தமிழ்த் தேசிய சட்டவியல் - தொடர் 2

சட்டம் என்பது சமுதாயத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட நீதித்துறை அல்லது ஆட்சித் துறை செயல்களுக்கு அடிப்படையாக உள்ள அமைப்பு முறையாகும் என்று முதலாளித்துவ அறிஞர்கள் பொதுவாக கூறுகிறார்கள். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 13-வது சட்டக் கூறு, சட்டம் என்பது இந்திய ஆட்சிப்பரப்பில் சட்டத்தின் செயலாற்றல் உள்ள அவசர சட்டம், ஆணை, துணைவிதி, விதி, ஒழுங்கு முறை விதி, அறிவிக்கை, மரபு வழக்கம், வழக்காறு ஆகியவற்றை உள்ளடக்கும் என கூறுகிறது.

நவீன அரசியல் சட்டம்

மார்க்சிய ஆசான் காரல் மார்க்ஸ் ஒரு நவீன அரசில், சட்டம் என்பன

1. பொதுப்படையான பொருளாதார நிலையுடன் பொருந்தியிருக்க வேண்டும்.

2. அந்த பொருளாதார நிலையின் வெளி யீடாக இருக்க வேண்டும்.

3. உள் முரண்பாடுகளின் காரணமாக தன்னைத்தானே நிராகரித்துவிடாதபடி உள்ளார்ந்த ஒத்திசைந்த வெளியீடாக அது இருக்க வேண்டும். என்கிறார்.

court 314மனித சமுகத்தின் நீண்ட வரலாற்றில் அநாகரிக காலம், நாகரிக காலம், நவீன காலம் ஆகியவற்றைக் கடந்து தற்போது உலகமய மாக்கல் காலத்தில் இருக்கிறது. நாகரிக காலத்தில் இருந்த முடி அரசுகளில், அரசனே அரசின் தலைவனாக இருந்தான். அரசனின் ஆணைகளே சட்டங்களாக மதிக்கப்பட்டன. அரசன் அனைத்துக்கும் தலைவனாக இருந்தான். சட்டங்களையும், விதிகளையும் முடியாட்சி காலத்தில் அரசனே இறுதி செய்தான். எதேச்சதிகார முடியாட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களும், புரட்சிகளும் வெடித்ததன் விளைவாக ஏற்பட்ட அரசியல் பொருளாதர மாற்றங்கள் காரணமாக மனித சமுகத்தின் நவீன காலக்கட்டம் தொடங்கியது. முடியாட்சியின் எதேச்சதிகார சட்டங்களுக்கு எதிராக ஏற்பட்ட புரட்சிகளின் விளைவாக சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கருத்துக்கள் தோன்றின. இந்த முழக்கங்கள் நவீன காலத்தின் தொடக்கத்தை அறிவித்தது. மக்களாட்சி என்பதற்கு முதலாளித்துவ அறி ஞர்கள் மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் என விளக்கம் கூறினார்கள். இதற்காக நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அமைப்புகள் தோன்றின. நாடாளு மன்றம், சட்டமன்றம் போன்ற அமைப்புகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி களால் நிரப்பப்பட்டன. ஆனால் முடியாட்சி காலத்தில் சட்டத்தை இயற்றும் அமைப் புக்கும், செயல்படுத்தும் அமைப்புக்கும் தலைவனாக அரசனே இருந்தான். மக்க ளுக்காக மக்களால் நடத்தப்படும் மக்களாட்சி என்று வரையறுக்கப்பட்ட முதலாளித்துவ ஜனநாயக அமைப்பில், மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தை இயற்றுபவர்களாக இருக்கிறார்கள், அதைச் செயல்படுத்தும் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்படவில்லை .

இரட்டை ஆட்சி முறை

அதிகாரப் பிரிவின் கோட்பாடு என்ற நவீனகாலக் கோட்பாடு சட்டங்களை இயற்று வதையும், அதனைச் செயல்படுத்துவதையும் தனித்தனியே பிரித்துவிட்டது. இந்த அதிகாரப் பிரிவினைக் கோட்பாடு என்பதே ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடு என முதலாளித்துவ அறிஞர்களால் அவ்வப்போது சொல்லப்படுகிறது. முடியாட்சி ஒழிக்கப்பட்டு, மக்களாட்சி ஏற்பட்ட இடங்களில் முடியாட்சிக் காலத்தில் அனைத்து அரசியல், பொருளாதார, பன்பாட்டு நிறுவனங்களுக்குத் தலைவனாக இருந்த அரசன் வீழ்த்தப்பட்ட இடத்தில் மக்களின் பிரதிநிதிகள் அமர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நவீன முதலாளித்துவ ஜனநாயக நாடுகளில் சட்டத்தை இயற்றுவ தற்கு மட்டும் மக்கள் பிரதிநிதிகளும், அதை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரிகளும் அமர்த்தப்பட்டார்கள்.

