அதை புறக்கணிக்கத் தான் வேண்டுமா என்று அறவழியில் கூட இவர்கள் சிந்திக்கவில்லை. மாறாக, அந்த அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான உடனடி சக்தி நம்மிடம் இல்லை என்று தெரிந்தும் கூட, அந்த “போகாத ஊருக்கு போய்த் தான் தீருவேன்” என்று திட்டமிட்டு தன் அணியினரை வழிநடத்தியது, இந்தக் கூலிக்கும்பல்.
 
 அனைத்துக் கட்சிகளும் மக்களுக்கு எதிரானவர்கள் தாம் என்று அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கிறது. எல்லோரும் ”கொள்ளை” அடிப்பவர்கள் தாம் என்று மக்களுக்கு நன்கு புரிந்திருக்கிறது. இருந்தாலும், மக்கள் ”ஓட்டுரிமை” மீதும், இந்த முதலாளித்துவ போலி சனநாயக உரிமை மீதும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இந்த உளவியலை, மக்களின் நம்பிக்கையை ஒரே நேரத்தில், ஒரேடியாக நாம் தகர்த்து விட முடியாது. அதற்கான சக்தி, புரட்சிகர ஆற்றல்களிடம் இல்லை. இச்சூழலில், அதனை தகர்க்கும் அளவிற்கு மக்கள் மனதில் தேர்தல் அரசியல் மீதான வலுவான எதிர் கருத்தியலும் ஆழமாக பதியப்படவில்லை.
 
 மக்கள் மீது அரசின் மிக மூர்க்கத்தனமான பாசிச வெறி அடக்குமுறைகள் வேண்டுமானால், உடனடியாக மக்கள் மனதில் தேர்தல் சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை ஓரளவு தகர்க்கச் செய்யும். ஆனால், தமிழகத்தில் யதார்த்த நிலைமை அப்படி அல்ல. இங்கு மக்கள் மீதான அரசின் ஒடுக்குமுறை என்பது எவ்வளவு கொரடூரமாக இருந்தாலும், வெகு மக்கள் அதனை உடனடியாக உள்வாங்கிக் கொண்டு உணரக் கூடிய நிலையில் இல்லை. ஓட்டுக்கு பணம், இலவச சைக்கிள், இலவச அரிசி, இலவச தொலைக்காட்சி என்று மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு தற்காலிக மருந்துகளை வழங்கி, ஆளும் வர்க்கம் மக்களை மயக்கி வைத்திருக்கின்றது. இந்நேரத்தில், அரசின் மீதான மக்களின் எதிர் உளவியலை, ஆளும் வர்க்கம் மென்மையான முறையில் சரி கட்டுக் கொண்டிருந்தது. அரசின் ஒடுக்குமுறையைக் கூர்மைப் படுத்தி, அதனை அம்பலப்படுத்தி மக்களுக்கு தலைமையேற்று நடத்தக்கூடிய தமிழ்த் தேசிய புரட்சிகர ஆற்றல்கள் தமிழகத்தில் வலுவுடனும் இல்லை. இச்சூழலில், ஈழத்தை முன்வைத்து தமிழகத்தில் ”தேர்தல் புறக்கணிப்பு” என்பது சாத்தியமானதாக இல்லை என்பது தானே யதார்த்தம். ”பணம் கொடுத்தால் வாக்களிப்போம்” என்ற சந்தர்ப்பவாத உளவியலே பெரும்பாலான மக்கள் மனதில் ஆளும் வர்க்கத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது தானே உண்மை. இதனை மெல்ல மெல்ல மக்களுக்குப் புரிய வைத்து, வென்றெடுத்து மக்களை அணிதிரட்ட வேண்டும் என்பதும் உண்மை தான். ஆனால், அதற்கு இதுவா தகுந்த நேரம்? இது தான் அதற்கேற்ற காலச்சூழலா? அதற்கேற்ப தமிழ் மக்களை அணிதிரட்டும் விதமாக நமக்கு சக்தி இருந்ததா? எதுவும் இல்லை.
 
 ஒருவேளை, இச்சூழ்நிலையில் தமிழ்த் தேசிய சக்திகள் அனைத்தும் ம.க.இ.க. பாதையில் தேர்தல் புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தால், நிலைமை என்னவாகியிருக்கும்? எப்பொழுதும் போல் 60 சதவிகிதம் வாக்குப் பதிவாகியிருக்கும். ”தேர்தல் புறக்கணிப்பு” என்ற பெயரில் காங்கிரஸ் அணியினருக்கு எதிரான கோப அலை ”ஓட்டுகள்” அனைத்தும் ”புறக்கணிப்பு” என்ற பெயரில் சாக்கடையில் கலப்பது போல வீணாகியிருக்கும். இந்திய எதிர்ப்பு கோப அலைகள் ஓட்டுகளாக பரிணமித்து, ”தேர்தல் புறக்கணிப்பு” நீரோட்டத்தில் தணிந்து விட்டிருக்கும். எந்த எதிர்ப்புமின்றி காங்கிரஸ் எளிதாக பணநாயகம் கொண்டு வெற்றி பெற்றிருக்கும். ஆட்சிக் கட்டிலில் மீண்டும் ஏறிய திமிரில் போரின் வேகத்தை அதிகரித்து ஈழத்தமிழர்களை மேலும் அதிகமாக கொன்று குவித்திருக்கும். ”இந்த இனத்தை குண்டு வீசி அழித்தாலும் இவர்கள் நேரடியாக எம்மை எதிர்த்து போராட மாட்டார்கள்” என்ற ஆதிக்கத் திமிர் உளவியலை காங்கிரஸ் அணியினருக்கு மேலும் வலுப்படுத்தியிருக்கும். இவ்வாறான, இந்திய ஆளும் வர்க்கத்தின் நலனைக் காப்பதற்காகத் தான், ம.க.இ.க. விரும்புகின்றது போலும்.
 
 ஈழத்தமிழனுக்காகப் போராடுகிறோம் என்று ஓலமிட்டுக் கொண்டு, சிங்கள இனவெறியர்களின் நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக ம.க.இ.க. போன்றக் கும்பல்கள் தமிழகத்தில் இவ்வாறாக செயல்படுவதை எண்ணி தமிழனாக நாம் வெட்கப்படத்தான் வேண்டியிருக்கிறது. சிங்களர்களை ”பாட்டாளி”கள் என்ற பெயரில் ம.க.இ.க. கும்பல் வேண்டுமானால் பெருமையுடன் வாரி அணைத்துக் கொள்ளலாம். தேர்தலின் போது ம.க.இ.க.வினர் செய்த இந்த ”அரும்பணி”க்காக, சிங்களர்களும், ”பாட்டாளிகள்” என்று ம.க.இ.க.வினரை அழைத்து பரிசளித்து மகிழ்ந்து கொள்ளலாம்.
 
 தேர்தல் புறக்கணிப்பு காங்கிரஸ் அணியை ஒன்றும் செய்து விட முடியாது என்ற நிலையில், காங்கிரஸ் அணியினரை வீழ்த்தும் நோக்கில் அதற்கு எதிரணியினரை ஆதரித்து தமிழகத் தமிழ் உணர்வாளர்கள் பரப்புரை மேற்கொண்டனர். பெரியார் திராவிடர் கழகம், தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் வெளிப்படையாக காங்கிரசுக்கு எதிர் அணியினரை ஆதரித்துப் பரப்புரை மேற்கொண்டனர். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வெளிப்படையாக எக்கட்சியையும் ஆதரிக்காமல், ”காங்கிரசைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், தமிழின விரோதக் காங்கிரஸ் கட்சிக்கு யாரும் வாக்களிக்காதீர்” என்று, காலச்சூழல் கருதி வெகுமக்களின் உளவியலுக்கேற்ப பிரச்சாரம் செய்தனர். பல்வேறு தனித்தமிழ் இயக்கங்களும், தமிழ்ச் சங்கங்களும், தமிழ் உணர்வாளர் மன்றங்களும் இவ்வாறே செயல்பட்டன. தமிழ்த் திரையுலகினரும் இவ்வகையில் தங்கள் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். ”இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று திரையுலகில் வெளிப்படையான குரல்கள் எழும்பினாலும், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் அதனை கண்டித்தனர். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து மட்டுமே பரப்புரை செய்ய வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தினார்.
 
 தமிழ்த் தேசிய அமைப்புகளின் இவ்வகை பரப்புரைகளால் தான் தமிழகத்தில் காங்கிரஸ் அணியினருக்கு ஓரளவாவது எதிர்ப்புகள் பதிவாயின. ஈழத்திற்கு துரோகமிழைத்த காங்கிரசின் முக்கியத் தலைவர்கள் தங்கபாலு, மணிசங்கர் அய்யர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் தோற்றனர். காங்கிரஸ் அணியினருக்கு தமிழ்த் தேசிய ஆற்றல்களின், இந்தளவிலான எதிர்ப்பு கூட இருந்திருக்கக் கூடாது என்று தான் ம.க.இ.க. விரும்புகிறது, என்பதைத் தான் அதன் ”போகாத ஊருக்கு வழிகாட்டும்” - தேர்தல் புறக்கணிப்புப் பாதை நமக்கு உணர்த்துகிறது.
 
 ஈழத்தின் இன அழிவைக் கருதித் தேர்தல் கட்சிகளுடன் தமிழ் உணர்வாளர்களுக்கு ஏற்பட்ட இந்த ”திடீர்” உறவு ”தேர்ந்து தெளிந்து திட்டமிட்டு” உருவாக்கப்பட்டதாம். ம.க.இ.க. வாய்க்கூசாமல் புளுகுகிறது. இதையும் நம்பிக் கேட்பவர்கள் ம.க.இ.க.வில் இன்னும் இருப்பதால், அவர்கள் இதுவும் சொல்வார்கள், இதற்கு மேலும் கூட சொல்வார்கள். ”என்ன இருந்தாலும், பார்ப்பன செயா போன்ற சக்திகளுடன் தமிழ் உணர்வாளர்கள் போயிருக்கக் கூடாது” என்றும் ம.க.இ.க.வினர் முதலைக் கண்ணீர் வடித்து, தம் அணிகளுக்கு பாடமும் எடுப்பார்கள். இதற்கொரு வரலாற்று உதாரணத்தை நாம் எடுத்தாள வேண்டியிருக்கிறது.
 
 இரண்டாம் உலகப் போரின் போது, ஜெர்மனியின் இட்லர் தலைமையில் பாசிச இனவெறி அணியொன்று உருவாகியது. இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினியும் ஜப்பானும் அதில் பங்கு கொண்டிருந்தனர். அவ்வணி உலக நாடுகளை பாசிச வெறியுடன் பிடிக்கத் தொடங்கி ரசியாவிற்கு அருகில் வந்து நின்றது. அந்நேரத்தில், இந்தப் பாசிச அணி உலகையே அச்சுறுத்தும் அணியாக இருந்தது. இந்தப் பாசிச அணியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அனைவர் மனதிலும் எழுந்தது. ரசிய அதிபர் ஸ்டாலின் இதற்காக திட்டமிட்டார். ரசியாவை மட்டுமின்றி உலகையும் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக ஒரு ”பாசிச எதிர்ப்புக் கூட்டணி”யை உருவாக்கினார். அதற்காக அவர் யாருடன் கைக்கோர்த்தார் தெரியுமா? அன்றைய உலக ஏகாதிபத்தியங்களாக விளங்கிய இங்கிலாந்துடனும், அமெரிக்காவுடனும்.
 
