பொருளாதாரம்

சகோதரர்களே!

பொருளாதாரம் என்னும் விஷயத்தைப் பற்றி என்னைப் பேசும்படி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பணம் சம்பாதிப்பதிலும், வரும்படி அடைவதிலும் நம் நாட்டு மக்கள் எந்த நிலைமையில் இருக்கிறார்கள்? அவர்களுக்கு அந்த வருவாய் என்ன பலன் அளிக்கின்றது? அவர்களுக்கு அதிக வருவாய் கிட்டவும் அது தக்க பயனளிக்கவும் வழியென்ன? என்பவைகள் போன்றது தான் பொருளாதாரம் என்பது பற்றி நான் பேசப் போகும் விஷயத்தில் முக்கிய கவனிப்பாகும். ஆகவே இவ்விஷயங்களில் நமது நாட்டிற்கும் உலகிலுள்ள மற்ற நாடுகளுக்குமுள்ள வித்தியாசங்கள் முதலில் கவனிக்கப்பட வேண்டும்.

periyar 350 copyபொருளாதாரத்தில் மேல் நாட்டார் சராசரியாக ஒவ்வொரு நபரும் தினம் 2 ரூபாய் வீதம் சம்பாதிக்கின்றார்கள். நம் நாட்டார்களோ சராசரியாக ஒவ்வொரு வரும் தினம் 2 அணா வீதமே சம்பாதிக்கின்றார்கள் என்பது யாவருமறிந்த விஷயம். அன்றியும் இதுவே நம் நாட்டுப் பொருளாதாரப் பிரச்சினைக்கு முக்கிய பல்லவியுமாகும். இது உண்மையாகவே யிருக்கலாம். ஏனெனில் மேல் நாட்டில் பல லக்ஷ ரூபாய் சம்பாதிப்பவனிலிருந்து தினம் கால் அணா சம்பாதிப்பவன் வரையில் சகலரையும் ஒட்டு மொத்தம் கணக்கு சேர்த்துப் பிரித்து வகுத்துப் பார்த்தால் ஆளொன்றுக்கு வருமானம் ரூ 2-0-0 ஆகும். அதைப் போலவே இந்திய நாட்டின் பெரிய ஜமீன்தாரனிலிருந்து மகாராஜாக்களிலிருந்து மடாதிபதிகளிலிருந்து தினம் ஒரு காசு பிச்சை எடுப்பவன் வரையில் ஒட்டு மொத்தம் கணக்குப் பார்த்து ஆள் ஒன்றுக்கு வருமானம் என்னவாகுமென்று பிரித்து ஈவு பார்த்தால் ஆள் ஒன்றுக்கு 2 அணா வீதமே வரும்.

இவ்விதம் மேல்நாட்டில் வருமானம் அதிகமாவதற்கும் அதாவது சராசரி ரூ.2-0-0 வருமானமாவதற்கும் நமது நாட்டில் வருமானம் குறைவதற்கும் அதாவது ஆள் ஒன்றுக்கு சராசரி 0-2-0 அணாவே கிடைப்பதற்கும் காரணம் என்ன என்பதைக் கண்டு பிடிப்பதுதான் பொருளாதாரப் பிரச்சினையில் முக்கியமானதாய் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். மேல் நாட்டான் பணம் சம்பாதிக்கவென்று உழைக்கிறான். நாமும் அது போலவே தான் உழைக்கிறோம். ஆனால் தினம் 0-2-0 அணா சம்பாதிப்பதற்கு நமது மக்கள் படுகின்ற கஷ்டத்தின் அளவு மேல் நாட்டில் தினம் ரூ. 2-0-0 சம்பாதிக்கின்ற ஆட்கள் கஷ்டப்படுவதில்லை. சம்பாதனை விஷயத்தில் நமது கஷ்டமும் சரீரப் பிரயாசையும் சிறிதும் குறைந்தபாடில்லை. ஆனால் நாட்டு வளப்பத்தில் நம் நாட்டை விட மேல் நாடு சிறந்ததென்று யாருமிது வரை சொல்ல வரவில்லை. அப்படியிருக்க அதாவது வளமுள்ள நாட்டிலிருப்பவன் தினம் இரண்டணாவும் வளமில்லா தேசத்திலிருப்பவன் தினமிரண்டு ரூபாயும் சம்பாதிக்கக் காரணமென்ன என்பதில் தான் பொருளாதாரப் பிரச்சினையின் சாவி இருக்கின்றது.