நிலையான இராணுவம்

மன்னர் காலத்தில் இருந்த நிலையான படை என்பது ஒழிக்கப்பட்டு, மக்களின் இராணுவம் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நவீன முதலாளித்துவ ஜனநாயக நாடுகளில், மக்கள் பிரதிநிகளுக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் மறுக்கப்பட்டதுடன், மன்னர் காலத்தின் நிலையான இராணுவம் தக்கவைக்கப்பட்டது. அரசின் அனைத்து உறுப்புகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற மக் களாட்சித் தத்துவம் மறுக்கப்பட்டு, அரசு உறுப்புகளான அதிகாரிகள், நீதிபதிகள் போன்றவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் படாமல் நியமிக்கப்பட்டனர். எனவே மக்களாட்சி என்ற கருத்து நவீன கால அரசுகளில் முழுமை பெறவில்லை . மக்கள், முடியாட்சியின் ஏதேச்சதிகாரத்திற்கு எதிராக போராடி மக்களாட்சியை நிறுவ விரும்பிய போதும் நவீனகால முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி வடிவங்கள் முழுமையான மக் களாட்சியை அளிக்கவில்லை.

வெளிப்படைத் தன்மை இல்லை

இத்தகைய குறைபாட்டினை இன்றைக்கு நடைமுறைகளில் உள்ள அனைத்துச் சட்டங் களிலும் காணலாம். இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தபின்னர், அரசியலமைப்புச் சட்டத்தின் 395வது சட்டக் கூறு இரண்டு சட்டங்களைச் செல்லாது என அறிவிக்கிறது. ஒன்று 1935ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கம் சட்டம், இரண்டாவது 1947ஆம் ஆண்டின் இந்திய விடுதலைச் சட்டம், இந்த 1935ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கம் சட்டத்தின் பெரும்பகுதியை கொண்டே 1949ஆம் ஆண்டின் இந்திய அரசியலமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு, அதற்கு முரணான பழைய சட்டங்கள் ஒழிக்கப்பட்டு விட்டன என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

பழங்கால மரபுகள் சட்டமாகின

அதேசமயம் சட்டக்கூறு 13(3)(a)-ல் சட்டம் என்பதற்குக் கூறும் வரைவிலக்கணத்தில் “Custom or usage having the territory in India” என்ற வாசகத்தைச் சேர்த்துள்ளார்கள். அதாவது முடியாட்சிக் காலத்தில் இருந்தும் வெள்ளை வந்தேறி ஏகாதிபத்தியக் காலத்தில் இருந்தும் நடைமுறையில் இருந்துவரும் பழங்கால மரபு வழக்கங்களும், வழக்காறுகளும், சட்டம் எனக் கருதப்படும் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

இதுமட்டுமல்ல, மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டக் கூறு 372(1) பின்வருமாறு கூறுகிறது.

இந்த அரசமைப்பின் தொடக்க நிலையை ஒட்டி முன்பு இந்திய ஆட்சி நிலவரையில் செயல்பாட்டில் இருந்த சட்டங்கள் அனைத் தும் சட்டமன்றத்தாலோ, அல்லது பிற அதிகார அமைப்பாலோ நீக்கவோ, திருத்தவோ செய்யப்படாத வரையில் தொடர்ந்து அது செயல்பாட்டில் இருக்கும் என கூறுகிறது. அதாவது இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு நவீன கால புதிய மக்களாட்சிக்கான சட்டம் என்பதாக விளம்பர படுத்தப்பட்டாலும், அந்த சட்டத்தின் சட்டக் கூறுகள் காலாவதியான, நவீன கால நடைமுறைக்கு ஒவ்வாத, ஏற்ற தாழ்வைக் கடைப்பிடிக்கும் பழைய சட்டங்களை மரபுகளை பழக்க வழக்கங்களை, சட்டம் என்ற வரையறைக்குள் கொண்டு வருவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பழைய சட்ட நடைமுறைகளை ஒழிக்க வேண்டுமெனக் கூறி கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தினுள் பழைய நடைமுறைகளும், விதிகளும் உயிர்ப்புடன் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

தொடரும்..

வழக்கறிஞர் இரா.வைத்தீஸ்வரன்

Pin It