தமிழ்நாடு இந்தியாவில் இயற்கைவளங்களில் செழித்து விளங்கும் மாநிலங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இரும்புத் தாது, பாக்சைட், கிராபைட், கிரானைட், பழுப்பு நிலக்கரி, டங்ஸ்டன், மாலிப்டினம், மீத்தேன் போன்ற பல்வேறு கனிமங்கள் மற்றும் எரிவாயுக்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றன. இவ்வளங்களை ஆய்வு செய்து பதிவுசெய்யும் பணிகளை இந்திய புவியல் துறை (Geological Survey of India) உள்ளிட்ட மத்திய மற்றும் மாநில அமைப்புகள் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றன.
இயற்கை வளங்களைக் கண்டறிந்து பயன்படுத்துவது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால், அதேநேரத்தில் வளங்களை அகழ்ந்து எடுக்கும் செயல்முறைகள் சுற்றுச்சூழல் மற்றும் சமூக வாழ்வியல் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் அபாயமும் கொண்டவை. தமிழ்நாட்டில் சமீப ஆண்டுகளில் எழுந்துள்ள மீத்தேன், டங்ஸ்டன், கிராபைட் தொடர்பான பல்வேறு மக்கள் போராட்டங்கள், இந்தக் கேள்வியை பெரியளவில் எழுப்புகிறது. கனிம வளங்கள் வளர்ச்சிக்கான பாதையா? அல்லது சுற்றுச்சூழல் மற்றும் சமூக பேரழிவுக்கான வழியா? என்ற கேள்வியை ஆழமாக முன்வைக்கின்றன.
தொடர்ச்சியாக நடைபெறும் புவியல் ஆய்வுகள் மூலம் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கிடைக்கும் கனிமங்களின் பட்டியல் இந்தியன் மினரல்ஸ் இயர்புக்-தமிழ்நாடு ரிவ்யூவில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியல்களில் இடம்பெற்ற தகவல்கள் பல இடங்களில் உள்ளூர் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. காரணம், ஆய்வு என்ற பெயரில் தொடங்கும் இந்த நடவடிக்கைகள் பின்னர் சுரங்கத் தோண்டுதல் அல்லது வளச் சுரண்டல் நடவடிக்கைகளாக மாறும் அபாயம் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
சமீபத்திய டங்ஸ்டன், கிராபைட், மீத்தேன்-ஹைட்ரோகார்பன் தொடர்பான திட்ட அறிவிப்புகள் மூலம் இந்த உண்மைகள் வெளிப்படுகின்றன.
தமிழ்நாட்டில் வளச்சுரண்டல் குறித்து பேசும்போது முதலில் குறிப்பிடப்படும் இடம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம் (Neyveli Lignite Mines) ஆகும். கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் பழுப்பு நிலக்கரி அகழ்வு பல காலமாக நடைபெற்று வருகிறது.
அங்கு செயல்படும் NLC India Limited நிறுவனம் இந்தியாவின் முக்கியமான நிலக்கரி மற்றும் மின்சார உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் பயன்கள் பற்றிய ஒருபுறம் பெரியளவில் பரப்புரை செய்யப்படுகின்றன.
ஆனால், இந்த திட்டங்களால் நிலம் இழந்த மக்கள், இடம்பெயர்ந்த கிராமங்கள், நிலத்தடி நீர் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் எழுந்ததாக பல சமூக இயக்கங்கள் கூறுகின்றன. இதனால், புதிய சுரங்கத் திட்டங்கள் அறிவிக்கப்படும் போதெல்லாம் மக்கள் மத்தியில் அச்சம் உருவாகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் மற்றும் அரிட்டாபட்டி பகுதிகள் புவியியல் ரீதியாக மிகவும் முக்கியமானவை. இங்கு சுமார் 200 கோடி ஆண்டுகள் பழமையான பாறைகள் காணப்படுகின்றன என்று மத்திய புவியியல் துறை கூறியுள்ளது.
யானைமலை, அரிட்டாபட்டி, மாங்குளம், மீனாட்சிபுரம், மேலவளவு உள்ளிட்ட பல மலைப்பகுதிகள் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன. இந்த இடங்கள் இயற்கைவளங்களின் பார்வையில் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மற்றும் உயிரினப் பல்வகைமையின் அடிப்படையிலும் முக்கியமானவை.
இப்பகுதியில் டங்ஸ்டன் கனிமம் இருப்பதாகக் கூறி பல ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. டங்ஸ்டன் என்பது தொழில்துறையில் முக்கியமான உலோகமாக கருதப்படுகிறது. ஆனால், இதற்கான ஆய்வுகள் சுமார் 200 சதுர கிலோமீட்டர் பரப்பில், பொதுமக்களுக்கு தெரியாமல் ரகசியமாக நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் இந்த ஆய்வுகளுக்கு 2018 ம் ஆண்டிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 2024 ஆம் ஆண்டு மத்திய அரசு ஆய்வுகளின் தொடர்ச்சியாக இந்தப் பகுதியில் சுமார் 5000 ஏக்கர் நிலத்தை சுரங்கத் திட்டத்திற்காக ஏலம் விட்டது. இது குறித்து தகவல் வெளியானதும் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை எதிர்த்து போராடிய ஒரே காரணத்திற்காக 14 பேரை துப்பாக்கி தோட்டாவால் காவு வாங்கிய வேதாந்தா நிறுவனத்துடன் இந்த திட்டம் தொடர்புடையதாகக் கூறப்பட்டதால், எதிர்ப்பு மேலும் தீவிரமடைந்தது.