மலைவளம், நீர்வளம், நிலவளம், செழிப்பு வர்த்தக மூலப்பொருள்கள் பல தானியங்கள் விளைவுக்கு வேண்டிய சௌகரியங்கள் ஆகியவை மற்ற நாடுகளைவிட நமது நாட்டில் அதிகம் உண்டல்லவா? இத்தகைய வளம் கொழுத்த நமது நாட்டில், செல்வத்திற்காகவென்று ஒரு தனி கடவுளையும் ஏற்படுத்திக் கொண்டு, அதற்காக பூஜை நைவேத்தியம் உற்சவம் பிரார்த்தனை முதலியவைகளும் செய்து வரும் நமது நாட்டில் “தரித்திரம் தலைவிரித்தாடக்” காரணமென்ன? மக்கள் சுகமாயிருக்க வீடில்லாமல் கட்டத் துணியில்லாமல் உண்ண உணவில்லாமல் வாடுகிறார்கள் வதங்குகிறார்களென்று சொல்லப்படக் காரணமென்ன? வென்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தக் காரணத்தின் உண்மையைக் கண்டுபிடித்து விட்டால் பொருளாதார பிரச்சினை வெகு சுலபமாகத் தீர்ந்துவிடும்.

பொருளாதார சீர்திருத்த நிபுணர்களுக்கு இந்த விடத்தில் தான் அதிக வேலையிருக்கிறது. இதைக் கண்டுபிடித்து நேர் செய்யாமல் “நமது செல்வம் கொள்ளை போகின்றது! கொள்ளை போகின்றதே! தென்று பேசுவதால் - தலையிலும், வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்வதால் ஒரு பயனுமே உண்டாகாதென்பது எனது அபிப்பிராயம்.

உண்மையைப் பேசத் துணிந்தோமேயானால் 1. இந்த நாட்டில் பொருளாதாரக் கஷ்டமிருக்கின்றதா? 2. இருந்தால் யாருக்கு இருக்கின்றது? 3. அது ஏன் இருக்கின்றது? 4 யாரால் இருக்கின்றது? என்பவைகளாகிய விஷயங்களில் கவனம் செலுத்திப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தோமானால் அந்த முடிவின் அபிப்பிராயங்கள் இந்த நாட்டுப் பெரியோர்கள் தலைவர்கள் என்பவர்களது அபிப்பிராயங்களுக்கு விரோதமாகவே இருக்கும். இருந்தபோதிலும் இவ்விஷயங்களில் எனக்குத் தோன்றிய உண்மையை உங்கள் முன் பேசுகின்றேன்.

சகோதரர்களே! இன்று பொருளாதாரக் கஷ்டமென எங்காவது உண்மையில் இருக்கின்றதா? விவசாயங்கள் நடைபெறுகின்றன. தொழில்கள் நடைபெறுகின்றன. சில இலட்சம் பிறவிப் பிச்சைக்காரர்கள் தவிர, சில கோடி பிறவிச் சோம்பேறிகள் தவிர மற்ற மக்களெல்லோரும் வேலை செய்கின்றார்கள். 1,000, 10,000, 1,00,000, 10,00,000, 100 00 000, 1,00000000 ரூபாய்கள் என்பதான சொத்துக்கள் கொண்ட செல்வவான்கள் நமது நாட்டில் இல்லையா? 100, 1,000, 10,000, 1,00,000, 10,00,000 பல 10,00,000 ரூபாய்கள் என்பதான வருஷ வரும்படியைக் கொண்ட வரும்படிக்காரர்கள் நமது நாட்டில் இல்லையா? மாதம் ஒன்றுக்கு 10, 100, 1000, 10,000 ரூபாய்கள் வீதம் சம்பளமும், சம்பாதனையுமானவரும் படியுள்ள உத்தியோகஸ்தர்கள் வக்கீல்கள், வைத்தியர்கள் முதலிய மக்கள் நமது நாட்டில் இல்லையா? ஒவ்வொரு வீடுகளில் 1000, 10,000, 1,00,000 ரூபாய் பெறும்படியான நகைகளும், 1000, 10,000, 1,00,000, 2,00,000 பெறுமான கட்டடங்களும், கோட்டை கொத்தளம் போன்ற வீடுடையவர்களும் நமது நாட்டில் இல்லையா? வென்று யோசித்துப் பாருங்கள்.

பூமி விஷயத்திலும் ஆள் ஒன்றுக்கு 5, 10, 100, 1,000, 10000, 20,000, 50,000 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட பூமியையும், வயல்களையும், தோட்டங்களையும், மலைகளையும், சோலைகளையும் அவற்றுள் அழகிய நீரோடைகளையும் கொண்ட மக்கள் நமது நாட்டில் இல்லையா? பெரிய பெரிய நதிகள், வாய்க்கால்கள், ஓடைகள், ஏரிகள் நமது நாட்டில் இல்லையா? என்று யோசனை செய்து பாருங்கள். ஆகவே இந்த நாட்டில் செல்வமில்லை என்று எப்படி, எந்த ஆதாரத்தைக் கொண்டு சொல்லக்கூடும்? என்பதை சற்று நடு நிலைமையிலிருந்து சிந்தித்துப் பாருங்கள். எனவே, சகோதரர்களே! இவ்வளவு செல்வமிருக்கும் போது இந்த நாட்டைப் பொருளாதாரக் கஷ்டம் இருக்கின்ற நாடாக எப்படி சொல்ல முடியும்? அப்படித்தாம் எங்காவது இருப்பதாக சொல்லுவதானால், யாருக்குப் பொருளாதாரக் கஷ்டமிருக்கின்றது? பாடுபடுகின்றவர்களாய், பாமர மக்களாயிருக்கின்ற - சாது ஜனங்களாக இருக்கின்றவர்களுக்கும், எந்தக் காலத்திலும் எந்த விதத்திலும் பொருளற்றவர்களாகவே இருந்து தீர வேண்டுமென்று நிர்பந்தப்படுத்தப் பட்டிருக்கின்றவர்களுக்குமே அல்லாது, மற்ற யாருக்குப் பொருளாதார கஷ்டமிருக்கின்றது? என்று உங்களை நான் கேட்கின்றேன்.

தங்களை உயர்ந்த ஜாதியரென்றும், மேல்வருணத்தவர் என்றும், பாடுபடுவதற்கு உரிமை இல்லாதவர்களென்று மேற்பாடு செய்து கொண்ட கூட்டத்திற்கு எங்காவது பொருளாதாரக் கஷ்டமிருக்கின்றதா? என்று பார்த்தீர்களானால் இந்தக் கூட்டத்தாருக்கு எங்காவது சிறிதாவது பொருளாதாரக் கஷ்டமிருப்பதாகவோ, ஜீவனத்திற்குக் கஷ்டப்பட வேண்டியிருப்பதாகவோ, அதனால் பசியுடன் வாடிக் கொண்டோ, கல்வி கற்க மார்க்கம் இல்லாமலோ இருப்பதாக நீங்கள் சொல்ல முடியுமா? என்பது உங்களுக்கு விளங்கும். ஆகவே, இந்தக் கூட்டத்தவர்கள் அல்லாமல் மற்றவர்களுக்குப் பொருளாதாரக் கஷ்டம் என்பது இந்நாட்டிலே இருக்கின்றது? யாரால் இருக்கின்றது? என்பதை இப்போது யோசித்துப் பாருங்கள். அப்போதுதான் நாட்டிலுள்ள செல்வங்களை சகல மக்களும் சரியாய் அனுபவிக்க முடியாமல் இருக்கும்படிக்கும், பாடுபடுகின்றவன் பட்டினியாகவும், சோம்பேறியாய் இருப்பவன் நன்றாகத் தாராளமாய் சாதாரண அளவுக்கு எத்தனையோ மடங்கு அதிகமாய் அனுபவித்துக் கொண்டு வாழும்படியாகவும் இருப்பதும் அதற்கு ஆதாரமாக நமது சமூக வாழ்க்கைக் கிரமத்தில் அதற்கேற்ற திட்டங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் சூக்ஷியும், பித்தலாட்டமும், ஏமாற்றமும் நன்றாய் உங்களுக்கு விளங்குவதோடு இதைத் தவிர மற்றபடி வேறொன்றும் ‘பொருளாதாரக் கஷ்டத்திற்கு’ காரணமில்லை என்பதை நன்றாய் உணருவீர்கள்.

சகோதரர்களே! இந்தப்படியாய்த் திட்டம் செய்வதற்கு மூல காரணஸ்தர்களாக இருப்பவர்கள் மேல்ஜாதியார், மேல்வருணத்தார் என்கின்ற சூஷிக்கார சோம்பேறி வாழ்க்கைக் கூட்டத்தார்களா? இல்லையா? வென்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, இப்படிப்பட்ட நிலைமையில், இந் நாட்டில் இருப்பதாய் சொல்லப்படும் பொருளாதாரக் கஷ்டத்தை எப்படி ஒழிப்பது என்பதுதான் இனி முக்கியப் பிரச்சினையாக யோசிக்கப்பட வேண்டும்.

சகோதரர்களே!இந்த இடத்திலுங்களது நியாயமான புத்தியையும், நடு நிலைமையான கவனத்தையும் செலுத்திப் பாருங்கள். பொருளாதாரக் கஷ்டத்தின் தத்துவங்கள் சுலபமாக உங்களுக்கு விளங்குவதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்லுகின்றேன். இன்றைய தினம் ரூ. 1-க்கு பட்டணம் படியினால் 6 படி அரிசி விற்கும்படியான நிலைமை நம் நாட்டில் இருந்தும் (அதாவது ஒரு தம்படிக்கு ஒரு பெரிய இட்டலி விற்கக் கூடிய அளவு மலிவாக இருந்திருந்தும்) இன்று ஒரு மனிதன் ஒரு இட்டலி 6 தம்படி கொடுத்து வாங்குவதும் அதே இட்டலியை வேறு ஒருவன் ஒரு தம்படிக்கோ அல்லது இரண்டு தம்படிக்கோ விற்றால்கூட அவனிடம் வாங்காமல் அதிக விலை கொடுத்து வாங்கி, நஷ்டமடைந்து வயிறார இட்டலி வாங்கி சாப்பிடக்கூட சௌகரியமில்லாமல் கஷ்டப்படுவதும், அதிக விலைக்கு விற்பவன் பெண்டு பிள்ளைகள் கெம்பு வைரக்கம்மலும், அட்டிகையும், ஜப்பான் சில்க்கும், பிராந்தி, விஸ்கிக் குடியும் ஆகியவைகளான போக போக்கியங்களை அனுபவித்துக் கொண்டு அவன் பிள்ளைகள் பி.ஏ.பி.எல்., படிக்கின்றார்கள் என்றால் இது இந்நாட்டுப் பொருளாதாரக் கஷ்டத்தின் பயனா? அல்லது சிலருக்கு எப்போதும் பொருளாதாரக் கஷ்டம் சதா இருக்கும்படியாகச் செய்யப்பட்டிருக்கும் சமூக வாழ்வு ஏற்பாடா? என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, இந்தப்படியான, அதாவது செல்வத்தையும், பொருளையும் மக்கள் சமமாய் அனுபவிக்க முடியாதபடி வெகுகாலத்திற்கு முன்பிருந்தே செய்யப்பட்டிருக்கு மேற்பாட்டை கட்டுப்பாட்டை உடைத்து எரிந்தீர்களானால் இங்குப் பொருளாதாரக் கஷ்டமேற்பட மார்க்கமிருக்குமா? என்று கேட்கின்றேன்.