 இந்த ”பாசிச எதிர்ப்புக் கூட்டணி”யை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பாரசீக நாட்டின் டெக்ரான் நகரில் நவம்பர் 26 1943இல் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட், பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் ஆகியோரை ரசிய அதிபர் ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். திட்டமிட்டார். பாசிசத்தை வீழ்த்தினார்.
 
 ஏகாதிபத்திய நாடுகளுடன் கைக்கோர்த்துவிட்டார் என்பதற்காக என்றைக்காவது, எந்த ம.க.இ.க.காரனாவது, ”இரும்பு மனிதர்” தோழர் ஸ்டாலினை ஏகாதிபத்தியக் கைக்கூலி என்று அழைத்திருப்பார்களா? ஓரளவு மார்க்சியம் தெரிந்தவர்கள் கூட ஸ்டாலினை இவ்வாறுப் பார்த்திருக்க மாட்டார்கள். ஒருவேளை, மனுநீதிக் கண்ணாடியுடன் மார்க்சியத்தைப் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால், இவ்வாறு தெரிய வாய்ப்புண்டு. ம.க.இ.க.வினருக்கு எப்படியோ! ஒருவேளை, ம.க.இ.க.வினர் ஸ்டாலினை ”ஏகாதிபத்தியத்துடன் கூட்டு வைத்த சந்தர்ப்பவாதி” என்று இகழ்ந்துரைத்தால், அதைத் தமிழ்த் தேசியர்கள் ஒருநாளும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
 
 பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஸ்டாலின் எவ்வாறு எதிரிகளான ஏகாதிபத்திய நாடுகளுடன் கூட்டணி வைத்தாரோ, அதே போன்று தான், இந்திய சிங்கள இனவெறிப் பாசிச சக்திகள் மேற்கொள்ளும் இனவெறிப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசிய சக்திகள், ஈழத்திற்கு காலத்திற்கேற்ப ஓரளவு ஆதரவு தெரிவித்த தமிழ்நாட்டுத் தேர்தல் கட்சிகளுடன் உறவு கொண்டன. ஸ்டாலின் மேற்கொண்டால் அது ”போர் உத்தி”, ஆனால் தமிழ்த் தேசியர்கள் மேற்கொண்டால் அது ”சந்தர்ப்பவாதமா”? ரசிய நாட்டைக் காக்க ஸ்டாலின் செய்தால் அது ”நடைமுறைத் தந்திரம்”, தமிழ் இனத்தை அழிவிலிருந்து காக்க தமிழ்த் தேசியர்கள் செய்தால் அது ”பிழைப்புவாதமா”? ம.க.இ.க.வே இது தான் ஒவ்வொருவருக்கும் தனித்தனி நீதி வழங்கும் உங்களது ”மனுநீதி”ப் பார்வையா?
 
 புலிகளை மட்டும் எதிர்ப்பதாகவும், ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமைக்கு குரல் கொடுப்பவர்களாகவும் நாம் ம.க.இ.க.வினரை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ம.க.இ.க.வினர் ஈழத்தமிழர் ஆதரவு நிலையிலும் என்றும் உறுதியுடன் இருந்ததில்லை. இந்தியம் எப்படி பார்ப்பனிய சூழ்ச்சியுடன் ஈழத்தைக் கையாள்கிறதோ அதே போலத்தான் இவர்களும் காலத்திற்கேற்ப ஈழத்தைக் கையாள்கின்றனர். இதற்கு பல உதாரணங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக ஒரு உதாரணத்தை எடுத்துக் காட்டலாம்.
 