மதுரை மாவட்டத்தில் நடந்த இந்த போராட்டம் இரண்டு மாதங்களுக்கும் மேலாக கிராமம் கிராமமாக தொடர்ந்தது. 2025, ஜனவரி 7 அன்று நடைபெற்ற பெரிய நடைபேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். சமகாலத்தில் நடந்த இந்த போராட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகளை ஒருசேர கவனிக்க வைத்த மிக முக்கியமான வாழ்வாதார போராட்டமாக பார்க்கப்படுகிறது.
டங்ஸ்டன் போராட்டம் நடந்து முடிந்த ஒரு ஆண்டுக்குள் மதுரை மாவட்டத்தின் அதே மேலூர் பகுதிக்கு ஒட்டியுள்ள சிவகங்கை மாவட்டப் பகுதியில் சமீபத்தில் மற்றொரு சுரங்கத் திட்டம் தொடர்பாக மக்கள் போராட்டம் எழுந்துள்ளது.
கோமாளிப்பட்டி பகுதியில் 1994 ஆம் ஆண்டு முதல் Tamil Nadu Minerals Limited நிறுவனம் கிராபைட் கனிமத்தை அகழ்ந்து வருகிறது. உலகத் தரம் வாய்ந்த இந்த கிராபைட் வளம் தொழில்துறைக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஆனால், இந்தத் திட்டத்தை சுமார் 1650 ஏக்கர் பரப்பில் விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதும், அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
2026 ஜனவரி 26 அன்று சுமார் 5000க்கும் மேற்பட்ட மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கூறுவதாவது, இந்த திட்டம் விரிவடைந்தால் விவசாய நிலங்கள் அழியும் அபாயம் உள்ளது; நெல், கடலை, வாழை, காய்கறிகள் போன்ற பயிர்கள் வளரும் முப்போம் நிலங்கள் பாதிக்கப்படும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், கண்மாய்கள் மற்றும் குளங்கள் பாதிக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி மலைப்பகுதியில் நடைபெற்ற கனிம வள ஆய்வுகள் இந்தப் பகுதியில் மாலிப்டினம் என்ற கனிமம் இருப்பதை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்த கனிமம் எஃகு மற்றும் உயர் தொழில்துறை உற்பத்திகளில் பயன்படும் முக்கிய உலோகம் என கூறப்படுகிறது.
சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பில் மாலிப்டினம் கிடைக்கும் செய்தி திண்டுக்கல் மாவட்ட மக்களிடையேகவலையை அதிகரித்துள்ளது.
கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக உள்ள தமிழ்க்கடவுள் பழனி முருகன் கோயில் இந்த பகுதியில் உள்ளடங்கி வருவதால், மக்களின் வழிபாட்டு நம்பிக்கையும் சுற்றுச்சூழல் குறித்த விவாதமாகவும் இது மாறியுள்ளது.
ஒரு மாநிலத்தின் கனிம வளங்கள் தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கியமானவை. சுரங்கத் தொழில் வேலைவாய்ப்பை உருவாக்குகிறது, அரசுக்கு வருவாய் அளிக்கிறது, தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அதேநேரத்தில் இந்தத் திட்டங்கள் சுற்றுச்சூழல் சேதத்தை ஏற்படுத்தினால், அதன் நீண்டகால விளைவுகள் மிகப் பெரியதாக இருக்கும்.
மலைகள் வெட்டப்படுதல், காடுகள் அழிவு, நிலத்தடி நீர் குறைவு, விவசாய நிலங்கள் பாதிப்பு, கிராம மக்கள் இடம்பெயர்வு போன்ற பிரச்சினைகள் பல இடங்களில் பதிவாகியுள்ளன.
இதனால், வளர்ச்சி என்ற பெயரில் வளங்களை சுரண்டுவது நியாயமா அல்லது சுற்றுச்சூழலை பாதுகாப்பதா என்ற விவாதம் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் எழுந்துள்ள இந்த போராட்டங்கள் ஒரு பொதுவான கேள்வியை முன்வைக்கின்றன:
வளர்ச்சி யாருக்காக? வளங்கள் யாருடையது?
அந்த வளங்களின் பயன் உள்ளூர் மக்களுக்கு கிடைக்கிறதா? அவர்களின் நலன்கள் குறித்து அக்கறை காட்டப்படுகின்றனவா? என்ற கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இல்லாமல் எந்த சுரங்கத் திட்டமும் வெற்றிகரமாக செயல்பட முடியாது.
தமிழ்நாடு கனிம வளங்களில் செழித்து விளங்கும் மாநிலமாக இருந்தாலும், அந்த வளங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது மிக முக்கியமான கேள்வியாக உள்ளது.
பொருளாதார வளர்ச்சி அவசியம். ஆனால் அது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்களின் வாழ்வாதாரம், வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றுடன் ஒத்துப் போவதாக இருக்க வேண்டும்.
இல்லையெனில், இன்று வளர்ச்சியின் பெயரில் தொடங்கப்படும் திட்டங்கள் நாளைய தலைமுறைக்கு பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
- கம்பூர் செல்வராஜ் (டங்ஸ்டன் திட்டம் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு)