2026-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் BJP, தனது அரசியல் வழியிலும் பொருளியல் வழியிலும் பண்பாட்டு வழியிலும் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. BJP அரசு 3 மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியதன் மூலம் பொருளாதாரத்தையும் பண்பாட்டுத் தளத்தையும் தனது ஆட்சி அதிகாரத்தின் மூலம் முழுமையாகக் கைப்பற்றிக் கொண்டது. மேலும் இரண்டு மாநிலங்களில் – தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் – புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் மூலமும், கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூலமும் BJP மறைமுகமாக ஆட்சியைக் கைப்பற்றி விட்டது. BJP தனது கூட்டணிக் கட்சிகள் மூலம் அஸ்ஸாம், பாண்டிச்சேரி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைக் கைப்பற்றிக் கொண்டது.
1967-இல் திமுக ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து 2026 வரை திமுகவை ஒழித்துவிட வேண்டும் என்பதே பார்ப்பனியத் திட்டமாக இருந்தது. எம்.ஜி.ஆர். மூலமாகப் பார்ப்பனியம் திமுகவை 13 ஆண்டுகள் ஆட்சி பிடிக்க முடியாமல் பார்த்துக் கொண்டது. எம்.ஜி.ஆர். மூலம் பார்ப்பனியம் சமூக நீதியாக இருந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையை வீழ்த்த முயற்சி செய்தது. அன்றைய அதிமுகவில் இருந்த, இணைந்த பல திமுகவினர் சமூகநீதிக் கொள்கையைக் கொண்டிருந்ததுடன், குறிப்பாய் இடஒதுக்கீட்டில் நம்பிக்கை கொண்டு இடஒதுக்கீட்டைப் பாதுகாத்துக் கொண்டிருந்தனர். திமுகவில் 31 சதவீதமாக இருந்த இடஒதுக்கீட்டை 50 சதவீதமாகவும், ஜெயலலிதா ஆட்சியின்போது இது 69 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. அதே சமயம், ஜெயலலிதா அரசு கோவில் பகுதிகளில், பொது இடங்களில் கோழி, ஆடுகளை வெட்டுவதற்குச் சட்டப்பூர்வமாகத் தடை விதித்தது. ஜெயலலிதா படுதோல்வி அடைந்ததும் அதிமுக தனது இந்தக் கொள்கையை மாற்றிக் கொண்டது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, நீண்ட வரலாற்றுக்குப் பின் திமுகவிற்குத் தமிழ்நாட்டைக் கைப்பற்ற வாய்ப்பளித்தது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஆட்சியைக் கைப்பற்றினாலும் திமுக 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதாவிடம் ஆட்சியை இழந்தது. அதிமுக இரண்டு முறை பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தது; இன்று வரை திமுகவால் 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து ஆள முடியவில்லை. பார்ப்பனியம் 70 ஆண்டுகளாகத் திமுகவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதில் தீவிரமாகப் பணியாற்றி வந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி, விஜய் ஆகியோர் அனைவரும் பார்ப்பனியக் கொள்கையைக் கொண்டவர்களே. பார்ப்பனியம் ஒரு தனி அமைப்பு அல்ல; பார்ப்பனியம் அடிப்படையில் ஒரு சாதிய இயக்கம் ஆகும். திமுக உட்பட அனைத்துக் கட்சிகளுக்குள்ளும் பார்ப்பனியம் தீவிரமாக ஊடுருவிக் கொண்டிருக்கிறது. உண்மையில் பார்ப்பனிய எதிர்ப்பை அடிப்படையாகவும் முதன்மையாகவும் கொண்டவர்களாக இருந்த பெரியாரும் அம்பேத்கரும் கூடப் பார்ப்பனிய ஒழிப்பில் முழுமையான வெற்றியைப் பெற முடியவில்லை. பார்ப்பனியம் சாதியைப் பாதுகாப்பதையும் பெண் அடிமைத்தனத்தையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.
பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களும் கம்யூனிஸ்டுகளும் பார்ப்பனியத்தை ஒழிக்கப் போராடினாலும், பார்ப்பனியம் புதிய வடிவங்களில் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
அதே சமயம், முதலாளித்துவ வளர்ச்சிக்குச் சமூக அரங்கில் சாதியம், பெண்ணுரிமை போன்றவற்றைத் தனது வளர்ச்சியை முன்னெடுக்க ஒழிப்பது மிக அவசியமானதாக இருந்தது. இதற்கான நிகழ்வுகள் பிரிட்டிஷ் அரசின் காலத்திலேயே தொடங்கிவிட்டன. ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் சமூகங்களும் பெண்களும் கல்வி கற்பதும் பணிகளில் ஈடுபடுவதும் முதலாளித்துவ வளர்ச்சிக்கு அடிப்படையான தேவையாக இருந்தது. இந்திய அளவில் முதலாளித்துவம் பார்ப்பனியத்தின் தொடர்ச்சியாகவே இருந்தது. நிலவுடைமையை வீழ்த்தி வளர்ச்சி அடைந்த முதலாளித்துவமாக இந்திய முதலாளித்துவம் இல்லை; மாறாக நிலவுடைமைச் சக்திகளே இங்கு முதலாளித்துவமாக வளர்ச்சி அடைந்தன. இதற்கு அடிப்படைக் காரணம், ஏகாதிபத்தியங்கள் முதலாளித்துவத்தின் வளர்ச்சியை முழுமையாக ஏற்கவில்லை என்பதுதான். நிலவுடைமைச் சமூகத்திலிருந்தே, நிலவுடைமையின் உதவியுடனேயே முதலாளித்துவத்தை வளர்ப்பதே ஏகாதிபத்தியங்களின் கொள்கையாகவும் நடைமுறையாகவும் இருந்தது. இந்த வழிமுறையில் ஏகாதிபத்தியமும் பார்ப்பனியமும் ஒன்றுக்கொன்று சமரசம் செய்துகொண்டு இந்திய எல்லைக்குள் வளர்ச்சி அடைந்தன.
இந்திய எல்லைக்குள் பார்ப்பனியக் கும்பலின் ஆதிக்கத்திற்கு உட்பட்டே முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்தது. ஏகாதிபத்தியம், நிலவுடைமைச் சக்திகளிலிருந்தே முதலாளித்துவம் வளர்வதை அங்கீகரித்தது. இந்தியப் பார்ப்பனியம் இதையே தனது நடைமுறைக் கொள்கையாகக் கொண்டே இயங்கியது. எந்தத் தேசிய இனங்களுக்குள்ளும் முதலாளித்துவம் தேசிய இனப் பண்புடன் வளரவிடக்கூடாது என்பதே பார்ப்பனியத்தின் நடைமுறையாக இருந்தது. பார்ப்பனியத்திற்கு எதிரான செயல்பாட்டில் பெரியாரும் அம்பேத்கரும் ஒன்றுபட்டிருந்தாலும், பெரியார் தேசிய இன வழியிலும், மொழி இன வழியிலும், சாதி ஒழிப்பு வழியிலும் சரியான கொள்கையைக் கொண்டிருந்தார். அம்பேத்கர் சாதி ஒழிப்பிலும் பார்ப்பனிய எதிர்ப்பிலும் உறுதியான கொள்கை கொண்டிருந்தாலும், பார்ப்பனியமும் சாதியமும் ஒழிக்கப்பட்ட இந்தியா உருவாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையையே கொண்டிருந்தார். மொத்த இந்திய அளவில் நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தியல் பலமாகவே அனைத்துத் தேசிய இனங்களிலும் அரசியல் கட்சிகள் இயங்குகின்றன.
திமுகவின் வரலாறு பெரியாரியக் கொள்கையுடன் இணைந்தே இருந்தது. பெரியார் தேர்தல் பாதையை ஏற்கவில்லை; பண்பாட்டுத் தளத்திலேயே இயங்குவதும், அரசியல் இயக்கங்களைத் தனது செயல்தன்மைக்குப் பயன்படுத்துவதும் என்ற வழிமுறையையே தனது பணியாகக் கொண்டு செயல்பட்டார். அண்ணா அரசியல் வழியில் செயல்பட வேண்டும் என்பதையே கொள்கையாகக் கொண்டிருந்தார். அண்ணா திமுகவைத் தொடங்குவதற்கு இதுவே அடிப்படையான காரணமாக இருந்தது. அந்தப் பாதையில் தொடர்ந்து செயல்பட்டு 1967-இல் அண்ணா ஆட்சியையும் கைப்பற்றினார்; உடனடியாகப் பெரியாரைச் சந்தித்து, பெரியாரிடம் இருந்த எதிர் உணர்வைச் சரி செய்து கொண்டார். தேர்தல் பாதையில் திராவிட நாட்டுக் கொள்கை அல்லது தமிழ்நாடு தனிநாடு என்ற கொள்கை திமுகவால் கைவிடப்பட்டது; மாநில சுயாட்சியாக அது வீழ்ந்தது.
மொழி தேசிய இனக் கொள்கை, இந்தியத்தை முழுமையாக ஏற்கும் மாநில சுயாட்சிக் கொள்கையாகச் சுருங்கிப் போனது. மாநில சுயாட்சிக் கொள்கை பிழைப்புவாதக் கொள்கையாகச் சீரழிந்தது. அதே சமயம், ஆட்சியில் இல்லாதபோது தீவிரமாக மொழி தேசிய இனக் கொள்கையையும், சாதி ஒழிப்பையும், இடஒதுக்கீட்டுக் கொள்கையையும், பெண் உரிமைகளையும் தீவிரமாகப் பேசி தனது கட்சியைப் பாதுகாத்துக் கொள்ளும் திமுக, ஆட்சியில் இருக்கும்போது கையில் உளுந்தை வைத்துக்கொண்டு மெதுவாகக் கையாளும். மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தால், மக்களைத் தாக்குவது திமுகவின் செயல்தான். முதலாளித்துவக் கட்சிகளின் ஜனநாயகத்தன்மை என்பது தங்களின் நலனையே முதன்மையாகக் கொண்டிருப்பதுதான். திமுக ஒரு முதலாளித்துவக் கட்சி; அது புரட்சிகர இயக்கமோ, முழுமையான ஜனநாயக இயக்கமோ அல்ல. அது தன் சொந்த வாழ்நிலையைப் பாதுகாக்கவே மொழிதேசியம் பேசும்; சாதி எதிர்ப்பும் பெண்ணியமும் கூடத் திமுகவின் வாய்மொழியாகத்தான் இருக்கும், நடைமுறையாக இருக்காது. திமுக ஆட்சியைப் பிடிப்பதற்கு முன் மிகச்சிறிய அளவில் நடைமுறைப் பணிகளைச் செய்தது; ஆட்சிகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களையும் செய்தது. ஆட்சி அமைத்த பின் மக்கள் போராட்டங்களைப் பெருமளவு கைவிட்டுவிட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, திமுக, CPI, CPM, மாலே இயக்கங்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புகள்தான் கொள்கை, கோட்பாடு மற்றும் செயல்திட்டங்களின் அடிப்படையில் இயங்கும் இயக்கங்களாகும். ஏதோ ஒரு வகையில் கொள்கை அளவில் இயங்கும் இயக்கங்களாக இருந்தாலும், கொள்கை அளவில் நாம் எதிர்த்துப் போராட வேண்டிய இயக்கங்களாகும். அதே சமயம் RSS, BJP, காங்கிரஸ் இயக்கங்கள் கொள்கைப் போரிலும் நடைமுறையிலும் நாம் வீழ்த்தியே ஆக வேண்டிய இயக்கங்களாகும். சாதியவாதக் கட்சிகளையும், தேசிய இன வெறிக் கட்சிகளையும் நாம் தீர்மானகரமாகக் கொள்கை வழியிலும் நடைமுறை வழியிலும் எதிர்த்தே தீர வேண்டிய அமைப்புகளாகும். இந்த வழியில் பாமக, நாம் தமிழர் இயக்கம் அடங்கும். அதிமுக, தவெக போன்ற கட்சிகள் கொள்கை ஏதும் அற்ற இயக்கங்களாகும்; அவை எல்லாக் கொள்கைகளும் கொண்ட கட்சிகள்தான். பிழைப்புவாதமே அதன் கொள்கை. அண்மையில் அதிமுகவிலிருந்து வெளியேறித் தவெகவில் இணைந்த செய்திகள், இரு கட்சியும் சுயநலக் கட்சிகள்தான் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
அதிமுக, தவெக கட்சிகள் கொள்கை அமைப்புகள் இல்லை; பிழைப்புவாதமும் சுயநலமும்தான் அக்கட்சிகளின் அடிப்படைக் கொள்கையாகும். CPI, CPM இயக்கங்கள் தேர்தல் பாதையையே தனது அடிப்படைக் கொள்கையாக ஏற்றுக்கொண்டதால், புரட்சிப் பாதையைக் கைவிட்டுச் சமரசப் பாதையில் வீழ்ந்துவிட்டன. இதன் விளைவால் மக்கள் போராட்டங்களைக் கைவிட்டு மக்களிடமிருந்து தனிமைப்படும் கட்சிகளாக அவை மாறிவிட்டன. பார்ப்பனிய எதிர்ப்பு அதன் நிகழ்ச்சி நிரலில் இல்லை. அதே சமயம், இடஒதுக்கீட்டுக் கொள்கையை வேரறுக்கும் வகையில், பார்ப்பன ஆதிக்க சாதிகளுக்கான இட ஒதுக்கீட்டை BJP மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து CPM ஆதரித்துச் செயல்பட்டது. எந்தக் கட்சிகள் முதலாளித்துவத் தேர்தல் பாதையில் ஆட்சி அமைத்தாலும், மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதே அந்தக் கட்சிகளின் நடைமுறையாக ஆகிவிடுகிறது; முதலாளித்துவத் தேர்தல் பாதையையே அவை பின்பற்றுகின்றன.