மேல் நாட்டில் சக்கிலி மகன் பிரதம மந்திரியாகின்றான். குயவன் மகன் லார்டு  ‘பிரபு’ சபையில் அங்கம் வகிக்கின்றான். கப்பலில் சட்டி பானைகளைக் கழுவி சுத்தம் செய்கின்றவன் குப்பைக் கூழங்களைக் கூட்டுகின்றவன் மகன் இராஜப் பிரதிநிதியாகின்றான். வண்ணான் மகன் கவர்னராகின்றான் என்பதை நாம் பார்க்கின்றோம். ஆனால் நமது நாட்டில் சக்கிலிகள் வீதிகளிலும் நடக்கக்கூடாது.

பறையன் சுடுகாட்டிலிருந்து கொண்டு, பிணங்களுக்குக் கட்டிய துணியைக் கிழித்துக் கட்டிக் கொள்ள வேண்டுமென்றும், பிணங்களுக்கு வாயில் போடும் வாய்க்கரிசியைப் பொறுக்கி எடுத்துக் கஞ்சி காய்ச்சிக் குடிக்க வேண்டுமென்றும் திட்டங்கள் இருந்தால் எப்படிப் பொருளாதாரத் திட்டம் பெருவாரியான பாடுபடும் மக்களுக்கு திருப்தி தரக் கூடியதாக இருக்குமென்று யோசித்துப் பாருங்கள்.

இந்த நாட்டில் மேல் ஜாதிக்காரன் என்பவன் எவனாவது சரீரத்தால் பாடுபடுகின்றானா? வென்று கவனித்துப் பாருங்கள்.

இந்த நாட்டில் மக்களை பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் பஞ்சமன் என்று பிரித்து, இதில் அவர்களுக்கு அந்தஸ்தும், வேலையும் பிரித்து, அதாவது பிராமணன் படிப்பதற்கும்- படிப்பு சொல்லிக் கொடுப்பதற்கு அருகனென்றும், க்ஷத்திரியன் அரசு செலுத்தி - உத்தியோகங்கள் பார்க்க அருகனென்றும், வைசியன் வியாபாரியாய் வியாபாரம் செய்து ஜமீன்தாரனாய் விவசாயக் குடித்தனம் செய்விக்கச் செய்து, பணம் சம்பாதிக்க அருகனென்றும், சூத்திரன் சரீரப் பிரயாசைப்பட்டு, உயிர் வாழுமளவுக்கு மாத்திரம் ஊதியம் பெற, கூலி பெற அருகனென்றும், பஞ்சமன் என்பவன் இந்த சூத்திரன் அதிகாரம் செய்யவும், அவனுக்கு வெட்டி வேலை செய்யவும் அவன் உண்டு கழித்த கஞ்சியையும், உடுத்திக் கிழித்த கந்தையையும் பெற்று, உண்டு உடுத்தி இழிபட்ட மிருகங்களிலும் கேவலமாயிருக்க அருகனென்றும் ஏற்பாடுகள் செய்த திட்டமே - வருணாச்சிரம தர்மமே தான் - இன்று இந்த நாட்டில் பாடுபடுபவர்கள் பொருளாதாரத்தில் நல்ல நிலையை அடைய முடியாமல் இருக்கின்றதேயொழிய, வேறு காரணமில்லவே இல்லை.

இந்தக் கூட்டம் அதாவது பாடுபடுகின்றவர்கள் எண்ணிக்கையில் மற்றவர்களைவிட அதிகமாயிருப்பதால் நாடு ஏழையாகவும், தரித்திரமாகவும் இருப்பதாக தெரிகின்றது. இவர்களது இந்த நிலைமையை மேல் ஜாதிக்காரர்கள் மற்றவர்களுக்கு - வெளியாருக்கு எடுத்துக்காட்டி, ‘இந்தியா ஏழைநாடு, தரித்திர நாடு, பொருளாதாரத்தில் கீழான நாடு’ என்பதாக ஒப்பாரி வைத்து அதாவது ஒரு பிச்சைக்காரி பிச்சைப் பெற வேண்டுமானால் யாரிடத்திலாவது உள்ள ஒரு மொண்டிக் குழந்தையையோ, குருட்டுப் பிள்ளையையோ வாடகைக்குப் பெற்று வந்து, தனது குழந்தை ‘குருடு’ என்றும், ‘மொண்டி’ என்றும் சொல்லி, தெரியாதவர்களுக்குக் காட்டி, காசு, பணம் சம்பாதித்துக் கொண்டு பிறகு குழந்தைகளைப் பெற்றோர்களிடம் ஒப்புவித்து விடுவதுபோல் இந்தியாவின் கீழ்பட்ட மக்கள் என்பவர்களின் நிலைமையை கைமுதலாக வைத்து மேல் நிலைமையில் மிக்க சௌகரியமாக இருப்பவர் தாங்கள் மிகவும் பரிதாபப்படுவதாக வேஷம் போட்டு அரசாங்கத்தில் சுயநலத்திற்கு அனுகூலமான லாபத்தை மேலும் மேலும் அடைவதற்குச் செய்யும் சூக்ஷியேதான் இன்றையப் பொருளாதாரக் கஷ்டமேயொழிய வேறில்லை.

இந்தியப் பொருளாதார நிலைமை சிறிது உயர வேண்டுமானாலும் இந்திய ஜனத்தொகையில் 100க்கு 75 பாகத்திற்கு மேலான இந்த சமூகங்கள் பொருளாதாரத் துறையில் மேல் வருவதற்கு சமூகத் துறையில் உள்ள கட்டுப்பாடுகளை உடைக்கச் செய்தால் ஒழிய வேறு வழியில் இந்திய மக்கள் பொருளாதாரத்துறை சீர்படுத்தப்படுமென்பது சிறிதும் முடியாத காரியமே யாகும். ஆகவே இதைத் தவிர மற்ற வழியில் பொருளாதாரத் துறையைப் பற்றி பேசுபவைகள் அவ்வளவும் புரட்டும், ஏமாற்றமுமே அல்லாமல், அதில் சிறிதும் அறிவுடைமையோ, நாணயமோ உண்மையோ இல்லையென்றே சொல்லுவேன். ஆதலால் நமது நாட்டுப் பொருளாதாரக் கஷ்டமென்பது இம்மாதிரியான ஒரு பெரும் இந்திய சமூகத்திற்கு இருந்து வருவதற்குக் காரணமே இந்த மாதிரியான வருணாச்சிரம முறையே அல்லாமல் வேறல்ல என்பதே எனது அபிப்பிராயம்.

இந்திய நாட்டில் எவ்வளவு பஞ்சம் இருப்பதாக சொல்லப்பட்டாலும், எவ்வளவு தரித்திரம் இருப்பதாக சொல்லப்பட்டாலும், எந்தக் காலத்திலும், எந்தக் காரணத்தைக் கொண்டும் மேற்கண்ட உயர்ந்த ஜாதிக் கூட்டமானது ஒரு நாளாவது, ஒரு நிமிஷமாவது, கஷ்டப்படுவதாகவோ பட்டினி கிடப்பதாகவோ சொல்ல முடியவே முடியாதென்பதை நீங்கள் கூர்மையாய் யோசித்துப் பார்த்தீர்களானால், உங்களுக்கு விளங்காமல் போகாது.

மற்றும் இன்னுமொரு விஷயத்திலும் நமது பொருளாதார நிலைமைக் கஷ்டமாகக் காணப்படுவதற்குக் காரணம் சொல்ல வேண்டியிருக்கின்றது. அதாவது நமது பொருளாதார வருவாய்களும் செல்வர்களுடைய செல்வத்தின் பயன்களும் நாட்டு நலனுக்கும், பெரும்பான்மையான ஏழை மக்கள் பாடுபடுகின்றவர்கள் என்கின்ற கூட்டத்திற்கும் அவர்களது முன்னேற்றத்திற்கும் போக முடியாமல் சாமி பேராலும் மதத்தின் பேராலும் சடங்குகளின் பேராலும் நாசமாகும் ஒரு பெரிய மோசமான துறையேயாகும்.