 1997 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் முன் முயற்சியில் ஈழத்தமிழர் ஆதரவை வெளிப்படுத்த ஒர் முழு அடைப்பு நடத்தப்பட்டது. தமிழக மீனவர் படுகொலை, ஈழத்தமிழர் படுகொலை உள்ளிட்டவற்றை மட்டுமே பிரதானப்படுத்தி நடந்த இம்முழு அடைப்புப் போராட்டத்தில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட எந்தக் கோரிக்கையும் எழுப்பப்படவில்லை. ஆயினும், புதிய ஜனநாயகம் இம்முழு அடைப்பில் கலந்து கொள்ளாமல் முழு அடைப்பை கேவலமாகவும் சித்தரித்து எழுதியது. 1997 ஆம் ஆண்டு சூலை 01-15 இதழில் பு.ஜ. இவ்வாறு தலைப்பிட்டு எழுதியது, ”முழு அடைப்பு முழுத் தோல்வி”. இம்முழு அடைப்பு தோல்வி அடைந்து விட்டதால், தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின் ஆதரவு சரிந்துவிட்டது என்றும் எழுதி ஈழத்தமிழர் ஆதரவு முழு அடைப்புப் போராட்டத்ததை புலிகள் ஆதரவு போராட்டம் என்பதாக சிங்கள அரசின் துணை அமைப்பு போலவே சித்தரித்து இழிவு படுத்தி எழுதியது பு.ஜ. அதே நேரத்தில், அம்முழு அடைப்பை அப்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க. ஆதரிக்கவில்லை. அ.தி.மு.க. மட்டும் ஆதரித்தது.
 
 முழு அடைப்பில் கலந்து கொள்ளாத ம.க.இ.க. வின் பு.ஜ. பின்பு சில மாதங்கள் கழித்து கீழ்க்கண்டவாறு எழுதியது.
 
“ஏற்கெனவே ஈழப்பிரச்சினையிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்ட தி.மு.க. ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டித்து நடந்த கடையடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு மறுத்தது; தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டிக்கக் கூட முதுகெலும்பின்றிக் கிடக்கிறது” -  (புதிய ஜனநாயகம், செப்டம்பர் 1997 பக்கம் 9)
 
 ஈழத்தமிழர் இனப்படுகொலையை கண்டித்து நடந்த கடையடைப்புப் போராட்டத்தில் ஆளும் திமுக கலந்து கொள்ளாததைக் கண்டித்து, அக்கட்சி முதுகெலும்பின்றிக் கிடக்கிறது என்று ஊளையிடுகின்றது பு.ஜ. அதே வேளையில், அப்போராட்டத்தில் ம.க.இ.க. ஏன் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கவுமில்லை. கண்டிக்கவுமில்லை. திமுக அப்போராட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால் கண்டிக்குமாம். ம.க.இ.க. கலந்து கொள்ளாதது ஏன் என்று கேள்வி எழுப்பினால் கண் மூடிக்க் கொள்வதோடு இல்லாமல், அப்போராட்டத்தை கொச்சைப் படுத்தியும் அவமதித்தும் எழுதுமாம். ஒருவேளை பு.ஜ. கூறுவது போல் ம.க.இ.க.வும் முதுகெலும்பின்றி தான் கிடக்கிறதோ என்று தான் எண்ணத் தோண்டுகிறது. இது தான் இவர்களது புரட்சிகர ஒழுக்கமும் அரசியல் நடைமுறையும் போலும்.
 
 பெரியார் பாணியில் ம.க.இ.க.வைப் பற்றிக் கூறினால், ஒரே வார்த்தையில் “வெங்காயம்!” என்று சொல்லாம். பார்ப்பதற்கு பெரிதாக மார்க்சியம், ஜனநாயகம், புரட்சி போன்ற பெருந்தோல்கள் போர்த்தப்பட்டு உள்ளே ஏதோ இருக்கிறது என்ற தோற்றத்தை அளிக்கும். ஆனால், உரித்துப் பார்த்தால் ஒன்றுமிருக்காது. அது தான் ம.க.இ.க...! த ஒன்லி “புரட்சியாளர்” ஆப் த வேர்ல்டு!...
 
- அதிரடியான் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It