சமூகத்தில் மிகவும் பின்வாங்கிய நிலையில் உள்ள உழைக்கும் வர்க்கத்தை, விளிம்புநிலை மக்களைத் தன் பக்கம் திரட்டிப் புரட்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு ஒரு புரட்சிகர அமைப்பிற்கு உண்டு. ஆனால், புரட்சிகர இளைஞர் முன்னணி (பு.இ.மு) அந்தப் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு, ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினருக்கு 'ஜனநாயகச் சான்றிதழ்' வழங்கி, அவர்களுக்காகத் தெருத் தெருவாக வாக்குச் சேகரிக்கும் ஏஜெண்டுகளாகச் சிறுத்துப் போனார்கள்.puratchikara ilaingar munnaniவெற்றிடத்தை நிரப்பிய நடிகர்களும்... சரணடைந்த 'புரட்சியாளர்களும்'!

புரட்சிகரக் கட்சிகள் விளிம்புநிலை மக்களை அணிதிரட்டத் தவறிய அந்த அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொண்டு, விஜய் போன்ற நடிகர்கள் தங்கள் திரை பிம்பத்தின் மூலம் அந்த மக்களைத் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார்கள். ஆளும் வர்க்கமோ, தனக்குச் சிறந்த முறையில் ஏவல் புரியப் போவது யார் என்ற நேர்காணலில், பழைய சேவகர்களை விட விஜய் தான் தங்களுக்குச் சரியான ஆள் என்று அவரைத் தேர்வு செய்துள்ளது.

இப்போது வேடிக்கை என்னவென்றால், பி.ஜே.பி-யை வீழ்த்தப் போகிறோம் என்று கூறிப் பு.இ.மு யாரையெல்லாம் "முற்போக்கு ஜனநாயகச் சக்திகள்" என்று ஊருக்குப் பறைசாற்றினார்களோ (காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ), அவர்களெல்லாம் இப்போது தவெக-வின் மடியில் அமர்ந்து கூடிக்குலாவிக் கொண்டிருக்கிறார்கள்.

பி.ஜே.பி-யின் 'நல்ல பிள்ளை' விஜய்யும்... பு.இ.மு-வின் வால்தனமும்!

தமிழக வெற்றிக் கழகம் அதன் தொடக்கத்திலிருந்தே பி.ஜே.பி-யின் ஆசிபெற்ற ஒரு 'நல்ல குழந்தை' என்பது ஊரறிந்த ரகசியம். தேர்தலுக்கு முன்பே "பாசிசமாவது பாயாசமாவது" என்று பி.ஜே.பி-யை விமர்சிக்க மறுத்த விஜய், வெற்றி பெற்றவுடன் பி.ஜே.பி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துத் தனது விசுவாசத்தை மெய்ப்பித்துவிட்டார். இப்படிப்பட்ட பி.ஜே.பி-யின் நிழல் கட்சியுடன், பு.இ.மு-வினால் "முற்போக்கு" என்று பட்டம் சூட்டப்பட்ட கூட்டணிக் கட்சிகள், இன்று பி.ஜே.பி-யுடன் கள்ள உறவில் இருக்கும் தவெக-வுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பது, இந்தப் புரட்சிகர இளைஞர்களின் அரசியல் அறிவீனத்தையும் வர்க்கத் துரோகத்தையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

லெனினியத் தத்துவத்தை 'வால்தனத்திற்கு' அடகு வைத்த துரோகம்:

தேர்தலுக்கு முன்பு வாக்குச் சேகரிக்கும் போது ஒரு பேச்சு, தேர்தலுக்குப் பின்பு அந்தத் துரோகத்தை மறைக்க மார்க்ஸையும் லெனினையும் தங்களுக்குத் தகுந்தாற்போல் திரித்துப் பேசுவது எனப் பு.இ.மு-வினர் வித்தை காட்டுகிறார்கள். மாமேதை லெனின் அவர்கள் தனது 'The State and Revolution' நூலில் சொன்னது இவர்களுக்குப் பொருந்தும்:

"To decide once every few years which members of the ruling class are to repress and crush the people through parliament--this is the real essence of bourgeois parliamentarism."

"முதலாளித்துவ ஜனநாயகத்தில், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்குச் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது: ஆளும் வர்க்கத்தின் எந்தப் பிரதிநிதி நாடாளுமன்றத்தில் அவர்களை ஒடுக்கி மிதிக்கப் போகிறார் என்பதைத் தீர்மானிக்க!"

மிதிக்கப்போகும் எஜமானர்களில் ஒருவருக்குச் சிவப்புக் கம்பளம் விரித்த நீங்கள், எதன் அடிப்படையில் உங்களைப் புரட்சியாளர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள்?

திருத்தவாதம் மூலம் வர்க்கச் சமரசம்:

உழைக்கும் மக்களைத் திரட்டாமல், தரகு முதலாளித்துவத்தின் ஒரு பிரிவுக்கு வால் பிடித்த உங்களின் இந்தச் சந்தர்ப்பவாதத்தை லெனின் இவ்வாறு சாடுகிறார்:

"Revisionism is a trend that introduces bourgeois ideas into the labor movement."

"திருத்தவாதம் என்பது முதலாளித்துவக் கொள்கைகளைத் தொழிலாளர் இயக்கத்திற்குள் புகுத்துவதாகும்."

பு.இ.மு-வே, உங்கள் நற்சான்றிதழ் பெற்ற கட்சிகள் இன்று பி.ஜே.பி-யின் ஆசிபெற்ற விஜய்யின் காலடியில் கிடக்கிறார்கள். விளிம்புநிலை மக்களை நடிகர்களிடம் அடகு வைத்த உங்களின் இந்த 'வால்தன' அரசியல், பாட்டாளி வர்க்கத்திற்கு இழைக்கப்பட்ட பச்சைத் துரோகம்! தத்துவத்தைத் திரித்துப் பேசுவதை நிறுத்திவிட்டு, ஆளும் வர்க்கத்திற்குப் பல்லக்குத் தூக்கிய உங்கள் வரலாற்றுத் துரோகத்திற்குப் பகிரங்கமாகச் சுயவிமர்சனம் செய்யுங்கள்.

- தேர்தல் பிழைப்புவாதத்தின் முகத்திரையைக் கிழிப்போம்!

- மார்க்சிய-லெனினியப் பாதையில் பாட்டாளி வர்க்க அரசியலைக் கட்டியமைப்போம்!

- சாரக்கட்டு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.