இந்த நாட்டுச் செல்வவான்கள் எல்லோரும் பணம் சம்பாதித்து செல்வவான்களானதற்குக் காரணம் இந்த நாட்டுப் பெரும்பான்மையான மக்கள் சரீரப் பிரயாசையின் பயனால் ஏற்பட்டது என்பதை சிறிதும் உணராது ‘கடவுள் தங்களுக்குக் கொடுத்தா’ரென்பதாக எண்ணிக் கொண்டு, அந்தக் கடவுளுக்கு நன்றி செலுத்தும் முறையிலும், இன்னும் மேன்மேலும் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக விண்ணப்பம் போட்டு, லஞ்சம் செலுத்தும் முறையிலும் செல்வத்தைப் பாழாக்குகின்றார்கள். இதன் பயனாகவே இந்த நாட்டில் வருஷம் ஒன்றுக்கு பல கோடி ரூபாய்கள் பாழாவதைப் பார்க்கலாம். நமது தமிழ்நாட்டில் மாத்திரம் வருஷம் ஒன்றுக்கு இரண்டு கோடி அல்லது மூன்று கோடி ரூபாய்கள் வரும்படி வரத்தக்க மூலத்துகைகள், சொத்துக்கள் கோவிலின் பேரால் மதத்தின் பேரால் முடங்கிக் கிடக்கின்றன. மற்றும் மூன்று கோடி, நான்கு கோடி ரூபாய் வருஷம் ஒன்றுக்குப் பொதுமக்களின் வருவாயும், சிலவிடங்களின் கைமுதலும் பாழாகும் வண்ணம் கிராம தேவதைகள் முதல் உயர்தரக் கடவுள்கள் வரையுள்ள இலட்சக்கணக்கான கடவுள்களுக்குப் பூசை, நைவேத்தியம், உற்சவம், காணிக்கை முதலிய செலவுகளும், கோவில் திருப்பணி கும்பாபிஷேகம் முதலிய செலவுகளும், மற்றும் இரதம், தேர், வாகனம், பாத்திரம், பணம், துணிமணி, நகை முதலிய செலவுகளும் தேசத்தின் பொருளாதார நிலைமையைப் பாழாக்குகின்றன.

தமிழ்நாட்டில் மாத்திரம் இவ்வளவென்றால் இந்தியா மொத்தமும் எப்படி இருக்குமென்று நினையுங்கள். இந்த உண்மையை மக்களுக்கு எடுத்துக்காட்டி இந்த நாசமாய்ப் போகும் பொருளாதாரத்தைக் காப்பாற்றி அச்செல்வங்கள் இந்திய மக்களுக்குப் பயன்படுத்தச் செய்யாமல் இத்துறையில் சிறிது முயற்சியும் இல்லாமல் ‘நமது செல்வம் அன்னிய நாட்டுக்குப் போகின்ற’ தென்கின்ற ஜாலமந்திரத்தைப் பிரயோகித்து முட்டாள்களை ஏமாற்றி உண்மை அறியாமலிருக்கும்படி பொதுநலத்தின் பேரால் அரசியலின் பேரால் சூக்ஷிகள் செய்யப்பட்டு வருகின்றதை நமது மக்கள் உணரும்படி செய்ய வேண்டும்.

இந்த நாட்டுச் செல்வம் வெளியில் போகின்றதென்பதை அடியோடு நிறுத்தப்பட்டுப் போவதுடன் வெளிநாட்டுச் செல்வங்கள் எல்லாம் நமது நாட்டுக்கே வருவதாக வைத்துக் கொண்டாலும், இன்றைய வருணாச்சிரம முறையும், மத சம்பந்தமான கடவுள் சடங்குகளின் முறையும் இப்படியே இருக்கும் வரை மேற்கண்ட, அதாவது பாடுபடாமல் சோம்பேறியாய் வாழ உரிமை உள்ளவனும், பணக்காரனாக உரிமை உள்ளவனும், உத்தியோகம் பார்க்க உரிமை உள்ளவனும், பொதுஜனப் பிரதிநிதியாக உரிமை உள்ளவனும் தான் இப்போதையைவிட இன்னும் அதிகமாகக் கொள்ளை அடிக்கவும், போக போக்கியங்கள் அனுபவிக்கவும், கஷ்டப்படுபவர்களை பட்டினி கிடப்பவர்களை இன்னும் அதிகமாய் கொடுமை செய்யவும் அருகதை உடையவர்கள் ஆவார்களே தவிர, ஒரு நாளும் இந்தியாவிலின்று பொருளாதாரத்தால் கஷ்டப்படும் ஏழை மக்கள், பட்டினிக் கிடப்பவர்கள் என்கின்றவர்கள் ஒரு நாளும் யாதொரு விதத்திலும் சீர்பட முடியவே முடியாதென்பதை உணருங்கள்.