கடந்த 75 ஆண்டு வரலாறு இதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. காங்கிரஸ் சுமார் 50 ஆண்டுகளில் எண்ணற்ற மக்களைக் கொன்று குவித்தது; பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய BJP-யும் இதையே செய்தது. மக்கள் அதிகாரம் இல்லாத முதலாளித்துவத் தேர்தல் பாதை இதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. திமுக ஆட்சியானாலும், தவெக-விஜய் கட்சியின் ஆட்சியானாலும், போராடும் மாணவர்களையும் உழைக்கும் மக்களையும் தாக்கி விரட்டும்; இது CPM, CPI கட்சிகளுக்கும் பொருந்தும். எந்தக் கட்சியாவது முதலாளிகள், நிலப்பிரபுக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறதா? இந்த ஆட்சிகளே முதலாளிகளின், நிலப்பிரபுக்களின் ஆட்சியாகும். 8000 கோடி கொள்ளையடித்த முதலாளி நாட்டை விட்டுத் தப்பி ஓட உதவும் அரசுதான் இந்த அரசுகள். காவல்துறை, இராணுவம, சட்டமன்றம், பாராளுமன்றம், நீதிமன்றங்கள், அரசு அமைப்புகள், கலெக்டர், தாசில்தார் உட்பட அனைத்து அமைப்புகளும் மக்களால் நிறுவப்பட்ட, தேர்வு செய்யப்பட்ட அமைப்புகள் அல்ல. இவை முதலாளித்துவ-நிலவுடைமைக்காரர்களுக்கான அமைப்புகள்தான். எந்தக் கட்சியாவது "நாங்கள் முதலாளித்துவக் கட்சி, நிலவுடைமைக் கட்சி" என்று கூறியிருக்கிறதா? ஆனால் அனைத்துக் கட்சிகளும் தாங்கள் மக்களின் கட்சிகள்தான் என்று பொதுமேடைகளில் முழங்குமே தவிர, நடைமுறைப் பணிகளில் ஈடுபடாது.
விஜய் கட்சியான தவெக, தமிழ்நாட்டில் கடந்த 80 நாட்களில் படுமோசமான ஆட்சியை நடத்தி வருகிறது. குழந்தைகள் உட்பட பலர் பாலியல் வன்முறைக்கும் படுகொலைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். நீட்டுக்கு எதிராக இந்தியாவில் – டெல்லியிலும், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களிலும் – மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு அமைச்சர்கள் "ஜனநாயகம்" திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்று வரை நீட்டிற்கு எதிரான முறையான பதிவை அக்கட்சி வெளியிடவில்லை. விஜய் தன் வாயால் பேசி நீட்டைக் கண்டித்திருக்க வேண்டும்.
தோழர்களே, நண்பர்களே! முதலாளித்துவ அரசுகள் – ஏகாதிபத்தியத்திற்கு, குறிப்பாக அமெரிக்காவிற்கு வால் பிடித்துக் கொண்டிருக்கின்றன; அவ்வப்போது ஜனநாயக நாடகமும் நடத்துகின்றன. இஸ்லாமியர்களை ஒழித்துக் கட்டுவதிலும், கம்யூனிஸ்ட் கட்சிகளையும் மாவோயிஸ்ட் கட்சியையும் ஒழிப்பதிலும், கம்யூனிச சிந்தனையாளர்களைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்துவதிலும், ஜனநாயக சக்திகளை அச்சறுத்தக் காவல்துறையையும் இராணுவத்தையும் பயன்படுத்துகின்றன. இவையே மோடி அரசின், முதலாளித்துவ அரசின் அன்றாடச் செயல்பாடாகும். தற்போது டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் எண்ணற்ற மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். மாணவர்களும் மக்களும் இறுதி வெற்றி பெறும் வரை போராட்டத்தை நடத்திக் கொண்டே இருப்பார்கள். எல்லா வரலாறும் இதை நிரூபிக்கின்றன. மக்கள் போராட்டங்கள் மக்கள் தலைவர்களையும், மக்கள் எதிரிகளையும் இனத்துரோகிகளையும் அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கும். தமிழ்நாட்டில் உண்மையான புரட்சியாளர்களும் உண்மையான ஜனநாயக சக்திகளும் ஒன்றுபடுவார்கள்; தமிழ்நாடு புரட்சியை நோக்கி முன்னேறும். இந்தியா முழுவதும், அனைத்துத் தேசிய இனங்களும் இந்தப் பாதையில் முன்னேறும்.
"இன்குலாப் ஜிந்தாபாத்! புரட்சி ஓங்குக!"
- திருமொழி