மேலும் இந்தியப் பொருளாதாரத் துறை என்பதை சீர்படுத்த மற்றொரு துறையில் பாடுபட வேண்டியிருக்கின்றது.

அஃதென்னவெனில் மனிதன் தனது வாழ்வுக்கும், தாழ்வுக்கும் கடவுளே காரணமென்று எண்ணிக் கொண்டு கடவுள் மீதே சகல பொறுப்பும் போட்டுவிட்டு மாடுபோல் உழைப்பதை மாத்திரம் தன் கடமையாய்க் கொண்டிருக்கும் கடவுள் உணர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்பதாகும்.

நம் நாட்டில் பாடுபட்டு ஏழையாய் பட்டினியாய் இழிவாய் இருந்து கஷ்டப்படுபவன் மாத்திரம் தான் கடவுள் உணர்ச்சி கொண்டு நசமாய்ப் போகின்றானேயொழிய செல்வமுடையவனும், பணமுடையவனும், சோம்பேறியாய் வாழ்பவனும் ஒருநாளும் உணர்ச்சி கொண்டு கடவுளுக்குப் பயந்து நடப்பது என்கின்ற கொள்கையில் ஈடுபடுவதே இல்லை.

மேலும் எவ்வளவு அக்கிரமமும் மோசமும் செய்தாலும் அந்தக் குணங்களால் சம்பாதித்த பொருளில் ஒரு பாகத்தை கடவுளுக்குக் கொடுத்து மன்னிப்பு பெற்று விடலாம் என்றும் மேலும் மேலும் செல்வம் பெறுவதற்குக் கடவுளுக்கு லஞ்சம் கொடுக்கலாம் என்றுமே கருதுகின்றான்.

ஆகவே கடவுளுணர்ச்சியானது பாடுபடுபவன் கஷ்டப்படவும் பித்தலாட்டக்காரன் சோம்பேறி ஆகியவர்கள் செல்வம் பெற்று சுகப்படவும் தான் உதவுவதாய் இருப்பதால் அதை ஒழிக்க வேண்டிய விஷயத்திலும் பாடுபட வேண்டியது அவசியமாகும்.

கடைசியாக பொருளாதாரத் திட்டத்திற்கு மற்றொரு துறையிலும் பாடுபட வேண்டியது அவசியமாகும். அதாவது மனிதன் பொருள் அடைவதற்காக செய்யும் தொழில்கள் எல்லாம் பழைய முறைப்படி 1000, 2000, வருஷங்களுக்கு முன்னால் செய்து வந்த முறைப்படி செய்து வர வேண்டும் என்கின்ற மூடநம்பிக்கையையும் மூடப்பழக்க வழக்கங்களையும் ஒழித்து புதிய மாதிரியில் அதாவது யந்திரம் முதலியவற்றில் பாடுபடும் பொருள் சம்பாதிக்கு முறையில் பாடுபட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இதைப் பற்றி வேறு பல சமயங்களில் விசேஷமாகப் பேசி இருப்பதால் அவற்றைக் கவனித்தால் தெரிய வரும்.

ஆகவே இவ்விஷயங்களை எல்லாம் நீங்கள் தக்கப்படி கவனித்து உங்களுக்கு பட்டபடி நடவுங்கள்.

(குறிப்பு: சென்னிமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.

குடி அரசு - சொற்பொழிவு - 05.07.1931)

Pin It